search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஜனநாயகத்தை அழிக்கும் சக்திகள் வலுப்பெறுகின்றன - ரிஷி சுனக் எச்சரிக்கை
    X

    "ஜனநாயகத்தை அழிக்கும் சக்திகள் வலுப்பெறுகின்றன" - ரிஷி சுனக் எச்சரிக்கை

    • பாராளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களுக்கு முன் ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தினர்
    • இதுநாள் வரை இங்கிலாந்தில் காணப்பட்ட ஜனநாயக வழிமுறையே அல்ல இது என்றார் ரிஷி சுனக்

    கடந்த 2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் பகுதியில் பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 1500க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை கொன்றனர். மேலும், ஹமாஸ் அமைப்பினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 250க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இந்த பயங்கரவாத நடவடிக்கையில் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கப் போவதாக உறுதியெடுத்து அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதியில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஏராளமான பாலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

    4 மாதங்களை கடந்தும் தீவிரமாக போர் நடைபெற்று வரும் நிலையில், உலகெங்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலிய ராணுவ படையினருக்கும் ஆதரவாக பல்வேறு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இங்கிலாந்தில், பொதுமக்களில் சிலர் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கும் ஆதரவு நிலைப்பாட்டிற்கு எதிராக அவர்களது இல்லங்களுக்கு முன் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

    இது அந்நாட்டில் இதுவரை காணாத நடைமுறையாக உள்ளது.


    இந்நிலையில், பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இரு தரப்பினரில் எவருக்கு ஆதரவு குரல் அளித்தாலும், மற்றொரு தரப்பினர் அச்சுறுத்துவதாக தெரிவித்தனர்.

    ஆதரவு நிலை எடுப்பவர்களை நேரிடையாக குறிப்பிட்டு எச்சரிக்கைகள் விடப்படுவதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    இது குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்ததாவது:

    சமீப காலங்களாக, கும்பல் ஆட்சி (mob rule) ஜனநாயகத்தை அழிக்க முயல்வதை அனைவரும் ஏற்று கொள்கிறோம். இது சரியல்ல.

    கருத்து சுதந்திரத்தையும், ஆரோக்கியமான விவாதத்தையும் தடுக்கும் வகையில் அதிகரித்து வரும் வன்முறையுடன் கூடிய அச்சுறுத்தும் நடைமுறை வளர்ந்து வருகிறது.

    இது இந்நாள் வரை இங்கிலாந்தில் காணப்பட்ட ஜனநாயக வழிமுறையே அல்ல.

    நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து இந்த சூழலை மாற்ற வேண்டும்.

    பாராளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களுக்கு முன் போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்க ரோந்து படையினர் அதிகரிக்கப்படுவார்கள். உறுப்பினர்களின் இல்லத்திற்கு முன் போராடுவது சட்ட விரோத அச்சுறுத்தலாக கருதப்படும்.

    இவ்வாறு ரிஷி சுனக் கூறினார்.

    பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக $39 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×