என் மலர்tooltip icon

    உலகம்

    • கீர்த்தன் எனப்படும் பக்தி பாடல்கள் பாடுவதில் திறன் கொண்டவர் ராஜ் சிங்
    • அடையாளம் தெரியாதவர்கள் சுட்டதில் துப்பாக்கி குண்டு சிங்கின் வயிற்றில் பாய்ந்தது

    அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் அலபாமா. இதன் தலைநகரம் மோன்ட்கோமரி (Montgomery).

    இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் பிஜ்னோர் மாவட்ட டண்டா சகுவாலா (Tanda Sahuwala) கிராமத்தை சேர்ந்த "கோல்டி" (Goldy) என அழைக்கப்படும் 29 வயதான ராஜ் சிங் (Raj Singh) சுமார் ஒன்றரை வருட காலமாக அமெரிக்காவில் தங்கியிருந்தார்.

    "கீர்த்தன்" (kirtan) எனப்படும் சீக்கிய மதத்தின் பக்தி பாடல்கள் பாடுவதில் திறன் மிக்கவரான ராஜ் சிங், அலபாமா மாவட்டத்தில் உள்ள ஒரு குர்துவாரா (Gurdwara) எனப்படும் சீக்கிய வழிபாட்டு தலத்திற்கு வெளியே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத சிலர், ராஜ் சிங்கை சுட்டனர். இதில் துப்பாக்கி குண்டு அவரது வயிற்று பகுதியில் பாய்ந்ததில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஒரு சில இனத்தவர்கள் மீது வெறுப்புணர்வினால் வேறு சில இனத்தவர்கள் தாக்குதலிலோ அல்லது வன்முறை செயலிலோ ஈடுபடும் வெறுப்புணர்வு குற்றம் (hate crime) எனும் வகையிலான குற்றமாக இது இருக்கலாம் என ராஜ் சிங் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.


    இப்பிராந்தியத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மீது நடத்தப்படும் இரண்டாவது கொலை சம்பவம் இது.

    மேலும், அமெரிக்காவில், 2024 பிப்ரவரியிலும், 2023 ஜூலையிலும் இந்திய வம்சாவளியினர் மீது வெறுப்புணர்வு கொண்ட தனி நபர்களால் வெவ்வேறு சம்பவங்களில் இருவர் சுட்டு கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உயிரிழந்த ராஜ் சிங்கின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர உதவி செய்ய கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரது குடும்பத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.

    தனது தந்தையின் உயிரிழப்பிற்கு பிறகு தனது தாயையும் இரண்டு சகோதரிகளையும் ஒரு சகோதரனையும் காப்பாற்றும் பொறுப்பில் இருந்த ராஜ் சிங் கொல்லப்பட்டது அவரது சொந்த ஊரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • லாரிகளில் உணவுப் பொருட்கள் கொண்டு சென்றதும் மக்கள் முற்றுகையிட்டதாக தகவல்.
    • கூட்ட நெரிசல் காரணமாக அச்சுறுத்தல் இருந்ததாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது- இஸ்ரேல் ராணுவம்.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் 4 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் காசாவில் மட்டும் இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

    இஸ்ரேலுக்கு நாளுக்கு நாள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருவதால் காசாவில் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. இதனிடையே போரின் விளைவால் காசா மக்கள் தொகையில் கால்வாசி பேர் பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாகவும், பல லட்சம் மக்கள் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் பரிதவித்து வருவதாகவும் ஐ.நா. கவலை தெரிவித்தது.

    இதனால் குறைவான அளவில் கிடைக்கும் நிவாரண பொருட்களை பெற மக்கள் முண்டியடிப்பதாகவும், ஒரு சில இடங்களில் மக்கள் நிவாரண பொருட்களை கொள்ளையடித்து செல்வதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இந்த நிலையில் காசாவின் மேற்கு பகுதியில் உள்ள நபுல்சி ரவுண்டாபவுட் என்ற இடத்திற்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வருவதாக வந்த தகவலின் பேரில் அவற்றை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

    நிவாரண பொருட்களை கொண்டு வரும் லாரிகளை அவர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். நிவாரணப் பொருட்கள் வந்த லாரிகளுடன் இஸ்ரேல் ராணுவ வாகனங்களும் வந்தன. லாரி அப்பகுதிக்கு வந்ததும், மக்கள் லாரியை முற்றுகையிட்டு பொருட்களை வாங்க முண்டியடித்தனர். அப்போது கூட்ட நெரிசலில் சிலர் சிக்கி காயம் அடைந்ததாக தெரிகிறது.

    இதனால் இஸ்ரேல் ராணுவம் கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டதாக தெரிகிறது. அப்போது இஸ்ரேல் ராணுவம் திடீரென மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதில் 104 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுள்ளனர். 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை உறுதி செய்த இஸ்ரேல் ராணுவம் "நிவாரணப் பொருட்கள் வாங்குவதற்கான மக்கள் முண்டியடித்தனர். அப்போது அருகில் இருந்து இஸ்ரேல் ராணுவ வாகனத்தை நோக்கி வந்தனர். அவர்கள் ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தும் விடுப்பதாக நம்பப்பட்டது. இதனால் தங்களை காப்பாற்ற துப்பாக்கிச்சூடு நடத்தினர்" எனத் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே காசாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கான உபகரணங்கள் இன்றி தள்ளாடி வரும் நிலையில் தற்போதைய இந்த கொடூர சம்பவத்தால் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், கழுதை வண்டியில் பலியானவர்களின் உடல்கள் கொண்டு செல்லப்படும் பரிதாப நிலையை காண முடிந்தது.

    இதற்கிடையே அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் உடனடி போர் நிறுத்தம் தேவை. பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    காசாவில் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் இது ஒரு படுகொலை என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    • ரெஸ்டாரன்ட் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து கட்டடம் முழுவதும் பரவியது.
    • 22 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் ஏழு மாடி கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில் ரெஸ்டாரன்ட் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த ரெஸ்டாரன்டில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென அனைத்து மாடிகளுக்கும் பரவியது. அந்த கட்டத்தில் மேலும் சில ரெஸ்டாரன்ட்கள், துணிக்கடைகள் செயல்பட்டு வந்துள்ளனர்.

    35-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் கட்டடத்தில் சிக்கித் தவித்த 75 பேரை மீட்டனர். அதில் 42 பேர் மயக்க நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 22 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    • கடந்த சில தினங்களுக்கு முன் அலெக்சி நவால்னி திடீரென சிறையிலேயே உயிரிழந்தார்.
    • மாஸ்கோ தேவாலயத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாஸ்கோ:

    ரஷிய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி (47), மீது இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. இதனால் கடந்த 2013-ல் பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட் அவமதிப்பு உள்பட பல்வேறு வழக்குகளில் அலெக்சி நவால்னிக்கு மொத்தம் 19 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.

    சில தினங்களுக்கு முன் அலெக்சி நவால்னி திடீரென சிறையிலேயே உயிரிழந்ததாக ரஷிய ஊடகங்களில் செய்தி வெளியானது. அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

    உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ள அதிபர் புதினுக்கு அலெக்சி நவால்னியின் மரணம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, நவால்னியின் உடலை ரஷிய அரசு தங்களிடம் ஒப்படைக்க மறுப்பதாக அவரது மனைவி, தாயார் குற்றம்சாட்டினர்.

    இந்நிலையில், அலெக்சி நவால்னியின் இறுதிச்சடங்கு மார்ச் 1-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பாக, நவால்னியின் செய்தி தொடர்பாளர் கிரா யார்மிஷ் கூறுகையில், மாஸ்கோவின் தென்கிழக்கு மரியினோ மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் மார்ச் 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அலெக்சி நவால்னியின் இறுதிச்சடங்கு நடைபெறும். பின் அருகில் உள்ள மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    • டூத்லெஸ்.ஏஎம்ஜி எனும் ஐடி-யை கொண்ட பயனர் ஒரு வீடியோவை பதிவிட்டார்
    • இன்ஸ்டாகிராம் ஹேண்டிலை பிஎம்டபிள்யூ_சுகமான டிரைவிங் என மாற்றுவீர்களா என BMW கேட்டது

    சமூக வலைதளங்களில் சுவாரஸ்யமான நிகழ்வுகள் பல "டிரெண்டிங்" ஆகி பிரபலமாக உள்ளன.

    அவ்வகையில் சில மாதங்களாக, தாங்கள் பதிவிடும் வீடியோக்களை சில பிரபலங்கள் அல்லது பிரபல நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் "கமென்ட்" செய்தாக வேண்டும் எனும் பிடிவாதக்காரர்களின் வீடியோ பரவி வருகிறது.

    இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் "டூத்லெஸ்.ஏஎம்ஜி" எனும் ஐடி-யை கொண்ட ஒரு பயனர், தான் வைத்திருக்கும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி (Mercedes-AMG) காரை குறித்து பதிவிட்டுள்ள வீடியோவை பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் பார்த்து, கமென்ட் பதிவிட்டால், தனது மெர்சிடிஸ் காரை விற்று விட்டு பிஎம்டபிள்யூ எம்340ஐ (BMW M340i) ரக காரை வாங்குவேன் என பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதிலளித்த பிஎம்டபிள்யூ நிர்வாகம் "நீங்கள் உங்கள் இன்ஸ்டாகிராம் ஹேண்டில் பெயரையும் மாற்றி பிஎம்டபிள்யூ_சுகமான டிரைவிங் என மாற்றுவீர்களா?" என கேள்வி எழுப்பியிருந்தது.

    மிக பெரிய கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ ஒரு பயனரின் வீடியோவிற்கு உடனடியாக பதிலளித்தது இணையத்தில் பாராட்டப்படுகிறது.

    ஆனால், பிஎம்டபிள்யூ நிறுவனம் பதிலளித்ததனால், அந்த பயனர் வாக்களித்தபடி தனது மெர்சிடிஸ் காரை விற்று பிஎம்டபிள்யூ காரை வாங்கினாரா எனும் விவரம் தற்போது வரை வெளியாகவில்லை.

    இந்த கேள்வி-பதில் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • பிரதமராகவும், அதிபராகவும் புதின் கடந்த 2 தசாப்தங்களாக அதிகாரத்தில் உள்ளார்
    • ரஷியாவின் மேற்கு பிராந்தியத்தை நாம் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்

    இன்னும் சில வாரங்களில் ரஷியாவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் வெல்வது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

    பிரதமராகவும், அதிபராகவும் புதின் கடந்த 2 தசாப்தங்களாக அதிகாரத்தில் உள்ளார்.

    இந்நிலையில், இன்று, ரஷிய அதிபர் புதின் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    மேற்கத்திய நாடுகள் ஆதிக்க மனப்பான்மையுடன் நமது வளர்ச்சியை முடக்க முயன்று வருகின்றன.

    அது மட்டுமல்ல, அவர்கள் நம்மை அழிக்கவும் பார்க்கின்றனர்.

    அவர்கள் நோக்கம் எதுவாக இருந்தாலும் நமது நாட்டையும் உக்ரைனையும் அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தி கொள்வதில்தான் முனைப்பு காட்டுகின்றனர்.

    நமக்கிடையே பிளவு ஏற்படுத்தி நம்மை வலிமை குறைந்தவர்களாக உருவாக்க முயல்கின்றனர்.

    பெரும்பாலான ரஷிய மக்கள் உக்ரைனில் "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எடுக்கப்பட்டதை வரவேற்கிறார்கள்.

    ரஷிய குடிமக்கள்தான் நமது சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்.

    நமது எதிர்காலம் செல்லும் திசை குடிமக்களாகிய உங்கள் கைகளில்தான் உள்ளது.


    அரேபிய நாடுகள் மற்றும் லத்தீன் நாடுகளுடன் நமது உறவை நாம் வலுப்படுத்தி கொள்ள வேண்டும்.

    நேட்டோ (NATO) நாடுகள் உக்ரைனுக்கு தங்கள் துருப்புகளை அனுப்பினால், அணு ஆயுதப் போர் துவங்கும்.

    நேட்டோவில் பின்லாந்தும், சுவீடனும் இணைவதால் ரஷியாவின் மேற்கு பிராந்தியத்தை நாம் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

    எந்த எதிரி நாட்டின் எல்லைக்கு உள்ளேயும் சென்று அழிக்க கூடிய ஆயுதங்கள் நம்மிடையே உள்ளன.

    ரஷியாவை ஆக்கிரமிக்க எவரேனும் முனைந்தால் இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட பாதிப்புகளை விட கடுமையான பாதிப்புகள் உருவாகும்.

    இவ்வாறு புதின் கூறினார்.

    • பாராளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களுக்கு முன் ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தினர்
    • இதுநாள் வரை இங்கிலாந்தில் காணப்பட்ட ஜனநாயக வழிமுறையே அல்ல இது என்றார் ரிஷி சுனக்

    கடந்த 2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் பகுதியில் பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 1500க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை கொன்றனர். மேலும், ஹமாஸ் அமைப்பினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 250க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இந்த பயங்கரவாத நடவடிக்கையில் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கப் போவதாக உறுதியெடுத்து அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதியில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஏராளமான பாலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

    4 மாதங்களை கடந்தும் தீவிரமாக போர் நடைபெற்று வரும் நிலையில், உலகெங்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலிய ராணுவ படையினருக்கும் ஆதரவாக பல்வேறு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இங்கிலாந்தில், பொதுமக்களில் சிலர் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கும் ஆதரவு நிலைப்பாட்டிற்கு எதிராக அவர்களது இல்லங்களுக்கு முன் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

    இது அந்நாட்டில் இதுவரை காணாத நடைமுறையாக உள்ளது.


    இந்நிலையில், பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இரு தரப்பினரில் எவருக்கு ஆதரவு குரல் அளித்தாலும், மற்றொரு தரப்பினர் அச்சுறுத்துவதாக தெரிவித்தனர்.

    ஆதரவு நிலை எடுப்பவர்களை நேரிடையாக குறிப்பிட்டு எச்சரிக்கைகள் விடப்படுவதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    இது குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்ததாவது:

    சமீப காலங்களாக, கும்பல் ஆட்சி (mob rule) ஜனநாயகத்தை அழிக்க முயல்வதை அனைவரும் ஏற்று கொள்கிறோம். இது சரியல்ல.

    கருத்து சுதந்திரத்தையும், ஆரோக்கியமான விவாதத்தையும் தடுக்கும் வகையில் அதிகரித்து வரும் வன்முறையுடன் கூடிய அச்சுறுத்தும் நடைமுறை வளர்ந்து வருகிறது.

    இது இந்நாள் வரை இங்கிலாந்தில் காணப்பட்ட ஜனநாயக வழிமுறையே அல்ல.

    நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து இந்த சூழலை மாற்ற வேண்டும்.

    பாராளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களுக்கு முன் போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்க ரோந்து படையினர் அதிகரிக்கப்படுவார்கள். உறுப்பினர்களின் இல்லத்திற்கு முன் போராடுவது சட்ட விரோத அச்சுறுத்தலாக கருதப்படும்.

    இவ்வாறு ரிஷி சுனக் கூறினார்.

    பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக $39 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிபர், வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டார்
    • நான் இளமையுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்றார் பைடன்

    ஒருவரின் உடல்நலன் எவ்வாறு உள்ளது என்பதை அறிய மருத்துவர்கள் செய்யும் முதல்நிலை உடல் பரிசோதனைகள் "ஃபிசிக்கல்" (physical examination) எனப்படும்.

    நேற்று, தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (81) தனது வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளை (annual physical) செய்து கொண்டார்.

    "வால்டர் ரீட் நேஷனல் மிலிட்டரி மெடிக்கல் சென்டர்" (Walter Reed National Military Medical Centre) எனும் மருத்துவ மையத்தில் ஜோ பைடனுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன.


    வழக்கமான மருத்துவர்களுடன் பல்வேறு மருத்துவத்துறை சார்ந்த வல்லுனர்கள் மற்றும் கண், பற்கள், எலும்பு, தண்டுவடம், நரம்பு, இதயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சிறப்பு சிகிச்சை நிபுணர்கள், ஜோ பைடனை பரிசோதித்தனர்.

    ஜோ பைடனின் உடல்நலம் குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில் அவரது பிரத்யேக மருத்துவரான டாக்டர். கெவின் ஒ'கொனார் (Dr. Kevin O'Connor) தனது குறிப்பை இணைத்துள்ளார்.

    அந்த குறிப்பில், "ஜோ பைடன் பூரண உடல்நலத்துடன் உள்ளார். அவரால் அவரது அனைத்து கடமைகளையும் எந்த சிக்கலோ, விதிவிலக்குகளோ அல்லது சிறப்பான உதவிகளோ இன்றி தானாகவே வழக்கமான முறையில் செய்ய முடியும். நரம்பு மண்டலம் அல்லது நினைவாற்றலை பாதிக்கும் நோய்கள் ஏதும் இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை. ஓய்விலும், செயலாற்றும் போதும் அவருக்கு எந்த விதமான உடல் நடுக்கங்களும் இல்லை" என டாக்டர். கெவின் பதிவிட்டுள்ளார்.

    தனது மருத்துவ பரிசோதனை முடிந்ததும் ஜோ பைடன், "நான் மிகவும் இளமையுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சென்ற வருடத்தை விட ஏதும் மாறி விடவில்லை. அனைத்தும் சிறப்பாக உள்ளது" என தெரிவித்தார்.

    ஆண்டுதோறும் அமெரிக்க அதிபர்களுக்கு நடக்கும் மருத்துவ பரிசோதனைகளுடன் அவர்களது மருத்துவர்கள் தரும் குறிப்பை பொதுவெளியில் அறிக்கையாக தருவது அமெரிக்க வெள்ளை மாளிகையால் நீண்டகாலமாக கடைபிடிக்கப்படும் ஒரு மரபாகும்.

    அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் வயதான அதிபர் ஜோ பைடன் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 4300 டன் எடை கொண்ட இந்த கப்பல், ஆய்வுப்பணிகளுக்காக மாலத்தீவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பபட்டது.
    • இது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக கருதப்பட்டது.

    இந்தியா- மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் சீனாவின் சியாங்யாங் ஹாங்-03 என்ற உளவுக்கப்பல் மாலத்தீவை நோக்கி வந்தது.

    4300 டன் எடை கொண்ட இந்த கப்பல், ஆய்வுப்பணிகளுக்காக மாலத்தீவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பபட்டது. இந்திய பெருங்கடல் வழியாக சென்ற சீன உளவுக்கப்பல் கடந்த 22-ந்தேதி மாலத்தீவை சென்றடைந்தது. இது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக கருதப்பட்டது.

    இதையடுத்து பாதுகாப்பு கருதி இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது. மாலத்தீவு தலைநகர் மாலேவில் இருந்து மேற்கே 7.5 கி.மீ. தொலைவில் உள்ள திலா புஷி துறைமுகத்தில் சீன உளவுக்கப்பல் நிலைநிறுத்தப்பட்டது.

    உயர் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த சீன கப்பல் நுண்ணுயிர் மரபணு ஆய்வு, உப்புத் தன்மை, நீருக்கடியில் கனிம ஆய்வு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட ஆய்வுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மாலத்தீவு துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட சீன உளவு கப்பல் ஒரு வாரத்துக்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    சீன கப்பல் மாலத்தீவு கடற்கரையை விட்டு வெளியேறியதாக மாலத்தீவின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. மேலும் துறைமுகத்தில் இருந்து சீன கப்பல் புறப்பட்ட போதிலும் கப்பலின் கடைசி சிக்னல் மாலத்தீவின் ஹுல்ஹு மாலே அருகே காட்டின என்றும் தெரிவித்தது.

    மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். அதிபராக பதவியேற்றவுடன் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன்படி இந்திய படைகள் வெளியேற்றம் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனவரி 17 அன்று கேத்தரினுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது
    • தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுநிலவுவதாகவும் வதந்திகள் உலவுகின்றன

    பிரிட்டிஷ் இளவரசர் சார்லசின் மனைவி, கேத்தரின் மிடில்டன் (Catherine Middleton).

    சுமார் 2 மாதங்களாக, 42-வயதாகும் "கேட்" (Kate) என அழைக்கப்படும் கேத்தரின் மிடில்டன் பொதுவெளியில் காணப்படவில்லை. இது பல்வேறு யூகங்களுக்கும், சந்தேகங்களுக்கும் வழிவகுத்துள்ளது.

    கடந்த ஜனவரி 17 அன்று, பிரிட்டிஷ் அரண்மனையின் அதிகாரபூர்வ அலுவலகம், கேத்தரினுக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் அவர் ஈஸ்டர் பண்டிகை காலகட்டத்தில் மீண்டும் பொதுவெளிக்கு திரும்புவார் என தெரிவித்தது.

    ஆனால், அவர் இதுவரை காணப்படாததால் சமூக வலைதளங்களில் ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன. கேத்தரினின் உடல்நலம் குறித்தும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அரண்மனை வட்டாரங்கள் இதுவரை அதிகாரபூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை.

    இதற்கு சான்றாக, ஒரு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், பாதியிலேயே "சொந்த விஷயமாக" புறப்பட்டு சென்றதை சமூக வலைதளங்களில் பயனர்கள் குறிப்பிட்டு அவரும் தனது மனைவியின் உடல்நலம் குறித்து ஏதும் தெரிவிக்காமல் இருப்பதை பயனர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


    கேத்தரினின் தற்போதைய உடல்நிலை குறித்து புகைப்படங்கள் ஏதும் சமூக வலைதளங்களில் வெளியாகாததும் வதந்திகளுக்கு மேலும் வலுவூட்டுகிறது.

    கேத்தரினுக்கும், அவரது கணவர் சார்லசிற்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாகவும், அதனால் கேத்தரின் மன உளைச்சலில் இருப்பதாகவும் அரண்மனைக்கு நெருக்கமானவர்கள் சிலர் வலைதளங்களில் பதிவு செய்தனர்.

    உடல்நலம் தேறி வந்த கேத்தரின், திடீரென "கோமா" நிலைக்கு சென்று விட்டதாகவும் சில உறுதிப்படுத்தப்படாத கருத்துகள் இணையத்தில் உலவுகின்றன.

    பிரிட்டிஷ் அரண்மனைக்கு விசுவாசமிக்க பெரும்பாலான இங்கிலாந்து பொதுமக்கள் கேத்தரின் விரைவில் உடல்நலம் தேற வேண்டும் என்பதையே விரும்புகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானில் மனித உரிமைகள் சாதனை "உண்மையிலேயே பரிதாபத்திற்குரியது.
    • தனது சொந்த சிறுபான்மையினரை துன்புறுத்தி, உண்மையிலேயே மோசமான மனித உரிமை சாதனைகளைக் கொண்ட ஒரு நாடு.

    காஷ்மீர் விவகாரம் பற்றி பாகிஸ்தான் ஐ.நா.சபையில் அடிக்கடி பேசி இந்தியா மீது குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் 55-வது அமர்வில், இந்தியாவின் செயலாளர் அனுபமா சிங் பேசியதாவது:-

    இந்தியாவைப் பற்றிய விரிவான பாகிஸ்தானின் குறிப்புகளைப் பொறுத்தவரை, சபையின் தளம் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக வெளிப்படையான பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்க தவறாகப் பயன்படுத்தப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

    நாங்கள் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய முழு யூனியன் பிரதேசங்களும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சமூக- பொருளாதார மேம்பாடு மற்றும் நல்லாட்சியை உறுதி செய்வதற்காக இந்திய அரசு எடுத்துள்ள அரசியலமைப்பு நடவடிக்கைகள் இந்தியாவின் உள் விவகாரங்கள்.

    இதில் பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை. பாகிஸ்தானில் மனித உரிமைகள் சாதனை "உண்மையிலேயே பரிதாபத்திற்குரியது. தனது சொந்த சிறுபான்மையினரை துன்புறுத்தி, உண்மையிலேயே மோசமான மனித உரிமை சாதனைகளைக் கொண்ட ஒரு நாடு, சாதிப்பதில் பெரும் முன்னேற்றங்களைச் செய்து வரும் இந்தியாவைப் பற்றி கருத்துத் தெரிவிப்பது, வெறும் முரண்பாடானவை அல்ல. மாறாக விபரீதமானவை.

    உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரித்து வருகிறது. பயங்கரவாதம், கடனில் சிக்கித் தவிக்கும் தேசிய இருப்புநிலைகள் மற்றும் தங்கள் நலன்களுக்கு சேவை செய்யத் தவறியதற்காக அதன் மக்கள் உணரும் அவமானம் ஆகியவற்றால் ரத்தம் சிந்தப்பட்ட ஒரு நாட்டிற்கு இந்தியா அதிக கவனம் செலுத்த முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருவாயில் 11 சதவீதத்திற்கும் மேல் உணவிற்காக செலவிடுகின்றனர் அமெரிக்கர்கள்
    • கேரி பில்னிக் ஆண்டுதோறும் 1 மில்லியன் டாலர்களுக்கு மேல் வருமானம் பெறுகிறார்

    அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான கெல்லாக்'ஸ் (Kellogg's) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிபவர், கேரி பில்னிக் (Gary Pilnick).

    அதிகரிக்கும் உணவு பொருட்களின் விலை குறித்து கேரி பில்னிக் ஒரு பேட்டியில், "இரவு உணவுக்கு கெல்லாக்'ஸ் மற்றும் பால் மற்றும் ஒரு பழம் உண்ண பழகி கொள்ள வேண்டும். இதற்கு ஒரு டாலருக்கும் குறைவாக செலவாகும். " என தெரிவித்தார்.

    இது அமெரிக்க மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    சமூக வலைதளங்களில் கேரிக்கு எதிராக பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    மளிகை பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் ஏறுவதால், தங்கள் வருவாயில் 11 சதவீதத்திற்கும் மேல் உணவிற்காக மட்டுமே செலவு செய்ய வேண்டிய நிலையில் அமெரிக்கர்கள் உள்ளனர்.

    காலை உணவை தாண்டி இரவு உணவிற்கும் கெல்லாக்'ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளதாக கேரி தெரிவித்தார்.

    கேரி பில்னிக் ஆண்டுதோறும் 1 மில்லியன் டாலர்களுக்கு மேல் வருமானம் பெறுகிறார். இதை தவிர பல ஊக்க தொகைகளும், சலுகைகளும் அவருக்கு நிறுவனம் வழங்கும்.

    மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் போது, மிக அதிக ஊதியம் பெறும் நிறுவனத்தின் தலைவர் ஒருவர் இவ்வாறு கூறியுள்ளது, அவரது அலட்சிய மனப்பான்மையை காட்டுவதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    2021-ஐ ஒப்பிடும் போது 2023 இறுதிக்குள் மளிகை பொருட்களின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கெல்லாக்'ஸ் போன்ற உணவு பண்டங்களில் உள்ள சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை என்பதால் அதனை தவிர்க்குமாறு ஊட்டச்சத்து நிபுணர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் கேரியின் இந்த கருத்து பார்க்கப்படுகிறது.

    ×