என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • நீட் விலக்கு மசோதாவை நிராகரித்து திருப்பி அனுப்பியது அரசியல் சாசனத்துக்கு எதிரானது
    • குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மசோதாவை ஆளுநர் மீண்டும் அனுப்ப வேண்டும்.

    2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக அரசு நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

    தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தராமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். குடியரசுத் தலைவர் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் மார்ச் 3ம் தேதி நிராகரித்தார்.

    இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

    அந்த மனுவில், "இளநிலை நீட் விலக்கு மசோதாவை நிராகரித்து திருப்பி அனுப்பியது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மசோதாவை ஆளுநர் மீண்டும் அனுப்ப வேண்டும். அரசியல் சாசனப் பிரிவு 254 கீழ் மசோதாவை ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது
    • வாக்குகள் நீக்கப்பட்டதால்தான் பாஜக கூட்டணி இவ்வளவு இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது

    பீகார் தேர்தல் முடிவுகள் பாஜக மற்றும் தேர்தல் ஆணயம் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றன. நேர்மையாக நடந்த தேர்தல்தானா என்கிற அய்யத்தை எழுப்புகிறது. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பலத்தால் பெற்ற வெற்றியா? அல்லது அக்கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையிலான கூட்டணி பலத்தால் கிடைத்த வெற்றியா? என்கிற கேள்வியை எழுப்புவதாக உள்ளது. தேர்தல் ஆணையம் மேற்கொண்ட எஸ்.ஐ.ஆர் என்னும் நடவடிக்கைதான் இத்தகு அய்யங்களை எழுப்புவதற்கு அடிப்படையாக உள்ளது.

    பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக வாக்களிக்ககூடிய வாக்காளர்கள் கணிசமான அளவில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதாவது, பீகாரில் தேர்தலுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர் எனப்படும் 'சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு' நடவடிக்கையின் போது தகுதி வாய்ந்த சுமார் 65 இலட்சம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படாமல் நீக்கப்பட்டனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

    ஆனால், எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை. எனவே, அது தொடர்ந்து நடைபெற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பின்னும், சுமார் 47 இலட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதை எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டின. ஆயினும், அதனைத் தேர்தல் ஆணையம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

    எஸ். ஐ.ஆர் நடவடிக்கைக்குப் பிறகு தேர்தல் நடைபெற்று வெளிவந்துள்ள முடிவுகள், எஸ்.ஐ.ஆர் மூலம் பெருமளவில் வாக்குகள் நீக்கப்பட்டதால்தான் பாஜக கூட்டணி இவ்வளவு இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது என்பதை உறுதிபட உணர்த்துகின்றன.

    பாஜக கூட்டணி வெற்றி பெற்ற 202 தொகுதிகளில் 128 தொகுதிகளில், நீக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையை விட வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது. அவ்வாக்குகள் நீக்கப்படாதிருந்தால் அத்தொகுதிகளில் 'காங்கிரஸ் -ஆர்ஜேடி' கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் என்பது உறுதியாகிறது.

    இந்நிலையில், பீகாரில் செய்ததைப் போலவே தங்களுக்கு எதிரான இலட்சக்கணக்கான வாக்குகளை நீக்கிவிட்டுத் தங்களுக்கு ஏற்றபடி தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கு தமிழ்நாட்டிலும் பாஜக முயற்சிக்கலாம். பாஜகவின் இத்தகைய வாக்குத் திருட்டைத் தடுப்பதற்குத் தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

    எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது தெளிவாகத் தெரிய வந்திருப்பதால், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை நிறுத்தும்படி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை அளிக்கும் என்று நம்புகிறோம்.

    இந்நிலையில், பீகாரில் நடந்தேறியுள்ளதைப்போல தமிழ்நாட்டிலும் தகுதியான வாக்காளர்கள் நீக்கப்படாமல் தடுக்க, சனநாயகத்தைப் பாதுகாக்க, பாஜக- தேர்தல் ஆணையம் இணைந்து அரகேற்றவுள்ள கூட்டுச் சதியை முறியடிக்க, அனைத்து ஜனநாயக சக்திகளும் மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டும் என்றும்; மக்கள் நலன்கருதி தொலைநோக்குப் பார்வையோடு ஒருங்கிணைந்து செயல்படவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

    • தண்ணீர் என்பது மானுட தேவை மட்டும் இல்லை. பல்லுயிர்களின் தேவை
    • மரத்திடம் எங்கள் உயிர் இருக்கிறது. தண்ணீரிடம் எங்கள் வாழ்க்கை இருக்கிறது

    நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது கட்சியின் மாநாடுகளை பல்வேறு தலைப்புகளில் தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்.

    கடந்த காலங்களில் மலைகள் மாநாடு, ஆடு, மாடுகள் மாநாடு, மரங்களின் மாநாடு என்று நடத்தினார்.

    அதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் தண்ணீர் மாநாடு நடத்த போவதாக அறிவித்திருந்தார்.

    மாமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை அமைந்துள்ள திருவையாறு அருகே பூதலூரில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் தண்ணீர் மாநாடு நடைபெற்றது.

    தண்ணீர் மாநாட்டில் பேசிய சீமான், "கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை பார்த்து அரசியல் செய்ய வரவில்லை. மக்களின் வாக்கு தரத்தை மாற்ற நினைக்கிறோம். அதனால்தான் எங்களுக்கு யாரும் போட்டியில்லை.

    தண்ணீர் என்பது மானுட தேவை மட்டும் இல்லை. பல்லுயிர்களின் தேவை. ரத்தநாளம் போன்றது ஆறுகள்; அதில், அணை கட்டுவது ஸ்டோக்குக்கு ஒப்பானது. மரத்திடம் எங்கள் உயிர் இருக்கிறது. தண்ணீரிடம் எங்கள் வாழ்க்கை இருக்கிறது" என்று தெரிவித்தார்.

    • அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி கோவிலுக்கு ரூ.44 லட்சம் நன்கொடை கொடுத்ததாக தகவல் வெளியானது
    • அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அண்மையில், அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி கோவிலுக்கு ரூ.44 லட்சம் நன்கொடை கொடுத்ததாக கூறப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கே.என்.நேரு, "நான் பணம் கொடுக்க கூடாதா? நான் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு ரூ.44 லட்சம் காணிக்கை வழங்கியது குறித்து விமர்சனம் செய்யட்டும்... எல்லோரும் என்னை நல்லவன் என்று சொல்வார்களா?" என்று கோவமாக பதில் அளித்தார்.

    இந்நிலையில், இன்று அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து மீண்டும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "திருப்பதி கோவிலுக்கு நான் நன்கொடை கொடுக்கவில்லை. என்னிடம் அவ்வளவு பணமில்லை. என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் என் பெயரில் நன்கொடை கொடுத்துள்ளார். எனக்கு இது முன்னரே தெரிந்திருந்தால் வேண்டாம் என்று கூறியிருப்பேன்" என்று தெரிவித்தார்.

    • மற்ற மாநிலங்களைப் போல மக்கள் வரிப்பணத்தை நாம் அள்ளி வீசமாட்டோம்.
    • பல்வேறு விஷயங்களின் அடிப்படையிலேயே முதலீட்டு ஊக்குவிப்பு குறித்து அரசு முடிவெடுக்கும்.

    முதலீடுகள் தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொழில்துறை முதலீடுகள் பற்றியோ பரவலாக்கப்பட்ட வளர்ச்சி பற்றியோ வேலை வாய்ப்புகள் பற்றியோ எந்தவித அடிப்படை புரிதலுமின்றி வழக்கம்போல திருமண வீட்டில் ஊர் வம்பை பேசும் பெருசுகள் போல குற்றம் சாட்டி இருக்கிறார்.

    முதலீட்டு ஊக்குவிப்பு என்பது கையால் பாம்பு டான்ஸ் போடுவதுபோல சாதாரண விளையாட்டு அல்ல. தமிழ்நாட்டின் எந்த இடத்திற்கு முதலீடு செல்கிறதோ அதைப் பொறுத்து ஊக்கத்தொகை வழங்குவது, அப்பகுதியில் முன்னரே அமைந்திருக்கும் தொழிற்சாலைகளின் வகை போன்ற பல விடயங்களை பொறுத்தே அரசு ஒரு முடிவை எடுக்கிறது. அதற்கு பிறகே முதலீடு உறுதி செய்யப்பட்டு ஒரு ஒப்பந்தம் முதலீடாக மாறுகிறது. அந்த முதலீட்டின் மூலம் உருவாகும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை உருவாக்குவதே நமது முதலமைச்சரின் நோக்கம். அதுவே நமது இலக்கு.

    அரசாங்கம் என்பது மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய அமைப்பாகும். சில மாநிலங்களில் வறண்ட பெரிய நிலப்பரப்புகள் உள்ளன. நாட்டின் #1 நகரமயமாக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு என்பதால் நம்மிடம் இருப்பவை அதிக மதிப்புள்ள நிலங்களாகும். புதிதாக முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை மற்றும் அந்த நிறுவனங்கள் மூலம் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் ஆகியவற்றின் மதிப்பை ஒப்பிடாமல் அந்த நிலங்களை சாதாரணமாக கொடுத்துவிட முடியாது.

    தமிழ்நாட்டின் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி நோக்கத்திற்கு உதவாத முகலீடுகளுக்கு நாம் அதிக முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. ஏனென்றால், அதே இடத்தில் பல நிறுவனங்கள் பல திட்டங்களோடு ஒவ்வொரு நாளும் நமது முதலமைச்சர் அவர்களின் அலுவலகத்தை நாடுகிறார்கள். உலக முதலீட்டாளர்களுக்கு நமது திராவிட நாயகன் அவர்களின் ஆட்சி மீது இன்று இருக்கும் நம்பிக்கை அப்படிப்பட்டது.

    2021 முதல் திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை போடப்பட்ட ஆயிரத்திற்கும் மேலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 77% க்கும் மேலான ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

    முதலீட்டாளர்கள் இடையே தமிழ்நாடு இந்தியாவின் மிகச்சிறந்த நம்பகத்தன்மை நிறைந்த மாநிலம் என்ற பெயரை திராவிட மாடல் அரசு மூலம் பெற்றுள்ளது. இந்த நற்பெயரை நாம் மிகுந்த முதிர்ச்சியோடு காப்பாற்ற வேண்டும். மக்கள் வரிப்பணத்தை மற்ற மாநிலங்களைப் போல நாம் அள்ளி வீசமாட்டோம். ஒன்று இல்லையென்றால், நமக்கு நூறு லைனில் இருக்கிறது.

    நாம் வேறு எந்த மாநிலத்தையும் விட சிறந்த உற்பத்தி சக்தியாக இருக்கிறோம். நமக்கு நமது மதிப்பு தெரியும், நமது பலம் தெரியும், அதற்கு ஏற்றவாறு செயல்படுவோம்.

    எதிர்க்கட்சித் தன் அரசியல் கணக்குகளுக்காக திமுக அரசை விமர்சிப்பதாக நினைத்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்து தமிழ்நாட்டின் நலனை முதன்மைப்படுத்தும் கடின உழைப்பாளிகளான அரசுத் துறை சார்ந்தவர்களையும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு கடின உழைப்பை வழங்கும் தொழிலாளர்களான மக்களை அவமதிக்கும் கீழ்த்தரமான செயலை மேற்கொள்வது நல்லதல்ல. தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான வகையில் உண்மைக்கு மாறான, அரைகுறை தகவல்களை தன்னுடைய எஜமானக் கட்சியின் அதிகாரம் இழந்த பிரதிநிதி பேசிவிட்டார் என்பதற்காக, போட்டிக்காக அவர் சொன்ன பொய்யையே வெளியிடுவது எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகல்ல. இதுவே கடைசியாக இருக்கட்டும். இனியும் தொழில்துறை சார்ந்த முதலீடுகள் தொடர்பான தன் அறியாமையை வெளிப்படுத்தி அவமானப்பட வேண்டாம் என ஒரு தமிழனாக கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • 12 மாநிலங்களில் SIR மேற்கொள்ளப்பட்டு வருகிறது
    • தமிழ்நாட்டில் 5,90,13,184 SIR படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் 92.04% SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக, 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது. மாநிலத்தில் உள்ள வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக மொத்தத்தில் 6,41,14,582 கணக்கீட்டு படிவங்கள் அச்சிடப்பட்டது. இன்றுவரை, 5,90,13,184 கணக்கீட்டு படிவங்கள், அதாவது 92.04% படிவங்கள் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்கள் கணக்கீட்டு படிவங்களில் தேவையான தொடர்புடைய விவரங்களை நிரப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டு படிவங்களை சேகரிக்க வீடு தோறும் வருகை தரும் பொழுது வாக்காளர்கள் தங்களது நிரப்பப்பட்ட படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். தேவையான விவரங்களை படிவங்களில் நிரப்புவதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உதவி செய்வார்கள். இந்த செயல்முறையை எளிதாக்குவதற்கு வாக்காளர்கள் தங்கள் ஒத்துழைப்பை அதிகாரிகளுக்கு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேர்தல் ஆணைய கூட்டங்களில் தவெக-விற்கு அழைப்பு விடுக்கக்குாரி விஜய் கடிதம்.
    • தமிழகத்திற்கான தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அலுவலகம் தலைமை செயலகத்தில் உள்ளது.

    தேர்தல் ஆணைய கூட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்க கோரி விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அனைத்துக்கட்சி கூட்டங்களுக்கு தவெக-வுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் அமைப்பில் முக்கிய பங்குதாரர். பதிவு பெற்ற கட்சி என்ற அடிப்படையில் தவெக-விற்கும் அழைப்பு விடுக்க வேண்டும். ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு குடிமகனின் குரலையும் தவெக பதிவு செய்ய விரும்புகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த கடிதத்தை தலைமை தேர்தல் ஆணையர், மாநில தேர்தல் ஆணையர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு அனுப்பியுள்ளார்.

    இதில் மாநில தேர்தல் ஆணையர் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள ஜவர்ஹலால் நேரு சாலையில் உள்ள அலுவலகத்திற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முகவரிக்கு அனுப்பியுள்ளார்.

    இங்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் அதற்கான ஆணையர் இருப்பார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையத்தின் தமிழகத்திற்கான தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு தலைமை செயலகத்தில் அலுவலகம் அமைந்துள்ளது.

    இதனால் அர்ச்சனா பட்நாயக் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இருப்பதுபோன்று கடிதம் அனுப்பியுள்ளதாக கடிதத்தை பகிர்ந்து இணையதளவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.

    • SIR-க்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
    • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து த.வெ.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம்

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

    இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். 

    அந்த வீடியோவில் விஜய் கூறியதாவது:-

    * கொஞ்சம் ஏமாந்தா.. நம்ம எல்லோருக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் போகும்.

    * வாக்காளர்கள் அனைவருக்கும் ஒரே மாதத்தில் SIR படிவம் எப்படி சென்று சேரும்?

    * SIR பணியால் அதிகம் பாதிக்கப்படப் போவது உழைக்கும் மக்கள், ஏழைகள், வேலைக்கு போகும் பெண்கள்தான்.

    * FORM கொடுக்க வருவீர்கள் என்பதற்காக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே உட்கார்ந்திருக்க வேண்டுமா?

    என்று தெரிவித்தார். 

    • கோவை வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து கருப்பு கொடி காட்டும் போராட்டம் வரும் 19-ந்தேதி நடத்த உள்ளோம்.
    • விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும்.

    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு, விவசாய சங்க தலைவர் நாகை காவிரி தனபாலன், தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி ஆகியோர் திருச்சி பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    காவிரியில் மாதந்தோறும் நீர் பங்கீடு செய்வதை நிறுத்தி தினந்தோறும் நீர் பங்கீடு செய்து தமிழகத்துக்கு வழங்க வேண்டும், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும், மரபணு திருத்தப்பட்ட பயிர்களை ஊக்குவிப்பதற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததற்கு கண்டனம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து கருப்பு கொடி காட்டும் போராட்டம் வரும் 19-ந்தேதி நடத்த உள்ளோம்.

    மேலும் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தனிநபர் இன்சூரன்ஸ் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாளை மறுநாள் (17-ந்தேதி) நூற்றுக்கணக்கான விவசாயிகள் திருச்சியில் இருந்து டெல்லி செல்கின்றனர்.

    டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். பீகார் தேர்தலில் கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் வருகிற ஜனவரி மாதம் கள் விடுதலை மற்றும் மதுவிலக்கு மாநாடு நடத்த உள்ளோம்.

    இது 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பேட்டியின்போது விவசாய சங்கத் தலைவர்கள் தஞ்சை பழனியப்பன், தீட்சிதர் பாலசுப்ரமணியன், அர்ஜுனன், வாரணவாசி ராஜேந்திரன், நாகை ராமதாஸ், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மேகராஜன் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

    • உலக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் சீனா உள்ளது.
    • தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    சென்னை:

    உலக நீரிழிவு தினத்தையொட்டி சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு பதாகை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    உலக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் சீனா உள்ளது. 2-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. ஆண்டிற்கு 34 லட்சம் பேர் நீரிழிவு நோயினால் உயிரிழக்கிறார்கள். ஒவ்வொரு ஆறு வினாடிக்கும் ஒருவர் மரணத்தை தழுவுகிறார்.

    இந்தியாவில் 20 முதல் 79 வயது வரை உள்ள முதியவர்கள் 9 கோடி பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    தமிழக அரசின் பாதம் காப்போம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 9 லட்சம் பேர் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. நீரிழிவு, வாதம் நோயினால் 72 லட்சத்து 70 ஆயிரத்து 292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோய் ஏற்பட்டு 33 ஆயிரத்து 185 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 26,448 பேர் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். 3169 பேருக்கு உறுப்புகள் நீக்கப்பட்டு உள்ளன.

    எனவே தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே இதற்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதியும் தற்போது செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நீரிழிவு நோயை அலட்சியமாக கருதாமல் கவனமாக கையாள வேண்டும். இதனால் மற்ற உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. எனவே மீண்டும் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் நல வாழ்வு குழு இயக்குனர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தர, மருத்துவ கல்வி இயக்குனர் ராஜ குமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விளம்பர மாடல் நிகழ்ச்சிகளும், வர்ணஜால விளம்பரங்களையும் காட்டினால் மட்டும் தொழில் நிறுவனங்கள் வந்துவிடுமா?
    • தொழில் துறைக்கு வாய்த்திருக்கும் அமைச்சரோ, வெள்ளைப் பேப்பரைக் காட்டும் அமைச்சராக தான் இருக்கிறார்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கொரிய நாட்டைச் சேர்ந்த ஹ்வாசங் நிறுவனம், தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தை விட்டு, ஆந்திர மாநிலத்தில் தொழில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

    பொம்மை முதல்வர் , நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா, உள்ளூரில் முதலீட்டாளர் மாநாடுகள் என "ஷோ" காட்டியதால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்?

    வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது.

    இதற்கு ஆன காரணங்கள் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்,

    சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு,

    படுகுழியில் பெண்கள் பாதுகாப்பு,

    விண்ணை முட்டும் கமிஷன் ஊழல்கள்,

    என அடிப்படையே சீர்குலைந்த இந்த ஸ்டாலின் ஆட்சி, விளம்பர மாடல் நிகழ்ச்சிகளும், வர்ணஜால விளம்பரங்களையும் காட்டினால் மட்டும் தொழில் நிறுவனங்கள் வந்துவிடுமா?

    பொம்மை முதல்வர் தான் இப்படி என்றால், அவர் அரசில் தொழில் துறைக்கு வாய்த்திருக்கும் அமைச்சரோ, வெள்ளைப் பேப்பரைக் காட்டும் அமைச்சராக தான் இருக்கிறார்.

    இத்தகைய வெறும் Show-off ஆட்சியாளர்கள் நடத்தும் ஆட்சியில், எப்படி தொழில்கள் தமிழகத்திற்கு வரும்?

    புதிய தொழில்களால் தங்களுக்கு வேலை கிடைக்கும் என நம்பிய தமிழக இளைஞர்களை ஏமாற்றிய கையாலாகாத ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    இன்று நம்மை விட்டுச் சென்ற தொழில் நிறுவனங்கள், 2026 அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், மீண்டும் தமிழ்நாட்டைத் தேடி வரும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் சன் சுராஜ் கட்சி தோல்வி அடைந்துள்ளது.
    • மத்திய மந்திரி அமித்ஷாவின் மகன் இன்று என்ன செய்கிறார்?

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடி திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை சபாநாயகர் அப்பாவு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    பணகுடி, வள்ளியூர், கூடங்குளம், திசையன்விளை உள்ளிட்ட ராதாபுரம் தொகுதியில் நடத்தப்பட்ட 15 நலம் காக்கும் முகாம்களிலும் காலை சிற்றுண்டி முதல் மதிய உணவு, மாலை தேநீர் வரையிலும் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது.

    முகாமில் பங்கேற்றோருக்கு முழு உடல் பரிசோதனை செய்து அவர்களின் உடல்நிலையை பதிவு செய்த தனிப்பட்ட பைல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை பரிசோதனைகளுக்கு வழக்கமாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் இங்கு மக்கள் ஒரு ரூபாயும் செல வில்லாமல் சேவையைப் பெற்றுள்ளனர்.

    பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் சன் சுராஜ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. அவர் ஒரு ஆலோசனை வழங்குபவர் தான். ஆனால் அவருக்கு களப்பணியில் உள்ள உண்மையான நிலைமை தெரியாது. அவர் யோசனை சொல்வார். ஆனால் அது அவர் சொந்த ஊரிலேயே செல்லுபடியாகவில்லை. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?.

    பீகார் தேர்தலால் வாரிசு அரசியல் தோல்வியடைந்து விட்டது. அது தமிழ்நாட்டிலும் தொடரும் என பா.ஜ.க. கருத்து தெரிவித்துள்ளது. மத்திய மந்திரி அமித்ஷாவின் மகன் இன்று என்ன செய்கிறார்?. ராணுவ மந்திரியின் மகன் என்ன செய்கிறார்?. பா.ஜ.க.வில் 287 வாரிசுகள் பதவியில் உள்ளனர். இத்தனை வாரிசுகளை வைத்திருக்கும் பா.ஜ.க. ஒரே ஒரு வாரிசு வைத்திருக்கும் தி.மு.க.வை குறை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×