என் மலர்
உலகம்
- எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறாய் என்று கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
- முதியவரின் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளார்.
எப்போ கல்யாணம் என்று தன்னை அடிக்கடி கேட்டு நச்சரித்து வந்த பக்கத்து வீட்டு முதியவரை 45 வயது நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் உள்ள குடியிருப்பில் அசிம் இரியான்டோ [Asgim Irianto]என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வாழ்ந்து வந்தார்.
இவரது பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த 45 வயது சிரேகர் [Siregar] மீது கொண்ட அக்கறையில் அவரைப் அடிக்கடி பார்க்கும்போதெல்லாம் எப்போ திருமணம் செய்து கொள்ளபோகிறாய்?, 45 வயதாகியும் ஏன் சிங்கிளாக இருக்கிறாய்? என்று கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிரேகர் கடந்த ஜூலை 29 ஆம் தேதி திங்கள்கிழமையன்று முதியவரின் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளார்.
முதியவரின் மனைவியின் முன்னிலையிலேயே அவரை மரக்கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் வந்து சிரேகரைத் தடுத்து நிறுத்தி முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால் வழியிலேயே முதியவர் உயிரிழந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சிரேகரை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணம் குறித்து அவர் தொடர்ந்து கேள்வி கேட்டு வந்ததால் தான் மனதவளவில் பாதிக்கப்பட்டு முதியவரைத் தாக்கியதாக சிரேகர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
- பல நாடுகளில் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
- சம்பந்தப்பட்ட பார்க்கிங் சர்வீஸ் நிறுவனத்திடம் விசாரித்தார்.
நாள்தோறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க பொது இடங்களில் பார்க்கிங் செய்வதும் பெரும் பிரச்சனையாகி வருகிறது. இதனை சமாளிக்க பல நாடுகளில் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இங்கிலாந்தில் பார்க்கிங் செய்த 5 நிமிடத்தில் கட்டணம் செலுத்தவில்லை என்றால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்ற விதி அமலில் உள்ளது. இந்த விதியின் கீழ் ஒரு பெண்ணுக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள டர்ஹாம் கவுண்டி பகுதியில் உள்ள டார்லிங் டன்னில் வசித்து வரும் ஹன்னா ராபின்சன் என்ற பெண், சம்பவத்தன்று தனது காரை வழக்கமாக நிறுத்தும் இடத்தில் நிறுத்தி உள்ளார். அவர் பார்க்கிங் செய்வதற்கான கட்டணத்தை கட்டியிருந்த நிலையிலும் அவருக்கு 11,000 பவுன்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.11 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பார்க்கிங் சர்வீஸ் நிறுவனத்திடம் விசாரித்தார். அப்போது ராபின்சன் கடந்த 2021-ம் ஆண்டு முதல் இதுவரை பார்க்கிங் விதிமீறலில் ஈடுபட்டதற்காக ஒவ்வொரு முறையும் 170 பவுன்டுகள் வீதம் 67 முறை என மொத்தமாக அவருக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. கார் பார்க்கிங்கில் போதிய இன்டர்நெட் இணைப்பு கிடைக்காததால், ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் பணம் செலுத்த முடியவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
- இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா கூடுதல் படைகளை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளது.
- 50 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி பாய்ந்து வந்தன.
டெல்அவிவ்:
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஈரான் தலைநகர் தெக்ரானில் படுகொலை செய்யப்பட்டார்.
இதில் இஸ்ரேல் மீது ஈரான், ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளன. இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு பழிவாங்குவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. அதன்படி இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரானின் உச்ச தலைவர் உத்தரவிட்டார்.
இதனால் இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் உள்ளது. மேலும் லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இயக்கம் தங்களது தளபதி கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா கூடுதல் படைகளை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் நள்ளிரவில் லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர். வடக்கு இஸ்ரேல் பகுதியான பெய்ட் ஹில்லெல்லை குறிவைத்து சுமார் 25 நிமிடங்கள் வரை இடைவிடாமல் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணைகளை ஏவினர்.
50 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி பாய்ந்து வந்தன. அந்த ஏவுகணைகளை நடுவானிலேயே இடை மறித்து இஸ்ரேல் அழித்தது. இஸ்ரேல் படையினர் வான்வெளி தாக்குதலை தடுக்கும் டோம் அமைப்பை பயன்படுத்தி இந்த தாக்குதலை தடுத்தனர். இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
இத்தாக்குதல் தொடர்பாக ஹிஸ்புல்லா வெளியிட்ட அறிக்கையில், காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் வீரம் மிக்க மற்றும் மரியாதைக்குரிய எதிர்ப்பிற்கு ஆதரவாகவும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. கத்யுஷா ராக்கெட்டுகளால் முதல் முறையாக தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவித்தது.
ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் குறித்து ஈரான் கருத்து கூறும்போது, ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் இன்னும் ஆழமாக சென்று தாக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஹிஸ்புல்லா இன்னும் அதிக இலக்குகளைத் தேர்ந்தெடுத்து தாக்கும் என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இத்தாக்குதலுக்கு பதிலடியாக லெபனான் நாட்டின் கேபர் கிளா மற்றும் டெய்ர் சிரியனி உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித்தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல்-லெபனான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் லெபனானில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில் ஈரான் தாக்குதல் நடத்தினால் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக எடுத்து வருகிறது.
இந்த நிலையில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே எப்படி கொல்லப்பட்டார் என்று ஈரான் தெரிவித்துள்ளது. அவர் தங்கி இருந்த அறை மீது குறுகிய தொலைவு இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை வீசப்பட்டதாகவும், இதில் இஸ்மாயில் உயிரிழந்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
ஏவுகணையில் 7 கிலோ வெடிமருந்து நிரப்பப்பட்டுள்ளது என்றும், இஸ்மாயில் தங்கி இருந்த விருந்தினர் மாளிகைக்கு அருகே இருந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் படுகொலையை அரங்கேற்றியுள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளது.
- செய்தியாளர் எழுதிய புத்தகத்தில் இடம்பெற்று இருக்கிறது.
- இது அவர்களை அசௌகரிய சூழலுக்கு ஆளாக்கியது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இளம் இன்டர்ன்கள் (பயிற்சி பெறுபவர்) பில் கேட்ஸ்-ஐ தனிமையில் சந்திப்பதை தடை செய்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய தகவல்கள் நியூ யார்க் டைம்ஸ் செய்தியாளர் எழுதிய புத்தகத்தில் இடம்பெற்று இருக்கிறது.
"நிறுவனத்தின் தலைவர் என்ற போதிலும், இளம் பெண்களிடம் பேசிக் கொண்டே இருப்பது, அவர்களை இரவு உணவுக்கு அழைத்து செல்வது போன்ற செயல்களை செய்ய பில் கேட்ஸ் ஒருபோதும் தவறியதே இல்லை," என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மைமக்ரோசாப்ட் மட்டுமின்றி இதே போக்கு மெலிண்டா கேட்ஸ் பவுன்டேஷனிலும் தொடர்ந்தது என்று கூறப்படுகிறது. பவுன்டேஷனுக்கு வரும் இளம் இன்டர்ன்களிடம் பில் கேட்ஸ் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார், இது அவர்களை அசௌகரிய சூழலுக்கு ஆளாக்கியது.
கிட்டத்தட்ட இரண்டாவது மற்றும் மூன்றாம் கைக் கதைகள் மற்றும் அநாமதேய ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்கும் இந்த புத்தகத்தில், பல சந்தர்ப்பங்களில் எங்கள் அலுவலகம் ஆசிரியருக்கு வழங்கிய உண்மையான ஆவணப்படுத்தப்பட்ட உண்மைகளைப் புறக்கணிக்கும் மிகவும் பரபரப்பான குற்றச்சாட்டுகள் மற்றும் அப்பட்டமான பொய்களை உள்ளடக்கியது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதில் அளித்த பில் கேட்ஸ் செய்தி தொடர்பாளர், "இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் மற்றும் அப்பட்டமான பொய்களை உள்ளடக்கியுள்ளது. இவை பெரும்பாலும் கிட்டத்தட்ட இரண்டாம்கட்ட மற்றும் மூன்றாம்கட்ட பெயர் அறியப்படாத ஆதாரங்களையே சார்ந்து இருக்கிறது," என்று தெரிவித்தார்.
- பயனுள்ள வசதிகளை தொழில்நுட்ப சாதனங்கள் வழங்கி வருகின்றன.
- சாதனத்தை பயன்படுத்த அந்நாடு அனுமதி அளிக்கிறது.
மனித வாழ்க்கையை எளிமையாக மாற்றுவதற்காக ஏராளமான தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை பயன்பாட்டிலும் இருந்து வருகின்றன. மனித தேவைகளை பூர்த்தி செய்வதில் துவங்கி, அன்றாட பணிகளை விரைந்து முடிப்பது, என பல்வேறு பயனுள்ள வசதிகளை தொழில்நுட்ப சாதனங்கள் வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், மனித உயிரை பறிக்கவும் சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது உங்களுக்கு தெரியுமா. டாக்டர் டெத் என்று அழைக்கப்படும் பிலிப் நிட்ச்கே என்பவர்தான் இந்த சாதனத்தை கண்டுபிடித்துள்ளார். இந்த சாதனத்தில் படுத்துக் கொண்டு அதில் உள்ள பட்டனை தொட்டால் போதும், ஒரே நிமிடத்தில் மனித உயிர் உடலை விட்டு பிரிந்துவிடும்.
கருணைக்கொலை சட்டப்பூர்வமான ஒன்றாக இருக்கும் சுவிட்சர்லாந்து நாட்டில், இந்த சாதனத்தை பயன்படுத்த அந்நாடு அனுமதி அளிக்கிறது. டாக்டர் பிலிப் நிட்ச்கே உருவாக்கி இருக்கும் சாதனம் மனிதர்கள் வலியின்றி உயிரிழக்க செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனத்தில் உயிரிழக்க பெயர் மற்றும் விவரங்களை வெளியிட அனுமதிக்காத பெண் ஒருவர் முன்வந்தார்.
அதன்படி இந்த சாதனத்தில் வைத்து உயிரிழக்க ஆயத்தமான பெண் மாயமாகி உள்ள சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மனரீதியிலான பிரச்சினை காரணமாக அந்த பெண் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மனிதர்கள் உயிரை பறித்துக் கொள்ளும் சாதனத்திற்கு சுவிட்சர்லாந்து வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இதனை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைகள் மற்றும் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தனர்.
தற்கொலை செய்து கொள்ளும் சாதனத்தை பயன்படுத்த முடியாத நிலையில், அந்த பெண் மாயமா நிலையில், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என பிலிப் நிட்ச்கே நிறுவனமான எக்சிட் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
அவரது மனநிலையும் மோசமடைந்து வந்த நிலையில், ஊடக வெளிச்சம் தான் அந்த பெண்ணை பாதித்து இருக்கிறது. அவரது சூழ்நிலையை வைத்து பார்க்கும் போது, அவர் தற்போது மனநல சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவார் என்றே தெரிகிறது என அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.
தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. தற்கொலை தடுப்பு நடவடிக்கைகளுக்கு 044 2464 0050 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.
- ஹிஸ்புல்லா- இஸ்ரேல் இடையே நேரடி போர் நடைபெற வாய்ப்புள்ளது.
- லெபனானில் பல்வேறு விமானங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாகவும் இஸ்ரேல் அண்டை நாடான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹிஸ்புல்லா அமைப்பை ஈரான் பின்புறத்தில் இருந்து இயக்கி வருகிறது.
இந்த வார தொடக்கத்தில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் நாட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கு இஸ்ரேல்தான் காரணம் என ஈரான் நம்புகிறது. இதனால் இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரான் உயர் அதிகாரம் படைத்த தலைவர் அயதுல்லா அலி காமேனி உத்தரவிட்டுள்ளார். மேலும் இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா கமாண்டர் கொல்லப்பட்டுள்ளார்.
இதனால் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது பயங்கரமான தாக்குதலை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் கிழக்கு மத்திய பகுதியில் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் லெபனானில் வசிக்கும் அமெரிக்க மக்கள், இங்கிலாந்து மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளிறும்படி இருநாட்டு தூதரகங்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் எந்தவொரு விமானம் கிடைத்தாலும் டிக்கெட் புக் செய்து லெபனானில் இருந்து வெளியேறும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
"லெபனானில் இருந்து புறப்பட விரும்புபவர்கள், அந்த விமானம் உடனடியாகப் புறப்படாவிட்டாலும் அல்லது அவர்களின் முதல் விருப்ப வழியைப் பின்பற்றாவிட்டாலும் அவர்களுக்குக் கிடைக்கும் டிக்கெட்டை முன்பதிவு செய்யுமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம்" என லெபனான் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் அமெரிக்கா போர்க்கப்பலை அனுப்பியுள்ளது. அதிகமான வீரர்களையும் மத்திய கிழக்குப் பகுதியில் குவித்துள்ளது.
- ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராவது உறுதியாகிவிட்டது.
- விவாதம் நடத்த பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்தோடு ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அவரை எதிர்த்து ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் (வயது 81) போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தேர்தல் விவாத நிகழ்ச்சியில் டிரம்ப்-ன் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் ஜோ பைடன் திணறினார். வேட்பாளரை மாற்ற கட்சியில் பல தலைவர்கள் போர்க்கொடி துாக்கினர். இதையடுத்து அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார்.
துணை அதிபர் கமலா ஹாரிஸை (வயது 59) ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக பரிந்துரை செய்தார். அவர் மட்டுமே ஜனநாயக கட்சியில் வேட்பாளராக உள்ளதால் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான ஆதரவை பெற்றுள்ளார். விரைவில் வேட்புமனு தாக்கல் செய்து கட்சி பொதுக்கூட்டத்தில் டிரம்ப்-ஐ எதிர்த்து போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார்.
ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியான நிலையில், பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்துடன் கமலா ஹாரிஸ் உடன் நேரடி விவாதத்தில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளார். செப்டம்பர் 4-ந்தேதி நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் டிரம்ப் விவாதம் நடத்த ஒப்புக் கொண்ட நிலையில் கமலா ஹாரிஸ் ஒப்புக்கொண்டாரா? என்பது தெரியவில்லை.
முன்னதாக கமலா ஹாரிஸை எளிதில் வெற்றி கொள்வேன் என டிரம்ப் கூறி வருகிறார். மேலும் இவ்வளவு காலம் இந்தியர் என்று கூறி வந்தவர், இப்போது கருப்பர் என தன்னை அடையாளப்படுத்துகிறார் என விமர்சனம் செய்துள்ளார்.
- மொகடிசுவில் உள்ள ஓட்டலில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் திடீரென உள்ளே புகுந்தனர்.
- அவர்கள் ஓட்டலில் இருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.
மொகடிசு:
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்-கொய்தாவின் கிளை அமைப்பான அல் ஷபாப் மற்றும் ஐ.எஸ். போன்ற பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை அழிக்கும் பணிகளில் அந்நாட்டு பாதுகாப்புப் படை ஈடுபட்டு வருகிறது.
ஆனாலும், இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள லிடோ கடற்கரை அருகே அமைந்துள்ள பிரபல ஓட்டலுக்குள் அல் ஷபாப் பயங்கரவாதிகள் திடீரென உள்ளே புகுந்தனர். அவர்கள் ஓட்டலில் இருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் சிலரை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தனர்.
தொடர்ந்து, தங்கள் உடலில் மறைத்து கட்டிக்கொண்டு வந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.
இந்தக் கொடூர தாக்குதலில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த பாதுகாப்புப் படையினர் அதிரடியாக செயல்பட்டு பிணைக்கைதிகளை மீட்டனர். மேலும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
- பெல்கோரோட் பிராந்தியத்தில் ஆயில் டெப்போ மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- ஓரியல் பிராந்தியத்தில் குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷியா- உக்ரைன் எல்லையில் உள்ள ரஷியப் பகுதிகளில் உக்ரைன் நேற்றிரவு சரமாரியாக டிரோன்கள் தாக்குதல் நடத்தியதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம், வான்பாதுகாப்பு சிஸ்டம் மூலம் 75 டிரோன்களை இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளது.
பெல்கோரோட், கிராஸ்னோடர், கர்ஸ்க், ஓரியல், ரோஸ்டவ், வொரோனேஸ் உள்ளிட்ட பிராந்தியங்களில் உள்ள பகுதிகளை குறிவைத்து உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
ரோஸ்டவ் பிராந்தியத்தில் மட்டும் 36 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுவேளையில் ரோஸ்டவ் கவர்னர் வாசிலி கொலுபெவ், 55 டிரோன்களால் ரோஸ்டவ் தாக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
எத்தனை டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. எத்தனை டிரோன்களை இலக்கை தாக்கியது என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை. மோரோசோவ்ஸ்க், கமென்ஸ்கி மாவட்டங்களில் உள்ள ஆயுதகிடங்குகள் சேதம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
பெல்கோரோட் கவர்னர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ், ஆயில் டெப்போ பாதிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார். ஒரு டேங்க் வெடித்து சிதறியதாகவும், வேகமாக மற்றவற்றை வெளியேற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஓரியல் பிராந்திய கவர்னர், இரண்டு டிரோன்கள் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் மோதி தீ விபத்து ஏற்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
- பொதுச் செயலாளராக இருந்த டூ லாம் கடந்த மாதம் காலமானார்.
- பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கும் டூ லாம் 40 வருடத்திற்கு மேலாக பொது பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிபுரிந்தவர்.
வியட்நாம் நாட்டின் ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், நாட்டின் சக்கி வாய்ந்த அரசியல் தலைவருமான நுயென் ஃபூ ட்ரோங் தனது 80 வயதில் கடந்த மாதம் 19-ந்தேதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் காலமானார். 2011-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2021-ம் 3-வது முறையாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வியட்நாம் அதிபராக இருக்கும் டூ லாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக பொறுப்பு ஏற்க இருப்பதை உறுதிப்படுத்தியள்ளார். இந்த பதவி அந்நாட்டின் மிகவும் அதிகாரமிக்கதாக பார்க்கப்படுகிறது.
கட்சியின் தலைமையை உறுதி செய்ய வேண்டிய அவசரத் தேவை காரணமாக தான் அந்த பதவியை ஏற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அதிபர் பதவியில் நீடிப்பாரா? என்பது குறித்து தெளிவுப்படுத்தவில்லை.
டூ லாம் 40 வருடத்திற்கு மேலாக பொது பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிபுரிந்துள்ளார். பின்னர் 2016-ல் மந்திரியாக பொறுப்பேற்றார். இவரது தலைமையில் உயர் அதிகாரிகள் மே மாதம் வரை ஊழல் எதிர்ப்பு பிரசாரம் மேற்கொண்டனர்.
வியட்நாம் அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, லாம் அதிபர் ஆனார். அதனைத் தொடர்ந்து ஊழல் எதிர்ப்பு பிரசாரத்தில் இருந்து விலகினார்.
- இஸ்மாயில் ஹனியே ஈரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
- மேற்குலக நாடுகளில் உள்ள 2-வது பெரிய உளவு அமைப்பு மொஸாட் ஆகும்.
ஈரான் நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் ஜூலை 30 அன்று பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார்.
அந்த சமயத்தில் இஸ்மாயில் தங்கியிருந்த வீட்டில் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை, ரிமோட் மூலம் இயக்கி வெடிக்கச்செய்து அவரை படுகொலை செய்துள்ளனர்.
இதனையடுத்து ஈரானில் நடந்த இஸ்மாயில் ஹனியே இறுதி ஊர்வலத்தில் திரளான மக்கள் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இஸ்ரேல்தான் இந்த படுகொலைக்குக் காரணம் என ஹமாஸ் மற்றும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீட்டில் வெடிகுண்டுகளை நிரப்ப இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொஸாட் ஈரானின் செக்யூரிட்டி ஏஜெண்டுகளை நியமித்தது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் மரணமடைந்த ஈரானின் முன்னாள் அதிபர் இப்ராகிம் ரைசியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக இஸ்மாயில் தெக்ரான் நகரத்திற்கு வந்திருந்தார். அப்போதே அவரை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் அதீத கூட்டம் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
இதனையடுத்து அந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி இஸ்மாயில் தெக்ரானில் வழக்கமாக தங்கும் புரட்சிகர காவல்படையினர் ரகசிய கூட்டங்கள் நடத்தும் வளாகத்துக்குள் அமைந்துள்ள 3 அறைகளில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு அவரை கொலை செய்துள்ளனர் என்ற தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வருடத்திற்கு 3 பில்லியன் டாலர் பட்ஜெட் மற்றும் 7,000 பணியாளர்களுடன் இயங்கும் மொசாட் அமெரிக்காவின் CIA க்கு அடுத்தபடியாக மேற்குலக நாடுகளில் உள்ள இரண்டாவது பெரிய உளவு அமைப்புஎன்பது குறிப்பிடத்தக்கது.
- 2 வீரர்களும் தங்களது தசை சக்தி, மற்றும் எலும்பு அடர்த்தியை இழந்திருக்கலாம்.
- விண்வெளியில் சிக்கியுள்ளதால் அவர்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாக வாய்ப்புள்ளது,
இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ந்தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்
அவர்கள் திட்டமிட்டபடி 22-ந்தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. இதனால் நாசா விஞ்ஞானிகள் கவலை அடைந்தனர்.
இந்த பிரச்சனையால் 50 நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியுள்ளார்.
இந்நிலையில் விண்வெளியில் சிக்கியுள்ள 2 வீரர்களும் தங்களது தசை சக்தி, மற்றும் எலும்பு அடர்த்தியை இழந்திருக்கலாம் என்றும் அதனால் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது .
மேலும் நீரிழப்பு, மற்றும் எலும்புகளில் இருந்து கால்சியம் வெளியேறும் காரணத்தினால் அவர்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாக வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.






