என் மலர்tooltip icon

    உலகம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 197.7 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
    • ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 200.3 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

    உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனரும், தலைவருமான எலான் மஸ்க் முதல் இடத்தை இழந்துள்ளார். நேற்று பங்குச் சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு 7.2 சதவீதம் சரிவை சந்தித்த நிலையில் அவரின் நிகர சொந்த மதிப்பு 197.7 பில்லியன் அமெரிக்கா டாலராக குறைந்துள்ளது.

    இதனால் அமேசான்  நிறுவனர் பெசோஸ் 200.3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    60 வயதாகும் பெசோஸ் ப்ளூம்பெர்க்கின் தரவரிசையில் முதன்முறையாக உலக கோடீஸ்வரரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் எலான் மஸ்க்- பெசோஸ் இடையிலான சொத்து மதிப்பு வித்தியாசம் 142 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

    2022-ல் இருந்து ஏறக்குறைய அமேசானின் பங்குகள் இரண்டு மடங்கு அதிகரித்தது. டெஸ்லாவின் பங்கு 2021-ல் அதன் உச்சத்தில் இருந்து சுமார் 50 சதவீதம் அளவிற்கு குறைந்ததாக கூறப்படுகிறது. இந்த பங்கு சந்தையின் விளைவு காரணமாக அமேசான் டாம் காம் நிறுவனர் பெசோஸ் தற்போது நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    ஷாங்காயில் இருந்து ஏற்றுமதியாகும் டெஸ்லா காரின் எண்ணிக்கை கடந்த ஓராண்டாக குறைந்து வந்த காரணத்தால் பங்கு சந்தையில் சரிவை கண்டுள்ளது. அதேவேளையில் கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்து ஆன்லைன் விற்பனையில் அபரித வளர்ச்சியை பெற்றுள்ளது.

    • லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேல் பகுதியை தாக்கியது.
    • பணிபுரிந்து வந்த ஏழு வெளிநாட்டினர் காயம் அடைந்தனர்.

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவர்கள் இஸ்ரேல் எல்லையில் உள்ள பகுதிகளை அடிக்கடி ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை லெபனான் நாட்டில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேல் நாட்டின் மேற்கு பகுதியின் கலிலீ மாகாணத்தில் உள்ள மார்கலியோட் பகுதியில் தாக்கியது. இந்த பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த பலர் பணிபுரிந்து வருகிறார்கள்.

    ஏவுகணை தாக்கியதில் ஏழு வெளிநாட்டு தொழிலாளர்கள் அடைந்த நிலையில், அதில் மூன்று பேர் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

    இவர்களில் பாட்னிபின் மேக்ஸ்வெல் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் ஜிவ் மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்துள்ளது.

    அதேவேளையில் புஷ் ஜோசப், பால் மெல்வின் ஆகியோர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

    பெட்டா டிக்வாவில் உள்ள பெய்லின்சன் மருத்துவமனையில் ஜார்ஜ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது முகம் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் உடல்நலம் தேறியுள்ளார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவர் இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினருடன் பேச முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த மெல்வினுக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டு, ஜிவ் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    அதேவேளையில் ஹிஸ்புல்லாவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 229 பேர் உயிரிழந்துள்ளனர்.

    • ஐந்தில் மூன்று பங்கு வாக்குகள் பெற்றால் மசோதா வெற்றி பெறும்.
    • ஆதரவு தெரிவித்து 780 வாக்குகள் பதிவானதால் மசோதா நிறைவேறியது.

    கருக்கலைப்பு பெண்களுக்கான அரசியலமைப்பு உரிமை தொடர்பான சட்ட மசோதா பிரான்ஸ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனால் கருக்கலைப்பு செய்ய இனிமேல் சட்டப்பூர்வ அனுமதி பெறத் தேவையில்லை. பெரும்பாலான நாடுகள் கருக்கலைப்பிற்கு எதிராக இருந்து வரும் நிலையில், கருக்கலைப்பு பெண்களுக்கான அரசியலமைப்பு உரிமை என அறிவித்த முதல் நாடு என்ற பெயரை பிரான்ஸ் பெற்றுள்ளது.

    இந்த சட்ட மசோதாவிற்கு ஆதரவாக 780 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகின. ஐந்தில் மூன்று பங்கு வாக்குகள் சட்டத்தை நிறைவேற தேவை என்ற நிலையில் அமோக பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேறியது.

    இது தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் வெளியிட்டுள்ள செய்தியில் "நாங்கள் அனைத்து பெண்களுக்கும் ஒரு செய்தியை சொல்கிறோம். உங்களுடைய உடல் உங்களுக்கானதாக நம்பப்படுகிறது. உங்களுக்காக யாரும் முடிவு செய்ய முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

    கருக்கலைப்புக்கு ஆதரவானோர் இந்த செய்தியை கேட்டு பிரான்ஸ் ஈபிள் டவர் முன் குவிந்து தங்களது சந்தோசத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் "என்னுடைய உடல் என்னுடைய தேர்வு" என்பதை வெளிப்படுத்தினர். மேலும் இந்த வாசகம் ஈபிள் டவரில் மின்விளக்கால் ஜொலித்தது.

    பிரான்ஸ் நாட்டில் 1974-ம் ஆண்டு பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அதிக அளவில் விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

    • மாயமான எம்.எச். 370 விமானம் எங்கு சென்றது என்ற கேள்விக்கு பதில் இல்லை.
    • மாயமான விமானத்தை மீண்டும் தேட வேண்டும் என்ற கோரிக்கை எழ துவங்கியுள்ளது.

    கடந்த 2014, மார்ச் 8-ம் தேதி கோலா லம்பூரில் இருந்து மலேசியா நோக்கி புறப்பட்ட எம்.எச்.370 என்ற விமானம் ரேடார்களில் இருந்து காணாமல் போனது. ரேடார்களில் இருந்து மாயமான எம்.எச். 370 விமானம் எங்கு சென்றது, அதில் இருந்தவர்கள் நிலை என்ன என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.

    மாயமான மலேசிய விமானம் எம்.எச். 370-ஐ தேடும் பணிகளை மீண்டும் துவங்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழ துவங்கியது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா சென்ற மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம்-இடம் மாயமான விமானத்தை தேடும் பணிகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், "தேடல் தொடர்பாக உறுதியான ஆதாரம் ஏதேனும் கிடைக்கும் பட்சத்தில், மீண்டும் தேடும் பணிகளை துவங்குவதில் மகிழ்ச்சி அடைவோம். இந்த விவகாரத்தில் தொழில்நுட்ப கோளாறு இருக்கும் என்று நினைக்கவில்லை."

    "மக்களின் உயிரை பாதிக்கும் விவகாரம் இது, இதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமா, அவற்றை நிச்சயம் செய்தாக வேண்டும்," என்று தெரிவித்தார்.

    முன்னதாக காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 370-ஐ கண்டுபிடிக்க புது திட்டம் உள்ளதாக ஆய்வாளர்கள் அறிவித்து இருந்தனர். லண்டனில் உள்ள ராயல் ஏரோனாடிக்கல் சொசைட்டியில் நடைபெற்ற விரிவுரையில் புதிய வகை தேடலின் மூலம் பத்து நாட்களில் காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க முடியும் என்று வான்வெளி துறை நிபுணர்கள் ஜீன்-லுக் மார்சண்ட் மற்றும் விமானியான பேட்ரிக் பெல்லி தெரிவித்தனர்.

    • அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி நீடித்து வந்தது.
    • கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன.

    பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரிப் பாகிஸ்தானின் 24-வது பிரதமராக பதவியேற்றார். இஸ்லாமாபாத்தில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் ஆரிப் ஆல்வி ஷெபாஸ் ஷெரிப்-க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கடந்த மாதம் 8-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக அந்நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி நீடித்து வந்தது.

    எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததை அடுத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன. அதன்படி கூட்டணி ஆட்சியில் பிரதமராக ஷெபாஸ் ஷெரிப் தேர்வு செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாகவே ஷெபாஸ் ஷெரிப் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

    • வாஷிங்டனில் 62 சதவீத வாக்குகள் பெற்று நிக்கி ஹாலே வெற்றி.
    • 2020 அதிபர் தேர்தலில் வாஷிங்டனில் ஜோ பைடன் 92 சதவீத வாக்குள் பெற்றிருந்தார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த வருட இறுதியில் நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட இருக்கிறார்.

    அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கப்போவது யார்? என்பதற்காக தேர்தல் அந்த கட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் தேர்தல் நடத்தப்படும். ஒட்டு மொத்தமாக அதிக செல்வாக்கு பெரும் நபர் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

    தற்போது டொனால்டு டிரம்ப், நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையில் நேரடி போட்டி நிலவி வருகிறது. ஏற்கனவே அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப்-க்கு ஆதரவு அதிகமாக இருந்த போதிலும், நிக்கி ஹாலே பின் வாங்காமல் தனது பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் வாஷிங்டன் தேர்தலில் நிக்கி ஹாலே வெற்றி பெற்றுள்ளார். டொனால்டு டிராம்பிற்கு எதிராக நிக்கி ஹாலே பெறும் முதல் வெற்றி இதுவாகும். தொடர்ந்து வெற்றிபெற்று வந்த டொனால்டு டிரம்பிற்கு இது முதல் தோல்வியாக அமைந்துள்ளது.

    வாஷிங்டன் ஜனநாயக கட்சியின் கோட்டையாக விளங்குகிறது. இங்கு நிக்கி ஹாலே 63 சதவீத வாங்குகள் வாங்கியுள்ளார். 2020 தேர்தலின்போது வாஷிங்டனில் டிம்பிற்கு எதிராக ஜோ பைடன் 92 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொலம்பியா, மிச்சிகன், நெவாடா, தெற்கு கரோலினா, லோவா போன்ற இடங்களில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 244 பிரதிநிகள் ஆதரவும், நிக்கி ஹாலேவுக்கு 43 பிரதிநிதிகள் ஆதரவும் உள்ளன.

    • காசா மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.
    • அங்கு நடக்கும் நிலை மனிதாபிமானமற்றவை.

    ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடங்கப்பட்டு 5 மாதங்கள் நிறைவடைய இருக்கும் நிலையில், இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    காசாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காமல் உள்ளது. ஒரு முறை மட்டுமே ஒருவாரம் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    அதன்பின் இரு தரப்பிற்கிடையில் போர் நிறுத்தத்திற்கு முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியில் முடியவில்லை.

    கடந்த சில தினங்களுக்கு முன் உணவு வாங்க கூடியிருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனடி போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தினார். மேலும், நிவாரணப் பொருட்கள் அமெரிக்க விமானங்கள் மூலம் வான்வழியாக காசா மக்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தார்.

    இந்த நிலையில் உடனடி போர் நிறுத்தம் தேவை என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "காசா மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். அங்கு நடக்கும் நிலை மனிதாபிமானமற்றவை. நமது மனிதநேயம் நம்மைச் செயல்படத் தூண்டுகிறது. இஸ்ரேல் அரசு நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியை இன்னும் அதிகரிக்க வேண்டும். இதில் விதிவிலக்கு என்பதே கிடையாது.

    உடனடியாக போர் நிறுத்தம் தேவை. பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆறு வாரம் போர் நிறுத்தம் இன்னும் அதிகமான உதவிப்பொருட்கள் காசா மக்களுக்கு சென்றடைய உதவியாக இருக்கும்." என்றார்.

    • உடல்நலம் தேறி வருவதை அடுத்து இவ்வாறு தெரிவித்தார்.
    • இஸ்ரேஸ் ஹமாஸ் போர் முடிவு குறித்து கருத்து தெரிவித்தார்.

    காசாவில் நடைபெற்று வரும் போரை நிறுத்துமாறு போப் பிரான்சிஸ் வலியுறுத்தி உள்ளார். மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் தற்போது உடல்நலம் தேறி வருவதை அடுத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    87 வயதான போப் பிரான்சிஸ், கடந்த புதன்கிழமை ரோம் மருத்துவமனையில் சளி தொந்தரவு காரணமாக சிகிச்சை பெற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் பேசிய போப் பிரான்சிஸ், இஸ்ரேஸ் ஹமாஸ் போர் முடிவு குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.

    இது குறித்து பேசும் போது, "இஸ்ரேல் - பாலஸ்தீனம் விவகாரத்தில் தினந்தோரம் பொதுமக்கள் பாதிக்கப்படுவது, ஆயிரக்ணக்கானோர் உயிரிழப்பது, படுகாயமடைவது, அகதியாவது உள்ளிட்டவை என் மனதை வேதனையில் ஆழ்த்துகிறது."

    "இப்படி செய்வதை வைத்து சிறப்பான உலகை கட்டமைக்க முடியும் என நினைக்கின்றீர்களா? உண்மையில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று நினைக்கின்றீர்களா? போதும்! எல்லோரும் சொல்வோம் போதும்! நிறுத்துங்கள்!" என்று தெரிவித்தார்.

    கடந்த சில மாதங்களில் போப் பிரான்சிஸ்-க்கு பலமுறை உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற சுற்றுச்சூழல் கருத்தரங்கில் கலந்து கொள்வதை போப் பிரான்சிஸ் ரத்து செய்ய நேரிட்டது. இதைத் தொடர்ந்து ஜனவரியில் சளி தொந்தரவு காரணமாக உரையை முடிக்க முடியாத நிலை உருவானது.

    • தேர்தலில் மோசடிகளும், முறைகேடுகளும் நடைபெற்றதாக செய்திகள் வெளிவந்தன
    • இம்ரான் கான் கட்சியின் உறுப்பினர்களின் "சன்னி இதெஹத் கவுன்சில்", ஒமர் அயுப் கானுக்கு ஆதரவளித்தது

    241 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தானில், பிப்ரவரி 8 அன்று, தேர்தல் நடைபெற்றது.

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் "பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப்" (PTI) கட்சி போட்டியிட "பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்" (PEC) தடை விதித்தது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் வேட்பாளர்களில் பலர் சுயேட்சையாக போட்டியிட்டனர்.

    இந்த தேர்தலில் பெரிய அளவிலான மோசடிகளும், முறைகேடுகளும் நடைபெற்றதாக செய்திகள் வெளிவந்தன.

    பெரும் சர்ச்சைக்கு இடையே நடந்த இந்த தேர்தலுக்கு பிறகு, முடிவுகளை அறிவிப்பதிலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தாமதம் ஏற்பட்டது.

    பிடிஐ கட்சியின் சுயேச்சை வேட்பாளர்கள் 93 இடங்களில் வென்றனர். இக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், "சன்னி இதெஹத் கவுன்சில்" (Sunny Ittehad Council) எனும் அமைப்பை உருவாக்கினர்.

    முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல்-என் (PML-N) கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் "பாகிஸ்தான் மக்கள் கட்சி" (PPP) 54 இடங்களிலும் வெற்றி பெற்றது.


    தனிப்பெரும்பான்மை இல்லாததால் பிரதமர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் நீடித்து வந்தது.

    இந்நிலையில் இன்று, "நேஷனல் அசெம்பிளி" (National Assembly) என அழைக்கப்படும் பாராளுமன்றத்தின் கீழ்சபை (Lower House) பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக கூடியது.

    இந்த கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் (Shehbaz Sharif) மீண்டும் பிரதமராக வாக்களித்தனர்.

    இதையடுத்து, பாகிஸ்தானின் பிரதமராக இரண்டாம் முறை ஷெபாஸ் ஷரீப் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக சபாநாயகர் அயாஸ் சாதிக் (Ayaz Sadiq) தெரிவித்தார்.

    336 உறுப்பினர்களை கொண்ட நேஷனல் அசெம்பிளியில் 201 வாக்குகள் பெற்று ஷெபாஸ் ஷரீப், 92 வாக்குகள் பெற்ற ஒமர் அயுப் கான் எனும் போட்டி வேட்பாளரை வென்றார்.

    "சன்னி இதெஹத் கவுன்சில்" ஒமர் அயுப் கானுக்கு ஆதரவளித்தது.

    பிரதமர் பதவிக்கு குறைந்தபட்சம் 169 ஆதரவு தேவைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஷெபாஸ் ஷரீப், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) கட்சியை தொடங்கியவரும், 3 முறை பாகிஸ்தான் பிரதமராகவும் இருந்தவருமான நவாஸ் ஷெரீப்-பின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்திலிருந்து 8,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாடு மலாவி
    • நலிவடைந்த நாடுகளில் செவித்திறன் குறைபாடு உடையவர்கள் அதிகம் உள்ளனர் என்றார் டாக்டர். ரெயின்

    இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷயர் (West Yorkshire) பகுதியில் உள்ளது, பிராட்ஃபோர்டு (Bradford) நகரம்.

    இந்நகரின் "பிராட்ஃபோர்டு ராயல் இன்ஃபர்மரி" (Bradford Royal Infirmary) மருத்துவமனையை சேர்ந்த "ஈஎன்டி" (ENT) எனப்படும் காது-மூக்கு-தொண்டை சிகிச்சை நிபுணர்களும், செவித்திறன் பரிசோதனை நிபுணர்களும் (audiologists), தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி (Malawi) நாட்டிற்கு சென்று செவித்திறன் குறைபாடு உடைய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை அளித்து வருகின்றனர்.

    இங்கிலாந்திலிருந்து சுமார் 8,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாடு மலாவி என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சேவையில், பேராசிரியர். கிரிஸ் ரெயின் (Prof. Chris Raine) தலைமையிலான பிராட்ஃபோர்டு மருத்துவர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அது மட்டுமின்றி மலாவி பகுதியில் உள்ள ஈஎன்டி மருத்துவர்களுக்கும் ஈஎன்டி சிகிச்சையளிப்பதில் உள்ள நிபுணத்துவம் குறித்து பயிற்சி அளிக்கின்றனர்.


    இது குறித்து பேராசிரியர். டாக்டர் ரெயின் கூறியதாவது:

    செவித்திறன் குறைபாடு கண்ணுக்கு புலப்படாத நோய்.

    இது குழந்தைகளுக்கு கல்வி கற்பதில் சிரமத்தை உண்டாக்கி, ஈடுபாட்டை குறைக்க கூடிய குறைபாடு. பிறருடன் பழகுவதையும், வேலை வாய்ப்புகளையும் இந்த குறைபாடு தடை செய்து விடலாம்.

    பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள பல நாடுகளில் செவித்திறன் குறைபாடு உடைய குழந்தைகள் அதிகம் உள்ளனர்.

    ஆனால், பெரும்பாலான நோயாளிகளுக்கு இது குணப்படுத்தக் கூடியதுதான்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    செவித்திறன் குறைபாட்டை சரி செய்வதில் முக்கிய சிகிச்சை முறையான "காக்லியர் இம்ப்லேன்ட்" (cochlear implant) எனும் சிகிச்சைக்கு தேவைப்படும் கருவிகளை "மெட்எல்" (MedEl) எனும் நிறுவனம் இவர்களுக்கு இலவசமாக தருவது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் பிராட்ஃபோர்டு மருத்துவர்கள், மலாவியில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கு செவித்திறன் குறைபாட்டை நீக்கியுள்ளனர்.

    வளர்ச்சியடைந்த நாட்டில் இருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் உள்ள பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள நாட்டிற்கு சென்று பெரும் மருத்துவத்தொண்டில் 10 வருடங்களுக்கும் மேலாக ஈடுபட்டு வரும் பிராட்ஃபோர்டு மருத்துவ குழுவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


    • சமீபகாலமாக பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுவது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தது.
    • கடந்த நவம்பர் மாதம் லஷ்கர்-இ-தொய்பா தளபதி அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாத தளபதிகளில் ஒருவர் ஷேக் ஜமீல்-உர்-ரஹ்மான்.

    காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த இவர் ஐக்கிய ஷிகாத் கவுன்சிலின் பொதுச் செயலாளர் மற்றும் தவ்ரீக்-உல்-முஜாகிதீன் அமைப்பு தலைவராக செயல்பட்டு வந்தார்.

    காஷ்மீரில் நடந்த பல தாக்குதல்களில் தொடர் புடைய ஜமீல்-உர்-ரஹ்மானை, இந்திய அரசு கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் தீவிரவாதியாக அறிவித்து தேடி வந்தது.

    இந்நிலையில் ஜமீர்-உர்-ரஹ்மான் பாகிஸ்தானில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

    பாகிஸ்தானில் கைபர் பக்துள்கவா மாகாணத்தில் உள்ள அபோதாபாத்தில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து உறுதியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    சமீபகாலமாக பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுவது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தது.

    கடந்த நவம்பர் மாதம் லஷ்கர்-இ-தொய்பா தளபதி அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    டிசம்பர் மாதம் கராச்சியில் லஷ்கர் தீவிரவாதி அபு ஹன்சலா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    நேற்று முன்தினம் லஷ்கர் உளவுத்துறை தலைவர் அசாம் சீமா மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஜெர்மனி அதிகாரிகள் இடையே நடந்த உரையாடல் மூலம் நேட்டோ படையின் உண்மை முகம் தெரிய வந்துள்ளது.
    • ஜெர்மனி அதிகாரிகளின் ஆடியோ விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை செய்து வருகிறது.

    ஆனாலும் போரில் ரஷியாவின் கையே ஓங்கி உள்ளது. உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, நேட்டோ அமைப்பு தங்களது படைகளை அனுப்பினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷியா எச்சரித்து உள்ளது.

    இந்த நிலையில் ரஷியாவின் கிரீமியா பாலத்தை ஏவுகணை மூலம் தாக்க ஜெர்மனி திட்டமிட்டதாக ரஷியா குற்றம் சாட்டியது. இது தொடர்பாக ஜெர்மனி ராணுவ அதிகாரிகள் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் கிரீமியா பாலத்தில் தாக்குதல் நடத்துவது குறித்து சாத்தியக் கூறுகள் ஜெர்மனி ராணுவ ஜெனரல்கள் விவாதித்த பதிவு இருப்பதாக ரஷிய ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

    நீண்ட தூர டாரஸ் ஏவுகணைகளை பயன்படுத்து வது உள்பட கிரிமீயா பாலத்தின் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஜெர்மனி ராணுவ அதிகாரிகள் பரிசீலித்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜெர்மனி அதிகாரிகள் இடையே நடந்த உரையாடல் மூலம் நேட்டோ படையின் உண்மை முகம் தெரிய வந்துள்ளது.

    உக்ரைனில் நேட்டோ ராணுவ நடவடிக்கைகள் குறித்து ரஷியா உறுதியாக நம்புகிறது என்றார்.

    உக்ரைன் போரில் மற்ற நாடுகள், நேட்டோ அமைப்பு தலையிட கூடாது என்று ரஷியா எச்சரித்து வரும் நிலையில் ஜெர்மனி அதிகாரிகளின் ஆடியோ விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது மிகவும் தீவிரமான விஷயம். இதனால் மிகவும் கவனமாகவும், தீவிரமாகவும் விரைவாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார். இதற்கிடையே ஆடியோ விவகாரம் தொடர்பாக முழு விசாரணைக்கு ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் உத்தரவிட்டு உள்ளார்.

    இது தொடர்பாக ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் ஆடியோவில் மாற்றங்கள் செய்யப்பட்டதா? என்பது எங்களால் உறுதியாக கூற முடியவில்லை" என்றார்.

    ×