என் மலர்
உலகம்

தலைநகர் காபூலில் குண்டு வீச்சு: ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்
- ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது.
- பாகிஸ்தானுக்கும், தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் செயல்படும் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் அடிக்கடி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இதற்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்குள் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது.
தலைநகர் காபூலின் கிழக்கு பகுதியில் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதலில் இருந்து நூர் வாலி தப்பி பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரது மகன் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே காபூலில் 2 சக்திவாய்ந்த குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டது என்றும், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்தது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
நகரின் வான்வெளியில் ஒரு போர் விமானத்தின் சத்தம் கேட்டதாகவும் தெரிவித்தனர்.
பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பகிரங்கமாக குற்றம்சாட்டிய 48 மணி நேரத்திற்குள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கும், தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே இத்தாக்குதல் சம்பவம் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது.






