என் மலர்tooltip icon

    உலகம்

    • சாதாரண வகுப்புகளில் பயணம் செய்யும் பயணிகள் 30 கிலோ வரை உடைமைகளை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர்.
    • பயணிகள் கொண்டு செல்லும் உடைமைகளை கட்டுப்படுத்துவதன் மூலமாக இந்த தாமதத்தை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    துபாய்:

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அமீரகம், ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்லும் பயணிகள் பொருட்களை (செக் இன் உடைமைகள்) கொண்டு செல்ல புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய சிவில் விமான பாதுகாப்பு பணியகம் மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை ஆகியவற்றால் செயல்படுத்தப்படும் புதிய விதிமுறைகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

    இந்த புதிய விதிமுறைகள் பாதுகாப்பை மேம்படுத்தவும், விமான நிலைய செயல்திறனை அதிகரிக்கவும் பயன் உள்ளதாக உள்ளது. இதில் விமான பயணிகள் எடுத்து செல்லும் உடைமைகளுக்கு கடுமையான அளவு மற்றும் எடை கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்கு இயக்கும் முக்கிய விமான நிறுவனங்கள் தங்களது பேக்கேஜ் கொள்கைகளை புதுப்பித்துள்ளன. அதன்படி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையில் 2 பைகள் விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விமான பயணிகள் சர்வதேச விமானங்களில் செக் இன் உடைமைகளில் மூலம் 2 பைகளை மட்டுமே எடுத்து செல்லலாம். கூடுதல் உடைமைகள் இருந்தால் அதற்கான கட்டணத்தை பயணிகள் செலுத்த வேண்டும்.

    சாதாரண வகுப்புகளில் பயணம் செய்யும் பயணிகள் 30 கிலோ வரை உடைமைகளை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர். இந்த உடைமைகள் 2 பைகளில் மட்டுமே இருக்க வேண்டியது அவசியம். அதேபோல் இந்தியாவில் இருந்து அமீரகம் மற்றும் ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு வரும் போதும் 30 கிலோ வரை உடைமைகளை மட்டுமே எடுத்துச்செல்லலாம். பொருளாதார மற்றும் பிரீமியம் டிக்கெட்களுக்கு சாதாரண வகுப்பை விட கூடுதலாக பொருட்களை எடுத்துச்செல்ல பயணிகள் அனுமதிக்கப்படுவர். அதிகமாக பயணிகளின் வருகை இருப்பதால் இந்திய விமான நிலையங்களில் நெரிசல் அதிகரித்து பாதுகாப்பு சோதனைகளில் காலதாமதம் ஏற்படுகிறது. பயணிகள் கொண்டு செல்லும் உடைமைகளை கட்டுப்படுத்துவதன் மூலமாக இந்த தாமதத்தை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமானங்களை மாற்று வழியில் இயக்க வலியுறுத்தப்பட்டன.
    • போலி செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

    ஸ்பேஸ்எக்ஸ்-இன் ஸ்டார்ஷிப் முன்மாதிரி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. ராக்கெட் வெடித்து சிதறியதைத் தொடர்ந்து கல்ஃப் ஆஃப் மெக்சிகோ வழியே செல்லக்கூடிய விமானங்களை மாற்று வழியில் இயக்க வலியுறுத்தப்பட்டன.

    ஸ்டார்ஷிப் விண்ணில் ஏவப்பட்ட எட்டு நிமிடங்களுக்கு பிறகு ஸ்பேஸ்எக்ஸ் மிஷன் கட்டுபாட்டு மையத்துடனான தொடரை இழந்தது. சோதனை முயற்சியில் ஏவப்பட்ட இந்த ராக்கெட் முதல் பேலோடு போலி செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

    "ஸ்டார்ஷிப் உடனான அனைத்து தகவல்தொடர்புகளையும் நாங்கள் இழந்துவிட்டோம் - இது அடிப்படையில் மேல் நிலையில் எங்களுக்கு ஒரு ஒழுங்கின்மை இருப்பதைக் குறிக்கிறது" என்று ஸ்பேஸ்எக்ஸ் தகவல் தொடர்பு மேலாளர் டான் ஹூட் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் ஸ்டார்ஷிப் தொலைந்து போனதை உறுதிப்படுத்தினார்.

    ஃபிளைட் ரேடார் 24 தளத்தின் படி பதிவுகளின் அடிப்படையில், குறைந்தது 20 வணிக விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. விமானங்களின் மீது சாத்தியமான குப்பைகள் விழுவதை தவிர்க்க பாதை மாற்றியமைக்கப்பட்டன.

    இது குறித்து ஸ்பேஸ்எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வீடியோ ஒன்றை இணைத்து, "வெற்றி நிச்சயமற்றது, ஆனால் பொழுதுபோக்கு உறுதி!" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • கடந்த மாதம் 7-ந்தேதி தனது படுக்கை அறையில் தவறி விழுந்ததில் அவரது கன்னத்தில் லேசான காயம் ஏற்பட்டது.
    • நேற்று வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்தார்.

    ரோம்:

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), முதுமை காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். இதனால் பெரும்பாலும் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார்.

    கடந்த மாதம் 7-ந்தேதி தனது படுக்கை அறையில் தவறி விழுந்ததில் அவரது கன்னத்தில் லேசான காயம் ஏற்பட்டது.

    இந்தநிலையில் நேற்று வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்தார். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. கையில் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என்றும், எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காயம் ஏற்பட்ட பகுதியில் கட்டு போடப்பட்டு இருப்பதாகவும் வாடிகன் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

    1½ மாதங்களில் 2-வது முறையாக போப் ஆண்டவர் தவறி விழுந்து காயமடைந்திருப்பது கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விரைவில் நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றார் ஜஸ்டின் ட்ரூடோ.
    • அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு என்ன செய்வது என இன்னும் முடிவெடுக்கவில்லை என்றார்.

    ஒட்டாவா:

    கனடா பிரதமர் ஆக இருந்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. எதிர்ப்பு காரணமாக கட்சித்தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்த அவர், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

    புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை பதவியில் நீடிப்பேன் என தெரிவித்திருந்தார். கட்சி விதிப்படி, தலைவராக இருப்பவரே பிரதமர் ஆக பதவி ஏற்கமுடியும். இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என முடிவு எடுத்துள்ளேன். அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு அடுத்து என்ன செய்வது என முடிவு செய்யவில்லை. அதற்கு நேரமும் இல்லை. தற்போது கனடா மக்கள் அளித்த பணிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • லாஸ் ஏஞ்சல்சில் கடந்த 7-ம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டது.
    • தீ பரவ காரணமாக இருந்த காற்றின் வேகம் தற்போது தணிந்துள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் கடந்த 7-ம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டது.

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    தண்ணீர் பற்றாக்குறையால் ஹெலிகாப்டர்கள் வாயிலாக கடல் நீரில் தண்ணீர் இறைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஒன்பது நாட்களுக்கும் மேலாக தீ எரிவதால் இதுவரை மொத்தம் 40,000-க்கும் அதிகமான ஏக்கர் பரப்பை எரித்து நாசமாக்கியுள்ளது. 12,000-க்கும் அதிகமான கட்டமைப்புகள் தீயால் அழிக்கப்பட்டுள்ளன. காட்டுத் தீக்கு இதுவரை 25 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், காற்றின் வேகம் தற்போது கொஞ்சம் தணிந்துள்ளது. இதனால் தீயை அணைக்கப் போராடி வரும் தீயணைப்பு வீரர்களின் பணிகளில் இது சற்று ஆறுதலைக் கொடுத்துள்ளது. தீ அணைக்கும் பணிகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

    • தங்க சுரங்கத்தில் சட்டவிரோதமாக தொழிலாளர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    • அவர்களை வெளியே கொண்டு வருவதற்கு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    தென்ஆப்பிரிக்காவில் தங்க சுரங்கங்கள் அதிக அளவில் உள்ளன. தங்கம் வெட்டி எடுத்தபின் இந்த சுரங்கங்கள் கைவிடப்படும். அவ்வாறு கைவிடப்பட்ட சுரங்கங்கள் ஏராளமானவை உள்ளன. அதில் ஜோகன்னஸ்பர்க்கின் தென்மேற்கு பகுதியில் உள்ள மிகவும் ஆழமான பஃப்பெல்போன்டீன் தங்க சுரங்கமும் என்று. இந்த சுரங்கம் சுமார் 2.5 கிலோ மீட்டர் ஆழம் கொண்டது.

    இந்த சுரங்கத்தில் சட்டவிரோதமாக சுரங்க தொழிலாளர்கள் தங்கம் இருக்கிறதா? என தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் இறங்கியுள்ளனர். இவர்களில் பலர் தாங்களாகவே வெளியே ஏறினர். பலர் சுரங்கத்திலேயே தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

    சுரங்கத்தில் தங்கியிருந்தவர்களை குற்றவாளி என போலீசார் அறிவித்தனர். இதனால் வெளியேறிவர்களை கைது செய்து வந்தனர். இதனால் கைதுக்கு பயந்து உள்ளேயே இருந்ததாக கூறப்படுகிறது.

    அவர்கள் வெளியேறுவதற்காக சுரங்கத்திற்குள் உணவு பொருட்கள் அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில் போலீசார் இன்று சுரங்கத்திற்குள் உள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இறந்து போன 78 பேர் உடல்களை சுரங்கத்தில் இருந்து மீட்டனர். ஏற்கனவே 9 உடல்கள் மீட்கப்பட்டிருந்தது. இதனால் 87 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

    போலீசார் தரப்பில் மீட்புப்பணி முழுமையாக முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டள்ளது. சுரங்கத்தில் யாரும் இல்லை என நம்பப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அதேவேளையில் சுரங்கத் தொழிலாளர்கள் சார்பில், போலீசார் உணவு பொருட்கள் செல்வதை நிறுத்தியதால் உள்ளே இருந்தவர்கள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    • அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது.
    • காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கனடா தீயணைப்பு வீரர்களும் உதவி வருகின்றனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது. பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் 19,000 ஏக்கர் நிலத்தையும், அல்டடேனா பகுதியில் 13,000 ஏக்கர் நிலத்தையும் காட்டுத்தீ எரித்துள்ளது.

    வெஸ்ட் ஹில்ஸ் பகுதியிலும் பரவிய காட்டுத்தீ சில மணிநேரங்களுக்குள் 900 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை தீக்கிரையாக்கியது. இதற்கிடையே, அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கனடா தீயணைப்பு வீரர்களும் உதவி வருகின்றனர்.

    இந்நிலையில் காட்டுத்தீக்கு இரையான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் நிவாரண பணிகளுக்காக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் வென்ற ரூ.71 லட்சம் பணத்தை வழங்கவுள்ளதாக அமெரிக்க டென்னிஸ் வீரர் டெய்லர் ப்ரிட்ஸ் தெரிவித்துள்ளார். என்னை வளர்த்த ஊருக்கு என்னால் இயன்றதை செய்வதாகவும், மக்களுக்கு உதவ பலர் முன் வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • அதானி மற்றும் அவரது நிறுவனங்கள் மறுத்தன.
    • இதற்கான காரணத்தை அவர் கூறவில்லை.

    அமெரிக்க முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி மூடப்பட்டதாக அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் அறிவித்தார்.

    "கடந்த ஆண்டு இறுதியிலிருந்து நான் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எங்கள் குழுவுடன் பகிர்ந்து கொண்டபடி, ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியை கலைக்க முடிவு செய்துள்ளேன். நாங்கள் பணியாற்றி வந்த திட்டங்களை முடித்த பிறகு திட்டம் முடிவடையும். நாங்கள் சமீபத்தில் முடித்து ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்ட கடைசி போன்சி வழக்குகளின்படி, அந்த நாள் இன்று," என்று ஆண்டர்சன் அறிவித்தார்.

    கடந்த சில ஆண்டுகளில், ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்ட அதன் அறிக்கைகள் இந்திய கோடீஸ்வரரான அதானிக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பை ஏற்படுத்தின. ஹிண்டன்பர்க் சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுகளையும் அதானி மற்றும் அவரது நிறுவனங்கள் மறுத்தன.

    ஜோ பைடன் நிர்வாகத்தின் நான்கு ஆண்டு பதவிக்காலம் முடிவடையவும் ஜனவரி 20-ம் தேதியன்று அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கும் ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்திற்கு முன்பே, ஆண்டர்சன் தனது நிறுவனத்தை கலைத்திருக்கிறார். எனினும், இதற்கான காரணத்தை அவர் கூறவில்லை.

    "இப்போது ஏன் கலைக்க வேண்டும்? ஒரு விஷயமும் இல்லை - அச்சுறுத்தல் இல்லை, உடல்நலப் பிரச்சினை இல்லை, பெரிதாக தனிப்பட்ட பிரச்சினையும் இல்லை. குறிப்பிட்ட கட்டத்தில் வெற்றிகரமான தொழில் ஒரு சுயநலச் செயலாக மாறும் என்று ஒருவர் ஒருமுறை என்னிடம் கூறினார். ஆரம்பத்தில், சில விஷயங்களை நானே நிரூபிக்க வேண்டும் என்று உணர்ந்தேன். அநேகமாக என் வாழ்க்கையில் முதல் முறையாக, இப்போது எனக்குள் சில ஆறுதல்களைக் கண்டேன்," என்று அவர் கூறினார்.

    • நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
    • ஆய்வுக்காக நிலவில் அழுக்குகளை சேகரிக்க ‘ரோவர்’ சாதனம் பயன்படுத்தப்படும்.

    கேப் கேனவரல்:

    கடந்த 1960-களில் இருந்து நிலவின் மேற்பரப்பில் 5 நாடுகள் மட்டுமே வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கி உள்ளன. முன்னாள் சோவியத் யூனியன், அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகியவைதான் அந்த நாடுகள்.

    அதிலும், நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

    இதற்கிடையே, நிலவில் ஆய்வு நடத்துவதற்காக, ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனம் தனது 'பால்கன் 9' ராக்கெட் மூலம் 2 'லேண்டர்' சாதனங்களை நிலாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. அமெரிக்காவில் கேப் கேனவரல் நகரில் உள்ள அமெரிக்க விண்வெளி மையமான 'நாசா'வின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று அவை செலுத்தப்பட்டன.

    2 ஆண்டுகளுக்கு முன்பு, ஜப்பான் நாட்டின் 'ஐஸ்பேஸ்' நிறுவனத்தின் முதலாவது 'லேண்டர்' நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளானது. தற்போது, அந்நிறுவனம் தனது லேண்டரை மீண்டும் அனுப்பி வைத்துள்ளது. அதனுடன் 'ரோவர்' சாதனமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ஆய்வுக்காக நிலவில் அழுக்குகளை சேகரிக்க 'ரோவர்' சாதனம் பயன்படுத்தப்படும். எதிர்கால ஆராய்ச்சியாளர்களுக்காக நிலவில் உணவு மற்றும் நீர் ஆதாரம் இருக்கிறதா என்ற ஆய்வும் நடத்தப்படும்.

    இதுபோல், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 'பயர்பிளை ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின் 'லேண்டர்' சாதனம் முதல் முறையாக நிலாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

    2 மீட்டர் உயரம் கொண்ட அந்த லேண்டர், முதலில் நிலாவை சென்றடையும். மார்ச் மாதத்தின் ஆரம்பத்திலேயே போய்ச் சேரும். ஆய்வுக்காக அழுக்குகளை சேகரிக்கும். மேற்பரப்புக்கு அடியில் நிலவும் வெப்பநிலை அளவிடப்படும்.

    ஆனால், சற்று பெரிதான 'ஐஸ்பேஸ்' நிறுவனத்தின் லேண்டர் மெதுவாக பயணம் செய்யும். மே மாதம் அல்லது ஜூன் மாதத்தில்தான் நிலவில் தரையிறங்கும்.

    மேற்கண்ட 2 லேண்டர்களும் ஒன்றாக ராக்கெட்டில் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், 1 மணி நேரத்துக்கு பிறகு, திட்டமிட்டபடி பிரிந்து, தனித்தனி சுற்றுவட்டப்பாதையில் பயணத்தை தொடர்ந்தன.

    • உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்தில் 72 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.
    • அடுத்த மாதம் 10-ந் தேதிக்குள் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமையிடமாக கொண்டு பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக 'மெட்டா' இயங்குகிறது. பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல சமூக வலைத்தளங்களை இது நிர்வகித்து வருகிறது. உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்தில் 72 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் மெட்டா நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அதன் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். நிறுவனத்தை சீரமைக்கும் வகையில் 5 சதவீதம் அதாவது 3,600 ஊழியர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பட்டியல் தயாராகி வருகிறது.

    அடுத்த மாதம் 10-ந் தேதிக்குள் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    • ஆபத்தான அதிகாரக் குவிப்பு" குறித்து அமெரிக்கர்களை எச்சரித்தார்.
    • ஆபத்தில் இருப்பதை உணர்ந்து தான், அதிபர் தேர்தலில் போட்டியிட்டேன்.

    அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து இன்னும் சில நாட்களில் விலக இருக்கும் ஜோ பைடன், புதன்கிழமை ஓவல் அலுவலகத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு தனது பிரியாவிடை உரையை நிகழ்த்தினார். உரையின் போது, அமெரிக்காவில் உள்ள ஒரு சில செல்வந்தர்களிடையே "ஆபத்தான அதிகாரக் குவிப்பு" குறித்து அமெரிக்கர்களை எச்சரித்தார்.

    ஓவல் அலுவலகத்தில் இருந்து பேசிய ஜோ பைடன், "இன்று, அமெரிக்காவில் ஒரு தன்னலக்குழு தீவிர செல்வம், அதிகாரம் மற்றும் செல்வாக்குடன் உருவாகி வருகிறது. இது நமது ஜனநாயகத்தையும், நமது அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தையும், அனைவரும் முன்னேறுவதற்கான நியாயமான வாய்ப்பையும் உண்மையில் அச்சுறுத்துகிறது."

    "அமெரிக்கர்கள் தவறான தகவல்களின் கீழ் புதைக்கப்படுகிறார்கள், இது அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கிறது. பத்திரிகை சுதந்திரம் நொறுங்கி வருகிறது. செய்தி ஆசிரியர்கள் மறைந்து வருகின்றனர். அதிகாரம் மற்றும் லாபத்திற்காகச் சொல்லப்படும் பொய்களால் உண்மை அடக்கப்படுகிறது. நமது குழந்தைகள், நம் குடும்பங்கள் மற்றும் ஜனநாயகத்தை துஷ்பிரயோக சக்தியிலிருந்து பாதுகாக்க சமூக தளங்களை நாம் பொறுப்பேற்க வேண்டும்."

    "நாம் ஒன்றிணைந்து மேற்கொண்ட பணிகளின் தாக்கத்தை உணர சற்று நேரம் ஆகும். ஆனால், நாம் விதைத்த விதைகள் வளர்ந்து, வரும் தசாப்தங்களில் பூத்துக் குலுங்கும். அமெரிக்க ஆபத்தில் இருப்பதை உணர்ந்து தான், நான் அதிபர் தேர்தலில் போட்டியிட்டேன்."

    "திக்கி பேசும் குழந்தை ஒன்று ஸ்கிராண்டன், பென்சில்வேனியா அல்லது கிளேமாண்ட், டெலாவேரில் சாதாரண துவக்கத்தில் இருந்து அமெரிக்க அதிபராக ஓவல் அலுவலகத்தின் ரெசல்யூட் மேசையின் பின் அமர்வது உலகில் வேறு எங்கும் சாத்தியமாக முடியாது. நான் நம் நாட்டின் மீது முழு அன்பை முழுமையாக அர்ப்பனித்துள்ளேன். அதற்கு கைமாறாக அமெரிக்க மக்களிடம் இருந்து பல லட்சம் முறை அன்பு, ஆதரவு கலந்த ஆசீர்வாதத்தை பெற்றுள்ளேன்," என்றார்.

    பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அதிபர் ஜோ பைடன் வருகிற 20 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுகிறார். இதே நாளில் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பம் பதவியேற்கிறார். 

    • உலகளாவிய எதிர்ப்புகளை தூண்டியது.
    • ஆரவாரம் செய்து, கார் ஹாரன்களை ஒலிக்கச் செய்தனர்.

    இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் முழுமை பெறவில்லை என்றும், இதுகுறித்த இறுதிக்கட்ட விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

    முன்னதாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா மற்றும் கத்தார் அறிவித்த நிலையில், நேதன்யாகு இந்த தகவலை தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் நேதன்யாகு இவ்வாறு தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்கா மற்றும் கத்தார் கூட்டாக வெளியிட்ட ஒப்பந்த விவரங்களின் படி காசாவில் கடந்த 15 மாதங்களாக நீடித்து வந்த பேரழிவு தரும் போரை இடைநிறுத்தம் செய்து, டஜன் கணக்கான பணயக்கைதிகள் அவரவர் வீடுகளுக்கு செல்வதற்கான வழியைத் தெளிவுபடுத்தி உள்ளது.

    இந்த போர் காரணமாக மத்திய கிழக்கு பகுதிகளில் நிலையற்ற சூழலை ஏற்படுத்தியதோடு, உலகளாவிய எதிர்ப்புகளை தூண்டியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதும் ஏராளமான பாலஸ்தீனியர்கள் காசா வீதிகளில் இறங்கி, ஆரவாரம் செய்து, கார் ஹாரன்களை ஒலிக்கச் செய்தனர்.

    "நாம் இப்போது அனுபவிக்கும் உணர்வை, விவரிக்க முடியாத, விவரிக்க முடியாத உணர்வை யாராலும் உணர முடியாது," என்று மத்திய காசாவின் டெய்ர் அல்-பலாவில் மஹ்மூத் வாடி கூறினார்.

    ×