என் மலர்
உலகம்
- டொனால்டு டிரம்ப் 20 அம்ச திட்டங்களை பரிந்துரைத்து போர் நிறுத்த முயற்சியை மேற்கொண்டார்.
- இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் டிரம்பின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
இஸ்ரேல்- காசா (ஹமாஸ் அமைப்பு) இடையிலான போர் நிறுத்தம் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதனால் காசாவில் இரண்டு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
டொனால்டு டிரம்ப் போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்ச திட்டத்தை அறிவித்தார். இதை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஏற்றுக்கொண்டார். ஹமாஸ் விரைவாக இதை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் ஏற்பட வேண்டும். இல்லையென்றால் யாரும் பார்க்க விரும்பாத பெரிய ரத்தக்களரி தொடர்ந்துவிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அதிகாரிகள் கத்தாரில் ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி முதல்கட்டமாக ஹமாஸ் அமைப்பினர், பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும். இஸ்ரேல் ராணுவம் காசாவில் இருந்து வெளியேற வேண்டும்.
அதன்படி காசா போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகள் விடுவிப்பார்கள் என நம்பப்படுகிறது. ஹமாஸ் பிடியில் 48 பணயக்கைதிகள் உள்ளனர். இவர்கள் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த முதற்கட்ட போர் நிறுத்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், காசாவில் போர் நிறுத்தத்திற்கான நம்பிக்கை வலுப்பெறும்.
- H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.
- விசா ஒதுக்கீட்டு உச்சவரம்பில் இருந்து விலக்கு பெறும் நிறுவனங்களின் பட்டியலை டிரம்ப் நிர்வாகம் மறுபரிசீலனை செய்யப்படும்.
அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு அண்மையில் உத்தரவிட்டது. மேலும் H-1B விசா தொடரான பல புதிய விதிகளும் அறிவிக்கப்பட்டன.
இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கப் பணியாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் என டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது.
H-1B திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.
இந்நிலையில் டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள கட்டண உயர்வு இந்தியர்களுக்கும் அவர்களை பணியமர்த்தும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
H-1B விசா புதிய விதிமுறைகள்:
புதிய H-1B விசா மனுக்களுக்கான கட்டணம் தற்போதுள்ள சுமார் $4,000 முதல் $6,000 என்ற நிலையிலிருந்து, $1,00,000 (ரூ. 88 லட்சம்) என உயர்த்தப்படுகிறது.எனினும், இந்தப் புதிய கட்டணம் புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும். விசா புதுப்பித்தல் அல்லது ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களுக்குப் பொருந்தாது என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
அடுத்ததாக, விசா பெறுவதற்கான சிறப்புத் தொழில் (Specialty Occupation) என்ற வரையறை கடுமையாக்கப்பட்டுள்ளது.
இனி, விண்ணப்பதாரரின் பட்டப்படிப்பும், அவர்கள் செய்யும் வேலையும் கண்டிப்பாக ஒரே துறை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
புதிய விதிமுறைகளின்படி H-1B ஊழியர்களைப் பிற நிறுவனங்களில் பணிக்கு தேர்வு செய்து அனுப்பும் கன்சல்டிங் மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனங்கள் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
ஊழியர்கள் அவர்கள் பணி செய்யும் நிறுவனங்களுடன் நேரடி தொடர்பு இருக்கின்றனரா அல்லது மூன்றாவது ஏஜென்சி மூலம் காண்டிராக்ட்-இல் இருக்கிறார்களா என்பது குறித்த கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், பல்கலைக்கழகங்கள், இலாப நோக்கற்ற ஆய்வு நிறுவனங்கள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் போன்ற வருடாந்திர விசா ஒதுக்கீட்டு உச்சவரம்பில் இருந்து விலக்கு பெறும் நிறுவனங்களின் பட்டியலை டிரம்ப் நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும், நிரந்தரக் குடியுரிமைக்கான கிரீன் கார்டு செயல்முறையும் கடினமாக்கப்பட்டுள்ளது. அபரிமிதமான திறன் கொண்ட வெளிநாட்டு நிபுணர்களை பணியமர்த்தும் O-1A விசா முறையில் கட்டுப்பாடுகளை விதிக்கவும் திட்டமிட்டுள்ள்ளது.
இந்த முன்மொழிவுகள் தற்போது பொதுமக்கள் கருத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. இவை செயல்படுத்தப்பட்டால், அமெரிக்கப் பணிக்கான விசா அமைப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய மறுசீரமைப்பாக இருக்கும்.
- நியூ யார்க்கில் நடந்த 80வது ஐநா பொதுச்சபை கூட்டத்திலும் அவர் இதையே பேசினார்.
- டிரம்ப்-புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது பேசுபொருளாகி உள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இவர் தற்போது வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார். 2011 முதல் 2014 வரை வெனிசுலா தேசிய சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக பணியாற்றினார்.
நோபல் கமிட்டி வெளியிட்டுள்ள பதிவில், நீடித்த அமைதிக்கு ஜனநாயகம் ஒரு இன்றியமையாதது. இருப்பினும், ஜனநாயகம் பின்வாங்கும் உலகில் நாம் வாழ்கிறோம். சர்வாதிகார ஆட்சிகள் விதிமுறைகளை சவால் செய்து வன்முறையை நாடுகின்றன.
வெனிசுலா ஆட்சியின் அதிகாரத்தின் மீதான இறுக்கமான பிடிப்பும் மக்கள் மீதான அதன் அடக்குமுறையும் புதிது அல்ல. உலகளவில் அதே போக்குகளை நாம் காண்கிறோம். அதிகாரத்தில் உள்ளவர்களால் சட்டத்தின் ஆட்சி துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.
சுதந்திரமான ஊடகங்கள் மௌனமாக்கப்படுகின்றன. விமர்சகர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள், மற்றும் சமூகங்கள் சர்வாதிகார ஆட்சி மற்றும் இராணுவமயமாக்கலை நோக்கித் தள்ளப்படுகின்றன.
இத்தகு சூழலில் வெனிசுலா மக்களின் சுதந்திரத்திற்காக பல ஆண்டுகளாக உழைத்த மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டு நோபல்அமைதிப் பரிசை வழங்குவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் உள்ளிட்ட 6 போர்களை நிறுத்தினேன் என்றும் தனக்கே நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறி வந்தார். அண்மையில் நியூ யார்க்கில் நடந்த 80வது ஐநா பொதுச்சபை கூட்டத்திலும் அவர் இதையே பேசினார்.
மேலும் நேற்று கருத்து தெரிவித்த பேசிய டிராம்ப், முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியிருக்கக்கூடாது என்றும் அவர் அதற்கு தகுதியற்றவர் என்றும் பேசியிருந்தார். இந்த சூழலில் டிரம்ப்-புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது பேசுபொருளாகி உள்ளது.
குறிப்பாக வெற்றியாளரை அறிவிக்கும் நோபல் கமிட்டி பதிவில் குறிப்பிடப்பட்ட சர்வாதிகார போக்கு டிரம்ப் அரசுக்கு பல வகையில் பொருந்துவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஜனவரியில் அதிபராக பதவியேற்றத்தில் இருந்து டிரம்ப் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்கள் மீதான கட்டுப்பாடுகள், கட்டாய நாடு கடத்தல்கள், வர்த்தக தடைகள் மூலம் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் பொருளாதாரத்தின் மீது ஆதிக்கம், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மாகாண போலீசாருக்கு பதிலாக மத்திய படைகளை நிறுவியது, தனது கட்டுப்பாடுகளுக்கு இணங்காத ஹார்வார்டு உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்கு நிதி வழங்கலை நிறுத்தியது, தன்னை விமர்சிக்கும் ஊடகங்களுக்கு நஷ்டஈடு கேட்டும் அரசு ரீதியாக கட்டுப்பாடுகள் மூலம் அழுத்தம் கொடுப்பது போன்ற டிரம்ப்பின் பல்வேறு நடவடிக்கைகள் சர்வாதிகார போக்கை கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.
- ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது.
- பாகிஸ்தானுக்கும், தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் செயல்படும் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் அடிக்கடி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இதற்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்குள் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது.
தலைநகர் காபூலின் கிழக்கு பகுதியில் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதலில் இருந்து நூர் வாலி தப்பி பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரது மகன் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே காபூலில் 2 சக்திவாய்ந்த குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டது என்றும், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்தது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
நகரின் வான்வெளியில் ஒரு போர் விமானத்தின் சத்தம் கேட்டதாகவும் தெரிவித்தனர்.
பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பகிரங்கமாக குற்றம்சாட்டிய 48 மணி நேரத்திற்குள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கும், தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே இத்தாக்குதல் சம்பவம் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது.
- அதிகாரத்தில் உள்ளவர்களால் சட்டத்தின் ஆட்சி துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.
- சுதந்திரமான ஊடகங்கள் மௌனமாக்கப்படுகின்றன. விமர்சகர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.
2011 முதல் 2014 வரை வெனிசுலா தேசிய சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக பணியாற்றினார்.
வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான நோபல்அமைதிப் பரிசை வழங்க நார்வே நோபல் கமிட்டி முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தியா- பாகிஸ்தான் உள்ளிட்ட 7 போர்களை கடந்த 6 மாதங்களில் நிறுத்தியதாகவும் அதனால் தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப், வழி மேல் விழி வைத்து காத்திருந்த நிலையில் அவரது கனவு பொய்த்துள்ளது. அடுத்த வருடமேனும் அவருக்கு இந்த பரிசு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- அமெரிக்க போர் விவகாரங்கள் துறை கடந்த செப்டம்பர் 30 அன்று பல்வேறு நாடுகளுடனான ஆயுத ஒப்பந்தங்களின் திருத்தப் பட்டியலை வெளியிட்டது.
- வான் விட்டு வான் பாயும் நடுத்தர தூர AMRAAMS ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கு விற்கும் ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகின.
பாகிஸ்தானுக்கு ஆயுத விற்பனை செய்ய புதிய ஒப்பந்தம் போடப்பட்டகாக பரவிய செய்தியை அமெரிக்க அரசு மறுத்துள்ளது.
புதிய ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை பராமரிப்பதற்கு மட்டுமே என்று இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தி உள்ளது.
அமெரிக்க போர் விவகாரங்கள் துறை கடந்த செப்டம்பர் 30 அன்று பல்வேறு நாடுகளுடனான ஆயுத ஒப்பந்தங்களின் திருத்தப் பட்டியலை வெளியிட்டது.
அதில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தங்களின் வான் விட்டு வான் பாயும் நடுத்தர தூர AMRAAMS ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கு விற்கும் ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இதுகுறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "செப்டம்பர் 30, 2025 வெளியிடப்பட்ட அறிவிப்பு பாகிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கான பாதுகாப்பு மற்றும் உதிரிபாகங்களுக்கான ஏற்கனவே உள்ள இராணுவ விற்பனை ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதைக் குறிக்கிறது.
தவறான ஊடக அறிக்கைகளுக்கு மாறாக, இந்த குறிப்பிடப்பட்ட ஒப்பந்த திருத்தத்தில் எந்தப் பகுதியும் புதிய மேம்பட்ட வான் விட்டு வான் பாயும் நடுத்தர தூர ஏவுகணைகளையும் (AMRAAMS) வழங்குவதற்கானது அல்ல என்பதை நிர்வாகம் வலியுறுத்த விரும்புகிறது.
இந்த ஒப்பந்த திருத்தம், பாகிஸ்தானின் தற்போதைய திறன்களில் எதையும் மேம்படுத்த அல்ல" என்று தெரிவித்துள்ளது.
- 2 வருட காசா இனப்படுகொலையில் 20,179 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
- போர் நிறுத்த திட்டத்திற்கு இஸ்ரேல் அமைச்சவரையும் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
அக்டோபர் 2023 இல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர் 2 வருடங்கள் கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் -இன் முயற்சியால் முடிவுக்கு வர உள்ளது.
பணய கைதிகள் விடுவிப்பு உள்ளிட்ட டிரம்ப் உடைய 20 அம்ச அமைதி திட்டத்தை ஹமாஸ் அமைப்பும் , இஸ்ரேலும் ஏற்றுக்கொண்ட நிலையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இன்று இந்த போர் நிறுத்த திட்டத்திற்கு இஸ்ரேல் அமைச்சவரையும் ஒப்புதல் வழங்கிவிட்ட நிலையில் போர் நிறுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி காசாவின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறும். இஸ்ரேலியக் காவலில் உள்ள பாலஸ்தீனக் கைதிகள் திங்கட்கிழமை விடுவிக்கப்படுவார்கள். ஹமாஸ் காவலில் உள்ள மீதமுள்ள இஸ்ரேலியக் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள்.
இதனால் பணய கைதிகள் விடுதலையை எதிர்கொக்கும் இஸ்ரேலியர்களும், தினந்தோறும் நிகழும் தாக்குதல்களில் இருந்து விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கை பெற்ற காசா மக்களும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.


கடந்த 2 வருடங்களில் நடந்த இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் காசாவில் 67,200 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐநா கூறுகிறது. இதற்கிடையே உணவுப் பொருட்களை இஸ்ரேல் நிறுத்தி வைத்ததன் காரணமாக இதுவரை 200 க்கும் மேற்பட்டோர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.
அண்மையில் காசா சுகாதர அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 2 வருட காசா இனப்படுகொலையில் 20,179 குழந்தைகள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. அவர்களின் 1,029 குழந்தைகள் ஒரு வயதுக்குட்பட்டவர். இனப்படுகொலையின் போது பிறந்து பின்னர் 420 குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் உள்ள இடிபாடுகளை அகற்றவே 10 வருடங்கள் ஆகும் என ஐநா தெரிவித்துள்ளது. இந்நிலையில் தொடர் சோகங்களுக்கு முடிவுரையாக காசா மக்களுக்கு தற்போதைய போர் நிறுத்தம் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
ஒப்பந்தம் எட்டப்பட்ட போதிலும், வியாழக்கிழமை அதிகாலையில் காசாவின் வடக்கு பகுதிகளில் குண்டுவெடிப்புகள் மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடர்ந்ததாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேலியத் தாக்குதல்கள் சில பகுதிகளில் தொடர்ந்த போதிலும் காசாவின் பல்வேறு பகுதிகளில் இந்த போர் நிறுத்தத்திற்கான கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கான் யூனிஸில் உள்ள இளைஞர்கள் வீதிகளில் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர். கான் யூனிஸைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்ற இளைஞர், "போர் நிறுத்தம், இரத்தகளரி, கொலைகளுக்கு முடிவு வந்துவிட்டது. ஒட்டுமொத்த காசா பகுதி, அரபு மக்கள் மற்றும் உலகமே மகிழ்ச்சி அடைகிறது" என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
காசாவில் இரண்டு ஆண்டுகளாக நடந்த கொலைகளுக்கும் இனப்படுகொலைக்கும் பிறகு பாலஸ்தீனிய குடிமக்களால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தருணம் இது என்று காலெத் ஷாத் என்ற இளைஞர் குறிப்பிட்டார்.
- இந்த நாவலை 1994 இல் பிரபல ஹங்கேரிய இயக்குனர் பேலா டார், 7 மணிநேரம் 30 நிமிடம் ஓடக்கூடிய முழு நீள திரைப்படமாக எடுத்தார்.
- பேரழிவு என்பது ஒரே ஒரு நிகழ்வு அல்ல, அது தொடர்ச்சியான ஒரு செயல்முறை ஆகும்.
நான் பேரழிவை பற்றி எழுதுகிறேன் - லாஸ்லோ
71 வயதான ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்கை (László Krasznahorkai) 2025 நோபல் பரிசுக்கு தேர்வாகி உள்ளார்.
1954இல் ஹங்கேரியின் தென்கிழக்குப் பகுதியில், ரோமானியா எல்லைக்கு அருகில் உள்ள குயூலா (Gyula) என்ற சிறிய நகரில் லாஸ்லோ பிறந்தார்.
அபத்தவாதம், அதீதம், இருத்தலியல் ஆகிய பாங்குகளில் அமைந்த இவரின் படைப்புகள், பிரான்ஸ் காஃப்கா மற்றும் தாமஸ் பெர்ன்ஹார்ட் போன்றோரின் எழுத்து மரபில் இருந்து உருவானது எனலாம்.

சரிவின் விளிம்பில் இருக்கும் சமூகம் இவரின் படைப்புகளில் மீண்டும் மீண்டும் ஊடாகுகிறது. அதுவே இவருக்கு பேரழிவுவின் (Master of Apocalypse) ஆசான் என்ற பெயர் அமைய காரணமாகிறது.
தற்கால எழுத்தாளர்களில் மத்திய ஐரோப்பிய இலக்கிய மரபில் தனக்கென தனி இடத்தை லாஸ்லோ உருவாகியுள்ளார்.
லாஸ்லோவின் தனிச்சிறப்பு என்னவென்றால், முற்றுப்புள்ளிகள் இல்லாத மிக நீளமான, தொடர்ச்சியான வாக்கியங்களைப் பயன்படுத்துவதுதான்.
இது ஒரு கதையை ஒரே மூச்சில் சொல்வது போன்ற இடைவிடாத, தலைசுற்ற வைக்கும் உணர்வை வாசகருக்குக் கொடுக்கும்.
லாஸ்லோவின் முதல் நாவல் 'சாதன்டாங்கோ' (Satantango) 1985இல் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது.
கம்யூனிசம் வீழ்ச்சியடையும் தருவாயில், ஹங்கேரிய கிராமப்புறத்தில் கைவிடப்பட்ட ஒரு கூட்டுப் பண்ணையில் வாழும் ஏழைகளின் அவநம்பிக்கை மற்றும் ஏமாற்றத்தை சித்தரிக்கும் இந்த பிரதி நம்பிக்கைத் துரோகம் மற்றும் சமூகச் சரிவைப் பற்றி பேசுகிறது.
இந்த நாவலை 1994 இல் பிரபல ஹங்கேரிய இயக்குனர் பேலா டார், 7 மணிநேரம் 30 நிமிடம் ஓடக்கூடிய முழு நீள திரைப்படமாக எடுத்தார்.
லாஸ்லோவின் 2வது நாவலான 'தி மெலன்கோலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ்' (The Melancholy of Resistance) 1989 இல் வெளிவந்தது. ஹங்கேரியில் கார்பாத்தியன் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு சிறிய நகருக்கு மர்மம் மற்றும் வினோதம் நிறைந்த சர்க்கஸ் குழு ஒன்று வருகிறது.
உயிரிழந்த ராட்சத திமிங்கலத்தின் சடலத்தை அவ்வூரில் சர்க்கஸ் குழு காட்சிக்கு வைக்கிறது. இதனை தொடர்ந்து அவ்வூரில் நிகழும் வன்முறை, அதிகார மாற்றத்திற்கான களம் அமைக்கபடுவதை விவரிக்கும் நாவல் ஒழுங்குக்கும் குழப்பத்திற்கும் இடையிலான போராட்டத்தை உவமைப்படுத்துகிறது.
இந்த நாவலும் இயக்குனர் பேலா டார் இயக்கத்தில் 'வெர்க்மீஸ்டர் ஹார்மோனீஸ்' என்ற பெயரில் 2000 ஆம் ஆண்டு திரைப்படமாக வெளிவந்தது.
1999 இல் வெளிவந்த லாஸ்லோவின் போரும் போரும் (War and war) நாவல், கோர் என்ற ஆவணக் காப்பாளரின் கதையை விவரிக்கிறது.
தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் கோர், தான் கண்டறிந்த ஒரு பண்டைய காவியத்தை உலகறியச் செய்ய புடாபெஸ்ட்டில் இருந்து நியூயார்க்கிற்குப் பயணம் மேற்கொள்வதாக கதை நகர்கிறது. இந்த படைப்பு லாஸ்லோவின் முற்றுப்புள்ளி இல்லாத நடைக்கு சிறந்த உதாரணமாக முன்வைக்கப்படுகிறது.
நீண்ட இடைவெளிக்கு பின் 2016 இல் 'பாரன் வென்கைமின் ஹோம் கமிங்' (Baron Wenckheim's Homecoming) என்ற நாவலை லாஸ்லோ வெளியிடுகிறார்.
ரஷிய இலக்கிய மேதை தாஸ்தோயெவ்ஸ்கியின் கதை பாணியை பின்பற்றி எழுதப்பட்ட இந்நாவல் சூதாட்டத்திற்கு அடிமையான ஒருவன் தன் குழந்தைப் பருவ காதலை தேடி அர்ஜென்டினாவிலிருந்து தாய்நாட்டிற்கு திரும்புவதை நகைச்சுவை மற்றும் சோகத்துடன் விவரிக்கிறது.

கடைசியாக லாஸ்லோவின் படைப்பாக 2021இல் 'ஹெர்ஷ்ட் 07769' (Herscht 07769) என்று நாவல் வெளிவந்துள்ளது. வழக்கமாக ஹங்கேரியை தனது கதைகளின் களமாக வரிக்கும் லாஸ்லோ இந்த நாவலை ஜெர்மனியின் துரிங்கன் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தை மையமாக வைத்து எழுதியுள்ளார்.
அந்நகரில் நிகழும் கொலைகள், வன்முறை அதனால் சமகாலத்தில் நிலவும் அமைதியின்மை ஆகியவற்றை பின்னணியாக கொண்டு இக்கதை நகர்கிறது. வன்முறையும் அழகும் ஒன்றிணையும் புள்ளியாக இந்த படைப்பை விமர்சகர்கள் கருதுகின்றனர்.

1990கள், மற்றும் 2000 த்தின் முற்பகுதியில் சீனா மற்றும் ஜப்பானுக்கான தனது பயணங்களின் தாக்கம் குறித்தும் லாஸ்லோ எழுதியுள்ளார்.
பரவலாக நாவலாசிரியராக கருதப்படும் லாஸ்லோ 2008இல் 'செய்போ தேர் பிலோ' (Seiobo There Below) என்ற சிறுகதை தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
மொத்தத்தில் லாஸ்லோ தனிமனித மற்றும் சமூகத்தின் வீழ்ச்சி குறித்தும் நிலையின்மையால் சபிக்கப்பட்ட அல்லது ஆசீர்வதிக்கப்பட்ட மனித இருப்பு குறித்தும் தனது படைப்புகளில் தொடர்ந்து பேசிய வண்ணம் உள்ளார் எனலாம். இதையே "நான் பேரழிவைப் பற்றி எழுதுகிறேன்" என்ற லாஸ்லோவின் கூற்றும் தெள்ளிதின் விளக்குகிறது.
பேரழிவு குறித்து நேர்காணல் ஒன்றில் லாஸ்லோ கூறியவை பின்வருமாறு, "பேரழிவு என்பது ஒரே ஒரு நிகழ்வு அல்ல, அது தொடர்ச்சியான ஒரு செயல்முறை ஆகும். அது நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது, இன்னும் நீண்ட காலத்திற்குத் தொடரும். பேரழிவு என்பது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு தீர்ப்பு"
- நான் 8 போர்களை நிறுத்திவிட்டேன். இதற்கு முன்பு அதுபோன்று நடந்ததில்லை.
- அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு போர்களை தான் நிறுத்தியதால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கூறி வருகிறார். அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் அது டிரம்புக்கு கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகும்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
நான் 8 போர்களை நிறுத்திவிட்டேன். இதற்கு முன்பு அதுபோன்று நடந்ததில்லை. ஆனால் அவர்கள் (நோபல் பரிசு குழு) என்ன செய்தாலும் பரவாயில்லை. நான் அதற்காக அதை செய்யவில்லை என்பது எனக்கு தெரியும். நான் நிறைய உயிர்களைக் காப்பாற்றவே அதை செய்தேன். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் அவர் ஒன்றும் செய்யவில்லை. இருந்தபோதிலும் அவருக்கு ஒரு பரிசு கிடைத்தது. ஆனால் அவர் நம் நாட்டை அழித்தார். ஒபாமா ஒரு நல்ல அதிபர் அல்ல என்றார்.
கடந்த 2009-ம் ஆண்டு ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச ராஜதந்திரத்தையும் மக்களிடையே ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- 8-வது போருக்கு நாங்கள் தீர்வு காண நெருங்கிவிட்டோம்.
- அதை எனக்குக் கொடுக்காததற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள்
இந்தியா- பாகிஸ்தான் போர் உள்பட 7 போர்களை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
அவருக்கு சில நாடுகளும் ஆதரவு தெரிவித்து பரிந்துரைத்தன. ஆனால் அவருக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே டிரம்ப்பின் முயற்சியால் இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்தநிலையில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்க உள்ள நிலையில் அதுகுறித்து டிரம்ப்பிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
இதற்கு பதிலளித்த டிரம்ப்,"நாங்கள் 7 போர்களை தீர்த்து வைத்தோம். 8-வது போருக்கு நாங்கள் தீர்வு காண நெருங்கிவிட்டோம்.
வரலாற்றில் யாரும் இவ்வளவு போர்களை தீர்த்து வைத்ததாக நான் நினைக்கவில்லை. ஆனால் ஒருவேளை அவர்கள் (நோபல் குழு) அதை எனக்குக் கொடுக்காததற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள்" என்றார்.
இதற்கிடையே வெள்ளை மாளிகை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் டிரம்ப்பின் படத்தை "அமைதித் தலைவர்" என்ற தலைப்பில் பகிர்ந்து உள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் அலுவலகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டொனால்டு டிரம்புக்கு நோபல் பரிசு கொடுங்கள்.அவர் அதற்கு முழு தகுதி படைத்தவர்" என்று தெரிவித்துள்ளது.
இன்று மாலை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ள நிலையில் நேதன்யாகுவின் கருத்து வந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க அதிகாரபூர்வமாக பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
பிலிப்பைன்ஸின் மின்டானோவ் நகரில் 7.4 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 62 கிமீ (38.53 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
கடந்த ஒரு வாரத்திற் முன்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள விசாயாஸ் மாகாணம் செபு நகரில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 74 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்.
- வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் அதன் தீர்ப்பை நீதிபதி அறிவித்தார்.
- தீர்ப்பு வழங்கியதும் அங்கிருந்த குற்றவாளி தன்னிடமிருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
டிரானா:
அல்பேனியா நாட்டின் தலைநகர் டிரானாவில் குற்றவியல் மேல் முறையீட்டு கோர்ட் அமைந்துள்ளது. அங்கு நீதிபதி கலாஜா வழக்குகளை விசாரித்து வந்தார்.
அப்போது ஒரு வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் அதன் தீர்ப்பை அவர் அறிவித்தார். ஆனால் தீர்ப்பு வழங்கிய உடனே அங்கு நின்றிருந்த குற்றவாளி எல்விஸ் ஷ்கெம்பி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டார்.
இதில் நீதிபதி சம்பவ இடத்திலேயே சரிந்து இறந்தார். இதனையடுத்து எல்விஸ் ஷ்கெம்பி, கோர்ட் பாதுகாப்பு அதிகாரி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோர்ட்டில் வழக்கு விசாரணையின்போது நீதிபதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






