என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • நெல்லையில் இருந்து டிசம்பர் 3ம் தேதி இரவு 9.30 மணிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்.
    • விழுப்புரத்தில் இருந்து வரும் 30, டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில்.

    கார்த்திகை தீபத்தை ஒட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    நெல்லையில் இருந்து டிசம்பர் 3ம் தேதி இரவு 9.30 மணிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில். மறுமார்க்கமாக இது டிசம்பர் 4ம் தேதி இரவு 7.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் காலை நெல்லை சென்றடையும்

    சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் டிசம்பர் 3, 4 தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்படும் ரெயில் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி வழியே திருவண்ணாமலை சென்று, பின்னர் விழுப்புரம், செங்கல்பட்டு வழியே இரவு 7 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும்

    விழுப்புரத்தில் இருந்து வரும் 30, டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் திருவண்ணாமலை செல்லும். மறுமார்க்கமாக இதே தேதிகளில் மதியம் 12.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்

    விழுப்புரத்தில் இருந்து டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் 10.40 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் வேலூர் கண்டோன்மெண்ட் செல்லும். மறுமார்க்கமாக அங்கிருந்து டிசம்பர் 4, 5, 6 தேதிகளில் அதிகாலை 2.05 மணிக்கு புறப்பட்டு, காலை 5 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்

    தாம்பரத்தில் இருந்து வரும் டிசம்பர் 3, 4 தேதிகளில் காலை 9.15 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் திருவண்ணாமலை செல்லும். மறுமார்க்கமாக அதே நாளில் மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் முன்பதிவு வசதி கொண்ட ரெயில்களுக்கு நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது. 

    • இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
    • தேசிய ஆசிரியர் கல்விக் குழுமச் சட்டத்திலும் உரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்

    இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தியில், "நாடு முழுவதும் இலட்சக்கணக்கான ஆசிரியர்களை குறிப்பாக தமிழ்நாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான ஆசிரியர்களை பாதிக்கும் அவசரமான மற்றும் முக்கியமான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் ஆதரவைக் கோரி இன்று (25-11-2025) கடிதம் எழுதியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009, பிரிவு 23 மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழும சட்டம் 1993 பிரிவு 12A-ல் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு, ஆசிரியர்களைப் பாதுகாப்பதுடன் பதவி உயர்வுகளுக்கு தகுதி உடையவர்களாக இருப்பதையும் குழந்தைகளின் கல்பியும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்திட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் சிவில் மேல்முறையீடு எண் 1405/2025, 1385/2025 மற்றும் 1396/2025 மற்றும் பிற வழக்குகளில் 01.09.2025 அன்று உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட சமீபத்திய தீர்ப்பில், ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாத பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் அப்பணியில் தொடர இரண்டு ஆண்டுகளுக்குள் TET தகுதியைப் பெற வேண்டும் என்றும் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான பணிக்காலம் உள்ள ஆசிரியர்கள் பணியைத் தொடர அனுமதிக்கப்பட்டாலும், TET தகுதி பெறாவிட்டால் பதவி உயர்வுக்குத் தகுதியற்றவர்களாக இருப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தனது கடிதத்தில் கட்டிக்காட்டியுள்ளார்.

    தேசிய ஆசிரியர் கல்வி குழுமமானது (National Council for Teacher Education-NCTE) 23-8-2010-க்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) போன்ற புதிய தகுதித் தேவைகளிலிருந்து ஆரம்பத்தில் விலக்கு அளித்திருந்தது. என்றும். இருப்பினும் கல்வி உரிமைச் சட்டத்தில் (RTE) உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தற்போதைய இந்தத் தீர்ப்புரை ஆசிரியர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட விலக்கினை மீறி TET கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள அவர், இதன் விளைவாக இந்த ஆசிரியர்கள் இப்போது இரண்டு ஆண்டுகளுக்குள் TET தேர்ச்சி பெற வேண்டும்: இல்லாவிடில், அவர்களின் வேலை பறிக்கப்படும் என்ற நிலை பெருத்த திருவாக சிரமத்தையும், ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட சிரமத்தையும் ஏற்படுத்தும் என்று வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்

    பணி நிபந்தனைகளில் இத்தகைய மாற்றம் மற்றும் நியமனத்திற்குப் பின் பதவி உயர்வுக்கான அவர்களின் நியாமன எதிர்பார்ப்பில் இடையூறு என்பது ஆசிரியர்களின் உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளது என்றும், இது ஆசிரியர்களின் நியமனத்தின்போது. நடைமுறையில் இருந்த சட்டப்பூர்வ விதிகளின் கீழ் முழுமையாக தகுதி பெற்று முறையாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் பெரும்பான்மையோரை நேரடியாக மதிப்பதாக முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

    அந்த வகையில், தமிழ்நாட்டில் மட்டும் ஏறத்தாழ நான்கு இலட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள். நியமனம் செய்யப்பட்ட நேரத்தில், அவர்கள் அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகளையும் பூர்த்தி செய்தவர்கள் என்றும் ஈட்டப்படியான மற்றும் முறையான செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்றும் அதோடு 2011-TET அறிமுகப்படுத்தப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பணியில் சேர்ந்தவர்கள் அவர்கள் என்றும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

    இந்த ஆசிரியர்களுக்கு TET-ஐ முந்தைய தேதியிட்டு அமல்படுத்துவது என்பது அவர்கள் பணியில் தொடர்வதற்கும் மற்றும் பதவி உயர்வுகளுக்கான தகுதிக்கும் நீண்ட காலமாக நிலைநிறுத்தப்பட்ட பணி உரிமைகளில் குறிப்பிடத்தக்க இடையூறை உருவாக்குகிறது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள் இது மாநிலத்தில் நிர்வாகரீதியாக சாத்தியற்ற ஒரு நிலையை உருவாக்குகிறது என்றும், பள்ளிக் கல்வி அமைப்பின் செயல்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் கடுமையான அபாயத்தை ஏற்படுத்துகிறது என்றும் கவலைபடத் தெரிவித்துள்ளார்.

    முந்தைய தேதியிட்டு இதனை அமல்படுத்துவது என்பது பெரிய அளவிலான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நாடு முழுவதும் கண்கூடாகத் தெரியும் என்றும் ஆட்சேர்ப்பு சுழற்சிகள், தகுதியான ஆசிரியர்கள் கிடைக்கும் தன்மை மற்றும் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் பணிநிலைமை ஆகியவற்றின் அடிப்படையில் எந்த மாநிலத்திலும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ஆசிரியர்களை மாற்றுவது சாத்தியமற்றது என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் அவர்கள் கட்டிக்காட்டியுள்ளார்.

    மேலும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட தகுதியைக் காரணமாகக் கொண்டு மட்டும் நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் அனுபவம் பெற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகளை மறுப்பது என்பது பெருத்த அளவிலான சிரமத்தையும் தேக்க நிலைமையும் ஏற்படுத்துவதாக கவலையோடு குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், RTE சட்டத்தின் பிரிவு 23-ல் தெரிவிக்கப்பட்டுள்ள குறிப்புரைகள் காரணமாக நாடு முழுவதும் இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் இவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்றும், இந்தக் குறிப்புரையினால் ஏற்படும் பாதிப்பு என்பது. பிரிவுக் கூறு 21-A-ன்கீழ் அரசியலமைப்பு ரீதியான கல்வி உரிமைக்கும் பேரடி தாக்கங்களை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

    மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 (The RTE Act. 2009) பிரிவு 20 மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழும சட்டம் 1993 ஆகியவற்றில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒன்றிய கல்வி அமைச்சகத்திற்கு அறிவுறுத்திடுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். அப்போதுதான் 23.08.2010 அன்று பணியில் இருந்த ஆசிரியர்கள் பாதுகாக்கப்படுவதுடன், பதவி உயர்வுகளுக்கு தகுதி உடையவர்களாக இருப்பதையும். குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்திட இயலும் என்று தெரிவித்துள்ளார்.

    • அதிமுகவிலிருந்து நீக்கபட்டது மனவேதனையை தருகிறது.
    • அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பாக வழக்கு தொடருவதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைவது சம்பந்தமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 2 பேரும் அவ்வப்போது அதுசம்பந்தமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. ஒன்றிணைய எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதிப்பதாக கூறி செங்கோட்டையன் தெரிவித்தார். இதனால் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    இதனிடையே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடி.வி. தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இது குறித்து செங்கோட்டையன் தெரிவிக்கையில், கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியதாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுதொடர்பாக செங்கோட்டையன் கோர்ட்டில் வழக்கு தொடருவதாக தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் கட்சியில் இணைய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் நேற்று தகவல் பரவியது. அதாவது வருகிற 27-ந்தேதி நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், "50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து, இயக்கத்திற்காக உழைத்த எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பரிசு அதிமுகவிலிருந்து நீக்கம்; இந்த மனவேதனை உங்களை போன்றோருக்கு நன்றாகத் தெரியும்" என்று தெரிவித்தார்.

    அப்போது தவெகவில் இணைகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் அங்கிருந்து கிளம்பினார்.  

    • கோவையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
    • இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

    கோவை:

    கோவையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த 4 ஆண்டுகளில் கடுமையான உழைப்பை செலுத்தி ஏராளமான தொழில் நிறுவனங்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம்.

    புதிதாக முதலீடு செய்பவர்களை வரவேற்கிறேன். மீண்டும் முதலீடு செய்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

    தமிழ்நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இங்கு வந்துள்ள தொழிலதிபர்கள் துணை நிற்க வேண்டும்.

    தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவு எப்போதும் இருக்கும்.

    தொழில் வளர்ச்சியில் உலக நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பது திமுக அரசின் லட்சியம்.

    மற்ற மாநிலங்களை விட 25 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து திட்டமிட்டு தொழில்துறை வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறோம் என

    தெரிவித்தார்.

    • 24 வயதான சுஜிதா என்பவருக்கும் இம்மாத தொடக்கத்தில் முன் திருமணம் நடைபெற்றது.
    • சுஜிதாவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்விளை பகுதியை சேர்ந்த விஜய் (31) என்பவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்த 24 வயதான சுஜிதா என்பவருக்கும் இம்மாத தொடக்கத்தில் முன் திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் திருமணம் ஆன 18-வது நாளில் (நவம்பர் 21) மாலையில் புதுப்பெண் திடீரென மாயமாகியுள்ளார். மேலும் புதுப்பெண்ணின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    பின்னர் தனது கணவருக்கு, வாட்ஸ் ஆப்பில் அப்பெண் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், பெற்றோரின் வற்புறுத்தலால் தான் நான் உங்களை திருமணம் செய்துகொண்டேன்... 7 சவரன் தாலியை வீட்டில் கழற்றி வைத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கோவையில் இன்று 3வது முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
    • இதில் 158 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    கோவை:

    தமிழக பொருளாதாரத்தில் கோவை மாவட்டம் முக்கிய பங்களிப்பு செய்து வருகிறது.

    தொழில் நகரான கோவை தற்போது கல்வி, மருத்துவம், சுற்றுலா, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் புகழ்பெற்று விளங்குகிறது.

    கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

    இதுதவிர தொழில்துறையில் சிறந்து விளங்கும் கோவை மாவட்டத்திற்கு மேலும் பல்வேறு நிறுவனங்கள் தொழில் தொடங்கும் வகையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 2021 நவம்பர் 23-ம் தேதி கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற மாநாட்டில் ரூ.34,723 கோடி முதலீட்டில் 74 ஆயிரத்து 835 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

    இந்நிலையில், இன்று கோவை-அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழ்நாடு தொழில்துறை சார்பில் மாலை 5 மணிக்கு தமிழ்நாடு வளர்கிறது (டி.என்.ரைசிங்) எனும் 3-வது முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.43 ஆயிரத்து 844 கோடி முதலீட்டில் புதிய தொழில்களுக்கான 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    இதன்மூலம் 1 லட்சத்து 709 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் கோவை மண்டலம் தொழில்துறையில் சிறந்து விளங்கும் என்றும், தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் எனவும் தொழில்துறையினர் தெரிவித்தனர்.

    • பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி.
    • ரயில்வே துறையில் தமிழ்நாடும், கேரளாவும் தொடர்ந்து புறக்கணிப்படுகிறது.

    மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில், நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில், இன்று (நவ.25) ரயில்வேதுறை ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எம்பி சு. வெங்கடேசன் கலந்துகொண்டநிலையில், தமிழ்நாடு ரயில்வே வளர்ச்சி, பொதுமக்கள் வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் ரயில்வே துறையில் தமிழ்நாடும், கேரளாவும் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

    பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகம் என தலைப்பிட்டு, "2024-25 ஆம் ஆண்டில் புதிய வழித்தடத்திற்கு ரூ. 31,458 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் தெற்கு இரயில்வேக்கு ஒதுக்கப்பட்டதோ வெறும் ரூ. 301 கோடி. அதவாது ஒரு சதவிகிதம் மட்டுமே. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி. தமிழ்நாடு, கேரளாவுக்கு பட்டை நாமம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் தான் முன்வைத்த கோரிக்கைகளையும் அறிக்கை வடிவில் பதிவிட்டுள்ளார். 

    • தமிழ்நாட்டில் எந்த மொழிக்கும் அச்சுறுத்தல் கிடையாது.
    • பா.ஜ.க.வின் ஊதுகுழலாகவே ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்றார்.

    சென்னை:

    கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திராவிடம் என்பது கற்பனை எனக்கூறிய ஆளுநருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாஜகவின் ஊதுகுழலாகவே ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.

    திராவிடம் என்ற வார்த்தை தேசிய கீதத்தில் இடம்பெற்றுள்ளது என்பது ஆளுநருக்கு தெரியாதா?

    எங்கே சென்றாலும் தமிழர்களை இழிவுபடுத்துவதை கொள்கையாக வைத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் எந்த மொழிக்கும் அச்சுறுத்தல் கிடையாது.

    தமிழ்நாட்டில் இருக்கும் பீகாரிகள் அச்சுறுத்தப்படுவதாக கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டார்கள்.

    தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருக்கிறது என்ற கருத்து ஏற்கக் கூடியதல்ல என தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காணொளி வாயிலாக 82 மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர்.
    • தங்களது பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் பற்றி மாவட்ட செயலாளர்கள் விளக்கி கூறினார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தயாராகி வருகிறார்.

    தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளில் அ.தி.மு.க.வினர் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளார்.

    இந்த நிலையில் அந்த பணிகளில் எப்படி கவனமாக செயல்பட வேண்டும் என்பது பற்றிய அறிவுரைகளை வழங்குவதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட செயலாளர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காணொளி வாயிலாக 82 மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர்.

    இந்தக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வினர் அனைவரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் முறைகேடாக பதிவாகி உள்ள ஓட்டுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளில் மாவட்டச் செயலாளர்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்தக் கூட்டத்தில் தங்களது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இருந்த படியே மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தங்களது பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் பற்றியும் அவர்கள் விளக்கி கூறினார்கள்.

    • வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள், பூர்த்தி செய்யப்பட்டு வாங்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
    • வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பது குறித்து பார்வையிட்டதுடன் ஆலோசனைகள் வழங்கினார்.

    அவினாசி:

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்து தமிழகத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதன்படி தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி அவினாசியில் இன்று ஆய்வு பணியில் ஈடுபட்டார். அவினாசி வாணியர் வீதி, வடக்கு ரத வீதி பகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள், பூர்த்தி செய்யப்பட்டு வாங்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பது குறித்து பார்வையிட்டதுடன் ஆலோசனைகள் வழங்கினார்.

    இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தின் பிற தாலுகாக்களில் ஆய்வு செய்ய புறப்பட்டு சென்றார். அவருடன் கலெக்டர் மணிஷ் நாரணவரே , அவினாசி தாசில்தார் சந்திரசேகரன் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள், அவிநாசி போலீஸ் இன்ஸ்பெ க்டர் ராஜபிரபு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் சென்றனர்.

    • கரையோர கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
    • பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் இன்று காலை 7 மணி நிலவரப்படி 51.16 அடியாக உள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் எந்த நேரத்திலும் திருமூர்த்தி அணை நிரம்பி பாலாற்றில் தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது.

    எனவே பாலாற்றின் கரையோரத்தில் உள்ள தேவனூர் புதூர், பொன்னாலம்மன் சோலை, தீபாலப்பட்டி, அர்த்தநாரி பாளையம், ஆண்டியூர் உள்ளிட்ட கரையோர கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என திருமூர்த்தி அணை நீர்வளத்துறை உதவி பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படாமல் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதற்காக மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் முறைகேடுகள் நடைபெறுவதை கண்டித்தும் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம். எஸ்.எம். ஆனந்தன், கே.என்.விஜயகுமார் , முன்னாள் எம்.பி., சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் பொதுமக்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்படுவதை சுட்டிக்காட்டும் வகையில் கவுன்சிலர் தங்கராஜ் மருத்துவமனையில் சுவாச பிரச்சனைக்கு சிகிச்சை பெறுவது போல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். 

    ×