என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தயாளு அம்மாள் உடல்நிலையை மருத்துவர் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
- தற்போது தயாளு அம்மாளுக்கு சளி தொல்லை குறைந்து உள்ளதாக தெரிகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக் குறைவு காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலையை மருத்துவர் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். தற்போது தயாளு அம்மாளுக்கு சளி தொல்லை குறைந்து உள்ளதாக தெரிகிறது.
அடுத்த சில நாட்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கி அதன் பிறகு தயாளு அம்மாளை வீட்டுக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
- அடையாளம் தெரியாதவர்களுக்கு அடையாளம் தருவதற்கு தயாராக இல்லை.
- தேச நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்று அர்த்தம்.
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கல்வி மூலம் கலவரத்தை தூண்டுவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டி இருப்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
* அடையாளம் தெரியாதவர்களுக்கு அடையாளம் தருவதற்கு தயாராக இல்லை. அவர் ஒரு புறம் பிதற்றிக்கொண்டே இருக்கட்டும்.
* எங்கள் பணி கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்பதை ஒன்றியத்திலே முதலமைச்சர் அரும்பணியால் நிரூபிப்பார்.
* ஒருகாலத்தில் மாநகராட்சி பள்ளிகளை வெறுத்து ஒதுக்கிய நிலை மாறி இன்றைக்கு மாநகராட்சி பள்ளிகள் வெகுமதி பள்ளிகளாக தமிழகத்தில் நிலவுவதை கல்வியாளர்கள், மாணவர்களுடைய பெற்றோர்களும், மாணவ செல்வங்களும் உணர்ந்து இருக்கிறார்கள்.
* இதுபோன்ற பிதற்றலுக்கு பதில் கூற தயாராக இல்லை. அதற்கு உண்டான நேரமும் இல்லை.
மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி சூசகமாக கூறியிருப்பது...
* பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று எட்டிப்பார்க்கிற வேலை எங்களுக்கு இல்லை.
* எங்களது பயணம் சீராக முதலமைச்சர் தலைமையில் உறுதிமிக்க கூட்டணியாக, மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி பொலிவோடு திகழ்ந்து கொண்டு இருக்கிறது.
* அதற்கு தலைமை தாங்குகின்ற முதல்வர் ஏதோ நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. உறுதியோடு 60 ஆண்டு காலம் அரசியல் பயணத்தை மேற்கொண்டவர்.
ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி நம்பகத்தன்மை குறித்து...
* எடப்பாடி சார் இங்கே இருந்து 8 கி.மீ. தூரத்தில் தான் இருக்கிறார். அவரிடமே பதில் வாங்கிக் கொள்ளுங்கள்.
அனைத்துக்கட்சியில் பங்கேற்காத கட்சிகள் குறித்து...
* தேச நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்று அர்த்தம்.
* தமிழை பற்றி, தமிழ்நாட்டை பற்றி, தமிழக மக்களை பற்றி கவலை இல்லாதவர்கள் புறக்கணிப்பதை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்று கூறினார்.
- கிளாம்பாக்கத்தில் ரெயில்கள் நிற்கும் வகையில் 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
- ரெயில் நிலையத்தில் மேற்கூரை மற்றும் மின்கம்பி இணைப்பு உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே இன்னும் முடிக்கப்பட வேண்டி உள்ளது.
வண்டலூர்:
சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
எனினும் கிளாம்பாக்கத்திற்கு சென்று வருவதில் பயணிகளுக்கு உள்ள சிரமத்தை போக்கும் வகையில் வண்டலூர்- ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிதாக ரெயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த புதிய ரெயில் நிலையப்பணிக்கு தமிழக அரசு ரூ.20 கோடி ஒதுக்கி உள்ளது.
கிளாம்பாக்கத்தில் ரெயில்கள் நிற்கும் வகையில் 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் ரெயில் நிலைய மேலாளர் அறை, டிக்கெட் கவுண்டர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
தற்போது கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையத்தில் நடைமேடைகள், தண்டவாளங்களில் கற்கள் கொட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மின்கம்பங்களும் நட்டு மின்வயர்கள் இணைப்புக்கு தயாராக உள்ளது.
ரெயில் நிலையத்தில் மேற்கூரை மற்றும் மின்கம்பி இணைப்பு உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே இன்னும் முடிக்கப்பட வேண்டி உள்ளது. எனவே புதிய ரெயில் நிலைய பணி வருகிற மே மாதத்தில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பெரிதும் கைகொடுக்கும். மேலும் மாநகர பஸ்சில் பயணம் செய்வதை விட மின்சார ரெயிலில் வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு இந்த வழித்தடத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும் போது, கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையப்பணியில் 50 சதவீதத்திற்கு மேல் முடிந்து விட்டது. வருகிற மே மாதத்திற்குள் முழு பணியையும் முடிக்க திட்டமிட்டு உள்ளோம். இதற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகிறது என்றார்.
இதேபோல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புதிதாக கட்டப்படும் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு பயணிகள் எளிதில் சென்று வரும் வகையில் ஜி.எஸ்.டி.சாலையை கடந்து உயர் மட்ட நடைமேம்பாலம் ரூ. 74.50 கோடி செலவில் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இந்த பணியும் விரைவில் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் போது கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்திற்கு பயணிகள் எந்த சிரமமும் இன்றி சென்று வர முடியும்.
- மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது.
- மக்கள்தொகை குறைவாக உள்ளதால் தொகுதி மறுவரையறையில் தமிழகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது என்றார்.
இதைதொடர்ந்து, முதலமைச்சர் கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய பிற கட்சிகள் கூட்டுக்குழுவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அப்போது, " பிற மாநில மக்கள் தொகையுடன் தமிழக மக்கள் தொகையை ஒப்பிட்டு புள்ளி விவரங்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
மேலும் அவர், " மக்கள்தொகை குறைவாக உள்ளதால் தொகுதி மறுவரையறையில் தமிழகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது" என்றார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், " தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசின் எந்த முடிவையும் ஏற்போம்" என்றார்.
பாமக தலைவர் அன்புமணி பேசுகையில், " தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச வேண்டும். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒருங்கிணைத்து நாம் எதிர்க்க வேண்டும்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தனியாக போராடினால் தீர்வு கிடைக்காது. பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைக்க வேண்டும்" என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், " தொகுதி மறுவரையறை செய்தால் அனைத்து மாநிலங்களுக்கும் சமவாய்ப்பு தரப்பட வேண்டும்" என்றார்.
தொகுதி மறுவரையறை எதிர்க்கின்ற அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேசிய அளவில் கூட்டம் நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, " தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவுக்கு எதிரான சக்தியாக நாம் உருவாக வேண்டும். தொகுதி அரசியல் அமைப்பு என்பது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபிக்க வேண்டும்.
ஒத்த கருத்து கொண்டவர்களை நாம் ஒன்றிணைத்து மாநிலங்களின் உரிமைக்காக போராடி வேண்டியது அவசியம். பாஜக ஆளும் மாநிலங்கள் பெரும்பான்மையாக உள்ளதால் மறுவரையறையை சர்வாதிகாரத்துடன் செயல்படுத்த நினைக்கின்றனர்" என்றார்.
- இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
- முதல் கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக நேற்று நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான அரையிறுதி போட்டி அமைந்தது.
சமபலம் வாய்ந்த அணிகள் மோதியது, இந்திய அணி நாக்-அவுட் சுற்று போட்டிகளில் கடந்து வந்த தோல்விகள் என பல்வேறு காரணங்களால் நேற்றைய போட்டி இந்திய அணி மற்றும் ரசிகர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாக மாறியது. இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
இந்த நிலையில், நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா இதுவரை யாரும் படைத்திராத சாதனையை படைத்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ஐ.சி.சி. நடத்தும் நான்கு வகை கிரிக்கெட் தொடர்களின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
ஏற்கனவே டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐ.சி.சி. கோப்பைகளை வென்றுக் கொடுத்த கேப்டன் என்ற பெருமையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி பெற்றிருந்தார். இவர் தலைமையில் இந்திய அணி 2007, 2009 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் ஐ.சி.சி. கோப்பையை வென்று அசத்தியது.
எனினும், எம்.எஸ். தோனி ஓய்வு பெறும் வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் துவங்கப்படவில்லை. அந்த வகையில் இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். இதையடுத்து, எம்.எஸ். தோனி இதுவரை எட்டாத சாதனையை ரோகித் சர்மா தற்போது படைத்துள்ளார்.
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியதை அடுத்து, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்கு ஐந்து முறை முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதுவரை வேறு எந்த அணியும் மூன்று முறைகளுக்கு மேல் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இல்லை.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஐ.சி.சி. நடத்திய அனைத்து வித கிரிக்கெட் தொடர்களிலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இத்தகைய சாதனையை படைத்த முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றிருக்கிறார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை எந்த கேப்டனும் பெறாத பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
- 2025 வால்வோ XC90 அதன் தோற்றத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுள்ளது.
- புதிய ஏர் டேம் அமைப்புடன் வரும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் வழங்கப்பட்டுள்ளது.
சொகுசு கார்களுக்கு பிரபலமானது வோல்வோ நிறுவனம். இந்நிறுவனம் ஃபிளாக்ஷிப் XC90 SUVயின் தற்போதைய மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.1 கோடியே 20 லட்சம் என (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2025 வால்வோ XC90 அதன் தோற்றத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுள்ளது. இதன் முன்புற கிரில் மற்றும் இருபுறமும் மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்களுக்குள், ரீ-வொர்க் செய்யப்பட்ட T-வடிவ DRLகளுடன் முன்புக்கம் அதிகளவு புதுப்பிக்கப்பட்ட அம்சங்களை கொண்டுள்ளது. புதிய ஏர் டேம் அமைப்புடன் வரும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கார் தற்போது 20-இன்ச் அலாய் வீல்களுக்கான புதிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் உள்புறத்தில் 12.3-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 11.2-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், காற்றோட்டம் மற்றும் மசாஜ் வசதிகளுடன் கூடிய பவர்-அட்ஜஸ்டபிள் இருக்கைகள், வண்ண ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், நான்கு-மண்டல காலநிலை கட்டுப்பாடு, போவர்ஸ் & வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அம்சங்கள், 360-டிகிரி கேமரா, ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பார்க்கிங் அசிஸ்டண்ட் மற்றும் கூடுதலா பாதுகாப்பு வசதிகளை விரும்புவோர் தேர்வு செய்யும் வகையில் ஆப்ஷனாக வழங்குகிறது.
2025 வோல்வோ XC90 48V மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினைப் பெறுகிறது. மைல்ட்-ஹைப்ரிட் பவர்டிரெய்ன் 250 hp மற்றும் 360 Nm டார்க்கை உருவாக்குகிறது, மேலும் AWD அமைப்புடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.
- தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
- தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது என்றார்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
மக்கள் தொகை கட்டுப்பாட்டை விழிப்பாக செயல்படுத்தியதற்காக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதை ஏற்க முடியாது.
2026 மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ள உள்ள தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
1971 மக்கள் தொகை அடிப்படையில் வரையறுக்கப்பட்ட தொகுதிகள் மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும்.
தென்மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட கூட்டு நடவடிக்கை குழு அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்
- அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளனர்.
- தென்காசி சட்டமன்ற தொகுதி வேட்பாளரை அதிரடியாக அறிவித்துள்ளார்.
தென்காசி:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளனர்.
ஆளுங்கட்சியாக இருக்கும் தி.மு.க. தமிழகத்தில் 2-வது முறையாக ஆட்சியை பிடிக்க 200 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இதற்காக கட்சி நிர்வாகிகளுடன் பல்வேறு கட்ட கூட்டங்களை நடத்தி பல்வேறு ஆலோசனைகளை தலைமை கழகத்தினர் வழங்கி வருகின்றனர்.
அ.தி.மு.க.வும் மீண்டும் ஆட்சியை பிடித்து அரியணையில் அமர நிர்வாகிகளை கடுமையாக உழைக்க வேண்டும் என உற்சாகப்படுத்தி வருகின்றனர். மேலும் வலுவான கூட்டணியை அமைக்க வேண்டிய பணிகளையும் ஒருபுறம் செய்து வருகின்றனர்.
பா.ஜ.க, நாம் தமிழர், தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சியினரும் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் தென்காசி சட்டமன்ற தொகுதி வேட்பாளரை அதிரடியாக அறிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்படும் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் செங்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட சீமான், சுரண்டை அருகே உள்ள மேலக்கலங்கல் கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், வருகிற சட்டமன்ற தேர்தலில் தென்காசி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக டாக்டர் கவுசிக் பாண்டியன் என்பவர் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கவுசிக் பாண்டியன் கடந்த 2023-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். இவர் தற்போது அக்கட்சியின் மருத்துவர் பாசறை உறுப்பினராக உள்ளார்.
இவர் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார்.
பிரதான கட்சிகள் இன்னும் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்காத நிலையில் வழக்கம்போல் சீமான் தனது பாணியில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்காக தனது கட்சியின் முதல் வேட்பாளரை அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தேவிகா - சரத் சந்திராவிற்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கோவாவில் திருமணம் நடந்துள்ளது.
- இந்த சம்பவம் தொடர்பாக தேவிகாவின் கணவர் சரத் சந்திரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கானாவில் சாஃப்ட்வேர் துறையில் பணிபுரியும் இளம்பெண் (25) வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஐதரபாத்தில் நடந்தது.
தேவிகா - சரத் சந்திராவிற்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கோவாவில் திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, ராய்துர்கம் கிராமத்தில் உள்ள வீட்டில் தேவிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேவிகா தற்கொலை செய்துகொண்டதையடுத்து, சரத் சந்திரா போலீசாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தார்.
கூடுதல் வரதட்சணைக்காக தேவிகா பலமுறை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து தேவிகாவின் தாய் ராமலட்சுமி, அவரது மருமகன் மகளை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக குற்றம்சாட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின் அடிப்படையில், ராய்துர்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் சரத் சந்திரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேவிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- தொகுதி மறு வரையறை என்னும் கத்தி தென்னிந்தியாவின் மீது தொங்கிக் கொண்டுள்ளது.
- தொகுதி மறு சீரமைப்பை கடுமையாக எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்துக்கட்சி கூட்டம் தமிழர்களின் உரிமையை காக்க கூட்ட்பபட்டுள்ளது. தொகுதி மறு வரையறை என்னும் கத்தி தென்னிந்தியாவின் மீது தொங்கிக் கொண்டுள்ளது. அதனால், தொகுதி மறு சீரமைப்பை கடுமையாக எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
தொகுதி மறுவரையறையால் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகள் 31ஆக குறையும் ஆபத்து உள்ளது.
மக்கள் தொகையை கட்டப்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கில் தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது.
இது மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை பற்றிய கவலை இல்லை. தமிழகத்தின் உரிமை சார்ந்த கவலை.
தொகுதி மறுவரையறை செய்வதன் மூலம் 8 தொகுதிகளை இழந்து தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும். மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தால் தமிழகத்தின் குரல் நசுக்கப்படும்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
மத்திய அரசின் சதியை அனைத்து கட்சிகளும் ஒருசேர இணைந்து முறியடிக்க வேண்டும்.
நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியுள்ள தென்மாநிலங்களுக்கு தரக்கூடிய தண்டனையாகவே இதை பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஜனாதிபதியிடம் அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- அனைத்து கட்சி கூட்டத்தை பா.ஜ.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
சென்னை:
தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது.
இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சில கட்சிகள் மனு அளித்ததால் பரிசீலித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 56 கட்சிகள், இயக்கங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளன.
தொகுதி மறுவரையறைக்கு எதிரான அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஜனாதிபதியிடம் அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்து கட்சி கூட்டத்தை பா.ஜ.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
- 56 கட்சிகள், இயக்கங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கின்றன.
- தலைவர்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் வரவேற்றனர்.
சென்னை:
தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்குகிறது.
இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சில கட்சிகள் மனு அளித்ததால் பரிசீலித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 56 கட்சிகள், இயக்கங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கின்றன.
இன்று காலை 9.30 மணிஅளவில் இருந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அரசியல் தலைவர்கள் தலைமை செயலகத்திற்கு வருகை வந்தனர். அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த தலைவர்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் வரவேற்றனர்.


அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. சார்பில் ஜெயக்குமார், இன்பதுரை, காங்கிரஸ் கட்சி சார்பில் செல்வப்பெருந்தகை, பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. சார்பில் வைகோ, சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் பூங்குன்றன், த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், கொங்கு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், உலகத் தமிழ் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.






