என் மலர்tooltip icon

    உலகம்

    • கொரோனா காலத்தில் படிப்பை கைவிட்டுவிட்டு பயிற்சி என்ஜினீயராக கியாஸ் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார்.
    • தெருக்களில் வடிகால் பிரச்சனைகள் மற்றும் அதன் அடைப்புகளை பழுதுபார்ப்பது இவரது வேலையாகும்.

    ஒரே நாளில் கோடீஸ்வரராவது சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்பார்கள். ஆனால் லாட்டரியில் அதிர்ஷ்டம் அடிப்பதன் மூலமும் ஒரு சிலர் திடீர் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். அவ்வாறு பணம் கிடைக்கும் போது அவர்களுக்கு தலைகால் புரியாமல் செலவு செய்வதையும் கேள்விபட்டிருப்போம். ஆனால் லாட்டரியில் ரூ.80 கோடி பரிசு வென்ற வாலிபர் மறுநாள் வழக்கம் போல் வடிகால் சுத்தம் செய்யும் வேலைக்கு சென்ற செயல் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.

    இங்கிலாந்தின் கார்லிஸ் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் கிளார்க்சன். 20 வயதான இவர் கொரோனா காலத்தில் படிப்பை கைவிட்டுவிட்டு பயிற்சி என்ஜினீயராக கியாஸ் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். தெருக்களில் வடிகால் பிரச்சனைகள் மற்றும் அதன் அடைப்புகளை பழுதுபார்ப்பது இவரது வேலையாகும். அவ்வப்போது லாட்டரி வாங்கும் பழக்கம் கொண்ட இவர் சமீபத்தில் வாங்கிய லாட்டரிக்கு 7.5 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.80 கோடி) பரிசு விழுந்தது.

    ஆனாலும் அவர் மறுநாள் தனது அன்றாட பணிக்கு சென்று வடிகால்களை சுத்தம் செய்துள்ளார். பரிசு தொகையை வைத்து பெற்றோரின் கடனை அடைத்தல், வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லுதல், சொகுசு கார் வாங்குவது என பல்வேறு திட்டங்களை வைத்துள்ளதாக கூறும் ஜேம்ஸ் தொடர்ந்து வேலைக்கு செல்வதை நிறுத்தப்போவதில்லை என்கிறார்.

    • திங்கட்கிழமை கடும் குளிர் நிலவும் என அறிவிறுத்தல்.
    • இதனால் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்பு விழா உள்அரங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் நாளை மறுதினம் (ஜனவரி 20-ந்தேதி) அதிபராக பதவியேற்க உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்திய அரசு சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளார். பல்வேறு நாட்டு தலைவர்கள் இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்த கொள்ள இருக்கிறார்கள்.

    இந்நிலையில் பதவியேற்பு விழா குறித்து டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஜனவரி 20-ந்தேி கடுமையான குளிர் நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை முன்னறிவிப்பை கருத்தில் கொண்டு பதவியேற்பு விழா வரும் ஜனவரி 20-ந்தேதி மதியம் 3 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) உள்அரங்கத்தில் (Capitol Rotunda) நடக்கிறது.

    எந்த வகையிலும் மக்கள் காயப்படுவதை நான் பார்க்க விரும்பவில்லை. பல்லாயிரக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள், பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படும் குதிரைகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஜனவரி 20-ந்தேதி பல மணி நேரம் வெளியில் இருப்பது ஆபத்தான நிலைமையாகும். எந்தவொரு நிகழ்விலும் நீங்கள் வர முடிவு செய்தால், பாதுகாப்பு ஆடைகளை அணியுங்கள்.

    மிகவும் குளிரான காலநிலை காரணமாக பதவியேற்பு உரையை உள் அரங்கத்தில் நடத்த உத்தரவிட்டு உள்ளேன். பல்வேறு உயரதிகாரிகள் மற்றும் விருந்தினர்கள் அரங்கிற்கு அழைத்து வரப்படுவார்கள். இது அனைவருக்கும் மிகவும் அழகான அனுபவமாக இருக்கும்.

    இவ்வாறு டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    40 வருடங்களுக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் உள்அரங்கில் பதவி ஏற்க உள்ளார். வழக்கமாக கேபிட்டலில் வெளிப்புறத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் அதிபர் பதவி ஏற்பு விழா நடைபெறும். தற்போது கடும் குளிர் காரணமாக மாற்றப்பட்டுள்ளது.

    • காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார் ஆண்டனி பிளிங்கன்.
    • இதுதான் அவருடைய கடைசி செய்தியாளர்கள் சந்திப்பாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

    அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளராக ஆண்டனி பிளிங்கன் உள்ளார். நாளைமறுதினம் டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி ஏற்க உள்ளார். இதற்கிடையே இஸ்ரேல்- காசா போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகவும், பல்வேறு விசயங்கள் தொடர்பாகவும் ஆண்டனி பிளிங்கன் செய்தியாளர்களை சந்தித்தார். இதுதான் அவருடைய கடைசி செய்தியாளர் சந்திப்பாக இருக்கலாம். ஆனால் ஆண்டனி பளிங்கனுக்கு தனது கடைசி செய்தியாளர்கள் சந்திப்பு சிறப்பாக அமையவில்லை. அவரை செய்தியாளர் விமர்சனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்கள் சந்திப்பின்போது சாம் ஹுசைனி என்ற செய்தியாளர் "சர்வதேச நீதிமன்றத்தில் காசாவில இஸ்ரேல் இனப்படுகொலை செய்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி வருகிறார்கள். இந்த செயல்முறைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என நீங்கள் சொல்கிறீர்களா?.

    நான் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னை காயப்படுத்துகிறீர்கள். இதைத்தான் பத்திரிகை சுதந்திரம் என அழைக்கிறீர்களா?. என்னை தவறாக கையாள்வதை நிறுத்துங்கள் என்றார். உடனே பாதுகாவலர்கள் அந்த பத்திரிகையாளர்களை குண்டுகட்டாக வெளியேற்றினர்.

    அப்போது நீங்கள் கிரிமினல். நீங்கள் ஏன் சர்வதேச நீதிமன்றத்தில் இல்லை?. சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிற்கு தண்டனை வழங்கியுள்ளது என கூச்சலிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மற்றொரு செய்தியாளர் கடந்த மே மாதம் ஒப்பந்தம் ஏற்பட்டபோது ஏன் தொடர்ந்து குண்டுகளை வீசினீர்கள். இனப்படுகொலைக்காக விதிமுறை அடிப்படையிலான உத்தரவுகளை ஏன் தியாகம் செய்தீரு்கள்? என் நண்பர்களை படுகொலை செய்ய ஏன் அனுமதித்தீர்கள். ஏன் அவர்களின் வீடுகள் அழிக்கப்பட்டன? என கேள்வி எழுப்பினார்.

    • 6 வாரங்கள் போர் நிறுத்தம், பணயக்கைதிகள் விடுவிப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்
    • பிணயக்கைதிகளுக்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதோடு 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இஸ்ரேல்- ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க மற்றும் கத்தார் நாடுகள் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதனால் 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது சுமார் 150 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    அப்போது போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவு பெறுவதற்குள் ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் 100 பிணயக்கைதிகளை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில்தான் தற்போது இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா மற்றும் கத்தார் நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனடிப்படையில் ஒப்பந்தம் தயாரானது. இந்த ஒப்பந்தம் கடந்த புதன்கிழமை தயாரானது. ஆனால் கடைசி நேர ஆதாயத்தை பெறுவதற்காக ஒப்பந்தத்தின் முக்கிய பகுதிகளை ஹமாஸ் மறுப்பதாக இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு தெரிவித்திருந்தார். ஆனால் ஹமாஸ் அதை மறுத்தது.

    பின்னர் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் இஸ்ரேல் அமைச்சரவை போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுவிப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் நிறுத்தப்பட இருக்கிறது.

    6 வாரம் போர் நிறுத்தத்தின்போது முதற்கட்டமாக 33 பயணக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் எனத்தெரிகிறது. அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் இருக்கும் 95 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் விடுதலை செய்ய இருக்கிறது.

    இஸ்ரேல் நேரப்படி நாளை மாலை 4 மணிக்கு முன்னதாக பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படும் அனைவரும் இளைஞர்கள் அல்லது பெண்களாக இருப்பார்கள்.

    அதேவேளையில் ஹமாஸ் பிடியில் இருக்கும் பணயக்கைதிகளில் பலர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. இதனால் பிணயக்கைதிகள் பெயர் வெளியிடப்பட்டால்தான் யாரெல்லாம் உயிரோடு இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.

    இந்த போர் நிறுத்தம் ஒப்பந்தம் அமலுக்கு வந்ததுடன் காசா பகுதியில் உதவிப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு மக்களுக்கு வினியோகிக்கப்படும்.

    • பாகிஸ்தானில் நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பினரும் பொறுப்பு ஏற்கவில்லை.

    லாகூர்:

    பாகிஸ்தானின் கைபர்பக்துவா மாகாணத்தில் உள்ள குர்ராம் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் பழங்குடியின குழுக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது.

    நிலப்பிரச்சனை தொடர்பாக ஷியா மற்றும் சன்னி பிரிவைச் சேர்ந்த பழங்குடியினர்கள் இடையே அந்த மாவட்டத்தில் நடந்து வரும் மோதலில் இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட குர்ராம் மாவட்டத்திற்கு வாகனங்களில் உணவு, மருந்து உள்பட பல்வேறு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

    அப்போது அங்கு வந்த கிளர்ச்சியாளர்கள் அந்த வாகனங்களைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு, ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.

    இந்த திடீர் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 2 பேர், லாரி டிரைவர் 3 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய கும்பல் 5 டிரைவர்களை கடத்திச்சென்றனர். நிவாரண பொருட்களை கொண்டு சென்ற வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர்.

    இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பினரும் பொறுப்பு ஏற்கவில்லை. இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிக்டாக் செயலி விற்பனைக்கு தடை கோரி பைட்டான்ஸ் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தது.
    • இந்த மனுவை கடந்த மாதம் 18-ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை அடுத்த 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் இயற்றினார்.

    அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.

    இந்தச் சட்டத்திற்கு தடை கோரி பைட்டான்ஸ் நிறுவனம் கடந்த மே மாதம் வாஷிங்டன் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதையடுத்து பைட்டான்ஸ் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ஜனவரி 19-ம் தேதிக்குள் டிக்டாக் செயலியை விற்க வேண்டும் என்ற சட்டத்தால் அமெரிக்க மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள டிக்டாக் செயலி தடை செய்யப்படுமானால், அந்தச் செயலியை பயன்படுத்தி வரும் மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த மனுவை கடந்த மாதம் 18-ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    இந்நிலையில், டிக்டாக்கை அதன் சீன தாய் நிறுவனமான பைட் டான்ஸ் லிமிடெட் வரும் 19-ம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும். இல்லையெனில் டிக்டாக்கைத் தடை செய்யப்படும் என அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதிபட தெரிவித்தது.

    தேசிய பாதுகாப்புக்கான வெளிப்படையான ஆபத்து முதல் திருத்த உரிமைகள் தொடர்பான கவலைகளைவிட அதிகமாக உள்ளது எனவும் தீர்ப்பளித்ததுடன், டிக் டாக் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் நாட்டில் தயாரான செயற்கைக்கோள்.
    • விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் நாட்டில் தயாரான பாகிஸ்தானுக்கு சொந்தமான எலக்ட்ரோ-ஆப்டிகல் (EO-1) என்ற செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

    PRSC-EO-1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவும் மையத்தில் இருந்து செலுத்தப்பட்டு, விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    இந்த செயற்கைக்கோள் பாகிஸ்தானின் இயற்கை வளங்களை கண்காணித்து நிர்வகிக்கும் திறனை அதிகரிக்கவும், பேரிடர்கள் குறித்து முன்னதாகவே அறிந்து கொள்வதற்கும், நகர்ப்புற திட்டமிடல் மற்றும் விவசாய மேம்பாட்டை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும்.

    • அமெரிக்க அதிபராக வருகிற 20-ந்தேதி டிரம்ப் பதவி ஏற்க இருக்கிறார்.
    • சீனாவின் துணை அதிபர், டொனால்டு டிரம்ப் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். குடியரசு கட்சில் சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 312 எலக்ட்டோரல் வாக்குகள் பெற்றார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் 222 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

    அதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பெறக் கூடிய பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகளை நியமித்தார் டிரம்ப். வருகிற 20-ந்தேதி 2-வது முறையாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

    இந்த நிலையில் டொனால்டு டிரம்ப்- சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் டெலிபோனில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இருவர்கள் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்கள் வெளியிடவில்லை. டொனால்டு டிரம்ப் 20-ந்தேதி பதவி ஏற்க இருக்கும் நிலையில், ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    டொனால்டு டிரம்ப் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க ஜி ஜின்பிங், துணை அதிபர் ஹசன் ஷெங்கை அனுப்பி வைத்துள்ளார். அமெரிக்க அதிபர் பதவி ஏற்கும் விழாவில் சீனாவைச் சேர்ந்த உயர் தலைவர் பங்கேற்க இருப்பது இதுவே முதல்முறையாகும்.

    • பதவியேற்றபின் முதல் முறையாக ஸ்டார்மர் தற்போது போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு வருகை தந்துள்ளார்.
    • உக்ரைன் நேட்டோ நாடாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    உக்ரைனுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இரு நாடுகளுக்கும் 100 ஆண்டு உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது. கடந்த 2022 முதல் ரஷியாவுடன் போர் செய்து வரும் உக்ரைனின் பிரதான கோரிக்கை, நேட்டோ நாடுகளுடன் இணைவதே. இந்நிலையில் உக்ரைனுடன் இங்கிலாந்து செய்துள்ள உடன்படிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

    கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்ற நிலையில் கெயர் ஸ்டார்மர் பிரதமர் பதவி ஏற்றார்.

    பதவியேற்றபின் முதல் முறையாக ஸ்டார்மர் தற்போது போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு வருகை தந்துள்ளார். நேற்று [வியாழக்கிழமை] கீவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து இரு நாடு நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் இந்த 100 ஆண்டு உடன்படிக்கையை உறுதி செய்துள்ளார்.

    இந்த 100 ஆண்டு ஒப்பந்தம் - பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கியதாகும். ஒப்பந்தத்தின் கீழ், லண்டனும் கீவ்-வும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று ஸ்டார்மர் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். உக்ரைன் எதிர்காலத்தில் நேட்டோ நாடாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

     

    100 ஆண்டு கால ஒப்பந்தத்தின் பல்வேறு கூறுகள் வரும் வாரங்களில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வரும் திங்கட்கிழமை அமெரிக்க அதிபராக பதவியேற்கும் டிரம்ப், உக்ரைனில் மூன்றாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

    • மதிய உணவும் அவர்களுக்கு இதோடு வழங்கப்படும்.
    • ஒரு நாற்காலியில் உட்கார்ந்து "பாஸ்" போல் போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்க 50 யுவான்.

    சீனாவில் வேலையின்மையை மறைக்க அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து சும்மா இருக்கும் போக்கு டிரெண்டாகி வருகிறது.

    பல பெரிய நிறுவனங்கள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்கின்றன. இதனால் வேலை இல்லை என்று சொன்னால் சமூகத்தில் கௌரவக் குறைச்சல், குடும்பத்தில் குறையும் மதிப்பு உள்ளிட்டவை குறித்து பயப்படுபவர்கள் இந்த யுக்தியை கண்டறிந்துள்ளனர்.

    அதிகரித்து வரும் வேலையின்மைக்கு மத்தியில் வேலை செய்வதுபோல் நடிக்கும் இந்த முறையை பலர் பின்பற்றி வருகின்றனர். ஒரு நாளைக்கு 30 யுவான் [சுமார் 350 ரூபாய்] தினசரி வாடகைக்கு இதற்கென்றே அலுவலகம் போன்ற அறைகள் செயல்பட்டு வருகின்றன.

    தினமும் 30 யுவான் கட்டி, காலை முதல் மாலை வரை இங்கு இருந்துவிட்டு, வேலைக்கு சென்று வந்ததுபோல் பலர் பாவலா செய்து வருகின்றனர்.

    வடக்கு சீனாவின் ஹெப்பி [Hebei] மாகாணத்தில் இதுபோன்ற ஒரு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு ரூ.29.9 யுவான் கட்டி, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இங்கு இருக்கலாம். மதிய உணவும் அவர்களுக்கு இதோடு வழங்கப்படும்.

    மற்றொரு வைரல் பதிவில், குடும்பத்தினருக்கு அனுப்ப, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து "பாஸ்" போல் போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்க 50 யுவான் வசூலிக்கப்படுவதாக பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் இன்று [வெள்ளிக்கிழமை] வழங்கிய தீர்ப்பில் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    பிரிட்டனில் இருந்து பாகிஸ்தான் அரசுக்கு வர வேண்டிய பணத்தை ஆல்-கதிர் என்ற பெயரில் அவர்கள் இணைந்து நிறுவிய அறக்கட்டளையில் வரவு வைத்து, அதற்கு பல நுாறு ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு தேசிய பொறுப்புடைமை பணியகம் (NAB) கடந்த 2023 இல் முன்வைத்தது

    வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் 3 முறை தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வழக்கில் இருவரையும் குற்றவாளிகள் என நீதிபதி நசீர் ஜாவேத் ரண தீர்ப்பளித்தார்.

    பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்டரும், 2018 முதல் 2022 வரை  அந்நாட்டின் பிரதமராகவும் இருந்த இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையில் விசாரணை நியாயமான முறையில் நடைபெறவில்லை என்று இம்ரான் கான் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  

    • சாய், வெள்ளை மாளிகையைத் தாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தது நீதித்துறையின் விசாரணையில் தெரியவந்தது.
    • அமெரிக்க ஜனாதிபதியையும் மற்றவர்களையும் படுகொலை செய்ய அவர் திட்டமிட்டார்.

    அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயன்ற இந்திய இளைஞருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

    மே 22, 2023 அன்று வாடகை டிரக்கை மூலம் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாய் வர்ஷித் கந்துலா [20 வயது] முயற்சி செய்தார்.

    ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அரசை கவிழ்த்து ஹிட்லரின் நாஜி சர்வாதிகாரத்தை நிறுவுவதே அவரின் நோக்கமாக இருந்துள்ளது. 

    நீதிமன்ற ஆவணங்களின்படி, சட்டப்பூர்வ அமெரிக்க நிரந்தரக் குடியுரிமை பெற்ற சாய், தெலுங்கானாவின் சந்தாநகரைச் சேர்ந்தவர். சம்பவத்தன்று மிசோரி நகரின் செயின்ட் லூயிஸில் இருந்து வாஷிங்டன் டிசிக்கு வணிக விமானத்தில் பயணித்து,  மாலை 5:20 மணிக்கு டல்லஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய சாய், மாலை 6:30 மணிக்கு ஒரு டிரக்கை வாடகைக்கு எடுத்தார்.

    இரவு 9:35 மணிக்கு, ஹெச் ஸ்ட்ரீட் சந்திப்பில் உள்ள வெள்ளை மாளிகை மற்றும் ஜனாதிபதி பூங்காவை சுற்றிய தடுப்புகளில் சாய் அந்த டிரக்கை மோதியுள்ளார்.

    டிரக் இரண்டு முறை உலோகத் தடுப்புகள் மீது மோதியதால், புகைபிடித்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து, சாய், வாகனத்தை விட்டு வெளியேறி, தனது பையில் இருந்து நாஜி ஸ்வஸ்திகா கொடியை வெளியில் எடுத்து, வெள்ளை மாளிகைக்கு முன்னால் காட்டியுள்ளார். அங்கு விரைந்த போலீஸ் அவரை கைது செய்தது.

    சாய், வெள்ளை மாளிகையைத் தாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தது நீதித்துறையின் விசாரணையில் தெரியவந்தது.

    நாஜி சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவ, தேவைப்பட்டால் அமெரிக்க ஜனாதிபதியையும் மற்றவர்களையும் படுகொலை செய்ய அவர் திட்டமிட்டார் என்றும் மே 22 சம்பவத்திற்கு பல வாரங்களுக்கு முன்னதாகவே சாய் இந்தத் தாக்குதலை திட்டமிட்டதாக அதிகாரிகள் கண்டறிந்தனர்.

    சாய், விசாரணையின்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். எனவே சாய்க்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி Dabney L. Friedrich 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தற்போது தீர்ப்பளித்துள்ளார்.  

    ×