என் மலர்tooltip icon

    உலகம்

    • சிறுவன் கத்தியுடன் போலீசாரை நோக்கி வந்தான்.
    • சிறுவன் தொடர்ந்து தாக்குதல் நடத்த முயன்றதால் அவனை போலீசார் சுட்டனர்.

    ஆஸ்திரேலியாவின் பெர்த்தின் புறநகர் பகுதியான வில்லெட்டனில் 16 வயது சிறுவன் ஒருவன் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டான். பொதுமக்களை கத்தியால் குத்தி தாக்கினான். இதையறிந்ததும் போலீசார் அங்கு விரைந்தனர்.

    அப்போது அந்த சிறுவன் கத்தியுடன் போலீசாரை நோக்கி வந்தான். அவனை கத்தியைக் கீழே போடுமாறும், சரண் அடையும்படியும் போலீசார் தெரிவித்தனர்.

    ஆனால் அதற்கு மறுத்த சிறுவன் தொடர்ந்து தாக்குதல் நடத்த முயன்றதால் அவனை போலீசார் சுட்டனர். பின்னர் அவனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்தான். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உக்ரைனின் சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றின.
    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை ரஷியா பதிவு செய்துள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றின.

    இந்த நிலையில் உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷியா டிரோன் தாக்குதலை நடத்தியது. அந்த டிரோன்கள், கார்கிவ் நகரில் மக்கள் குடியிருப்பு பகுதிகளை தாக்கின.

    இதில் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடும் போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து கார்கிவ் பிராந்திய கவர்னர் சினி ஹுபோவ் கூறும்போது, ஒஸ்னோவியன்ஸ்கி பகுதியில் உள்ள பொதுமக்களின் உள்கட்டமைப்பு மீது ரஷியா டிரோன் தாக்குதல்களை நடத்தியது. கீழே விழுந்த டிரோன்களால் பெரிய அளவில் தீப்பிடித்தது என்றார்.

    இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை ரஷியா பதிவு செய்துள்ளது. மேலும் அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் ரஷியா வைத்துள்ளது.

    இதுகுறித்து ரஷியாவின் டாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ரஷிய உள்துறை மந்திரியின் தகவலின்படி, ரஷியாவின் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளார். ஆனால், வேறு எந்த தகவலும் இல்லை என தெரிவித்து உள்ளது.

    • ஊழல் தொடர்புடைய விசாரணை ஒன்றில் அழகி லாண்டி பராகா பெயரும் இடம் பெற்றிருந்தது.
    • அழகி லாண்டி கொலையில் லியாண்டிரோ நாரிரோவின் மனைவிக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    குயிட்டோ:

    ஈக்வடார் நாட்டை சேர்ந்தவர் லாண்டி பராகா கோய்புரோ (வயது 23).

    இவர் 2022-ம் ஆண்டு மிஸ் குவடார் அழகி போட்டியில் பங்கேற்றவர். இதற்கிடையே லாண்டி பராகா ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தான் சாப்பிடும் ஆக்டோபஸ் செவிச் உணவு பற்றியும், தனது இருப்பிடம் பற்றியும் இன்ஸ்டாகிராமில் பதிவாக வெளியிட்டார்.

    சிறிது நேரத்திற்கு பிறகு அந்த ஓட்டலுக்கு 2 வாலிபர்கள் துப்பாக்கியுடன் வந்தனர். இதில் ஒருவர் வாசலிலேயே நின்று கொள்ள, மற்றொருவர் லாண்டி பராகா மற்றும் அவருடன் பேசி கொண்டிருந்த நபர் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டார்.

    பின்னர் 2 மர்ம நபர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர். உடலில் 3 முறை குண்டு பாய்ந்ததில் லாண்டி பராகா உயிரிழந்தார். லாண்டி பராகாவுக்கும், போதை பொருள் கும்பல் தலைவன் லியாண்டிரோ நாரிரோ என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    ஒரு ஆண்டுக்கு முன் சிறையில் நடந்த கலவரத்தில் லியாண்டிரோ நாரிரோ பலியாகிவிட்டார். இதற்கிடையே ஊழல் தொடர்புடைய விசாரணை ஒன்றில் அழகி லாண்டி பராகா பெயரும் இடம் பெற்றிருந்தது.

    லாண்டி பராகாவுடனான தொடர்பு குறித்து தனது மனைவிக்கு தெரியக் கூடாது என்று கடத்தல்காரர் லியாண்டிரோ நாரிரோ நினைத்ததாகவும், தனது கணக்காளரிடம் தொலை பேசியில் பேசும்போது , லாண்டி பராகாவுடனான தொடர்பு குறித்து எனது மனைவிக்கு தெரிந்து விட்டால் பிரச்சினை ஆகி விடும் என்று அவர் கூறி பயந்ததாகவும் கோர்ட்டு விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.

    இதனால் அழகி லாண்டி பராகா கொலையில் லியாண்டிரோ நாரிரோவின் மனைவிக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    • இறந்தவர்கள் முதியோர்கள் என்பதால் மறுவாழ்வு மையத்தில் பணியாற்றும் சக நர்சுகள் இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
    • இன்சுலின் வழங்கிய 19 நோயாளிகளில் 17 பேர் நீரிழிவு நோய் இல்லாமலே அளவுக்கு அதிகமாக இன்சுலின் வழங்கியதால் இறந்துள்ளது போலீசாரையே அதிர வைப்பதாக இருந்தது.

    அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசிப்பவர் 41 வயதான ஹீதர் பிரஸ்டீ. இவர் 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை அங்குள்ள நான்கு மாவட்டங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட முதியோர் மறுவாழ்வு மையங்களில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியாற்றி வந்த மறுவாழ்வு மையங்களில் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து 17க்கும் அதிகமான நோயாளிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது, அடிக்கடி முதியோர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இறந்தவர்கள் முதியோர்கள் என்பதால் மறுவாழ்வு மையத்தில் பணியாற்றும் சக நர்சுகள் இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

    ஆனால் ஒரு கட்டத்தில் நர்ஸ் ஹீதர் பிரஸ்டீயின் நடத்தை, அவர் நோயாளிகளை அலட்சியப்படுத்து மற்றும் அவர்களை இழிவான முறையில் கடுமையாக திட்டுவது போன்றவை சக நர்சுகளை சந்தேகப்பட வைத்தது.

    இதனையடுத்து, நர்ஸ் ஹீதர் பிரஸ்டீவை பிடித்து விசாரணையில் நடத்தியதில் அதிர்ச்சி தகவலை அவர் தெரிவித்துள்ளார். நோயாளிகளின் நீரிழிவு அளவை பொருட்படுத்தாமல் அதிகப்படியான இன்சுலின் வழங்கியதாக அவர் கூறியதை கண்டு சக நர்சுகள் அதிர்ந்து போயினர்.

    இன்சுலின் வழங்கிய 19 நோயாளிகளில் 17 பேர் நீரிழிவு நோய் இல்லாமலே அளவுக்கு அதிகமாக இன்சுலின் வழங்கியதால் இறந்துள்ளது போலீசாரையே அதிர வைப்பதாக இருந்தது.

    இதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ள நர்ஸ் ஹீதர் பிரஸ்டீ, தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் நோயாளிகளிடமும், மற்றவர்களிடமும் கோபமாக நடந்துகொண்டதாக கூறினார்.

    ஆரம்பத்தில் இந்த குற்றங்களை மறுத்து வந்த நர்ஸ் ஹீதர் பிரஸ்டீ, கடந்த பிப்ரவரி மாத விசாரணையின்போது, தனது வழக்கறிஞர்களிடம் தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து, 41 வயதான ஹீதர் பிரஸ்டீக்கு, மூன்று ஆயுள் தண்டனையும், 380-760 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி பட்லர் நகர நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொல்லியல் ஆய்வின்போது கிடைத்த அந்த மண்டை ஓட்டின் எலும்புகள் மிகவும் மென்மையாக இருந்தன.
    • எலும்புத் துண்டுகளை மீண்டும் ஒன்று சேர்த்து இணைப்பதற்கு முன்பு, முதலில் அவற்றை வலுப்படுத்தினர்.

    ஈராக்கின் குர்திஸ்தானில் உள்ள ஒரு குகையில் கடந்த 2018-ம் ஆண்டு பழமையான உடைந்த மண்டை ஓட்டை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

    இந்த மண்டை ஓடு 75 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், நியாண்டர்தால் இனத்தைச் சேர்ந்த பெண் என்றும் தெரிவித்தனர். அந்தப் பெண்ணுக்கு ஷானிதர் இசட் (மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்ட குகையின் பெயர்) என்று பெயரிடப்பட்டது.

    இந்த நிலையில் நியாண்டர்தால் இனத்தைச் சேர்ந்த பெண் உயிருடன் இருந்தபோது எப்படி இருந்திருப்பார் என்பதை விஞ்ஞானிகள் உருவகப்படுத்தி உள்ளனர். மண்டை ஓட்டின் தட்டையான, உடைந்த எச்சங்களை அடிப்படையாக வைத்து அப்பெண்ணின் முகம் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வின்போது கிடைத்த அந்த மண்டை ஓட்டின் எலும்புகள் மிகவும் மென்மையாக இருந்தன.

    அந்த எலும்புத் துண்டுகளை மீண்டும் ஒன்று சேர்த்து இணைப்பதற்கு முன்பு, முதலில் அவற்றை வலுப்படுத்தினர். பின்னர் வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கையைச் சித்தரிக்கும் பேலியோ-ஆர்ட் நிபுணர்கள்நியாண்டர்தால் பெண்ணின் 3டி மாதிரியை உருவாக்கினர்.

    • இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
    • கொலை வழக்கைத் தவிர, இந்திய அரசாங்கத்துடன் தொடர்புகள் குறித்து தனி விசாரணைகள் நடந்து வருகிறது.

    ஒட்டாவா:

    காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு ஒன்றின் தலைவரான ஹர்திப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜுன் மாதம் கனடா நாட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

    இந்த விவகாரத்தால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே நிஜ்ஜார் கொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருவதாக கனடா தெரிவித்தது.

    இந்த நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் ஹிட் ஸ்குவாட் (தாக்குதல் குழு) உறுப்பினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் கரன் ப்ரார், கரன்ப்ரீத் சிங், கமல்ப்ரீத் சிங் ஆகிய இந்தியர்கள் என்றும், சில மாதங்களுக்கு முன்பு சந்தேக நபர்களை புலனாய்வு அதிகாரிகள் அடையாளம் கண்டதாகவும், அவர்களை தீவிர கண்காணிப்பில் வைத்திருந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி டேவிட் டெபூல் கூறும்போது, நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்டு உள்ளனர். கொலை வழக்கைத் தவிர, இந்திய அரசாங்கத்துடன் தொடர்புகள் குறித்து தனி விசாரணைகள் நடந்து வருகிறது. கொலை வழக்கு மிகவும் தீவிர விசாரணையில் உள்ளது.

    இந்த விவகாரத்தில் தனித்தனியான விசாரணைகள் நடந்து வருகின்றன. கைது செய்யப்பட்ட நபர்களின் ஈடுபாடு மட்டுமல்ல, இந்த முயற்சிகளில் இந்திய அரசாங்கத்துடனான தொடர்புகளை விசாரிப்பதும் அடங்கும் என்றார்.

    கைது செய்யப்பட்டுள்ள 3 பேர் மீது தலா ஒரு முதல் நிலை கொலை மற்றும் நிஜ்ஜாரின் கொலைக்கு சதி செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு இந்திய மாலுமி மட்டும் விடுவிக்கப்பட்டு அவர் நாடு திரும்பினார்.
    • மாலுமிகளின் விடுதலையானது ஈரானின் மனிதாபிமான நடவடிக்கையாகும்.

    தெக்ரான்:

    சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த 3 முக்கிய அதிகாரிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும் கடந்த மாதம் 13-ந்தேதி ஓமன் வளைகுடா அகில் ஹார்முஸ் ஜலசந்தியையொட்டிய பகுதியில் இஸ்ரேல் தொடர்புடைய எம்.எஸ்.சி. ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்தது.

    அந்த கப்பலில் 17 இந்தியர்கள் உள்பட 25 மாலுமிகள் இருந்தனர். இந்திய மாலுமிகளை மீட்க ஈரானுடன் இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இதற்கிடையே ஒரு இந்திய மாலுமி மட்டும் விடுவிக்கப்பட்டு அவர் நாடு திரும்பினார்.

    இந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு 16 இந்திய மாலுமிகள் உள்பட கப்பலில் இருந்த 24 பேரையும் ஈரான் விடுவித்துள்ளது.

    இது தொடர்பாக ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி ஹூசைன் அமிராபக்துல்லா ஹியன் கூறுகையில், "இஸ்ரேலுக்குத் தொடர்புடையதாக கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்ட எம்.எஸ்.சி. ஏரீஸ் சரக்குக் கப்பலில் பணிபுரிந்த அனைத்து மாலுமிகளும் விடுவிக்கப்பட்டனர்.

    மாலுமிகளின் விடுதலையானது ஈரானின் மனிதாபிமான நடவடிக்கையாகும். கப்பலின் கேப்டன் தலைமையில் மாலுமிகள் அனைவரும் அவரவர் சொந்த நாட்டுக்குத் திரும்பலாம். ஆனால் கப்பல் மட்டும் ஈரான் காவலிலேயே இருக்கும்" என்றார்.

    • தற்போது சாங்கே-6 என்ற செயற்கைக்கோளை சீனா அனுப்பி உள்ளது.
    • வருகிற 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் சீனா அறிவித்துள்ளது.

    பீஜிங்:

    நிலவை ஆராய்ச்சி செய்வதில் உலக நாடுகள் பலவும் போட்டிப்போட்டு வருகின்றன. குறிப்பாக நிலவின் தென் துருவத்தில் முதன்முறையாக சந்திரயான்-3 செயற்கைக்கோளின் லேண்டரை தரையிறக்கி இந்தியா சாதனை படைத்தது.

    இந்தநிலையில் தற்போது சாங்கே-6 என்ற செயற்கைக்கோளை சீனா அனுப்பி உள்ளது. இந்த செயற்கைக்கோள் நிலவில் 53 நாட்கள் தங்கி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். பின்னர் முதன்முறையாக நிலவில் இருந்து தூசி, பாறை உள்ளிட்ட மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வர உள்ளது.

    இதற்காக சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-5 ஒய்-8 என்ற ராக்கெட் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இதேபோல் வருகிற 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் சீனா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • சிந்து ஆற்றங்கரை அருகே அந்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் 3 பெண்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இஸ்லாமாபாத்:

    வடமேற்கு பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இருந்து ஹன்சாவுக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    காரகோரம் நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. மலைப்பாங்கான அந்த பகுதியில் இருந்து விலகிய பஸ் அங்கிருந்த பள்ளத்தாக்கில் உருண்டு ஓடியது. பின்னர் சிந்து ஆற்றங்கரை அருகே அந்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதனால் பஸ்சில் இருந்தவர்கள் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு மீட்பு படையினருடன் போலீசார் விரைந்தனர்.

    அப்போது விபத்துக்குள்ளான பஸ்சில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் அவர்கள் இறங்கினர். எனினும் அதற்குள்ளாக இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும் 21 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    இதற்கிடையே விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. எனவே இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெள்ளப்பெருக்கால் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.
    • வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    பிரேசிலியா:

    தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 74 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக அர்ஜென்டினா மற்றும் உருகுவே நாட்டின் எல்லையில் அமைந்துள்ள பல நகரங்களுக்கு அங்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

    • விட்டிலிகோ பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் நிறம் படிப்படியாக மாறி தற்போது முழுவதும் வெள்ளை நிறமாகி உள்ளது.
    • புகைப்படங்களை ரெடிட் தளத்தில் பதிவிட, அது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    சில அரிதான நோய்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளையும் தாக்கும். அதுபோன்று ஒரு அரிதான நோயால் பாதிக்கப்பட்ட கருப்பு நாய் 2 ஆண்டுகளில் முழுவதும் வெள்ளையாக மாறி உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    தோல் அதன் இயற்கையான நிறத்தை இழந்து வெளிறிய வெள்ளை நிறமாக மாறும் நிலைக்கு விட்டிலிகோ என்று பெயர். இந்த வகை அரிய நோயால் சில மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாய் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியை சேர்ந்த ஸ்மித் என்பவர் வளர்த்து வரும் பஸ்டர் என்ற பெயர் கொண்ட அந்த 4 வயது நாய் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முழுவதும் கருப்பு நிறத்தில் இருந்தது. இந்நிலையில் விட்டிலிகோ பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் நிறம் படிப்படியாக மாறி தற்போது முழுவதும் வெள்ளை நிறமாகி உள்ளது.

    இதுதொடர்பான புகைப்படங்களை ரெடிட் தளத்தில் பதிவிட, அது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    • பிறந்தநாளன்று கணவர் வழங்கிய சிறப்பு பரிசால் எல்லையில்லா ஆனந்தம் அடைந்த ஜேன், தனது காதல் கணவரை கட்டி அணைத்து முத்தமிட்ட காட்சிகளை அவர்களது மகள் கேட் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
    • வீடியோ இணையத்தில் வைரலாகி 37 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களை குவித்த நிலையில் பயனர்கள் பலரும் வயதான தம்பதிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

    காதல் தம்பதிகள் ஒருவர் மீது ஒருவர் அலாதி பிரியம் காட்டுவது இயல்பு என்றாலும், முதுமையிலும் அந்த அன்பு குறையாமல் இருப்பது சில தம்பதிகளிடம் மட்டுமே காணப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இங்கிலாந்தை சேர்ந்தவர் ஜோ கியோக். 78 வயதான இவர் தனது மனைவி ஜேனின் 73-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார். அதன்படி மனைவிக்கு மிகவும் பிடித்த ஜப்பானிய செர்ரி பிளாசம் மரத்தை வாங்கி பரிசளித்துள்ளார். பிறந்தநாளன்று கணவர் வழங்கிய சிறப்பு பரிசால் எல்லையில்லா ஆனந்தம் அடைந்த ஜேன், தனது காதல் கணவரை கட்டி அணைத்து முத்தமிட்ட காட்சிகளை அவர்களது மகள் கேட் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 37 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களை குவித்த நிலையில் பயனர்கள் பலரும் வயதான தம்பதிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


    ×