என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • தூய்மைக் காவலர்கள் ஊராட்சியை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரித்தல் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
    • கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மையாக வைத்திருக்கும் வகையில், தூய்மைக் காவலர்கள் கிராம ஊராட்சிகளில் வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரித்து, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகத் தரம் பிரித்து, உரமாக்குதல், நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்புதல் மற்றும் ஊராட்சியை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரித்தல் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றனர். திடக்கழிவு மேலாண்மையில் இவர்களின் பங்கு மிக முக்கியமானது.

    கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.417 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

    • விருந்தில் சிறுவர், சிறுமிகள் அமர்ந்து சாப்பிடுவதற்காக சென்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
    • ஓட்டலுக்கு அழைத்துச்சென்று உணவு வாங்கி கொடுத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகள் பரவியது.

    நெல்லை:

    பேரறிஞர் அண்ணா நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லையப்பர் கோவிலில் மதியம் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த விருந்தில் சிறுவர், சிறுமிகள் அமர்ந்து சாப்பிடுவதற்காக சென்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிறுவர், சிறுமிகள் பேசும் வீடியோ காட்சிகளும், அவர்களை ஓட்டலுக்கு அழைத்துச்சென்று உணவு வாங்கி கொடுத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகள் பரவியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் அண்ணா நினைவு தினத்தன்று நடைபெற்ற சமபந்தியில் சபாநாயகர், மேயர், துணை மேயர், முன்னாள் அமைச்சர், மண்டலகுழுத் தலைவர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர்குழுத் தலைவர், அறங்காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வை ஒருவர் முகநூல் பக்கத்தில், கோவில் சமபந்தி விருந்தில் பேட்டையைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் புறக்கணிக்கப்பட்டனர் என்று தவறாக வதந்திகளை பரப்பி வருகிறார். சமபந்தி விருந்து என்பது பொதுவானது, இதில் யாரும் புறக்கணிக்கப்படவில்லை, வந்திருந்த 792 பயனாளிகள் உணவு சாப்பிட்டு விட்டு தான் சென்றனர். தனிநபர் பெயர் வாங்குவதற்காக கோவில் நிர்வாகம் தொடர்பாக தவறான செய்திகளை பதிவிட்டு வருகிறார். அவர் முகநூலில் பதிவிட்ட கருத்துகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று கோவில் நிர்வாகம் சார்பில் மறுக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சீர்காழி மற்றும் தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2-ந்தேதி காலை அதிக சத்தம் உணரப்பட்டதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டது.
    • இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

    சீர்காழி மற்றும் தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2-ந்தேதி காலை அதிக சத்தம் உணரப்பட்டதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டது.

    இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

    வானத்திலிருந்து திடீர் சத்தம் கேட்டதால் மயிலாடுதுறை மக்கள் மீண்டும் அச்சத்தில் உள்ளனர் என்று குறிப்பிட்டு ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அளித்துள்ள விளக்கத்தில், "மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2-ந்தேதி காலை 10.20 மணி முதல் 10.30 மணி வரை அதிக சத்தம் உணரப்பட்டதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டது. மேற்கண்ட சத்தம் 'ஜெட்' பயிற்சி விமான சத்தம் என்பதையும், நில அதிர்வு அல்லது நிலநடுக்கம் எதுவும் மேற்கண்ட பகுதிகளில் ஏற்படவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். தவறான தகவலைப் பரப்பாதீர்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (05.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    திருமுடிவாக்கம்: சோமங்கலம், மேலத்தூர், டிசி நகர், சக்தி நகர், புதுப்பேடு மேடு, புதுப்பேடு பள்ளம், சிஐடி கல்லூரி, நடுவீரப்பட்டு காந்தி நகர், நடுவீரப்பட்டு ராம்ஜி நகர், தாம்பரம் மெயின் ரோடு, பூந்தண்டலம்.

    ராஜகீழ்பாக்கம்: வேளச்சேரி மெயின் ரோடு, மேத்தா நகர் மெயின் ரோடு, மகாலட்சுமி நகர் மெயின் சாலை, மாருதி நகர், கோமதி நகர், ஐயப்ப நகர், விவேகந்தன் தெரு, ரசுகி தெரு, வேணுகோபால் தெரு, அண்ணா தெரு, பாரதியார் தெரு, திருமகள் நகர், கார்த்திக் அவென்யூ, பிரதீப் அவென்யூ, குருநாதர் தெரு, ரங்கா காலனி, வ உ சி தெரு, நேதாஜி தெரு, பவானந்தியர் தெரு, மாரி அம்மன் கோவில் தெரு, சாம் அவென்யூ, செம்பாக்கம் மெயின் ரோடு, மகா சக்தி காலனி, ஐஓபி காலனி, கேம்ப் ரோடு, கர்ணம் தெரும், கண்ணன் நகர், அவ்வை நகர், பாரதி நகர், மாடம்பாக்கம் மெயின் ரோடு, பொன்னியம்மான் கோவில், தெரு, சின்மயி காலனி, கம்பர் தெரு, மணிவாசகர் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, கனகராஜ் தெரு, அம்பேத்கர் தெரு, அண்ணா தெரு, ராஜீவ் காந்தி நகர், கலைஞர் கருணாநிதி நகர், துர்கா காலனி, வெங்கடராமன் நகர், சிவகாமி நகர், முத்தமிழ் நகர், சிட்லபாக்கம், மணவாள நகர், ஏரிக்கரை தெரு.

    திருவேற்காடு: சன்னதி தெரு, திருவேங்கட நகர், சின்ன கோலடி, கிருஷ்ணா நகர்.

    • கோவை வரும் சிறப்பு ரெயில் ரேணிகுண்டா, பகலா, காட்பாடி ஆகிய மாற்றுப்பாதை வழியாக இயக்கப்படும்.
    • காச்சிகுடாவில் இருந்து வருகிற 10-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக புறப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:-

    * ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து வருகிற 8-ந்தேதி இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு கோவை வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06182), ரேணிகுண்டா, பகலா, காட்பாடி ஆகிய மாற்றுப்பாதை வழியாக இயக்கப்படும்.

    * அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து வருகிற 8-ந்தேதி இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் (22504), 1 மணி நேரம் 45 நிமிடம் தாமதமாக புறப்படும்.

    * காச்சிகுடாவில் இருந்து வருகிற 10-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17652), 1 மணி நேரம் தாமதமாக புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • உலகில் 20 பெரிய நிலத்தடி நீர் நிலைகளில் 13 நீர்நிலைகள் மரண நிலையில் இருக்கின்றன.
    • உலகளவில் உள்ள 70 சதவீத முக்கியமான நிலத்தடிநீர் ஆதாரங்கள் வேகமாக வறண்டு வருகின்றன.

    சென்னை:

    ஒரு நபர் தன்னுடைய வருமானத்துக்கு அதிகமாகச் செலவு செய்யும்போது, அவர் பொருளாதாரச் சிக்கலில் வீழ்வது இயற்கை. இதனை அவர் திவாலாகிவிட்டார் என்றும் சொல்வார்கள். அதுவே நீர்வளத்திற்கு நடந்தால்? சற்று யோசித்து பாருங்கள்.

    கடந்த சில 10 ஆண்டுகளாக இயற்கை வழங்கும் நீரைவிட, நாம் சுரண்டிய நீரின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள 'உலகளாவிய தண்ணீர் திவால்' அறிக்கை, நிலத்தடி நீர் வற்றி வருவது மற்றும் மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் சமூக, பொருளாதாரப் பாதிப்புகளை விரிவாகப் பட்டியலிட்டு இருக்கிறது.

    இந்த அறிக்கை வெறும் தண்ணீர் தட்டுப்பாடு என்பதைத் தாண்டி, நாம் மீளமுடியாத ஒரு பேராபத்தில் சிக்கியுள்ளோம் என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது. மேலும் இதனை வெறும் எச்சரிக்கையாக மட்டுமில்லாமல், மனிதகுலத்தின் வாழ்வாதாரத்திற்கான அபாய சங்காகவும் ஊதியுள்ளது.

    அப்படி என்னதான் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    • உலகில் 20 பெரிய நிலத்தடி நீர் நிலைகளில் 13 நீர்நிலைகள் மரண நிலையில் இருக்கின்றன. குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதிகளில் நிலத்தடிநீர் மீண்டும் ஊற்று எடுக்க வாய்ப்பே இல்லாத ஆழத்துக்கு சென்றுவிட்டது.

    • மழை மற்றும் பனி உருகுவதன் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் நன்னீரின் அளவைவிட, நாம் பயன்படுத்தும் நீரின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது. நாம் இயற்கையின் 'சேமிப்பான' நிலத்தடி நீரையும், பனிப்பாறைகளையும் வேகமாகச் செலவழித்து வருகிறோம்.

    • நன்னீர் பயன்பாட்டில் சுமார் 70 சதவீதத்தை விவசாயத்துக்கு பயன்படுத்துகிறோம்.

    • உலகளவில் உள்ள 70 சதவீத முக்கியமான நிலத்தடிநீர் ஆதாரங்கள் வேகமாக வறண்டு வருகின்றன. இயற்கையாக நிலத்தடி நீர் மீண்டும் ஊற்றெடுக்க எடுத்துக்கொள்ளும் காலத்தைவிட நாம் அதனை உறிஞ்சு எடுக்கக் கூடிய வேகம் அதிகமாக உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, நிலப்பரப்பு உள்வாங்கும் அபாயம் உள்ளது.

    3-ம் உலகப் போர்

    • காலநிலை மாற்றத்தால் மழைப்பொழிவு சீரற்றுப் போய் இருக்கிறது. நதிகளின் ஆதாரமான பனிப்பாறைகள் 1970-க்கு பிறகு 30 சதவீதம் உருகிவிட்டன.

    • நிலத்தடி நீரை சேமிக்கும் வங்கிகளாக செயல்பட்டு வந்த ஏரிகள், குளங்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் அழிந்து நீர் சுழற்சி பாதிக்கப்பட்டிருக்கிறது.

    • நகரமயமாக்கல் மற்றும் மாசுபாடு காரணமாகவும் தண்ணீர் திவால் நிலைக்கு தள்ளப்படுகிறோம். அதாவது நகரங்களில் நிலப்பரப்பு முழுவதும் கான்கிரீட் பூசப்பட்டு, மழைநீர் பூமிக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. மேலும் 80 சதவீத கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், நீர் நிலைகளில் கலந்து நன்னீரை மாசுப்படுத்துகின்றன.

    மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காகத்தான் நடக்கும் என்ற பேச்சுகள் வெறும் யூகமாக சொல்லக்கூடிய வார்த்தையோ, கற்பனைக் கதையோ அல்ல. அது நிதர்சனமான உண்மை என்பதை ஐ.நா.வின் 'தண்ணீர் திவால்' அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இது பல கோடி மக்களின் தாகத்தை மட்டுமல்ல, உலகளாவிய உணவுப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

    தமிழ்நாட்டின் நிலை

    ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ள இந்த அறிக்கையில், இந்தியா உலகளாவிய தண்ணீர் திவால் நிலையின் மையப்புள்ளியாக இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், தெற்கு ஆசியாவிலேயே மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள பகுதிகளில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் சென்னை நகரம் உலகளவில் தண்ணீர் திவால் நிலையை நோக்கி வேகமாக நகரக்கூடிய 25 நகரங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. சென்னை 2019-ல் சந்தித்தது போன்ற தண்ணீர் இல்லாத நிலை (டே ஜீரோ) மீண்டும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேலும் விழித்துக்கொள்ளவில்லை என்றால் பேராபத்து நமக்குதான்.

    தீர்வுகள் என்ன?

    ஐக்கிய நாடுகள் சபை தண்ணீர் திவால் நிலை குறித்து எச்சரிக்கை கொடுத்து இருந்தாலும், அதற்கான அதிரடி தீர்வுகள் என்ன? என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறது. தண்ணீர் நெருக்கடி மேலாண்மையை இனி செய்ய முடியாது. மாறாக திவால் நிலையை மேலாண்மை செய்ய தொடங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    • தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை உற்பத்தி செய்வதை குறைக்க வேண்டும்.

    •விவசாயத்தில் சொட்டு நீர் பாசனத்தை கட்டாயமாக்க வேண்டும்.

    •நகரங்களில் கழிவுநீர் மறுசுழற்சியை ஒரு போர்க்கால நடவடிக்கையாக முன்னெடுக்கவேண்டும்.

    •எஞ்சியிருக்கும் நிலத்தடி நீரை சேமிக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்.

    •பொருளாதார திட்டமிடல்களில் தண்ணீரை முதன்மை காரணியாக மாற்றவேண்டும். நதிநீர் பகிர்வு தொடர்பான சர்வதேச சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்வுகளையும் வழங்கியுள்ளது.

    • சக்திவாய்ந்த பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வருகிற ஜூன் மாதத்தில் மீண்டும் ஏவ முயற்சிக்கப்படும்.
    • கடந்த முறை நடந்தது போன்று இப்போது நடக்க வாய்ப்பில்லை.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டிலும் பொருத்தி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. உலக அளவில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றி விகிதத்தைக் கொண்ட ராக்கெட் என்ற பெயரை 'பி.எஸ்.எல்.வி.' ரக ராக்கெட் பெற்றுள்ளது.

    இந்தநிலையில், ஆந்திரமாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1-வது ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் கடந்த ஆண்டு மே 18-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. இ.ஓ.எஸ்-09 ராடார் இமேஜிங் செயற்கைக்கோளை சுமந்து சென்ற இந்த ராக்கெட்டின், 3-வது நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விண்வெளிப் பயணம் தோல்வியடைந்தது.

    அதேபோல், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கிய இ.ஓ.எஸ்.01 என்ற முதன்மை செயற்கைக்கோளுடன், வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைக்கோள்கள், பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் மூலம் கடந்தமாதம் விண்ணில் ஏவப்பட்டது.

    அப்போது, ராக்கெட்டின் 3-வது நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலக்கை அடையாமல் திட்டம் தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து 2 பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் தோல்வியை தழுவின.

    இதுகுறித்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:-

    இஸ்ரோவின் 2 பி.எஸ்.எல்.வி. தோல்விகளைத் தவிர, கடந்த ஆண்டு இஸ்ரோ ஏவிய வழி செலுத்தல் செயற்கைக்கோள், என்.வி.எஸ்-02, விண்கலத்தின் 'திரஸ்டர் வால்வு' செயலிழப்பு காரணமாக அதுவும் திட்டமிட்ட சுற்றுப்பாதையை அடையத் தவறிவிட்டது. ஒவ்வொரு பயணத்திலும் என்ன தவறு நடந்தது என்பதை பகுப்பாய்வு செய்ய தனித்தனி உள் மற்றும் வெளிப்புற தோல்வி மதிப்பீட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தோல்வி குறித்து குழுவின் அறிக்கையை ஆராய்ந்து, எல்லாவற்றையும் சரிசெய்து, நம்மை நாமே சான்றளித்த பிறகு, மிகவும் லட்சிய இலக்காகக் கொண்டு சக்திவாய்ந்த பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வருகிற ஜூன் மாதத்தில் மீண்டும் ஏவ முயற்சிக்கப்படும். கடந்த முறை நடந்தது போன்று இப்போது நடக்க வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒருவேளை நான் தவறாக பாடியதுபோல் தோன்றினால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்
    • இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவில், "மருதமலை மாமணியே முருகையா" என்ற புகழ்பெற்ற முருகன் பக்திப் பாடலை விஜய்க்கு ஏற்றவாறு மாற்றிப் பாடியிருந்தார் நாட்டுப்புற பாடகர் வேல்முருகன். இது முருகப் பக்தர்களின் மனதைப் புண்படுத்தியதாக இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

    மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பாடல் வரிகளை மாற்றியதற்குத் தூண்டுதலாக இருந்ததாகக் கூறி, தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் மீதும் இந்தப் புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு மன்னிப்புக் கோரியுள்ளார் பாடகர் வேல்முருகன். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், 

    "நான் பாடியதற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முருகரை தவறாக பாடுவது என்பது என்னை நானே கத்தியால் குத்திக் கொள்வதற்கு சமம். இதற்கும், அக்கட்சி தலைவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நானும் தவறாக பாடவேண்டும் என்பதற்காக பாடவில்லை. ஒருவேளை நான் தவறாக பாடியதுபோல் தோன்றினால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்." என தெரிவித்துள்ளார். 

     

    • 11-ம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் கையில் அஇஅதிமுக ஆட்சி லேப்டாப்பை கொண்டு சேர்த்தது.
    • போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, ஆட்சி மீதம் இருக்கின்ற 2 மாதங்களிலாவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

    சென்னை எம்கேபி நகர் அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவனிடம் ஆசிரியர்கள் சோதனை செய்யும் போது பேண்ட் பாக்கெட்டில் 5 கிராம் கஞ்சா போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

    "சென்னை வியாசர்பாடியில் அரசுப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒரு ஆட்சியாளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,Total Failure என்பதற்கு இந்த செய்தியே சாட்சி!

    அறிவுப்பூர்வமான கல்விக்கு வித்திட 11-ம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் கையில் அஇஅதிமுக ஆட்சி லேப்டாப்பை கொண்டு சேர்த்தது. ஆனால், இன்றைய திமுக ஆட்சியிலோ, 11-ம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் தான் சென்றுள்ளது. இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?

    ஆனால், இதையெல்லாம் பற்றி கிஞ்சற்றும் கவலைப் படாத ஒரு முதல்வர் நமக்கு வாய்த்திருப்பது ஆகப்பெரும் சாபக்கேடு! கஞ்சா, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது மூலம், ஸ்டாலின் மாடல் திமுக அரசு தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளது. இளைஞர்களை, பள்ளி மாணவர்களை அடியோடு சீரழிக்கத் துணை போகும் இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆண்டுதோறும் நான் தொடர்ச்சியாக சுட்டிக் காட்டி வந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது மாதிரி, வழக்கம் போல "ஓ" போடுவதோடு நிறுத்தாமல், பள்ளி மாணவன் கையில் போதைப்பொருள் வந்தது எப்படி என தீர விசாரித்து, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, ஆட்சி மீதம் இருக்கின்ற 2 மாதங்களிலாவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • 'மருதமலை மாமணியே முருகையா' பாடலை மாற்றி விஜயை புகழ்வதுபோல் பாடியதற்கு எதிர்ப்பு
    • நெல்லை மற்றும் சேலம் காவல் நிலையங்களில் புகார்

    தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா நேற்று பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாடகர் வேல்முருகன், முருகன் பாடல் ஒன்றில் விஜய்யை உருவகப்படுத்தி பாடியிருந்தார். இந்த பாடலின்போது விஜய்யும் நடனமாடி இருந்தார். 

    விஜய்யின் இந்த நடனத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் முருகன் பாடலை இழிவுபடுத்தும் விதமாக பாடியதாகவும், அதற்கு விஜய் சைகை செய்து முருக கடவுளை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொண்டதாகவும் விஜய் மீதும், அக்கட்சி நிர்வாகி ராஜ்மோகன் மீதும், பாடகர் வேல்முருகன் மீதும் பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 

    மேலும் வழக்கறிஞர் குற்றாலநாதன் என்பவரும் நெல்லை போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில், முருகன் பக்தர்களால் போற்றப்படும் புனித பாடல் அரசியல் நோக்கத்திற்காக மாற்றிப் பாடப்பட்டதாகவும், இதனால் இந்து மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக திருநெல்வேலி மாநகர போலீசார் மனுவை பெற்றுக் கொண்டு, உரிய விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். 

    • பாஜக அரசு விமர்சனங்களை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும்.
    • ராகுல் காந்தி பேச்சைத் தடை செய்த இந்த நடவடிக்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் பேச்சைத் தடை செய்த நடவடிக்கை, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான கருத்துச் சுதந்திரத்துக்கும் நாடாளுமன்ற மரபுக்கும் எதிரானது.

    மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க வேண்டிய எதிர்க்கட்சியின் உரிமையை பறிப்பது, அதிகாரத்தை விமர்சனத்திலிருந்து காப்பாற்றும் முயற்சியாகும். இது ஜனநாயகத்தில் ஆரோக்கியமான விவாதத்தையும், பொறுப்புணர்வையும் அடக்கும் செயலாகும்.

    ஒன்றிய பாஜக அரசு விமர்சனங்களை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும். கருத்து வேறுபாடு துரோகம் அல்ல. அது ஜனநாயகத்தின் வலிமை. திரு.ராகுல் காந்தி அவர்களின் பேச்சைத் தடை செய்த இந்த நடவடிக்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க, கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்ய, இத்தகைய அடக்குமுறைகளை மக்கள் ஒருமித்த குரலில் எதிர்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    ×