என் மலர்
நீங்கள் தேடியது "ஒடிசா"
- ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாகபுரா என்ற இடத்தில் ரெயில் தடம் புரண்டது.
- இதில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
புவனேஷ்வர்:
சென்னையில் இருந்து மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி செல்லும் ஜல்பைகுரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவில் இன்று காலை 8.51 மணிக்கு தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் ஒரு ஏசி பெட்டி, 2 பொது பெட்டி என மொத்தம் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றன.
ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாகபுரா என்ற இடத்தில் ரெயில் தடம்புரண்டது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் ரெயில் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரங்களுக்கும் பிறகு அப்பகுதியில் ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.
திடீரென ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
- மாநிலத்தின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கையின் கீழ் அனைத்து சலுகைகளையும் பெறுவார்
- கோராபுட் மாவட்டம் ஒரு காலத்தில் நக்சலைட்டுகளின் கோட்டையாகக் கருதப்பட்டது.
ஒடிசா மாநிலத்தின் கோராபுட் மாவட்டம் நக்சல் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட சி.பி.ஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களில் ஒருவரான மம்தா போடியாமி என்பவர் போலீசாரிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.
மம்தா போடியாமி ஒரு எஸ்.எல்.ஆர் துப்பாக்கியுடன் சரணடைந்ததாகவும் தென்மேற்கு மண்டல டி.ஐ.ஜி கன்வர் விஷால் சிங் தெரிவித்தார். "அவரது தலைக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 5.5 லட்சம் நிதி உதவியும், ஆயுதத்தை ஒப்படைப்பவருக்கு கூடுதலாக ரூ.1.65 லட்சமும் வழங்கப்படும் . மேலும், மாநிலத்தின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கையின் கீழ் அனைத்து சலுகைகளையும் அவர் பெறுவார்" என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் சரணடைந்த பிறகு, கோராபுட் இப்போது நக்சல் இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது என்றும் விஷால் சிங் தெரிவித்தார். கோராபுட் மாவட்டத்திற்கு முன்னதாகவே, அண்டை மாவட்டங்களான மால்காங்கிரி மற்றும் நவரங்பூர் ஆகியவையும் நக்சல் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன.
கோராபுட் மாவட்டம் ஒரு காலத்தில் நக்சலைட்டுகளின் கோட்டையாகக் கருதப்பட்டது. குறிப்பாக 2009-ல் டாமன்ஜோடியில் நடந்த தாக்குதல் போன்ற சம்பவங்களுக்குப் பிறகு, தற்போது இது நக்சல் இல்லாத மாவட்டமாக மாறியிருப்பது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
- சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
- ஒரு கூட்டம் இந்த துணிச்சலான செயலை அச்சத்துடன் காண்கிறது.
ஒடிசாவின் பாலசோரில், ஒருவர் ஒரு ராட்சத பாம்பை தன் கைகளால் மட்டுமல்லாமல், வாயாலும் கையாளும் திகிலூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தக் குறுகிய வீடியோவின் தொடக்கத்தில், ரெமுனாவை சேர்ந்த காகா பாய் என்ற அந்த நபர், ஒரு பாம்பை பிடித்து தன் வாயில் வைத்துக் கொள்கிறார். அவர் இதை மிக வேகமாக செய்கிறார், அதனால் அந்த பாம்பு எதுவும் செய்ய முடியாதவாறு தெரிகிறது.
அடுத்து, அவர் அந்த பாம்பை தன் வாயில் வைத்தபடியே சுற்றி திரிகிறார், பின்னர் அதை தரையில் வைத்து, வெறும் கைகளால் பிடித்து கொள்கிறார். ஒரு கட்டத்தில், யாரோ ஒருவர் அந்த பாம்பை அவரிடமிருந்து எடுக்க முயற்சிக்கிறார், ஆனால் அவர் அவரை தள்ளிவிட்டு, விலகி நிற்குமாறு கூறுகிறார். ஒரு கூட்டம் இந்த துணிச்சலான செயலை அச்சத்துடன் காண்கிறது.
சில வினாடிகளுக்கு பிறகு, அவர் அந்த பாம்பைத் தரையில் மெதுவாக வைத்து, அதனுடன் விளையாடிவிட்டு, பின்னர் எந்த கருவிகளும் இல்லாமல் ஒரு சாக்குப்பையில் போடுகிறார். வீடியோவின் இறுதியில் அவர் மற்றொரு பாம்பை எடுக்கும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கிறது.
முன்னதாக, ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது, அவர் வீட்டிற்கு செல்லும் வழியில் விஷம் கொண்ட கருநாக பாம்பால் கடிக்கப்பட்டார். உதவிக்காக ஓடுவதற்கு பதிலாக, அந்த நபர் தன்னைக் கடித்த உடனேயே அந்த பாம்பை பிடித்து அதன் தலையை கடித்து துண்டித்தார்.
பின்னர் அவர் அந்த இறந்த பாம்பை வீட்டிற்கு எடுத்து சென்று, அதைத் தன் அருகில் வைத்துக்கொண்டு, அதனுடனேயே உறங்க சென்றதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். நள்ளிரவுக்குள் விஷம் அவரது உடல் முழுவதும் பரவி, அவரது நிலைமை மோசமடைந்தது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
- மக்கள் நலனுக்கான நிதி ஒதுக்கீடு என்று வரும்போது ஒடிசா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது
- பௌத்தச் சுற்றுலா வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தில் ஒடிசா முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகவும் குழப்பமளிக்கிறது.
ஒடிசாவின் இயற்கை வளங்களை வெளியே கொண்டு செல்வதற்கான பணிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"ஒன்றிய அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட் மீதான எனது ஏமாற்றத்தை இங்கு வெளிப்படுத்துகிறேன். இந்த பட்ஜெட் ஒடிசா மாநிலத்திற்கும், அதன் மக்களுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகள் எதையும் வழங்கவில்லை.
இரட்டை என்ஜின் அரசு, உள்கட்டமைப்பு வசதிகள், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் என்று ஒடிசா மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மாநிலத்திற்கு மிகக் குறைந்த அளவே கிடைத்துள்ளது.
ஒடிசாவில் அரிய மண் தாது வழித்தடத்தை அமைப்பதற்கான முன்மொழிவை நான் வரவேற்கிறேன். ஒடிசா பல முக்கிய கனிமங்களை உற்பத்தி செய்வதில் முன்னணி மாநிலமாக உள்ளது. மேலும் தனது வளமான இயற்கை வளங்கள் மூலம் தேசத்தை கட்டியெழுப்பும் பணிகளில் எப்போதும் தனது பங்களிப்பை வழங்கும்.
கனிம வளம் நிறைந்த பகுதிகள் மற்றும் தொழில் மையங்களைத் துறைமுகங்களுடன் இணைக்க தேசிய நீர்வழிகளை அமைப்பதாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பே இது அறிவிக்கப்பட்டதுதான். தற்போது வரை காகித அளவில் மட்டும்தான் இருக்கிறது. களத்தில் எந்த பணியும் நடக்கவில்லை.
ஏழு அதிவேக ரயில் வழித்தடங்களை உருவாக்கும் அறிவிப்பில் ஒடிசா இடம்பெறாதது ஒடிசா மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒடிசா பாஜக ஏற்கனவே புவனேஸ்வர் மெட்ரோ திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டது; மக்களின் தேவைகளைப் புறக்கணிப்பது வழக்கம் போல இப்போதும் தொடர்கிறது.
எங்களது டைமண்ட் ட்ரையாங்கிள் உள்ளிட்ட மிக முக்கியமான பல பௌத்தத் தலங்கள் இருந்தபோதிலும், பௌத்தச் சுற்றுலா வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தில் ஒடிசா முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகவும் குழப்பமளிக்கிறது.
மத்திய பட்ஜெட்டை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஒடிசாவின் இயற்கை வளங்களை வெளியே கொண்டு செல்வதற்கான பணிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; ஆனால், மக்கள் நலனுக்கான நிதி ஒதுக்கீடு என்று வரும்போது ஒடிசா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.
மாநில பாஜக அரசு ஒடிசா மக்களுக்கான பொறுப்பை ஏற்க வேண்டிய நேரமிது; மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். ஒன்றிய பட்ஜெட்டில் ஒடிசாவும் அதன் மக்களும் இன்னும் சிறப்பான திட்டங்களை பெற தகுதியுடையவர்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- சைக்கிள் ரிக்ஷா வானில் படுக்க வைத்து, அங்கிருந்து கட்டாக் நகரில் உள்ள மருத்துவமனைக்குத் தள்ளிக்கொண்டே சென்றார்.
- என்னிடம் பணம் இல்லை. என் மனைவியைக் காப்பாற்ற எனக்குத் தெரிந்த ஒரே வழி இதுதான்.
ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தின் தொலைதூர கிராமத்தை சேர்ந்த 70 வயது முதியவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்க்கு பணம் இல்லாமல் தவித்துள்ளார்.
எனவே தனது மனைவியை ஒரு சைக்கிள் ரிக்ஷா வானில் படுக்க வைத்து, அங்கிருந்து கட்டாக் நகரில் உள்ள மருத்துவமனைக்குத் தள்ளிக்கொண்டே சென்றார்.
தனது கிராமத்திலிருந்து கட்டாக் சென்று, மீண்டும் அங்கிருந்து வீடு திரும்பியது என மொத்தம் 600 கி.மீ தூரத்தை அவர் சைக்கிள் ரிக்ஷாவிலேயே கடந்துள்ளார்.
"என்னிடம் பணம் இல்லை. என் மனைவியைக் காப்பாற்ற எனக்குத் தெரிந்த ஒரே வழி இதுதான். அதனால் தான் நான் ரிக்ஷாவிலேயே அவரை அழைத்துச் சென்றேன்." என்று அம்முதியவர் இதுகுறித்து பதில் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவம் இணையத்தில் கண்டனத்தை குவித்து வருகிறது. இந்த சம்பவம் வைரலானதை தொடர்ந்து இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
- 'இந்தியாஒன் ஏர்' நிறுவனத்திற்கு சொந்தமான 9 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானமாகும்.
- விமானத்தில் 4 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் என மொத்தம் 6 பேர் இருந்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலா நோக்கிச் சென்ற சிறிய ரக தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
ரூர்கேலாவில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜல்தா என்ற இடத்தில் இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இது 'இந்தியாஒன் ஏர்' நிறுவனத்திற்கு சொந்தமான 9 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானமாகும்.
விபத்தின்போது விமானத்தில் 4 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் என மொத்தம் 6 பேர் இருந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய 6 பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்த விசாரணைக்கு DGCA உத்தரவிடப்பட்டுள்ளது.
- வழிமறித்த மூன்று பேர் சிறுமியை தனிமையான இடத்திற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
- 3 இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒடிசாவில் விறகு சேகரிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.
ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் நாயரா கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, திங்கள்கிழமை மதியம் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்றுள்ளார்.
சிறுமி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, வழிமறித்த மூன்று பேர் சிறுமியை தனிமையான இடத்திற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி நடந்ததை தனது பெற்றோரிடம் கூற அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வழக்குப் பதிவு செய்த போலீசார், 3 இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெடிபொருட்கள் வெடித்ததில் ஏற்பட்ட அதிர்வால் பாறைகள் உருண்டு விழுந்தன.
- குவாரியில் பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் கருங்கல் குவாரி ஒன்று செயல்பட்டு வந்தது.
இன்று, பாறைகளைத் தகர்க்க வைக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் ஏற்பட்ட அதிர்வால் பாறைகள் உருண்டு விழுந்தன.
இந்த விபத்தின் போது குவாரியில் பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
- நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
- கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர்பான பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
நாளை உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர்பான பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஒடிசாவில் தெருவோரத்தில் கிறிஸ்தவப் பொருட்களை விற்பனை செய்து வந்த மக்களை மிரட்டிய மதவாத கும்பல், உடனடியாக அவர்களை காலி செய்ய சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவில், :இது இந்து ராஷ்டிரம்.. இங்க கிறிஸ்தவப் பொருட்களை விற்கக் கூடாது.." என்று அந்த கும்பல் மிரட்டியுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- இந்த பணியில் சேர 5 ஆம் வகுப்பு வரை படிந்திருந்தாலே போதும்.
- இந்த தேர்வு எழுதிய பலரும் பட்டதாரிகள் ஆவார்
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை என்ற பிரச்சனை நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது. குறைந்த எண்ணிக்கையிலான வேலைகளுக்கு எண்ணற்றோர் விண்ணப்பிப்பது தற்போது பேசுபொருளாகி வருகிறது.
அவ்வகையில் ஒடிசாவில் 187 ஊர்க்காவல் படை பணியிடங்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிகப் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் இதனை பேர்களுக்கு தேர்வு அரை ஒதுக்க முடியாமல் விமான ஓடுதளத்தில் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
விமான ஓடுதளத்தில் அமர்ந்து கிட்டத்தட்ட 8,000 பேர் தேர்வெழுதினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஊர்க்காவல் படை பணிக்குத் தினசரி ரூ.612 ஊதியம் வழங்கப்படுவதாகவும், இது மாதத்திற்கு சுமார் ரூ.18,360 ஆக வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பணியில் சேர 5 ஆம் வகுப்பு வரை படிந்திருந்தாலே போதும். ஆனால் தேர்வு எழுதிய பலரும் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
- எம்.எல்.ஏ.க்களுக்கு தற்போதுள்ள சம்பளத்தை விட 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
- ரூ.1.11 லட்சம் சம்பளம் பெறும் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.3.45 லட்சமாக உயர்த்தப்பட்டது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநில எம்.எல்.ஏ.க்கள் தங்களது சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கடந்த சில ஆண்டுளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், ஒடிசாவில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை 3 மடங்காக உயர்த்த சட்டப்பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஒடிசா மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் ஒரு மனதாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, எம்.எல்.ஏ.க்களுக்கு தற்போதுள்ள சம்பளத்தை விட 3 மடங்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது எம்.எல்.ஏ.க்கள் ரூ.1.11 லட்சம் சம்பளம் பெறுகின்றனர். இது ரூ.3.45 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
முதல் மந்திரி, மந்திரிகள், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது பதவியில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் யாராவது உயிரிழந்தால் அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-வது சட்டசபை பொறுப்பேற்றது. அன்றைய தினம் முதல் இந்த சம்பள உயர்வு அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாரம்பரிய சடங்குகள் இன்றி நடந்த இந்த திருமணத்தில் இருவரும் அரசியலமைப்பு மீது உறுதிமொழி எடுத்தனர்.
- இதன்மூலம் மொத்தம் 18 யூனிட்கள் ரத்தம் சேகரிக்கப்பட்டன.
ஒடிசாவின் பெர்ஹாம்பூரைச் சேர்த்தவர் ப்ரீத்திபன்னா மிஸ்ரா (40). இவர் தெலுங்கானாவில் ஐதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆந்திராவின் காக்கிநாடாவை சேர்ந்த பானு தேஜா (43) பெங்களூரில் பணியாற்றி வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ஐதராபாத்தில் ஒரு நிகழ்வில் சந்தித்து காதலித்த நிலையில் நேற்று முன் தினம் அவர்கள் திருமணம் பெர்ஹாம்பூரில் நடைபெற்றது.
பாரம்பரிய சடங்குகள் இன்றி நடந்த இந்த திருமணத்தில் இருவரும் அரசியலமைப்பு மீது உறுதிமொழி எடுத்து திருமணம் செய்து கொண்டனர்.
இதன்பின் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ரத்த தான முகாமில் ரத்த தானம் செய்தனர். திருமணத்துக்கு வனத்திருந்த உறவினர்களும் ரத்த தானம் செய்தனர். இதன்மூலம் மொத்தம் 18 யூனிட்கள் ரத்தம் சேகரிக்கப்பட்டன.
ஒடிசாவில் அரசியலமைப்பின் மீது உறுதிமொழி எடுத்து தம்பதியினர் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.






