என் மலர்
உலகம்
- டிரம்பை எதிர்த்து தெற்கு கரோலினா முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே களம் இறங்கினார்
- நிக்கியை விட பெலோசி அதிக அறிவு கூர்மையுடையவர் என்றார் டிரம்ப்
இவ்வருடம் நவம்பர் மாதம், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) ஆகியோர் ஒருவரையொருவர் எதிர்த்து தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.
அமெரிக்க தேர்தல் வழிமுறைப்படி, அதிபர் தேர்தலில் நிற்க விரும்பும் வேட்பாளர்கள் முன்னதாக ஒவ்வொரு மாநிலத்திலும் தங்கள் கட்சியினரிடம் உட்கட்சி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று வென்றாக வேண்டும்.
குடியரசு கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்பை எதிர்த்து தெற்கு கரோலினாவின் முன்னாள் கவர்னர், நிக்கி ஹாலேவும் களம் இறங்கினார். ஆனால், அவருக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
தனது பிரசாரங்களில் டொனால்ட் டிரம்ப், நிக்கி ஹாலேவை குறிப்பிடுவதற்கு பதிலாக, தவறுதலாக, 2007லிருந்து 2011 வரை அமெரிக்க பாராளுமன்றத்தின் சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி (Nancy Pelosi) பெயரை குறிப்பிட்டு பேசியது விமர்சனத்திற்குள்ளானது.

அதை குறிப்பிட்டு "மனதளவில் டொனால்ட் டிரம்ப் ஆரோக்கியமாக இல்லை" என நிக்கி ஹாலே அவரை விமர்சித்தார்.

நேற்று இடாஹோ, மிசோரி, மிச்சிகன் ஆகிய மாநிலங்களில் உட்கட்சி தேர்தல்களில் டிரம்ப் வென்றார்.
இந்நிலையில் தென்கிழக்கு மாநிலமான வர்ஜினியாவில் (Virginia) தனது ஆதரவாளர்களிடம் பேசிய டிரம்ப் தெரிவித்ததாவது:
நான் வேண்டுமென்றேதான் பைடன் பெயருக்கு பதிலாக ஒபாமா பெயரை குறிப்பிட்டு வந்தேன்.
அதே போல் ஒரு "பறவை மூளைக்காரர்" (அறிவில் குறைந்தவர்) பெயருக்கு பதிலாக நான்சி பெலோசியின் பெயரையும் மாற்றி குறிப்பிட்டு வந்தேன். உங்களுக்கு யார் அந்த "பறவை மூளைக்காரர்" (நிக்கி) என்பது தெரியும்.
அவர்கள் இருவரையும் ஒன்றாகத்தான் கருதுகிறேன்.
ஒரே ஒரு வேற்றுமையை குறிப்பிட வேண்டுமென்றால், நிக்கியை விட பெலோசி அதிக அறிவு கூர்மையுடையவர்.
இவ்வாறு டிரம்ப் குறிப்பிட்டார்.
- உக்ரைனின் ஒடேசா நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ரஷியா டிரோன் தாக்குதலை நடத்தியது.
- இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
கீவ்:
உக்ரைனுக்கு எதிராக ரஷியா போர் தொடந்து 2 ஆண்டு கடந்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் நிதி உதவி அளித்து வருகின்றன.
இந்நிலையில், உக்ரைனில் ஒடேசா நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ரஷியா டிரோன் தாக்குதலை நடத்தியது. இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். டிரோன் தாக்குதலில் 18 வீடுகள் சேதமடைந் தன.
இதுதொடர்பாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் தாமதப்படுத்துவதாகவும், ஆயுதங்களை விரைவாக வழங்கி இருந்தால் ரஷிய டிரோன் தாக்குதலை தவிர்த்திருக்கலாம் என தெரிவித்தார்.
- அமெரிக்க ராணுவம் வான்வழியாக உதவிப் பொருட்களை காசா மக்களுக்கு வழங்கியது.
- முதல்கட்டமாக 38,000-க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்களை அனுப்பி வைத்தது.
வாஷிங்டன்:
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசா மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. அங்குள்ள பொதுமக்கள் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். வடக்கு காசாவில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இஸ்ரேல் ராணுவம் அனுமதித்தால் மட்டுமே மனிதாபிமான அடிப்படையிலான உதவிப் பொருட்கள் காசா மக்களுக்கு சென்றடையும் நிலை உள்ளது. காசாவின் மேற்கு பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்க இஸ்ரேல் ராணுவம் சம்மதம் தெரிவித்தது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தி வந்தன.
இதற்கிடையே, காசாவில் அமெரிக்க ராணுவம் வான்வழியாக உதவிப் பொருட்களை காசா மக்களுக்கு வழங்கும். ஜோர்டான் மற்றும் சில நாடுகளுடன் இணைந்து இந்த பணியில் ஈடுபட உள்ளோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்கா ராணுவம் வான் வழியாக காசா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தது. முதல்கட்டமாக 38,000-க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்களை அனுப்பியது.
- படைகளை அனுப்பும் சாத்தியக்கூறு இல்லை என கூற முடியாது என மேக்ரான் கூறியிருந்தார்
- நான் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் ஆழமாக சிந்தித்து கூறப்பட்டவை என்றார் மேக்ரான்
2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர், 2 வருடங்களை கடந்தும் தொடர்கிறது.
உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்காவில் தற்போது நிதி நெருக்கடி நிலவுவதால் தொடர்ந்து உதவுவதில் சிக்கல் நீடிக்கிறது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று, உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருவது குறித்து நடைபெற்ற உலக தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல், மாநாட்டிற்கு பிறகு நிருபர்களிடம், "உக்ரைனுக்கு தரைப்படைகளை அதிகாரப்பூர்வ முறையில் அனுப்புவதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், படைகளை அனுப்பும் சாத்தியக்கூறு இல்லவே இல்லை என கூற முடியாது" என தெரிவித்தார்.
மேக்ரானின் கருத்தை எதிர்த்தும், ஆதரித்தும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பலர் கருத்து கூறி வந்தனர்.
மேற்கத்திய துருப்புகளை உக்ரைனுக்கு அனுப்பும் சாத்தியக்கூறுகளை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நேட்டோ (NATO) உறுப்பினர் நாடுகள் நிராகரித்தன. ஆனால், எஸ்டோனியா மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகள் நிராகரிக்கவில்லை.
பிரான்சிலும் எதிர்க்கட்சிகளால் மேக்ரான் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
மேக்ரானுக்கு பதிலளிக்கும் வகையில், ரஷிய பாராளுமன்றத்தின் கீழ்சபையின் சபாநாயகர், "உக்ரைனுக்கு துருப்புகளை அனுப்பும் முடிவை மேக்ரான் எடுத்தால், அவரது படைக்கு நெப்போலியனின் ராணுவத்திற்கு ஏற்பட்ட கதிதான் நேரும்" என எச்சரித்தார்.
இந்நிலையில், பிரான்சில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கான பணிகளை காணச் சென்ற மேக்ரானிடம் உக்ரைனுக்கு படைகளை அனுப்புவது குறித்து மீண்டும் கேட்கப்பட்டது.

அப்போது அவர் தெரிவித்ததாவது:
உக்ரைன் ஆக்கிரமிப்பு ஒரு முக்கியமான சர்வதேச பிரச்சனை.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் குறித்த எனது கருத்துகள் சிந்தித்து கூறப்பட்டவை.
நான் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் சரிபார்க்கப்பட்டு, ஆழமாக சிந்தித்து கூறப்பட்டவை.
இவ்வாறு மேக்ரான் கூறினார்.
ஆனால், தனது நிலை குறித்து மேலும் விவரங்கள் அளிக்கவோ அல்லது கருத்துகள் கூறவோ மேக்ரான் மறுத்து விட்டார்.
நேட்டோ நாடுகளின் துருப்புகள் உக்ரைனில் இறங்கினால், உலகம் ஒரு அணு ஆயுத போரைக் காண வேண்டி வரும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- தனது காலணிகள் அழுக்காகி விடும் என்பதற்காக தன்னை கச்சேரி நடைபெறும் மேடை வரை தூக்கி செல்லுமாறு பாதுகாவலர்களிடம் கூறி உள்ளார்.
- 2 பாதுகாவலர்கள் அவரை தூக்கி ஒரு வண்டியின் பின்புறத்தில் ஏற்றி மேடைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல இசை கலைஞர் கலீத் முகம்மது காலித். 48 வயதான இவர் ஆல்பம் பாடல்கள் தயாரிப்பது மட்டுமின்றி ஏராளமான இசை துறை நிறுவனங்களுக்கு இசைப்பதிவும் செய்து கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள சவுத் பீச் பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றார். அப்போது காரில் இருந்து இறங்கிய கலீத் மேடைக்கு நடந்து சென்றார். தனது காலணிகள் அழுக்காகி விடும் என்பதற்காக தன்னை கச்சேரி நடைபெறும் மேடை வரை தூக்கி செல்லுமாறு பாதுகாவலர்களிடம் கூறி உள்ளார். அதன்படி 2 பாதுகாவலர்கள் அவரை தூக்கி ஒரு வண்டியின் பின்புறத்தில் ஏற்றி மேடைக்கு அழைத்து சென்றுள்ளனர். பாதுகாவலர்கள் அவரை தூக்கி சென்ற காட்சிகள் வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியானது.
இந்த வீடியோ சுமார் 29 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்த நிலையில், நெட்டிசன்கள் பலரும் கலீத்தின் செயலுக்கு கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். அவரது இந்த செயல் மிகவும் அபத்தமானது எனவும், முட்டாள்தனமானது எனவும் விமர்சித்துள்ளனர்.
- இங்கிலாந்தின் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது என்றார் சுனக்
- பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அவர்களின் இல்லங்களுக்கு எதிரில் போராட்டங்கள் நடந்தன
இஸ்ரேல்-ஹமாஸ் போர் 5-வது மாதத்தை நெருங்கி வரும் நிலையில் உலகெங்கும் இரு தரப்பினருக்கும் ஆதரவாக மக்கள் ஆங்காங்கே கருத்து கூறி வருகின்றனர்.
இங்கிலாந்தில், இரு தரப்பினரில் ஒருவரை ஆதரிப்பவர்களால் மற்றொரு தரப்பினர் விமர்சிக்கப்படுவது தீவிரமாகி வருகிறது.
ஒரு சில இடங்களில் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் நடந்து வருகிறது. மேலும், சில பாராளுமன்ற உறுப்பினர்களின் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்த கருத்துகளுக்கு எதிராக அவர்களின் இல்லங்களுக்கு எதிரில் போராட்டங்கள் நடந்தன.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், லண்டன் நகரின் 10, டவுனிங் தெருவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்ல வாசலில் நாட்டு மக்களுக்கு இது குறித்து உணர்ச்சிகரமாக உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது:
நாட்டின் முதல் வெள்ளையரல்லாத பிரதமராக உங்கள் முன் நான் நிற்கிறேன்.
பயங்கரவாத சித்தாந்தங்களில் நம்பிக்கை உடையவர்களால் இங்கிலாந்தின் ஜனநாயகமே அழியும் நிலையில் உள்ளது.

நம் நாட்டிற்குள் நெடுங்காலமாக தங்கியுள்ள அயல்நாட்டினர், நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்கை முழுமையாக அளித்துள்ளனர்.
நீங்கள் இந்துவாக இருந்தும் என்னை போல் ஒரு பெருமைக்குரிய இங்கிலாந்து நாட்டினராக இருக்கலாம்; ஒரு இறை நம்பிக்கைமிக்க முஸ்லீமாக இருந்து தேசபக்தி மிகுந்த பிரிட்டன் குடிமகனாகவும் இருக்கலாம்; யூத அல்லது கிறித்துவ மதத்தை சேர்ந்தவராகவும் இருந்து நாட்டுபற்று மிக்கவராக இருக்கலாம். அது நம் நாட்டில் சாத்தியமே.
இனத்தால், கலாச்சாரத்தால் மாறுபட்டாலும் ஒன்றுபட்ட பிரிட்டனாக நாம் இருப்பதுதான் நமது சாதனையே.
பிரிட்டனின் தெருக்களில் ஜனநாயகத்தை சூறையாடும் குரல்கள் ஒலிக்கு தொடங்கி உள்ளது.
வன்முறையை ஏதோவொரு வகையில் நியாயப்படுத்தும் அணிகள் உருவாகி வருகின்றன.
நம்மை பிரித்து நமது மனங்களில் விஷத்தை விதைக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்து விட்டது.
இவ்வாறு ரிஷி சுனக் கூறினார்.
- ஜோஸ் அன்டோனியோ இபார்ரா என்பவரை காவல்துறை கைது செய்தது
- பைடனை போன்ற ஒரு திறமையில்லாத அதிபரை அமெரிக்கா கண்டதில்லை என்றார் டிரம்ப்
அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் ஜியார்ஜியா. இதன் தலைநகரம், அட்லான்டா.
பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த லேக்கன் ஹோப் ரைலி (Laken Hope Riley) எனும் 22 வயது மாணவி காலையில் உடற்பயிற்சி ஓட்டத்திற்கு சென்றவர் திரும்பவில்லை.
இதையடுத்து அவருடன் தங்கி இருந்த மாணவிகள், புகார் செய்ததையடுத்து, காவல்துறை அவரை தேடி வந்தது. அவர்கள் தேடலில் மரங்களடர்ந்த பகுதியில் ரைலியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில், கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து ஜோஸ் அன்டோனியோ இபார்ரா (Jose Antonio Ibarra) என்பவரை சந்தேகத்தின் பேரில் காவல்துறை கைது செய்து விசாரித்தனர்.
தீவிர விசாரணையில் ஜோஸ், லேக்கனை தாக்கி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
ஜோஸ் தாக்கும் போது, சமாளித்த லேக்கன், உடனடியாக 911 எனும் அவசர உதவிக்கான எண்ணை லேக்கன் அழைக்க முயன்றதாகவும், அதில் பதட்டமடைந்த ஜோஸ் அவரை கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
லேக்கனின் பிரேத பரிசோதனையில் உயிரிழப்பதற்கு முன்பாக அவர் ஜோசுடன் தீவிரமாக போராடிய அறிகுறிகள் தெரிந்தன.
வெனிசுயலா நாட்டை சேர்ந்த ஜோஸ், 2022ல் அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் ஒருவரையொருவர் எதிர்த்து தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த பைடன் ரைலி மரணம் குறித்து ஏதும் பேசவில்லை.

பைடனை குற்றம்சாட்டி டெக்சாஸ் மாநில பிரச்சார உரையில் பேசிய டிரம்ப் தெரிவித்ததாவது:
நிலைகுலைந்து போயிருக்கும் ரைலியின் பெற்றோர்களுடன் தொலைபேசியில் பேசினேன். சட்டவிரோதமாக குடியேறுபவர்களை பைடன் தடுக்க தவறியதால்தான் இது போன்ற குற்றங்கள் நடைபெறுகின்றன.
பைடனை போன்ற ஒரு திறமையில்லாத அதிபரை அமெரிக்கா இதுவரை கண்டதில்லை.
தனது பிரச்சாரத்தில் பைடன், ரைலியின் பெயரை கூட உச்சரிக்கவில்லை.
ஆனால், நான் ரைலியை மறக்க மாட்டேன்."
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
ஜியார்ஜியா மக்களை ரைலியின் கொலைச் சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களினால் தோன்றும் பிரச்சனைகள், அமெரிக்காவில் தீவிர விவாதத்தை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நவாஸ் ஷெரீப்- பிலாவல் இணைந்து கூட்டு வேட்பாளராக ஆசிப் அலி சர்தாரியை நிறுத்தியுள்ளனர்.
- இம்ரான் கான் தற்போது தனது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நவாஸ் ஷெரீப் கட்சியும், பிலாவல் பூட்டோ கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன. பிப்ரவரி 8-ந்தேதி தேர்தல் நடைபெற்ற போதிலும் இதுவரை அரசு அமைக்கப்படவில்லை.
நவாஸ் ஷெரீப்- பிலாவல் கட்சிகளின் சார்பில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் ஆசிப் அலி சர்தாரி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆசிப் அலி சர்தாரிக்கு எதிராக இம்ரான் கான் முகமது கான் அசாக்ஜாய்-ஐ அவரது கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.
முகமது கான் அசாக்ஜாய் பஸ்துன்-க்வா மிலி-அவாமி கட்சியின் தலைவர் ஆவார். சன்னி இத்தேஹாட் கவுன்சில் ஆதரவு பெற்றவர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான், அதிபர் தேர்தலில் முகமது கான் அசாக்ஜாய்க்கு வாக்களிக்கும்படி தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி மார்ச் 9-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்தாரி இன்று வேட்புமனு தாக்கல் இருக்கிறார்.

தற்போது அதிபராக இருக்கும் ஆரிப் அல்வியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால், அரசியல் அசாதார சூழ்நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் அவர் தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார்.
பாகிஸ்தான் தேர்தல் விதிப்படி பாராளுமன்ற உறுப்பினர்கள், செனட் மற்றும் நான்கு மாகாண உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானர்கள்.
- ஆன்-மேரி கப்பலை அதில் உள்ள சரக்குகளுடன் இங்கிலாந்து கைப்பற்றியது
- லேட்சன் என்பவருக்கு நீல் வின்தர் எனும் கார்பென்டர் இப்பார்சலை அனுப்பியுள்ளார்
1807 காலகட்டத்தில் ஐரோப்பிய நாடான டென்மார்க்கிலிருந்து, ஃபேரோ தீவுகள் (Faroe Islands) ஜலசந்திக்கு ஆன்-மேரி (Anne-Marie) எனும் கப்பல் புறப்பட்டது. அப்போதைய டென்மார்க் மன்னருக்கு சொந்தமான 2 கப்பல்களில் ஆன்-மேரி கப்பலும் ஒன்று.
பிரான்ஸ் நாட்டு மன்னராக இருந்த நெப்போலியனுக்கும், பிற ஐரோப்பிய நாடுகளின் கூட்டணிக்கும் போர் (Napoleonic wars) நடந்த அந்த காலத்தில் ஆன்-மேரி கப்பல், தனது பயணத்தின் போது, செப்டம்பர் 2 அன்று ஹெச்எம்எஸ் டிஃபென்ஸ் (HMS Defence) எனும் இங்கிலாந்து கடற்படை கப்பலால் தாக்கப்பட்டது.
அந்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாத ஆன்-மேரி கப்பலை அப்போதைய போர் மரப்புப்படி, தாக்குதலில் வென்ற இங்கிலாந்து கடற்படை, அதில் இருந்த சரக்குகள் மற்றும் தபால்களுடன் கைப்பற்றியது.
அந்த பொருட்கள் இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
அவையனைத்தும் தற்போது வரை இங்கிலாந்தின் தேசிய காப்பகத்தில் (National Archives) பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்தன.
சுமார் 200 வருடங்கள் கடந்த நிலையில், அக்கப்பலின் பொருட்கள் தற்போது முதல்முறையாக ஃபேரோ தீவுகளை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் முன்னிலையில் இங்கிலாந்தில் திறக்கப்பட்டன.
49 ஆயிரம் ஜோடி கம்பளியினால் பின்னப்பட்ட "ஸாக்ஸ்"கள், பல பறவைகளின் இறகுகள், மற்றும் ஒரு பார்சலும் அந்த பொருட்களில் இருந்தன.
அந்த பார்சலை பிரித்த போது, அதில் இயந்திர உதவியின்றி, கைகளாலேயே பின்னப்பட்ட ஒரு அழகிய ஸ்வெட்டர், தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அக்கால ஃபேரோ தீவுகளின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில், ஒளிரும் வண்ணத்தில் காண்போர் கண்களை அந்த ஸ்வெட்டர் கவர்கிறது.

200 வருடங்கள் கடந்தும் அதன் தரம், வடிவம், வண்ணம், மற்றும் வேலைப்பாடு சிறிதும் குறையாமல் அப்படியே இருப்பது காண்போரை வியக்க வைத்தது.
1807 ஆகஸ்ட் 20 அன்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனை சேர்ந்த லேட்சன் (Ladsen) என்பவருக்கு நீல்ஸ் வின்தர் (Niels Winter) எனும் கார்பென்டர் அனுப்பியுள்ள இந்த பார்சலுடன் டேனிஷ் மொழியில் வின்தர் அனுப்பியுள்ள கடிதமும் இருந்தது.
அதில், "உங்களுக்கு எனது மனைவியின் வாழ்த்துக்கள். உங்கள் வருங்கால மனைவிக்கு என் மனைவி ஒரு ஸ்வெட்டரை இத்துடன் அனுப்பியுள்ளார். உங்கள் வருங்கால மனைவிக்கு இது பிடிக்கும் என நாங்கள் நம்புகிறோம்" என எழுதப்பட்டுள்ளது.
இந்த ஸ்வெட்டர் கலைப்பொருளாக இங்கிலாந்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட உள்ளது.
- மாஷா அமினி ஹிஜாப் முறையாக அணியவில்லை என போலீசார் கைது செய்தனர்.
- போலீசார் தாக்கியதால் மாஷா அமினி உயிரிழந்தார். இதனால் 2022-ல் ஈரானில் போராட்டம் வெடித்தது.
இசை மற்றும் பாடலில் சிறந்த விளங்குபவர்களுக்கு உலகின் உயரிய விருதான கிராமிய விருது வழங்கி கவுரவிக்கப்படும். சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற இந்த விழாவில் ஈரான் பாடகர் ஷெர்வின் ஹஜிபோர் கிராமிய விருது வென்றார். அவருக்கு அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன் விருது வழங்கி கவுரவித்தார்.
இந்த நிலையில் மாஷா அமினியின் உயிரழப்பால் 2022-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவாக அவரது பாடல் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில் நீதிமன்றம் அவருக்கு 3.8 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஈரான் அரசின் நடைமுறைக்கு எதிரான பிரசாரம் மற்றும் மக்கள் போராட்டத்தை ஊக்கப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது. பாடகர் ஷெர்வின் ஹஜிபோர் முறையான வருத்தம் தெரிவிக்காததால் இந்த தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு ஆண்டுகள் பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் குற்றம் தொடர்பாக பாடல் உருவாக்க வேண்டும் எனவும், அவர்களின் குற்றம் குறித்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

ஈரான் அரசு ஹிஜாப் அணிவது தொடர்பாக கடுமையான சட்டத்தை கொண்டு வந்தது. மாஷா அமினி என்ற பெண்மணி ஹிஜாப் முறையாக அணியவில்லை என பொலீசார் கைது செய்தனர். போலீசார் தாக்கியதால் அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மிகப்பெரிய அளவில போராட்டம் வெடித்தது. இதற்கு ஆதரவாக பாடல் உருவாக்கியதால் பாடகருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். ஹிஜாப் முறைப்படி அணியாத பெண்களை கைது செய்வதுதான் அவர்களுடைய பணியாகும்.
- நிவாரணப் பொருட்கள் வாங்க கூடியிருந்த மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு.
- இந்த துப்பாக்கிச்சூட்டில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசா மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. அங்குள்ள பொதுமக்கள் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். வடக்கு காசாவில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். பட்டினியால் உயிரை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இஸ்ரேல் ராணுவம் அனுமதித்தால் மட்டுமே மனிதாபிமான அடிப்படையிலான் உதவிப் பொருட்கள் அங்குள்ள மக்களுக்க சென்றடையும் நிலை உள்ளது.
இந்த நிலையில்தான் காசாவின் மேற்கு பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்க இஸ்ரேல் ராணுவம் சம்மதம் தெரிவித்தது. லாரிகளில் நிவாரணப் பொருட்கள் சென்றது. அப்போது லாரிகளை முற்றுகையிட்டு உணவுப் பொருட்களை வாங்க மக்கள் முண்டியடித்தனர்.

அப்போது பாதுகாப்பிற்கான நின்றிருந்த இஸ்ரேல் ராணுவத்தை நோக்கி மக்கள் வந்ததாகவும், தங்களுக்கு எதிராக தாக்குதல் மிரட்டல் என நம்பியதாகவும் கூறி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதா இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இதனால் 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இச்சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தினர்.
இந்த நிலையில் காசாவில் அமெரிக்க ராணுவம வான்வழியாக உதவிப் பொருட்களை காசா மக்களுக்கு வழங்கும். மேலும் என்னென்ன வழிகள் இருக்கிறது. அவைகள் அனைத்தும் ஆராயப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜோர்டான் மற்றும் சில நாடுகளுடன் இணைந்து இந்த பணியில் ஈடுபடப்போவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
- உறுப்பினர்கள் அனைவரும் “டம்சர், டம்சர்” (dumsor, dumsor) என கோஷமிட்டனர்
- கட்டணம் செலுத்தாதவர் யார் என்றாலும் மின்சாரம் நிறுத்தப்படும் என்றது மின் நிறுவனம்
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு, கானா (Ghana). இதன் தலைநகரம் அக்ரா (Accra).
அந்நாட்டு பாராளுமன்றத்தில் அதிபர் நானா அகுஃபோ–அட்டோ (Nana Akufo-Addo) நாட்டு மக்களுக்கு உரையாற்றி கொண்டிருந்தார்.
அப்போது பாராளுமன்றத்தில் மின்சாரம் தடைபட்டது. உடனடியாக மின்சாரம் திரும்பும் என நினைத்து உறுப்பினர்கள் அமர்ந்திருந்த நிலையில், மின்சாரத்தடை நீடித்தது.
இதையடுத்து அங்கிருந்து உறுப்பினர்கள் அனைவரும் அக்கன் (Akan) மொழியில் "மின்சார தடை" எனும் பொருள்பட "டம்சர், டம்சர்" (dumsor, dumsor) என கோஷமிட தொடங்கினர்.
சில நிமிடங்கள் கடந்ததும், உறுப்பினர்கள் அமர்ந்திருந்த சபைக்கு மட்டும் ஜெனரேட்டர் உதவியுடன் மின்சார சேவை மீண்டும் தொடர்ந்தது.

ஆனால், மின்சார சேவை பாராளுமன்றத்தின் பிற பகுதிகளுக்கு வரவில்லை. இதனால் லிஃப்டில் பயணித்த பல உறுப்பினர்கள் அதிலேயே சிக்கிக் கொள்ள நேர்ந்தது.
"பாராளுமன்ற அலுவலகம் செலுத்த வேண்டிய மின்கட்டண பாக்கியை வசூலிக்க பல முறை நோட்டீஸ் அனுப்பியும் கட்டணத்தை செலுத்தாததால் மின் தொடர்பை துண்டித்தோம். மின் தடை என்பது கட்டணம் செலுத்தாத அனைவருக்கும்தான். கட்டணம் செலுத்தாதவர்கள் யாராக இருந்தாலும் மின்சார சப்ளை துண்டிக்கபப்டும்" என எலக்ட்ரிசிட்டி கம்பெனி ஆஃப் கானா (ECG) எனும் அந்நாட்டு மின்சார நிறுவன செய்தித் தொடர்பாளர் வில்லியம் போடெங் (William Boateng) தெரிவித்தார்.
கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அந்நாட்டின் அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை வாங்க கானா அரசால் முடியவில்லை.
நாளின் பிற்பகுதியில் கட்டணத்தின் ஒரு பகுதியை செலுத்திய பிறகே மின் தொடர்பு மீண்டும் வழங்கப்பட்டது.
கானா அரசு மின்சார துறைக்கு $1.8 மில்லியன் அளவிற்கு கட்டண பாக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.






