என் மலர்
உலகம்
- உலக தலைவர்கள் டொனால்டு டிரம்பை பார்த்து சிரிக்கிறார்கள்- ஹாரிஸ்
- இஸ்ரேலை கமலா ஹாரிஸ் வெறுக்கிறார். அதேபோல் அந்த பிராந்தியத்தில் உள்ள அரபு மக்களையும் வெறுக்கிறார்- டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்பாளர்களான டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆகியோர் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான காசா போர் குறித்து பேசும்போது டொனால்டு டிரம்ப் "நான் அதிபராக இருந்திருந்தால் இந்த போர் இந்த நிலையை எட்டிருக்காது. கமலா ஹாரிஸ் இஸ்ரேலை வெறுக்கிறார். அவர் அதிபராக பதவியேற்றால் 2 ஆண்டுகளில் இஸ்ரேல் அழிந்துவிடும். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இங்கு வந்த போது கூட கமலா அவரை சந்திக்கவில்லை." என்றார்.
அதற்கு கமலா ஹாரிஸ் "டிரம்ப் சொல்வது உண்மையல்லை. இஸ்ரேலுக்கு தனது ஆதரவு" என வலியுறுத்தினார்.
மேலும் கமலா ஹாரிஸ் "அமெரிக்காவின் துணை அதிபராக நான் உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளேன். உலக தலைவர்கள் டொனால்டு டிரம்பை பார்த்து சிரிக்கிறார்கள். நீங்கள் அவமானம் என அவர்கள் சொல்கிறார்கள்" என நேரடி தாக்குதலை முன்வைத்தார்.
டொனால்டு டிரம்ப் ஜோ பைடனின் நிர்வாகத் தோல்வியை தொடர்ந்து முன்வைத்து கமலா ஹாரிஸை தாக்குதல் நடத்த தொடங்கினார். இதற்கு "நீங்கள் ஜோ பைடனை எதிர்த்து போட்டியிடவில்லை" என கமலா ஹாரிஸ் பதில் அளித்தார்.
உக்ரைன்- ரஷியா போர் குறித்து டொனால்டு டிரம்ப் கூறுகையில் "ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நிறுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை நன்றாகத் தெரியும். அவர்களுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. எனவே நான் பிரச்சனையை தீர்த்து வைப்பேன். போர் தொடங்கிய 3 நாட்களுக்கு பிறகு ஜோ பைடன் அரசு சமாதானத்துக்கு அழைப்பு விடுத்தது. நம் நாட்டின் வரலாற்றில் மிக மோசமான அதிபர். கமலா ஹாரிஸ்தான் மோசமான துணை அதிபர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையை ஜோ பைடனைவிட வேகமாக வெளியேற்றி இருப்போம். இதனால் பல அமெரிக்கர்கள் நம்மை விட்டுச் சென்றிருக்கமாட்டார்கள். கமலா ஹாரிஸ் எந்த நாட்டின் பாரம்பரியத்தைச் சேர்ந்த வராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை" என்றார்.
அதற்கு கமலா ஹாரிஸ் "இவர் எப்போதுமே நிறைய பொய்கள் சொல்வார். உலகில் சர்வாதிகாரிகளை போற்றுகிறவர். ரஷிய அதிபர் புதினை ஆதரிப்பவர். அதேபோல் வடகொரியா அதிபர் கிம் ஜாங்குடன் காதல் கடிதங்களை பரிமாறிக்கொள்வதும் நம் அனைவருக்குமே தெரியும்.
டிரம்ப் தான் அதிபரானால் ரஷ்யா- உக்ரைன் போர் 24 மணி நேரத்தில் முடிந்துவிடும் என்று கூறுகிறார். டிரம்ப் அதிபராக இருந்தால், தற்போது புதின் உக்ரைன் தலைநகர் கீவிலேயே குடியேறி இருப்பார். டிரம்ப் இன்னும் பதவியில் இருந்திருந்தால், புதின் போலந்தில் தொடங்கி ஐரோப்பா முழுவத்தையும் தாக்க திட்டம் தீட்டி இருப்பார். புதினிடம் டிரம்ப் அடிபணிந்து விடுவார். உங்களை மதிய உணவிற்கு உண்ணும் ஒரு சர்வாதிகாரி என்று அறியப்பட்டவருடன் நட்பாக நீங்கள் நினைக்கிறீர்கள்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் ஜோபைடனின் முடிவை நான் ஏற்றுக் கொண்டேன். தலிபான் என்ற பயங்கரவாத அமைப்போடு டிரம்ப் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க மக்களைப் பிளவுபடுத்துவதற்கு தனது தொழில் வாழ்க்கையில் தொடர்ந்து முயற்சித்த ஒருவர். அதிபராக இருக்க விரும்பும் ஒருவர் நம்மிடம் இருப்பது ஒரு சோகம் என்று நான் நினைக்கிறேன். நாம் அனைவரையும் ஒன்றிணைத்து கொண்டு வரும் அதிபரையே மக்கள் விரும்புகிறார்கள்" என பதிலடி கொடுத்தார்.
- கொரிய தீபகற்ப பிராந்தியம் பதற்றநிலையில் காணப்பட்டு வருகிறது.
- அமெரிக்காவின் செயல்பாடு நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் உள்ளது.
பியாங்காங்:
தென் கொரியா தலைநகரான சியோல் அருகே வடகொரியா எல்லையையொட்டி அமெரிக்க ராணுவம் போர்த்தளம் அமைத்து அந்த நாட்டு ராணுவத்துடன் பணியாற்றி வருகிறது. இதனை தொடர்ந்து வடகொரிய ராணுவம் அண்டை நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்டவற்றை அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுதங்கள் தாங்கிய ஏவுகணைகளை தயாரித்து தொடர் சோதனையில் ஈடுபடுகிறது.
இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இருப்பினும் வடகொரிய ராணுவம் ஏவுகணை சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு அடாவடி காட்டுகிறது.
இதற்கு பதிலடி தரும் வகையில் தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் அமெரிக்க ராணுவம் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுகிறது. அமெரிக்காவின் இந்த செயல்பாடு கோபம் மூட்டி வருவதாக வட கொரியா தலைவர் கிம் ஜங் அன் கூறி வருகிறார்.
மேலும் தென்கொரியாவை எதிரி நாடாக அறிவித்து அதன் மீது தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் பகிரங்கமாக அறிவித்தார். இதனால் கொரிய தீபகற்ப பிராந்தியம் பதற்றநிலையில் காணப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் வடகொரியாவில் 76-வது நிறுவன ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. தலைநகர் பியாங்காங்கில் ராணுவ அணிவகுப்புடன் இந்த நிகழ்ச்சி அரங்கேறியது. இதில் வடகொரியா தலைவர் கிம் ஜங் அன் தலைமையேற்று ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது கிம் ஜங் அன், அமெரிக்காவுடன் அணு ஆயுத போருக்கு தயார் என பேசினார். அவர் கூறுகையில், "அமெரிக்காவின் செயல்பாடு நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் உள்ளது. இதனால் அமெரிக்காவுடன் எப்போது வேண்டுமானாலும் போருக்கு தயாராக இருக்க வேண்டும். போரில் அதிகளவிலான அணு ஆயுதங்கள் தேவை இருக்கும் என்பதால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்" என்றார்.
- துபாய் விமான நிலையத்தில் இருந்து பால்ம் ஜுமைரா பகுதிக்கு கார் மூலம் செல்ல 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஆகும்.
- வெளிநாடுகளில் இருந்து வரும் அல்லது இங்கிருந்து வெளிநாடு செல்லும் விமான பயணிகளுக்கு மின்சார விமான டாக்சி காத்திருப்பு நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
துபாய்:
துபாயில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உலக அரசு உச்சி மாநாட்டில் துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் பல்வேறு குட்டி விமான நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதில் மின்சாரத்தில் இயங்கும் விமான டாக்சிகளை அமீரகத்தில் இயக்க அமெரிக்காவின் ஜோபி ஏவியேஷன் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.
அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் அபிதாபி மாநகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக துபாயில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் கட்டுப்பாட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ள மின்சார விமான டாக்சிகள் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பால்ம் ஜுமைரா பகுதி வரை இயக்கப்பட உள்ளது.
பொதுவாக துபாய் விமான நிலையத்தில் இருந்து பால்ம் ஜுமைரா பகுதிக்கு கார் மூலம் செல்ல 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஆகும். இனி இந்த மின்சார விமான டாக்சி இயக்கப்பட்டால் வெறும் 10 நிமிடங்களில் இரு பகுதிகளுக்கும் சென்று வரலாம். இந்த மின்சார விமான டாக்சிகள் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை. மின்சாரத்தால் இயங்குவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் புகை போன்ற நச்சு வாயுக்கள் இதில் வெளிவருவது இல்லை.
இதனை எளிதில் குறைந்த நேரத்தில் சார்ஜ் ஏற்றி விட முடியும். வருகிற 2026-ம் ஆண்டு முதல் பொதுமக்கள் சேவைக்காக இந்த டாக்சிகள் இயக்கப்படும் என சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக அடுத்த ஆண்டு (2025) வெள்ளோட்டம் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையில் மொத்தம் 6 மின்சார விமான டாக்சிகள் இயக்கப்பட உள்ளது. இதில் பைலட் அமர்ந்து 4 பயணிகள் பயணம் செய்யும் வகையில் வசதி செய்து தரப்படும்.
வெளிநாடுகளில் இருந்து வரும் அல்லது இங்கிருந்து வெளிநாடு செல்லும் விமான பயணிகளுக்கு இந்த மின்சார விமான டாக்சி காத்திருப்பு நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
இந்த நிலையில் நடப்பு வாரம் கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடந்த வான்வழி போக்குவரத்து மாநாட்டில் ஜோபி ஏவியேஷன் அமெரிக்க நிறுவனத்தின் நிறுவனர் ஜோபென் பெவிர்ட் அமீரக பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் பொது இயக்குனர் சைப் முகம்மது அல் சுவைதியை சந்தித்து அமீரகத்தில் மின்சார விமான டாக்சிகளை இயக்குவதற்கான சான்றிதழுக்கான விண்ணப்பத்தை நேரில் அளித்தார்.
இந்த ஏர் ஆபரேடர் என்ற சான்றிதழ் அந்த ஆணையத்தின் சார்பில் வர்த்தக ரீதியில் இயக்குவதற்கு தேவைப்படும் ஆவணமாகும். இதனை தொடர்ந்து அமீரகத்தில் மின்சார விமான டாக்சியை இயக்க விண்ணப்பித்த முதல் நிறுவனம் என்ற பெயரை இந்த அமெரிக்க நிறுவனம் பெற்றுள்ளது.
- டிரம்ப் ஆட்சி கால தவறுகளை சரி செய்யவே 4 ஆண்டுகள் தேவைப்பட்டது.
- சீனாவின் ஆயுத பலத்தை பெருக்க டொனால்டு டிரம்ப் உதவியுள்ளார்- கமலா ஹாரிஸ்.
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நேரடி விவாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது இருவருக்கும் இடையில் பொருளாதாரம், கருக்கலைப்பு மற்றும் குடியேற்றம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.
பொருளாதாரம் குறித்த கேள்விக்கு கமலா ஹாரிஸ் "டிரம்ப் ஆட்சி கால தவறுகளை சரி செய்யவே 4 ஆண்டுகள் தேவைப்பட்டது. அமெரிக்காவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினரை உயர்த்துவதே குறிக்கோளாக கொண்டுள்ளோம். நான் நடுத்தர வர்க்கத்தில் இருந்து வந்துள்ளதால் உழைப்பவர்களை உயர்த்துவதற்காக முயற்சிப்பேன். அதுவே எனது லட்சியம்.
டிரம்ப் ஆட்சி காலத்தில் சுகாதாரம், பொருளாதாரம் இரண்டும் மோசமாக இருந்தது. டிரம்பின் தவறான கொள்கைகளால் சீனா ராணுவம் பலமடைந்துள்ளது. சீனாவின் ஆயுத பலத்தை பெருக்க டொனால்டு டிரம்ப் உதவியுள்ளார். டிரம்ப் சீனாவிற்கு அமெரிக்காவை விற்றுவிட்டார்.
அத்துடன் டொனால்டு டிரம்ப் கோடீஸ்வரர்களுக்கு, மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்குவார். ஜோ பைடன் ஆட்சியை கைப்பற்றியபோது, டிரம்ப் பொருளாதாரத்தை விட்டுவிட்டுச் சென்றார். பொருளாதாரம் குறித்து அவருக்கு எந்த திட்டமும் இல்லை" என்றார்.
பின்னர் குடியேற்றம் குறித்து டொனால்டு டிரம்ப் டார்கெட் செய்தார். அதற்கு கமலா ஹாரிஸ் "நீங்கள் ஏராளமான பொய்கள் மற்றும் குறைகள் போன்ற பழைய கதையை கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்" எனப் பதில் அளித்தார்.
மேலும், "டொனால்டு டிரம்ப் மிகவும் மோசமான வேலைவாய்ப்பின்மையை விட்டுச் சென்றார். நூற்றாண்டின் மோசமான பொது சுகாதாரத்தை விட்டுச் சென்றார். சிவில் போருக்குப்பின் நமது ஜனநாயகத்தில் மோசமான தாக்குதலை விட்டுச் சென்றார். டொனால்டு டிரம்பின் குழபத்தை நாங்கள் சுத்தம் செய்தோம்" என்றார்.
ஒரு கட்டத்தில் டொனால் டிரம்ப் தனிப்பட்ட முறையில் கமலா ஹாரிஸை தாக்கி பேசினார். "கமலா ஹாரிஸ் மார்க்சிஸ்ட். அவரது தந்தை மார்க்சிஸ்ட்" என்றார். அதற்கு கமலா ஹாரிஸ் தலையை அசைத்து சிரித்துக் கொண்டிருந்தார்.
"கொரோனா தொற்றின்போது சிறந்த வகையில் பணியாற்ற போதுமான கடன் கிடைக்கவில்லை. கொரோனா தொற்றின்போது மிகச் சிறந்த வகையில் பணியாற்றினோம்" என்றார்.
கருக்கலைப்பு தொடர்பான விவாதத்தின்போது கமலா ஹாரிஸ் "டொனால்டு டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கருக்கலைப்பு தடையை அமல்படுத்துவார்" என்றார். உடனே டிரம்ப் "கமலா ஹாரிஸ் பொய் சொல்கிறார்" என்றார்.
நாடு தழுவிய கருக்கலைப்பு தடைக்கு வாக்கெடுப்பு நடத்துவீர்களா? என்ற கேள்விக்கு, அத்தகைய சட்டத்தை பாராளுமன்றம நிறைவேற்றாது என்றார்.
குடியேற்றம் தொடர்பான விவாதத்தின்போது கமலா ஹாரிஸ் "இந்த விவகாரம் தொடர்பாக டொனால்டு டிரம்ப் அதிகமாக பேசிக் கொண்டிருப்பார். டொனால்டு டிரம்ப் பேரணிக்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். ஏனென்றால். இந்த பேரணியில் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக விசயங்கள் இருக்கும். "Hannibal Lecter" போன்ற கற்பனை கதாபாத்திரம் பற்றி டொனால்டு டிரம்ப் பேசத் தொடங்கினால், மக்கள் அவரது பேரணியில் இருந்து வெளியேற தொடங்கிவிடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு சலிப்பு தட்டிவிடும்" என்றார்.
அதற்கு டொனால்டு டிரம்ப் "கமலா ஹாரிஸ் பேரணிக்கு யாரும் வரமாட்டார்கள். மேலும் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்திய Haitian immigrants ஒகியோவில் நாய்களை சாப்பிட்டது குறித்து பேசத் தொடங்கினார்.
- இரு நாட்டு அதிபர்களுடனும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நல்லுறவு இருக்கிறது.
- இதனால் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் முன்முயற்சியை உலகம் எதிர்பார்க்கிறது.
பெர்லின்:
ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுக்கு மேலாக போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சு வார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் மோடியின் ரஷியா, உக்ரைன் பயணத்துக்கு பிறகு புதின் இந்தக் கருத்தை தெரிவித்தார். இதே கருத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறியுள்ளார்.
இரு நாட்டு அதிபர்களுடனும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நல்லுறவு இருக்கும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் முன்முயற்சியை உலகமே எதிர்பார்க்கிறது.
இந்நிலையில், ஜெர்மனியில் நடந்த வெளியுறவு அலுவலகத்தின் தூதர்கள் மாநாட்டில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கலந்துகொண்டார். அப்போது ரஷியா-உக்ரைன் போர் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்த மோதல் போர்க்களத்தில் தீர்க்கப்படும் என நினைக்கவில்லை. ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை நடக்கும். பேச்சுவார்த்தை நடக்கும்போது ரஷியா மற்றும் உக்ரைன் அந்தப் பேச்சுவார்த்தையில் இருக்கவேண்டும்.
போர்க்களத்தில் இருந்து நீங்கள் ஒரு தீர்வைப் பெறப் போகிறீர்கள் என நாங்கள் நினைக்கவில்லை. நீங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.
உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால், நாங்கள் எப்போதும் அதை வழங்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.
- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- அங்கு பேசிய அவர், என் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என தெரிவித்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஜனநாயகத்தில் பொதுவாக வேலை செய்யும் அனைத்துக் கருவிகளும் வேலை செய்யாததால், அரசியல் ரீதியாக யாத்திரையை நடத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம்.
மக்களுடன் நேரடியாக ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என கட்சி உணர்ந்தது. இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் ஆழமாக எதிரொலித்தது.
இந்திய வாக்காளர் உறுதியானவர் மற்றும் அறிவாற்றல் கொண்டவர் என கூறுவது போதுமானதாக இல்லை. ஏனெனில் இந்திய வாக்காளர் முழு கட்டமைப்புகளின் மூலம் அறியப்படுகிறார். எனவே, நம்மிடம் சம நிலை இல்லை என்றால், வாக்காளர் நன்கு அறிந்தவராகவும், நெகிழ்ச்சியுடனும் இருக்கலாம்.
எங்கள் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம். இப்போது அது எங்கே நடந்தது என்று எனக்கு எந்த ஜனநாயகமும் தெரியவில்லை.
நீங்கள் ஒரு உறுதியான வாக்காளரைப் பெறலாம். நீங்கள் இன்னும் பிரசாரங்களை இயக்கவேண்டும். நீங்கள் இன்னும் உரையாடல்களை நடத்த வேண்டும். நீங்கள் இன்னும் கூட்டங்களை நடத்த வேண்டும்.
என் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்திய வரலாற்றில் அவதூறு குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்ற ஒரே நபர் நான்தான்.
தற்போது சிறையில் இருக்கும் ஒரு முதல் மந்திரி நமக்கு இருக்கிறார். எனவே நான் சொல்வது ஒரு வழி. ஆம், இந்திய வாக்காளர் மிக உறுதியானவர், அவர்கள் ஒரு பாறை போல் நிற்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் செய்கிறார்கள். இருப்பினும், இந்திய வாக்காளர் வேலை செய்ய ஒரு கட்டிடக்கலை தேவை, அது இல்லை.
கடந்த 10 ஆண்டாக இந்திய ஜனநாயகம் உடைந்துவிட்டது என என்னால் சொல்ல முடியும். ஆனால் அது ஒரு மேல்நோக்கிய போக்கில் உள்ளது. அது மீண்டும் போராடுகிறது, ஆனால் அது உடைந்தது.
மகாராஷ்டிரா அரசு நம்மிடமிருந்து பறிக்கப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். எனவே நான் அதை என் கண்களால் பார்த்தேன். நமது சட்டசபை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி கொக்கி போட்டுவிட்டு திடீரென பா.ஜ.க. சட்டசபை உறுப்பினர்களாக மாறியதை நான் பார்த்தேன்.
எனவே இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளானது, மிகவும் மோசமாக பலவீனமடைந்துள்ளது, இப்போது அது மீண்டும் போராடுகிறது, அது மீண்டும் போராடும் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.
- ஏற்கனவே 33 பிணைக்கைதிகள் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
- ஹமாஸ் அமைப்பினரிடம் 90-க்கும் அதிகமாக பிணைக்கைதிகள் உள்ளனர்.
ஜெருசலேம்:
இஸ்ரேல்-ஹமாஸ் போர் 10 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்தப் போரில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர்.
சர்வதேச நாடுகளின் முயற்சியின் பலனாக கடந்த ஆண்டு நவம்பரில் ஒருவார காலம் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதற்கு ஈடாக ஹமாசிடம் இருந்த 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். காசா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல், அங்கு சிக்கியுள்ள பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து பிணைக்கைதிகள் 6 பேரின் உடல் மீட்கப்பட்டது. அவர்களில் இஸ்ரேலிய-அமெரிக்கரான கோல்ட்பர்க்-போலினும் ஒருவர். தங்கள் வீரர்கள் சுரங்கம் சென்றடைவதற்கு சற்று முன் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் கொடூரமாக கொலை செய்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 97 பிணைக்கைதிகள் உள்ளனர். அவர்களில் 5 வயதிற்கு உட்பட்ட 2 குழந்தைகளும் ஆவார்கள். ஏற்கனவே 33 பேர் உயிரிழந்ததாக இஸ்ரே் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் 6 பிணைக்கைதிகள் கொல்லப்பட்ட சுரங்கப்பாதையின் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் இன்று வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், காசா சுரங்கப்பாதையின் காட்சிகள் பிணைக்கைதிகள் குடும்பங்களுக்குக் காட்டப்பட்டன. அந்தச் சூழ்நிலைகளில் தங்கள் அன்புக்குரியவர்கள் எப்படி உயிர் பிழைத்தார்கள் என்பதைப் பார்ப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது என தெரிவித்தார்.
- யாகி புயல் பாதிப்பால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேருடன் சாய்ந்தன.
ஹனோய்:
வடமேற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை தாக்கிய யாகி சூறாவளி புயல் கடந்த சனிக்கிழமை வியட்நாமை தாக்கியது.
வியட்நாமின் வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங் ஆகிய பகுதிகளில் மணிக்கு 149 கி.மீ. வேகத்துடன் புயல் கரை கடந்தது. இதனால் பலத்த காற்றுடன் பல மணி நேரம் கனமழை கொட்டியது.
புயல் காரணமாக கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேருடன் சாய்ந்தன.
கனமழையால் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. புயல் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டன. நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மீட்புப் பணிகளில் ராணுவம், போலீசார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்
யாகி புயல் மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 176 பேர் காயம் அடைந்துள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. புயல் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது. 50-க்கும் அதிகமானோரை காணவில்லை. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
வியட்நாம் நாட்டில் பல தசாப்தங்களாக இல்லாத வகையில் யாகி புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- இறப்பை தானே தீர்மானிக்கும் வகையில் வலியில்லாமல் இறப்பதற்கு சுவிட்சர்லாந்து நிறுவனம் சூசைட் பாட் ஒன்றை தயாரித்து இருக்கிறது.
- வயது முதிர்ந்த தம்பதி ஒன்றாக வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், விருப்பப்பட்டு தன்னுடைய இறப்பை தானே தீர்மானிக்கும் வகையில் வலியில்லாமல் இறப்பதற்கு சுவிட்சர்லாந்து நிறுவனம் சூசைட் பாட் ஒன்றை தயாரித்து இருக்கிறது.
இந்நிலையில் இந்த சூசைட் பாடில் இறப்பதற்கு ஒரு பிரிட்டிஷ் தம்பதி முன்வந்துள்ளனர். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களது கடைசி தருணத்தை ஒன்றாக செலவிடமுடியும் என நினைத்துள்ளனர். வயது முதிர்ந்த தம்பதி ஒன்றாக வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டினை சேர்ந்த தம்பதி பீட்டர் ஸ்காட் (வயது 86), அவரது மனைவியான கிறிஸ்டைன் (வயது 80) ஓய்வு பெற்ற செவிலியர். இவர்கள் 46 ஆண்டுகள் திருமண உறவில் மகிழ்ச்சியாக கழித்துள்ளனர். கிறிஸ்டைனுக்கு டிமன்ஷியா நோய் இருப்பது ஆரம்பக்கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், தன் மனைவி இல்லாத வாழ்க்கையை கொஞ்சமும் நினைத்து பார்க்க முடியாமல் இந்த முடிவிற்கு இருவரும் வந்துள்ளனர்.
இதைப்பற்றி பீட்டர் ஸ்காட் கூறுயதாவது "நாங்கள் எங்கள் வாழ்க்கையை மிகச் சிறப்பாக வாழ்ந்து முடித்து விட்டோம். இதன் பிறகு அவள் நோயால் அவதிப்பட்டு கஷட்டப்படுவதை இந்த வயதில் பார்க்க என்னால் முடியாது."
"என்னால் முடிந்த அளவுக்கு நான் அவளை கவனித்துக்கொள்வேன். ஆனால் அவள் தன் வாழ்க்கையில் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின் போது உதவியாக போதுமான அளவுக்கு உதவியாக இருந்திருக்கிறாள். அவள் தன்னையும் தன் வாழ்க்கையையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறாள். சூசைட் பாட் அவளுக்கு அந்த வாய்ப்பை அளிக்கிறது, அவள் இல்லாமல் வாழ நானும் விரும்பவில்லை," என கூறியுள்ளார்.
இதனால் இவர்கள் சுவிட்சர்லாந்து சென்று அந்த டெத் பாடில் தங்களில் உயிரை மாய்த்துக் கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். அதற்கு முன்னதாக இந்த தம்பதி தங்களது கடைசி காலத்தை ஆல்ப்ஸ் மலையில் வாக்கிங் செல்லவும், சுவையான மீன் உணவை சாப்பிடவும் முடிவு செய்துள்ளனர்.
- குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைத்தனத்தை விட இந்த விண்கல் பெரியது என்று கூறப்படுகிறது.
- இந்த விண்கல் அளவுக்கு பெரியதாக இதுவரை வேறு எந்த விண்கல்லும் பூமிக்கு மிக அருகில் வந்ததில்லை என்று அவர் தெரிவித்தார்
அபோபிஸ் [Apophis] என்பது எகிப்திய நாகரிகத்தில் அழிவின் கடவுளுக்கு [God of Chaos] வழங்கப்பட்டுள்ள பெயர். தற்போது இந்த பெயர் தற்போது பூமியை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் பெரிய விண்கல் ஒன்றுக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த விண்கல் மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 2002 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கல் ஆனது வரும் 2029 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி பூமியைத் தாக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விண்கல்லை Space Objects Tracking and Analysis (NETRA) உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்த அச்சறுத்தலில் இருந்து தப்பிக்க இந்தியா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
தற்போது பூமிக்கு 32,000 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இந்த விண்கல் அளவுக்கு பெரியதாக இதுவரை வேறு எந்த விண்கல்லும் பூமிக்கு மிக அருகில் வந்ததில்லை என்று அவர் தெரிவித்தார். குஜராத்தின் அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைத்தனத்தை விட இந்த விண்கல் பெரியது என்று கூறப்படுகிறது. சுமார் 350 முதல் 450 மீட்டர்கள் வரை இதன் விட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 2029 இல் பூமிக்கு மிக அருகில் வரும் இந்த விண்கல் பூமி மீது மோதும் பட்சத்தில் பேரழிவு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
- இன்ஸ்டாகிராமில் விவாகரத்து செய்வதாக கடந்த ஜூலை மாதம் பகிரங்கமாக அறிவித்தார்.
- மஹ்ரா எம்1 பிராண்டின் கீழ் டைவர்ஸ் வாசனை திரவியத்தை விற்பனை செய்கிறது.
துபாய் ஆட்சியாளரின் மகளான ஷைக்கா மஹ்ரா பின்த் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமிடம் இருந்து இன்ஸ்டாகிராமில் விவாகரத்து செய்வதாக கடந்த ஜூலை மாதம் பகிரங்கமாக அறிவித்தார்.
இன்ஸ்டா பதிவில் விவாகரத்து அறிவித்த ஷைக்கா உலகளவில் பிரபலம் அடைந்தார். இந்த நிலையில், தற்போது "டைவர்ஸ்" என்ற பெயரில் வாசனை திரவிய நிறுவனத்தை ஷைக்கா துவங்கியுள்ளார். இந்நிறுவனம் மஹ்ரா எம்1 பிராண்டின் கீழ் டைவர்ஸ் வாசனை திரவியத்தை விற்பனை செய்கிறது.
புது வகை வாசனை திரவியம் அவரது விவகாரத்தை ஒட்டி நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. விவகாரத்தை போன்றே புதிய வாசனை திரவிய விளம்பரத்தையும் ஷைக்கா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
- தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 40 சதவீதம் 30 வயதுக்குக் கீழ் உள்ளவர்களே ஆவர்
- உலக சராசரியை விட இந்திய இளைஞர்களின் தற்கொலை விகிதம் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
இளைய தலைமுறையிடம் தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டிய சூழல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது உருவாகியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இளம் வயதினர் தற்கொலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்ற கவலையளிக்கும் புள்ளிவிவரங்கள் வெளியாகி வருகின்றன. உலகளவில் மக்கள் தொகையில் அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ள நிலையில் இந்த புள்ளிவிவரங்கள் கவனிக்கதக்கதாக உள்ளது.
இன்று [செப்டம்பர் 10] உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் இந்த வருடத்திற்கான குறிக்கோளான தற்கொலை குறித்த கருத்தியலை மாற்றுவது ["Changing the narrative on suicide"] குறித்த விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்தியாவில் 15 முதல் 19 வயதில் உள்ள இளைஞர்கள் உயிரிழப்புக்கு நான்காவது முக்கிய காரணமாகத் தற்கொலை உள்ளது.
தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 40 சதவீதம் 30 வயதுக்குக் கீழ் உள்ளவர்களே ஆவர். உலக சராசரியை விட இந்திய இளைஞர்களின் தற்கொலை விகிதம் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 160 இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். என்று எய்ம்ஸ் மனோதத்துவ பேராசிரியர் நந்த குமார் தெரிவிக்கிறார். NCRB அறிக்கைப்படி இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டில் 1.71 லட்சம் பேர் தற்கொலையால் உயிரிழந்துள்ளனர்.
அழுத்தமான குடும்பச் சூழல், நிலையில்லாத மன ஆரோக்கியம், தீய பழக்கம், காதல் முறிவு, நண்பர்கள் இன்மை, தனிமை உள்ளிட்டவை இந்த தற்கொலைகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. 15 முதல் 39 வயதிலான நபர்களின் உயிரிழப்புக்குத் தற்கொலை முக்கிய காரணமாக மாறியுள்ள நிலையில் இது உலகளவில் நாம் எதிர்கொண்டுள்ள பொது சுகாதார பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக மனதளவில் பலவீனமாக ஒரு தலைமுறையாக தற்போதைய தலைமுறை மாறி வரும் நிலையில் உரிய கவனிப்பும், மன ரீதியான சிக்கல்களுக்குத் தீர்வும் முக்கிய தேவையாக மாறியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.






