என் மலர்
உலகம்
- புத்தாண்டு தினத்தன்று இருவீட்டார் முன்னிலையில் மிஸ்டர் பீஸ்ட் தன்னுடைய நீண்டநாள் காதலியிடம் தனது காதலை தெரிவித்தார்.
- காதலி முன்னால் மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்துவது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் ஜிம்மி. மிஸ்டர் பீஸ்ட் என்ற பெயரில் யூடியூபில் வீடியோ பதிவிட்டு வருகிறார். யூடியூப் பிரபலமான இவர் 30 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டு சாதனை படைத்துள்ளார். சாகச விளையாட்டு அல்லது ஒரு கடினமான பணியை மேற்கொள்ளும் விதமாக இவருடைய வீடியோக்கள் அமைந்திருக்கும்.
ஒரு வீடியோவுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்து மிஸ்டர் பீஸ்ட் ஆடம்பரம் காட்டுவார். இவர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தியா பூய்சன் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்தநிலையில் புத்தாண்டு தினத்தன்று இருவீட்டார் முன்னிலையில் மிஸ்டர் பீஸ்ட் தன்னுடைய நீண்டநாள் காதலியிடம் தனது காதலை தெரிவித்தார்.
அனைத்திலும் பிரமாண்டம் காட்டும் மிஸ்டர் பீஸ்ட், ஆரவாரம் எதுவுமின்றி காதலி முன்னால் மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்துவது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த பதிவு இணையவாசிகளை கவர்ந்து வைரலாகி வருகிறது.
- தென் அமெரிக்காவின் மேற்கில் சிலி நாடு அமைந்துள்ளது.
- நிலநடுக்கம் பூமியில் இருந்து 104 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.
தென் அமெரிக்காவின் மேற்கில் அமைந்துள்ள சிலி நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டதை ஐரோப்பிய நிலநடுக்கவியல் துறை உறுதிப்படுத்தி இருக்கிறது.
நிலநடுக்கமானது பூமியில் இருந்து 104 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக பொருள் சேதமோ அல்லது உயிரிழப்புகள் குறித்தோ இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
- தேசத்துரோக வழக்கு என்பதால் ஜாமின் வழங்க அரசுத்தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
- அவரது வாதத்தை ஏற்ற நீதிபதி சின்மய் கிருஷ்ண தாசின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
டாக்கா:
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவி ஏற்ற பிறகு, சிறுபான்மை இந்துக்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள்மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடக்கின்றன. இது இந்துக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, கடந்த நவம்பர் 25-ம் தேதி இந்து அமைப்பின் தலைவரும், இஸ்கான் முன்னாள் துறவியுமான சின்மய் கிருஷ்ணதாஸ் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். மறுநாள் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. இதனால் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கோர்ட்டுக்கு வெளியே நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், சின்மய் கிருஷ்ணதாசின் ஜாமின் மனு மீதான விசாரணை சட்டோகிராம் பெருநகர அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசத்துரோக வழக்கு என்பதால் ஜாமின் வழங்க அரசுத்தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது வாதத்தை ஏற்ற நீதிபதி சைபுல் இஸ்லாம், குற்றம்சாட்டப்பட்ட சாமியார் சின்மய் கிருஷ்ண தாசின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனால் ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளோம் என சின்மய் கிருஷ்ணதாசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
- 2025 ஜனவரி 1ம் தேதி நள்ளிரவு ஹாங்காங்கில் இருந்து விமானம் புறப்பட்டுள்ளது.
- உலகளாவிய நேர மண்டலம் (Global Time Zone) தான் இதற்கு காரணமாகும்.
உலகம் முழுவதும் வெவ்வேறு நேரம் பின்பற்றப்படுவதன் காரணமாக சில நாடுகள் முதலாவதாகவும், சில நாடுகள் தாமதமாகவும் புத்தாண்டை வரவேற்றன.
இந்திய நேரப்படி (IST) இந்தியா இயங்குகிறது. இது ஒருங்கிணைந்த உலகளாவிய நேரத்தை விட 5 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்னதாக உள்ளது (UTC +5:30).
பூமியின் 2025 புத்தாண்டை முதலில் மத்திய பசிபிக் பெருங்கடலில் கிரிபாட்டி குடியரசின் அங்கமான கிரிட்டிமாட்டி [Kiritimati] தீவு இந்திய நேரப்படி 2024 டிசம்பர் 31 மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.
அதைத்தொடர்ந்து 52 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் 2025 பிறந்தது. இதனையடுத்து ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புத்தாண்டு பிறந்தது.
இந்நிலையில், 2025 ஜனவரி 1ம் தேதி நள்ளிரவு ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று 2024 டிசம்பர் 31ம் தேதி இரவு 8.30-க்கு லாஸ் ஏஞ்சல்ஸில் தரையிறங்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனா தலைநகர் ஹாங்காங்கில் முன்னதாகவே புத்தாண்டு பிறந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸின் நேரம் 16 மணி நேரம் பின்தங்கியிருப்பதால் இந்த அரிய நிகழ்வு நிகழ்ந்துள்ளது. உலகளாவிய நேர மண்டலம் (Global Time Zone) தான் இதற்கு காரணமாகும்.
- ஜிம்மி டொனால்ட்சன் என்பவர் மிஸ்டர் பீஸ்ட் சேனலை நடத்தி வருகிறார்.
- மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் பக்கம் தற்போது வரை 34 கோடி சந்தாதாரர்களை கடந்துள்ளது.
உலக அளவில், மக்களின் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு சமூக வலைத்தளமாக யூடியூப் விளங்குகிறது. இதில் அமெரிக்காவை சேர்ந்த மிஸ்டர் பீஸ்ட் என்ற யூடியூப் பக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.
ஜிம்மி டொனால்ட்சன் என்பவர் மிஸ்டர் பீஸ்ட் சேனலை நடத்தி வருகிறார். மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் பக்கம் தற்போது வரை 34 கோடி சந்தாதாரர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த யூடியூபர் தியா பூய்சென் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக மிஸ்டர் பீஸ்ட் சேனலை நடத்தி வரும் ஜிம்மி டொனால்ட்சன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று தியா பூய்செனுக்கு ஜிம்மி டொனால்ட்சன் மோதிரத்தை நீட்டி தனது காதலை தெரிவித்துள்ளார். அவரும் காதலை ஏற்றுக்கொண்டதால் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயம் செய்து கொண்டனர்.
நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் ஜிம்மி டொனால்ட்சன் பகிர்ந்துள்ளார்.
- கடல் மட்டம் வேகமாக உயரும். பல நகரங்கள் நீரில் மூழ்கும்.
- பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி இடையே சமரசம் ஏற்படும்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், புதிய ஆண்டில் பூமியில் அழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக பாபா வங்கா கணித்திருந்தது ஏற்கனவே சமூக வலைதளங்களில் பரவி இருந்தது. இந்நிலையில் லண்டனை சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் நிக்கோலஸ் அஜூலா என்பவர் இந்த ஆண்டில் 3-ம் உலகப்போர் நிச்சயமாக வரும் என கணித்துள்ளார்.
38 வயதான இவர் ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு கொரோனா போன்ற பெருந்தொற்று வரப்போகிறது. அதில் லட்சக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும் என கூறியிருந்தார். அதன்படி 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்திய நிலையில், தற்போது நிக்கோலசின் கணிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவரது கணிப்பில், மதம் மற்றும் தேசியத்தின் பெயரால் மக்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வார்கள், அரசியல் படுகொலைகள் நடக்கும், தீமையும், வன்முறையும் இந்த பூமியை கைப்பற்றும். அதிக மழை, பேரழிவு தரும் வெள்ளம் இருக்கும். இதனால் லட்சக்கணக்கான வீடுகள் சேதம் அடையும். கடல் மட்டம் வேகமாக உயரும். பல நகரங்கள் நீரில் மூழ்கும். பணவீக்கம் அதிகரிக்கும். பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி இடையே சமரசம் ஏற்படும் என அவர் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- ஓட்டலில் துப்பாக்கி சூடு நடந்தது.
- நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் உயிரிழந்தனர்.
தென்கிழக்கு ஐரோப்பாவில், பால்கன் தீபகற்பத்தில் உள்ள நாடு மாண்டினீக்ரோ. இங்குள்ள செட்டின்ஜே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் துப்பாக்கி சூடு நடந்தது. 45 வயதான நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் உயிரிழந்தனர்.

பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர் தனது குடும்பத்தை சேர்ந்த 7 பேரையும், ஓட்டல் உரிமையாளர் மற்றும் அவரது 2 குழந்தைகளையும் கொன்றுள்ளார். தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
- தாக்குதல் தீவிரவாதத்துடன் தொடர்புடையது என்று தெரியவந்தது.
அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நேற்று நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது கார் ஒன்று வேகமாக கூட்டத்துக்குள் புகுந்ததில் 15 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
உடனே போலீசார் அந்த காரை மடக்கி பிடித்தனர். அப்போது காரை ஓட்டிய நபருக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் அந்த நபர் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்பதும் தீவிரவாதத்துடன் தொடர்புடையது என்பதும் தெரியவந்தது.
கார் தாக்குதலை நடத்தியவர் டெக்சாஸை சேர்ந்த 42 வயதான ஷாம்ஷத் டின் ஜப்பார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரான அவர் ஒருமுறை ஆப்கானிஸ்தானில் பணியாற்றி உள்ளார்.
அவர் தாக்குதலுக்கு பயன்படுத்திய காரில் வெடிகுண்டு, துப்பாக்கி, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கொடி ஆகியவை இருந்தது. அவர் பலரை கொலை செய்யும் நோக்கத்துடன் இத்தாக்குதலை நடத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து எப்.பி.ஐ அதிகாரிகள் கூறும்போது, ஷாம்ஷத் டின் ஜப்பார் ஒரு பயங்கரவாதி. அவரது வாகனத்தில் ஐ.எஸ் கொடி இருந்தது. பயங்கரவாத அமைப்புகளுடன் அவரது தொடர்புகள் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர் ராணுவத்தில் ஐ.டி நிபுணராக பணியாற்றினார். அவர் ராணுவத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றினார்.
தற்போது ஹூஸ்டனில் ஒரு ரியல் எஸ்டேட் முகவராக வேலை பார்த்து வந்தார். இந்த தாக்குதலில் ஜப்பாருக்கு மட்டும் தொடர்பு இருப்பதாக நம்பவில்லை. மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம்.
அவர் தனியாக செயல் பட்டதாக தெரியவில்லை. இந்த சம்பவத்தை பயங்கர வாத செயலாக கருதி விசாரித்து வருகிறோம் என்றார்.
இதற்கிடையே ஜப்பார், ஜ,எஸ் அமைப்பில் சேர முடிவு செய்து இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்து உள்ளார். அந்த வீடியோக்களில் ஜப்பார் தனது விவாகரத்து குறித்து தெரிவித்துள்ளார்.
அப்போது தனது குடும்பத்தை கொல்ல திட்டமிட்டதாகவும் பின்னர் அந்த முடிவை மாற்றிக்கொண்டு ஜ.எஸ் அமைப்பில் இணைய முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.
- இச்சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
- வெடிவிபத்துக்கான காரணத்தை கண்டறியும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
லாஸ் வேகாஸில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பிற்கு சொந்தமான ஹோட்டலுக்கு முன்பு டெஸ்லா சைபர்ட்ரக் தீ பிடித்து வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் போலீசார் கூறுகையில், தீவிபத்துக்கு முன்பு டெஸ்லா சைபர்ட்ரக் ஒன்று ஹோட்டலுக்கு முன்பு வந்து நிற்கிறது. அதன் பின்பு, திடீரென பட்டாசு வெடிப்பதைப் போல வெடித்து தீப்பிடித்து எரிகிறது என்று கூறினர்.
இதற்கு எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- டெஸ்லா சைபர்ட்ரக்கில் கொண்டு வரப்பட்ட வெடிகுண்டு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாகவும் இது வாகன தீவிபத்துக்கு தொடர்பில்லை என்று கூறி உள்ளார்.
இதனிடையே, வெடிவிபத்துக்கான காரணத்தை கண்டறியும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
- பெண்கள் புர்கா அணிய சுவிட்சர்லாந்து தடை விதித்தது.
- இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஜூரிச்:
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்களின் முகம் மற்றும் உடல்களை மறைப்பதற்காக அணியும் புர்காவுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டின் ஆளும் பெடரல் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், புர்காவுக்கு தடை என்ற உத்தரவு தொடர்பான தீர்மானம் 2021ல் நிறைவேற்றப்பட்டது. இது வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என அறிவித்திருந்தது.
விமானங்கள், தூதரக வளாகங்கள் ஆகிய இடங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படாது.
வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தலங்களிலும், மசூதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது.
உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக் கொள்ளலாம். மத ரீதியாக அல்லது தட்பவெப்ப நிலை காரணமாக அவ்வாறு செய்யக்கூடாது.
தடையை மீறுபவர்கள் உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த மறுத்தால் அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை செலுத்த நேரிடும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் பெண்கள் முகத்தை மறைக்கும் வகையிலான புர்கா அணிவதற்கு தடை என்ற உத்தரவு நேற்று அமலுக்கு வந்தது.
- இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.
- ஜபாலியா நகரில் பாலஸ்தீனியர்கள் கட்டாயம் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் உத்தரவிட்டது.
காசா:
இஸ்ரேல் நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி புகுந்த ஹமாஸ் அமைப்பினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 251 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.
இதனால் ஹமாஸ் மீது போர் தொடுத்த இஸ்ரேல் இதுவரை 117 பிணைக் கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பிணைக் கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டன. ஆனால், இன்னும் 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பிணைக் கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹமாஸ்-இஸ்ரேல் இடையிலான போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குக் கரையில் ஏற்பட்ட மோதலில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், புத்தாண்டு நாளான நேற்று காசாவின் ஜபாலியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் பலியாகினர் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பலியானோரில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு காசாவின் ஜபாலியா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் மற்றும் 4 குழந்தைகள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மத்திய காசாவில் உள்ள புரேஜ் அருகிலுள்ள அகதிகள் முகாமில் நடந்த மற்றொரு தாக்குதலில் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை கொல்லப்பட்டனர். அதேபோல, தெற்கு நகரமான கான் யூனிஸில் நடந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ஜபாலியா நகரின் வடமேற்கில் உள்ள ஒரு பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் கட்டாயமாக வெளியேற வேண்டும் என இஸ்ரேலிய ராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- SUV காரை ஓட்டி வந்த நபர் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- போர்பன் ஸ்ட்ரீட் மற்றும் ஐபர்வில்லி சந்திப்பிற்கு அருகே SUV மக்கள் கூட்டத்தில் புகுந்தது.
புத்தாண்டு தினத்தன்று அமெரிக்காவில் மக்கள் கூட்டத்தில் கார் புகுந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதில் 30 பேர் வரை காயமடைந்தனர். விபத்து ஏற்படுத்திய SUV காரை ஓட்டி வந்த நபர் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மதியம் சுமார் 3:15 மணியளவில் நியூ ஆர்லியன்ஸில் உள்ள போர்பன் ஸ்ட்ரீட் மற்றும் ஐபர்வில்லி சந்திப்பிற்கு அருகே SUV மக்கள் கூட்டத்தில் புகுந்தது.

சம்பவத்தின் போது அங்கிருந்தவர்களில் கூற்றுப்படி, போர்பன் தெருவில் ஒரு டிரக் அதிவேகமாக மக்கள் மீது மோதியது. இதைத் தொடர்ந்து, ஒரு ஓட்டுநர் வாகனத்தை விட்டு வெளியேறி சுடத் தொடங்கினார், மேலும் போலீசார் திருப்பிச் சுட்டனர் என்று CBS செய்தி வெளியிட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளி குறித்த தகவல் வெளியாகவில்லை.
சம்பவம் நடந்த போர்பன் தெரு, நியூ ஆர்லியன்ஸின் பிரபல சுற்றுலாத் தலமாகும். போர்பன் தெருவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்ததாக கூறப்படுகிறது.






