என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடுமையாக கண்டித்துள்ளார்.
- போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.
தி.மு.க. அரசின் டாஸ்மாக் ஊழலை கண்டித்து பா.ஜ.க. சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்றைய போராட்டம் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாடு பா.ஜ.க.-வை சேர்ந்த மூத்த தலைவர்களின் இல்லங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும், பா.ஜ.க. தலைவர்களை போராட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க மறுத்து போலீசார் அவர்களை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். சென்னையில், பா.ஜ.க. தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்ட சம்பவத்தை தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடுமையாக கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில், இன்று (மார்ச் 17) சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி திமுக அரசு, பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, அக்கா திருமதி தமிழிசை சவுந்தரராஜன், மாநிலச் செயலாளர் சகோதரர் திரு வினோஜ் பி செல்வம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.
பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.
ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?
தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?," என்று குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெறுகிறது.
- சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்து ஒவ்வொரு துறையிலும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வாசித்தார்.
இதைத் தொடர்ந்து 2025-26 வேளாண் பட்ஜெட் கடந்த மார்ச் 15-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை வாசித்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெறுகிறது. மேலும், சபாநாயகர் மீது அ.தி.மு.க. சார்பில் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதும் விவாதம் நடைபெறுகிறது.
இந்தநிலையில் சட்டசபை கூடியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.சுந்தரம், மா.கோவிந்தராஜலு, குணசீலன் மற்றும் மருத்துவர் செரியன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதையடுத்து கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.
- இந்தியா 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.
மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில், ராய்ப்பூரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தனர்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர் டுவைன் சுமித் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். ஓரளவு நிலைத்து விளையாடி அரை சதம் கடந்த சிம்மன்ஸ் 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தியா சார்பில் வினய் குமார் 3 விக்கெட்டும், ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 50 பந்தில் 74 ரன்கள் எடுத்து அவுட்டானார். சச்சின் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்தியா 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆட்ட நாயகன் விருது அம்பதி ராயுடுவுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் வென்ற அணிக்கும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும் பரிசு தொகையை வழங்கினர்.
9 ஃபோர்கள் அடித்த விருது- அம்பதி ராயுடு - 50 ஆயிரம் ரூபாய்
அதிக சிக்ஸ் அடித்த விருது- அம்பதி ராயுடு - 50 ஆயிரம் ரூபாய்
கேம்சேஞ்சர் ஆஃப் தி மேட்ச் விருதை ஷபாஸ் நதீம் வென்றார்
சிறந்த பவுலருக்கான விருதை ஷபாஸ் நதீம் வென்றார்
ஆட்ட நாயகன் விருதை 50 பந்துகளில் 74 ரன்கள் அடித்த அம்படி ராயுடு வென்றார்.
இந்த சீசனில் அதிக ஃபோர் எடுத்த குமார் சங்கக்காரா (38 ஃபோர்ஸ்) 5 லட்சம் ரூபாய் பரிசு வென்றார்.
இந்த சீசனில் அதிக சிக்ஸ் எடுத்த ஷேன் வாட்சன் (25 சிக்ஸ்) 5 லட்சம் ரூபாய் பரிசு வென்றார்.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் வெற்றி பெற்ற இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு 1 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.
இரண்டாவது இடம் பிடித்த ரன்னர் அப் அணியான வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.
- நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8220-க்கும், சவரன் ரூ.65,760-க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சத்தை பதிவு செய்த நிலையில், அதன் பின்னர் விலை மளமளவென சரிந்து, மீண்டும் அதே மாதம் 19-ந்தேதி ரூ.64 ஆயிரத்தை தாண்டியது.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் மீண்டும் விலை குறைந்து காணப்பட்டு, கடந்த 4-ந் தேதியில் இருந்து பெருமளவில் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை பயணித்து வருகிறது.
கடந்த வாரம் 13-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,960-க்கு விற்பனையானது. அடுத்த நாளில் தங்கம் விலை குறைந்தாலும், மறுநாளே 65 ஆயிரத்தை கடந்து ஒரு சவரன் ரூ.65,760-க்கு விற்பனையானது.
நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8220-க்கும், சவரன் ரூ.65,760-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8210-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.65,680-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து வெள்ளி 113 ரூபாய்க்கும் கிலோ பார் வெள்ளி ரூ.1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
16-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760
15-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760
14-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,400
13-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,960
12-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
16-03-2025- ஒரு கிராம் ரூ.112
15-03-2025- ஒரு கிராம் ரூ.112
14-03-2025- ஒரு கிராம் ரூ.112
13-03-2025- ஒரு கிராம் ரூ.110
12-03-2025- ஒரு கிராம் ரூ.109
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- அ.தி.மு.க. ஆட்சியில் திருச்செந்தூர் கோவிலுக்கு செய்தது என்ன?
- கணவருக்கு சுவாசப் பிரச்சனை இருக்கிறது என்று அவரது மனைவி கைப்பட எழுதி கொடுத்துள்ளார்.
திருச்செந்தூர் கோவிலில் ஓம்குமார் என்பவர் கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசும், அறநிலையத்துறை அமைச்சருமே முழு பொறுப்பு என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் திருச்செந்தூர் கோவிலில் சாமி கும்பிட சென்றவர் உயிரிழந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. ஆட்சியில் திருச்செந்தூர் கோவிலுக்கு செய்தது என்ன?
* கணவருக்கு சுவாசப் பிரச்சனை இருக்கிறது என்று அவரது மனைவி கைப்பட எழுதி கொடுத்துள்ளார்.
* இறந்தவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இப்படத்தின் இசையை எம்.எம் கீரவானி மேற்கொண்டார்.
- இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா, நாசர், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பாகுபலி திரைப்படம். இப்படத்தின் இசையை எம்.எம் கீரவானி மேற்கொண்டார். திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படம் இரு பாகங்களாக வெளியிடப்பட்டது. இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
பாகுபலி திரைப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது.
இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் முடிவடைந்துள்ளது. இதனால் படத்தை ரீரிலீஸ் செய்யுமாறு நெட்டிசன்கள் படக்குழுவிடம் இணையத்தில் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். நெட்டிசனின் கோரிக்கை ஒன்றுக்கு படக்குழு பதிலளித்துள்ளது. அதில் இந்த வருடம் பாகுபலி திரைப்படத்தை இந்தாண்டு ரீரிலீஸ் செய்யனுமா? என கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் இந்தாண்டு ஜூன் மாதம் திரைப்படம் மீண்டும் ரிலீசாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அரசியல் களத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.
- பாட்காஸ்டருடன் உரையாடுவதில் விருப்பம் கொண்டுள்ளார்.
அமெரிக்க பாட்காஸ்டருன் பிரதமர் மோடியின் உரையாடல் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஓடும் வீடியோவில் பிரதமர் மோடி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்கள் மட்டுமின்றி அரசியல் களத்திலும் பேசு பொருளாகி இருக்கிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி இதுவரை செய்தியாளர்களை சந்திக்கவே இல்லை, ஆனால் அவருக்கு அமெரிக்க பாட்காஸ்டருடன் உரையாடுவது பிடித்திருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
பிரதமர் மோடியின் பாட்காஸ்ட் வீடியோ குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறும் போது, "ஊடகத்துறையை சேர்ந்தவர்களை செய்தியாளர் சந்திப்பில் சந்திக்க பயப்படும் நபர், வெளிநாட்டு பாட்காஸ்டருடன் உரையாடுவதில் விருப்பம் கொண்டுள்ளார்.
"பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகங்களை எதிர்கொள்ள பயம் கொண்டுள்ளவர், வலதுசாரி அமைப்பில் நங்கூரமிட்டுள்ள ஒரு வெளிநாட்டு பாட்காஸ்டரிடம் ஆறுதல் கண்டுள்ளார். மேலும், தனது அரசாங்கத்தை பொறுப்பேற்க வைக்கும் ஒவ்வொரு நிறுவனத்தையும் திட்டமிட்டு அழித்து, சமீபத்திய வரலாற்றில் வேறு யாரும் எதிர்க்காத அளவுக்கு பழிவாங்கும் எண்ணத்துடன் விமர்சகர்களைத் துரத்தி செல்லும் அவர், விமர்சனம் தான் ஜனநாயகத்தின் ஆன்மா என்று சொல்லத் துணிந்துள்ளார்!," என்று குறிப்பிட்டுள்ளார்.
- தற்போது நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அந்த தீர்மானத்தின் மீது விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- சபாநாயகர் மீது கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக எம்.எல்.ஏ.க்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு, கடந்த 4 ஆண்டுகளாக சபாநாயகராக பதவி வகித்து வருகிறார்.
சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார்.
தற்போது நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, அதாவது இன்று அந்த தீர்மானத்தின் மீது விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சபாநாயகர் மீது கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக எம்.எல்.ஏ.க்களுடன் அவர் ஆலோசனை செய்து வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இன்றைய ஆலோசனையிலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இப்படத்தின் மூலமே விஜய் தேவரகொண்டா நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
- திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.
2015 ஆம் ஆண்டு நாக் அஷ்வின் இயக்கத்தில் நானி, மாளவிகா நாயர், விஜய் தேவரகொண்டா மற்றும் ரித்து வர்மா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது எவடே சுப்ரமண்யம்? திரைப்படம். இப்படத்தின் மூலமே விஜய் தேவரகொண்டா நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் 18 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படத்தை வரும் மார்ச் - 21 ஆம் தேதி படக்குழு ரீரிலீஸ் செய்கிறது. இதனை கொண்டாடும் விதமாக படக்குழு சமீபத்தில் எவடே சுப்ரமண்யம் படத்தில் நடித்த அனைவரும் ஒன்றுக்கூடி 10 வருட நிறைவை கொண்டாடினர். அதில் விஜய் தேவரகொண்டா மற்றும் நானி இருவருக்கும் இடையே உள்ள அந்த நட்பை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. விஜய் இப்படத்தில் நடித்ததற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

10 வருடங்களுக்கு பிறகு திரைப்படம் மீண்டும் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.
இப்படம் தமிழில் டப் செய்ப்பட்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் யார் இந்த மணி? என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. தெலுங்கு மொழியில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்டிரீமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.
- தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர்.
சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பும் புதிய தேதியை அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. கடந்த ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நாளை (மார்ச் 18) பூமிக்கு திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது.
நேற்று அதிகாலை சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக இணைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர், ரஷிய விண்வெளி வீரர் ஆகியோரும் பூமிக்கு திரும்பவுள்ளனர்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவது தொடர்ந்து தாமதமாகி வந்தது.
இந்த நிலையில், நாசா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி விண்வெளி வீரர்கள் நாளை உள்ளூர் நேரப்படி மாலை 5.57 மணிக்கு (இந்திய நேரப்படி மார்ச் 19-ம் தேதி அதிகாலை 3.27 மணி) ஃபுளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- மொத்தம் 35 ஹைட்ரஜன் ரெயில்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ.2 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்பட்டது.
- கார்பன் உமிழ்வால் இயற்கை மாசடைவதை தடுக்கும் வகையில் மலைப் பகுதிகளில் ஹைட்ரஜன் ரெயில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
இந்தியாவில் மொத்தம் 19 ரெயில்வே மண்டலங்கள் உள்ளது. இங்கிருந்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. நாள்தோறும் 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகளின் எதிர்பார்ப்பு மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு கூடுதல் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் அம்ரித் பாரத், வந்தே பாரத் ஆகிய ரெயில்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உலக நாடுகளுக்கு இணையாக ரெயில்வே துறையை மேம்படுத்தும் வகையில் ஹைட்ரஜன் ரெயிலை உற்பத்தி செய்ய மத்திய ரெயில்வே வாரியம் திட்டமிட்டது. அதன்படி, கடந்த ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் ஹைட்ரஜன் ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மொத்தம் 35 ஹைட்ரஜன் ரெயில்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ.2 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்பட்டது.
சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) ஹைட்ரஜன் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. தற்போது ஹைட்ரஜன் ரெயில் தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பெயிண்ட் அடிப்பது, ஹைட்ரஜன் சிலிண்டர்கள் இணைப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. விரைவில் இப்பணிகள் முடிவடைய உள்ளது. இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிவடைந்து அடுத்த மாதம் சோதனை ஓட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலானது அரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த்-சோனிபட் இடையே 89 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில்தான் அடுத்த மாதம் சோதனை ஓட்டமும் நடைபெறுகிறது. ரெயிலில் 1,200 எச்.பி. திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் ரெயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்த ரெயில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹைட்ரஜன் ரெயில் என்ஜினின் முழுத் தோற்றத்தை படத்தில் காணலாம்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் ரெயில் உலகில் அதிக திறன் கொண்ட ரெயிலாகும். மற்ற நாடுகளில் அதிகபட்சம் 5 பெட்டிகள் வரை இருக்கும். ஆனால், முதன்முறையாக இந்தியாவில் 10 பெட்டிகள் கொண்ட ஹைட்ரஜன் ரெயில் சேவை இயக்கப்பட இருக்கிறது. இது உலக நாடுகளுக்கே ஒரு முன்னுதாரணம். ஒவ்வொரு ரெயிலும் ரூ.80 கோடி செலவில் தயாரிக்கப்படும். கார்பன் உமிழ்வால் இயற்கை மாசடைவதை தடுக்கும் வகையில் மலைப் பகுதிகளில் ஹைட்ரஜன் ரெயில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில்தான் முதல் ரெயில் வடக்கு ரெயில்வேயில் இயக்கப்பட உள்ளது. ஐ.சி.எப். தொழிற்சாலையில் ஹைட்ரஜன் ரெயில் தயாரிப்பு பணி 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. விரைவில் சோதனை ஓட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும். 2030-ம் ஆண்டுக்குள் இந்திய ரெயில்வேயில் கார்பன் உமிழ்வுவை பூஜ்ஜியமாக மாற்றும் முயற்சியில் இந்த ஹைட்ரஜன் ரெயில் முன்னோடியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






