என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • நிலைமை எப்படி இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்?
    • எங்கள் கோரிக்கையை ஏற்று அதற்கு அனுமதியளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

    பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடும் மனநிலையைக் களைய பெண்கள் ஒரேயொரு கொலை செய்தால் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற குடியரசுத் தலைவரிடம் பரப்பரப்பு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிராவின் சரத் பவார் அணி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த பெண் தலைவர் ரோஹிணி கட்ஸே, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    அவரது கடிதத்தில் கூறியதாவது, இந்த நாடு புத்தர் மற்றும் மகாத்மா காந்தியின் நாடாகக் கருதப்படுகிறது. அமைதி மற்றும் அகிம்சையின் சிறந்த சின்னமாக இருக்கும் பூமி, இப்போது மன்னிப்பை எதிர்பார்த்து கோரிக்கை வைக்கிறது.

    இன்று நாட்டில் பெண்கள் பெரும்பாலும் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர். இந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 2 நாட்களுக்கு முன்பு, மும்பையில் 12 வயது சிறுமி ஒருத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள். நிலைமை எப்படி இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்?

    உலக மக்கள்தொகை சீரமைப்பு கணக்கெடுப்பு முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை கொண்ட பல்வேறு நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    இந்த கணக்கெடுப்பின்படி, ஆசியாவிலேயே இந்தியா உலகின் மிகவும் பாதுகாப்பற்ற நாடாக மாறியுள்ளது. இதில் பெண்கள் கடத்தல், குடும்ப வன்முறை குற்றங்கள் மற்றும் பிற தீவிர குற்றச் செயல்கள் ஆகியவை அடங்கும். எனவே, அனைத்து பெண்கள் சார்பாக ஒரேயொரு குற்றத்துக்காக எங்களை மன்னிக்க கோருகிறோம்.

    பெண்களுக்கு எதிரான அடக்குமுறை மனநிலை, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டுமென்ற மனநிலையை, செயலற்று கிடக்கும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றைக் கொல்ல நாங்கள் விழைகிறோம்.

    இன்னலுற்ற நமது தேசத்தை காக்க மகாராணி, தாராராணி, புண்யஷ்லோக் அஹில்யாதேவி வாளை எடுத்துக்கொண்டு, நம் சமூகத்தை சீர்திருத்த நம்மிடம் கேட்கிறாள்.

    எங்கள் கோரிக்கையை ஏற்று அதற்கு அனுமதியளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். சர்வதேச மகளிர் நாளான இன்று , இதையே உங்களிடமிருந்து கிடைக்கும் பரிசாக நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். 

    • பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான உயர்மட்ட வழித்தடம் அமைக்கும் பணிகள் முடிவடைந்தன.
    • வழித்தடம் 4-ன் உயர்த்தப்பட்ட மேம்பால கட்டுமானத்தை வேகமாக நிறைவு செய்யும் நடவடிக்கையை ஊக்குவிக்கிறது.

    சென்னையில் 128 மெட்ரோ நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து சிஎம்ஆர்எல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடந்து, மெட்ரோ ரெயில் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இரண்டாம் கட்டத்தில் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் மூன்று வழித்தடங்களில் 128 மெட்ரோ நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, பூந்தமல்லி புறவழிச்சாலை மற்றும் போரூர் சந்திப்புக்கு இடையிலான 624-வது மற்றும் இறுதி யு-கர்டரின் கட்டுமானப் பணிகள் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தன, இதன் மூலம் வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான உயர்மட்ட வழித்தடம் அமைக்கும் பணிகள் முடிவடைந்தன.

    இந்த இறுதி யு-கர்டர் குமணஞ்சாவடி நிலையத்தில் உள்ள SP-04-05 தூண்களுக்கு இடையே இன்று அதிகாலை 3:30 மணி முதல் 5:30 மணி வரை போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வெற்றிகரமாக நிறுவப்பட்டது.

    இந்த முக்கியமான நிகழ்வு சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்திருந்ததால் மேலும் சிறப்பாக அமைந்தது. மேலும் இத்திட்டத்தின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றிய பல்வேறு பெண் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் கவுரவிக்கப்பட்டனர் மற்றும் அவர்களின் அர்ப்பணிப்புக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இந்த சாதனையின் மூலம், தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் இதுவரை மொத்தம் 3,202 முன்கூட்டிய தயாரிக்கப்பட்ட கான்கிரீட் உத்திரங்கள் (precast concrete elements) மற்றும் 2 திறந்த வலை உத்திரங்கள் (Open Web Girders), உட்பட 164 இரும்பு விட்டங்கள் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளன.

    இந்த மைல்கல், பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை தடையற்ற இணைப்பை மேம்படுத்தும் வகையில், வழித்தடம் 4-ன் உயர்த்தப்பட்ட மேம்பால கட்டுமானத்தை வேகமாக நிறைவு செய்யும் நடவடிக்கையை ஊக்குவிக்கிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நீங்கள் வரும்போது, அது உங்களுக்கு கல்வி நிறுவனம் போன்றது.
    • நீங்கள் வருவீர்கள். கற்றுக் கொள்வீர்கள். வளர்ச்சி அடைவீர்கள்.

    ஐபிஎல் 2025 சீசன் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. 10 அணிகளில் இதில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் மும்பை இந்தியன்ஸ் முன்னணி அணிகளில் ஒன்று. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அந்த அணியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.

    10 அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து சூர்யகுமார் யாதவ் கூறுகையில் "மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நீங்கள் வரும்போது, அது உங்களுக்கு கல்வி நிறுவனம் போன்றது. நீங்கள் வருவீர்கள். கற்றுக் கொள்வீர்கள். வளர்ச்சி அடைவீர்கள். இந்திய அணியில் விளையாடுவதற்காக செல்வீர்கள்" என்றார்.

    சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணி கேப்டனாக உள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி தனி தொடக்க போட்டியில் வருகிற 23-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    • தமிழகத்தில் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
    • பணி ஆணை வழங்கப்பட்ட மருத்துவர்களை எங்கு நியமனம் செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.

    உண்மையில் மருத்துவர்கள் பணி நியமனம் நடைபெற்றதா அல்லது வழக்கம்போல கண்துடைப்பு அறிவிப்புகள் வெளியிட்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறதா தி.மு.க. அரசு? என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட, சிறுபாடு கிராமத்தைச் சேர்ந்த ஷாகிரா என்ற பெண், மருத்துவர்கள் இல்லாத நிலையில், முறையான சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்திருக்கிறார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகத்தில் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. அரசு ஆரம்ப சுகாதார மையங்களில், 1,467 மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து, கடந்த 07.01.2025 அன்று கேள்வி எழுப்பியிருந்தோம்.

    இதனை அடுத்து, தமிழகத்தில் 2,642 மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கியதாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால், இன்னும் ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதால், பணி ஆணை வழங்கப்பட்ட மருத்துவர்களை எங்கு நியமனம் செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.

    பொதுமக்கள் உயிர் குறித்துச் சிறிதும் அக்கறையின்றி, தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பின்றிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். உண்மையில் மருத்துவர்கள் பணி நியமனம் நடைபெற்றதா அல்லது வழக்கம்போல கண்துடைப்பு அறிவிப்புகள் வெளியிட்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறதா தி.மு.க. அரசு?

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • இதற்காக எதிர்க்கட்சியினர் அப்போது அவரை விமர்சித்தனர்.
    • பெண்கள் மத்தியில் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது.

    இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி அரசியல் தலைவர்கள் தத்தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக கூட்டணியின் மகாராஷ்டிர அரசின் நீர் வழங்கல் துறை அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இவர் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற ஷிண்டே பிரிவு சிவசேனாவின் முக்கிய தலைவர் ஆவார்.

    ஜல்கான் நகராட்சியில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய குலாப்ராவ் பாட்டீல், மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே பெண்கள் பாதுகாப்பு குறித்து கூறிய வழிமுறைகளை எடுத்துரைத்தார்.

    குலாப்ராவ் பாட்டீல் கூறியதாவது, பெண்கள் தங்கள் பர்சில் மிளகாய்ப் பொடி மற்றும் கத்தியை வைத்திருக்க வேண்டும் என்று வணக்கத்திற்குரிய பாலாசாகேப் தாக்கரே அறிவுறுத்தினார். இதற்காக எதிர்க்கட்சியினர் அப்போது அவரை விமர்சித்தனர். ஆனால், தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பாலாசாகேப் கூறியதை பெண்கள் செய்ய வேண்டிய நேரம் இது.

    இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும்சூழலில், பெண்கள் புலிகளாக மாற வேண்டும். இன்றைய பெண்கள் பலவீனமாக இருக்கக்கூடாது. மாறாக வலிமையுடன் திகழ வேண்டும்.

    பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். அவ்வாறு செய்வோரை நிறுத்த வேண்டும். பெண்கள் மத்தியில் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது. பெண்கள் தற்கொலை செய்து கொள்ளாமல் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார்.

    கடந்த மாத இறுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த புனே பேருந்து நிலையத்தில் போலீஸ் சோதனைச் சாவடிக்கு வெறும் 100 மீட்டர் தொலைவில் நின்றுகொண்டுருந்த அரசு சொகுசு பஸ்ஸுக்குள் வைத்து 26 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • மாவட்ட வாரியாக புதிய மின் மாற்றிகளை கையிருப்பில் வைக்க மின்வாரிய தலைவர் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • பொது மக்களிடம் மின்தடை குறித்த புகார் வந்தால் உடனடியாக சீர் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில், அதீத வெப்பத்தால் மின்தடை ஏற்படுவதை தடுக்க மின்சார வாரியத்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, மின்மாற்றிகள் பழுது, மின்மாற்றிகளில் தீப்பிடிக்கும் போன்ற சூழலை தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மாவட்ட வாரியாக புதிய மின் மாற்றிகளை கையிருப்பில் வைக்க மின்வாரிய தலைவர் உத்தரவிடப்பட்டுள்ளது.

    பொது மக்களிடம் மின்தடை குறித்த புகார் வந்தால் உடனடியாக சீர் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தகுந்த பணியாளர்களை தற்காலிகமாக நியமித்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோடை காலத்தில் அதிகபட்ச மின் நுகர்வு நாள் ஒன்றுக்கு 22,000 மெகாவாட் வரை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

    • பெண்களை ஊக்குவிப்பதும், அதிகாரமளித்தலும் பாஜக-வின் கொள்கையாகும்.
    • பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி நடைபோட்டு கொண்டிருக்கிறோம்.

    பா.ஜ.க.வின் மகளிர் அணி சார்பில் உலக மகளிர் தின நிகழ்ச்சி டெல்லியில் உள்ள ஜே.எல்.என். மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது ஜே.பி. நட்டா கூறியதாவது:-

    டெல்லியில் பாஜக அரசு அமைவதில் மிகப்பெரிய பங்கு வகித்த பெண்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி அவர்களுடைய ஆதரவு மற்றும் ஆசி இல்லாமல் சாத்தியமல்ல.

    பெண்களை ஊக்குவிப்பதும், அதிகாரமளித்தலும் பாஜக-வின் கொள்கையாகும். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி நடைபோட்டு கொண்டிருக்கிறோம். நாட்டின் பெண்களிடையே சுய-நம்பிக்கையை நாம் உருவாக்கும் வரை, தன்னிறைவு பெற்ற இந்தியா (Atmanirbhar Bharat) மற்றும் வளர்ச்சி அடைந்த இந்தியா (Viksit Bharat) பார்வை சாத்தியமற்றது.

    நிர்மலா சீதாராமன் நாட்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தால், ரேகா குப்தா டெல்லிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். பாஜக பெண் தலைவர்களை உயர் முடிவு எடுக்கும் பதவிக்கு உயர்த்துவதை உறுதிப்படுத்தும் பணிகளை செய்துள்ளது.

    இந்த குறிப்பிடத்தக்க முடிவை எடுக்க இவ்வளவு தைரியத்தை பாஜகவால் மட்டுமே காட்ட முடியும். பெண்களுக்கு இதைவிட பெரிய மரியாதை எதுவும் இருக்க முடியாது.

    இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் டெல்லி பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்க 5100 கோடி ரூபாய் ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்ட செய்தியை ஜே.பி. நட்டா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • அவர்களில் பெரும்பாலோர் அந்நாட்டில் உள்ள அலவைட் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள்.
    • ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பின் தலைமையிலான கிளர்ச்சிக் குழுக்களால் அசாத்தின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.

    சிரியாவில் அரசுக்கு ஆதரவான படைகளுக்கும், முன்னாள் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் முதல் மோதல் நடந்து வலுத்துள்ளது.

    கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பின் தலைமையிலான கிளர்ச்சிக் குழுக்களால் அசாத்தின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

    இந்நிலையில் நேற்று முன் தினம் முதல் மோதல் தீவிரமடைந்துள்ளது. சிரியாவின் கடலோர மாகாணமான லடாகியாவில் உள்ள ஜப்லே நகரில் நேற்று வன்முறை வெடித்தது. அங்குள்ள மூன்று கிராமங்களில் ஆயுதமேந்திய ஆசாத் ஆதரவு குழுவினரை அரசு ஆதரவு படைகள் வெளியேற்ற முயன்றனர். அப்போது நடந்த மோதலில் 70 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

    இந்நிலையில் சிரிய அரசு ஆதரவு படையினரும் அதனுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களும் கடந்த இரண்டு நாட்களில் 340க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றனர் என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

    அவர்களில் பெரும்பாலோர் அந்நாட்டில் உள்ள அலவைட் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் என்று சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பக அதிகாரி ராமி அப்துல் ரஹ்மான் இன்று (சனிக்கிழமை) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.  

    • 2026-க்குப் பிறகு மக்களை தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், இது தொகுதி மறுசீரமைப்புக்கு வழிவகுக்கும்.
    • மக்கள் தொகை அடிப்படையில் மறுபகிர்வு செய்யப்பட்டால், நம்முடைய தென்மாநிலங்களின் தற்போதைய 129 இடங்கள் 103 ஆக குறையும்.

    தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் மக்களவை தொகுதி இடங்கள் குறையும் என அச்சம் நிலவுகிறது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினார். மறுசீரமைப்பு குறித்த குழப்பம் நீடித்து வருகிறது. மத்திய அரசு இது தொடர்பாக தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியதாவது:-

    2026-க்குப் பிறகு மக்களை தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், இது தொகுதி மறுசீரமைப்புக்கு வழிவகுக்கும். எங்களுடைய கணக்கிட்டின்படி, மாநிலங்களின் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் மறுபகிர்வு செய்யப்பட்டால், நம்முடைய தென்மாநிலங்களின் தற்போதைய 129 இடங்கள் 103 ஆக குறையும். தென்மாநிலங்கள் 26 இடங்களை இழக்கும். மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவை அதிக இடங்களை பெறும்.

    129 இடங்களுடன் நம்முடைய குரல்கள் பாராளுமன்றத்தில் கேட்கப்படவில்லை. 103 இடங்களுடன் நிலைமை மோசமாக இருக்கும்.

    தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பை நாங்கள் முன்மொழிகிறோம். அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் இடங்கள் மறுவரை செய்யப்படு வேண்டும்.

    இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்திருந்தார்.
    • 2022-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மாற்று வீரரான ஒப்பந்தம் செய்திருந்தது.

    ஐபிஎல் 2025-ஆம் ஆண்டு சீசன் வருகிற 22-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதில் விளையாடும் 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த லிசாட் வில்லியம்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மற்றொரு தென்ஆப்பிரிக்கா வீரரான கார்பின் போஸ்ச்-ஐ மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது.

    கார்பின் போஸ்ச் தென்ஆப்பிரிக்கா அணிக்காக ஒரேயொரு டெஸ்ட், இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், 86 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் அன்ரிச் நோர்ஜே இடம் பிடித்திருந்தார். இவர் காயம் காரணமாக விலகியதால் போஸ்ச் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

    ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான ராயல்ஸ் அணிக்கு நெட் பவுலராக செயல்பட்டிருந்தார். பின்னர் 2022-ஆம் சீசனில் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர்-நைல் காயத்தால் விலகியபோது அந்த அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் ஆடும் லெவன் அணியில் விளையாடவில்லை.

    • மத்தியப் பிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிக அபராதம் உள்ளது.
    • பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திலும் கட்டாய மதமாற்றங்களைத் தடுக்க இதே போன்ற சட்டங்கள் உள்ளன.

    கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை தனது அரசு கொண்டுவரும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், எங்கள் அப்பாவி மகள்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்பவர்களுக்கு எதிராக எங்கள் அரசாங்கம் மிகவும் கண்டிப்புடன் இருக்கும்.

    அவர்களை கட்டாயப்படுத்துபவர்களை நாங்கள் விடமாட்டோம். அத்தகையவர்களை வாழ அனுமதிக்கக்கூடாது. மத சுதந்திரச் சட்டத்தின் மூலம், கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும்  விதியை விரிவுபடுத்த நாங்கள் பாடுபடுகிறோம் என்று தெரிவித்தார்.

    இந்துப் பெண்களை திருமணம் செய்து கொண்டு , இஸ்லாத்திற்கு அவர்களை மாற்றி முஸ்லிம் ஆண்கள் "லவ் ஜிஹாத்" செய்கின்றனர் என பாஜக கூறி வருகிறது. எனவே இதுபோன்ற கட்டாய மதமாற்றங்களுக்கு எதிரான கடந்த 2021 மார்ச்சில் அன்று மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் மத சுதந்திரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    அதன்படி மத்தியப் பிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிக அபராதம் விதிக்கப்படும்.

    திருமண மூலம் மதமாற்றம் செய்தல், அச்சுறுத்தல், செல்வாக்கு மற்றும் வற்புறுத்தல் ஆகியவை மூலம் மதமாற்றம் செய்தல் ஆகியவை இந்த சட்டத்தின்கீழ் அடங்கும்.

    மதத்தை மறைத்து திருமணம் செய்தால், மீறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படலாம். இந்நிலையில் இந்த சட்டத்தின்கீழ் கட்டாய மதமாற்றம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்படும் என மோகன் யாதவ் தற்போது கூறியுள்ளார்.

    பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திலும் கட்டாய மதமாற்றங்களைத் தடுக்க இதே போன்ற சட்டங்கள் உள்ளன. ஆனால் இந்த சட்டங்கள் மூலம் விரும்பி வேற்று மதத்தினரை திருமணம் செய்துகொள்பவர்கள், மதம் மாறுபவர்கள் குறிவைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். 

    • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'.
    • 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் நேற்று வெளியானது.

    டீசர் காட்சிகள் அட்டகாசமாக அமைந்துள்ளது. அஜித்தை இதுவரை நாம் பார்த்திராத லுக்கில் நடித்துள்ளார். படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

    குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளை பெற்றது. இந்நிலையில் திரைப்படம் வெளியாக இன்னும் 1 மாத காலம் மட்டுமே இருப்பதால் இந்த மாத இறுதியில் படத்தின் முன்பதிவு ஆரம்பிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என ஜி.வி பிரகாஷ் குமார் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் " ஃபர்ஸ்ட் சிங்கிள் சூன் மாமே, சுட சுட ரெடி பண்ணிட்டு இருக்கோம்" என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×