என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஐ.பி.எல் மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கத்தில் சட்டபேரவைத் தேர்தல் நடக்க உள்ளது.

    19-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கி மே 31-ம் தேதி வரை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை 5 மாநில தேர்தல் தேதிகள் வெளியானதும் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கத்தில் சட்டபேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் தேர்தல் தேதிகளை பொறுத்து போட்டி அட்டவணை முடிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் விராட் கோலி 2 ஆம் இடத்திற்கு சறுக்கியுள்ளார்.
    • தரவரிசையில் 3 ஆம் இடத்தில இருந்த ரோகித் 1 இடம் சறுக்கி 4ஆம் இடம் பிடித்துள்ளார்.

    இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

    இந்த தொடரில் 2 சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் மொத்தம் 352 ரன்கள் குவித்து அசத்திய நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் ஒருநாள் பேட்டர்களுக்கான வீரர்கள் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இதில் ஐசிசி பேட்டர்கள் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் (845 புள்ளிகள்) முதலிடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் விராட் கோலி 2 ஆம் இடத்திற்கு சறுக்கியுள்ளார்.

    தரவரிசையில் 3 ஆம் இடத்தில இருந்த ரோகித் 1 இடம் சறுக்கி 4ஆம் இடம் பிடித்துள்ளார். இப்ராஹிம் சத்ரன் 3-வது இடத்திலும் சுப்மன் கில் 5-வது இடத்திலும், கே.எல்.ராகுல் 10-வது இடத்திலும் உள்ளனர்.

    • 2025-26ம் ஆண்டுக்கான வீரர்கள் ஊதிய முறையில் இருந்து ஏ பிளஸ் நீக்கப்படுகிறது.
    • ஏ, பி மற்றும் சி என 3 கிரேடுகளே இனி இடம் பெறும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வீரர்களை ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என 4 கிரேடுகளாக பிரித்து ஒப்பந்தம் செய்து சம்பளம் வழங்கி வருகிறது.

    ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது. ஏ, பி மற்றும் சி கிரேடுகளுக்கு முறையே ரூ. 5 கோடி, ரூ. 3 கோடி, ரூ.1கோடி அளிக்கப்படுகிறது.

    டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய 3 வடிவ போட்டிகளில் விளையாடுபவர்கள் மட்டுமே ஏ பிளஸ் கிரேடில் இருப்பார்கள். சீனியர் வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள். 20 ஓவர், டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர்.

    இந்த நிலையில் கோலி, ரோகித்சர்மா இடம்பெற்றுள்ள ஏ பிளஸ் கிரேடை நீக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025-26ம் ஆண்டுக்கான வீரர்கள் ஊதிய முறையில் இருந்து ஏ பிளஸ் நீக்கப்படுகிறது. ஏ, பி மற்றும் சி என 3 கிரேடுகளே இனி இடம் பெறும்.

    கோலி, ரோகித்சர்மாவுடன் ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா ஆகியோரும் 'ஏ' பிளஸ் கிரேடில் இடம்பெற்றுள்ளனர்.

    • வங்கதேசத்தின் நிலைப்பாடுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது.
    • இது தொடர்பாக ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கராச்சி:

    இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து இன்றுக்குள் முடிவு எடுக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கெடு விதித்து இருந்தது.

    இந்தியாவில் விளையாட மறுக்கும் பட்சத்தில் தரவரிசை அடிப்படையில் வங்கதேசத்துக்கு பதிலாக மாற்று அணியாக ஸ்காட்லாந்து இடம்பெறும் என்றும் எச்சரித்தது.

    இதைத் தொடர்ந்து ஐ.சி.சி.யின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் என்று வங்கதேச அரசின் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பாதுகாப்பு கருதி இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்கதேசத்தின் நிலைப்பாடுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து இன்றுக்குள் முடிவு எடுக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. கெடு விதித்து இருந்தது.
    • மறுக்கும் பட்சத்தில் வங்கதேசத்துக்கு பதிலாக ஸ்காட்லாந்து இடம்பெறும் என்று ஐசிசி எச்சரித்தது.

    டாக்கா:

    இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து இன்றுக்குள் முடிவு எடுக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கெடு விதித்து இருந்தது.

    இந்தியாவில் விளையாட மறுக்கும் பட்சத்தில் தரவரிசை அடிப்படையில் வங்கதேசத்துக்கு பதிலாக மாற்று அணியாக ஸ்காட்லாந்து இடம்பெறும் என்றும் எச்சரித்தது.

    இதைத் தொடர்ந்து ஐ.சி.சி.யின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் என்று வங்கதேச அரசின் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் தெரிவித்தார்.

    இந்தநிலையில் 20 ஓவர் உலகக் கோப்பையில் வங்கதேசம் பங்கேற்குமா? என்று கேப்டன் லிட்டன் தாசிடம் கேட்கப்பட்டது. சர்ச்சை தொடர்பான கேள்விக்கு பதில் அளிப்பது தனக்கு பாதுகாப்பானது அல்ல என்று அவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக லிட்டன்தாஸ் கூறியதாவது:-

    நாங்கள் உலகக்கோப்பையில் விளையாட போகிறோமா என்பது உங்களுக்கு (நிருபர்கள்) உறுதியாக தெரியுமா. என் தரப்பில் உறுதியாக தெரியவில்லை. அனைவருக்கும் நிச்சயமற்ற நிலைதான். இந்த சமயத்தில் முழு வங்கதேசமும் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

    நீங்கள் என்ன கேள்வி கேட்கப்போகிறீர்கள் என்று எனக்கு புரிகிறது. அது எனக்கு பாதுகாப்பானது அல்ல. பதில் இல்லை.

    இவ்வாறு லிட்டன்தாஸ் கூறியுள்ளார்.

    இதற்கிடையே வங்கதேசத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்து ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக் கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது.

    • நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, ஜப்பான் அணியை எதிர்கொண்டது.
    • ஆஸ்திரேலியா வீரர் வில் மலாஜ்சுக் 102 ரன்கள் விளாசினார்.

    வின்ட்ஹோக்:

    16-வது இளையோர் (19 வயதுக்கு உட்பட்டோர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

    வின்ட்ஹோக்கில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, ஜப்பான் அணியை (ஏ பிரிவு) எதிர்கொண்டது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஜப்பான் அணி 8 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது.

    அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 29.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது. வில் மலாஜ்சுக் 102 ரன்னும் (55 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்) நிதேஷ் சாமுவேல் 60 ரன்னும் திரட்டி வெற்றியை எளிதாக்கினர். முன்னதாக மலாஜ்சுக் 51 பந்துகளில் சதத்தை கடந்து, இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார்.

    இதற்கு முன்னர் 52 பந்தில் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி சதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில் அதனை ஆஸ்திரேலியா வீரர் முறியடித்துள்ளார்.

    • அடுத்த மாதம் 7-ந் தேதி 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி தொடங்குகிறது.
    • தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்து மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என வங்கதேசம் வலியுறுத்தி வருகிறது.

    டாக்கா:

    அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க இந்தியா செல்லமாட்டோம் என்று அறிவித்து இருக்கும் வங்காளதேசம், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்து மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று பிடிவாதம் காட்டி வருகிறது.

    இந்த விஷயத்தில் பேச்சுவார்த்தையில் முடிவு கிடைக்காததால் இன்றுக்குள் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று வங்கதேசத்துக்கு கெடு விதித்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இந்தியா வந்து விளையாட மறுத்தால் வங்கதேசத்துக்கு பதிலாக தரவரிசையில் அடுத்த இடத்தில் இருக்கும் அணியை சேர்க்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலையில் வங்கதேச இடைக்கால அரசின் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், 'இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விருப்பத்திற்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதித்துள்ள எந்தவொரு நிபந்தனைக்கும் வங்கதேசம் அடிபணியாது' என்றார்.

    • இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி நாக்பூரில் இன்று நடக்கிறது.
    • இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மாவும், சஞ்சு சாம்சனும் களம் இறங்குகிறார்கள்.

    நாக்பூர்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்ெகாண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்த நியூசிலாந்து அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.

    இதன்படி இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இவ்விரு அணிகளும் விளையாடும் கடைசி தொடர் இதுவாகும். இதனால் இது உலகக் கோப்பை போட்டிக்கு ஒத்திகையாகவே பார்க்கப்படுகிறது. தங்களை சிறந்த முறையில் தயார்படுத்துவதற்கு இந்த போட்டியை சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள்.

    சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை முதல்முறையாக பறிகொடுத்த இந்திய அணி, அதற்கு 20 ஓவர் போட்டியில் பதிலடி கொடுக்க வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

    பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப்சிங், வருண் சக்ரவர்த்தி, அக்ஷர் பட்டேல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா வலு சேர்க்கிறார்கள்.

    ஒரு நாள் தொடரை வென்றதால் நியூசிலாந்து வீரர்கள் கூடுதல் நம்பிக்கையோடு இருப்பார்கள். கேப்டன் மிட்செல் சான்ட்னெர், டேரில் மிட்செல், பிலிப்ஸ், ராபின்சன், நீஷம், சோதி, ரச்சின் ரவீந்திரா என்று நட்சத்திர வீரர்களுக்கு பஞ்சமில்லை. மேலும் அந்த அணியில் பெரும்பாலான வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆடுவதால் இங்குள்ள சூழல் அவர்களுக்கு பரீட்சயமானதே. அதனால் கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. பின்னங்கால் காயத்தால் அவதிப்படும் ஆல்-ரவுண்டர் பிரேஸ்வெல் ஆடமாட்டார் என்று தெரிகிறது.

    இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 25 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14-ல் இந்தியாவும், 10-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் சமனில் முடிந்தது.

    நாக்பூர் மைதானத்தில் இந்திய அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. இதில் 2016-ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 79 ரன்னில் சுருண்டு தோற்றதும் அடங்கும். போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா அல்லது ஷிவம் துபே, அர்ஷ்தீப்சிங் அல்லது குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.

    நியூசிலாந்து: டிம் ராபின்சன், டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), மேட் ஹென்றி, சோதி, ஜேக்கப் டப்பி.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் நடைபெறுகிறது.
    • கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை மிகப் பெரிய கிரிக்கெட் பிரியர் ஆவார்.

    புதுடெல்லி:

    19-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் 15-ம் தேதி தொடங்கி மே 31-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் முக்கிய ஸ்பான்சராக சுந்தர் பிச்சையின் கூகுள் ஜெமினி களத்தில் இறங்கியுள்ளது.

    உலகளவில் ஏஐ போட்டியில் முன்னணியில் உள்ள கூகுள் நிறுவனத்தின் ஜெமினி, இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஸ்பான்சராக 3 ஆண்டுக்கு ரூ.270 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    இது ஐ.பி.எல். வரலாற்றில் AI தளங்களுடன் செய்யப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இந்த ஒப்பந்தம் கிரிக்கெட்டில் AI நிறுவனங்களின் ஆர்வம் வேகமாக அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது.

    ஏற்கனவே, பெண்கள் பிரீமியர் லீக் உடன் சாட் ஜிபிடி ரூ.16 கோடி மதிப்பிலான 2 ஆண்டு விளம்பர ஒப்பந்தம் செய்தது.

    கூகுள் நிறுவனத்தின் சிஇஓவான சுந்தர் பிச்சை மிகப் பெரிய கிரிக்கெட் பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெர்த்தில் இன்று நடைபெற்ற தகுதிச்சுற்றில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின.
    • டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    பெர்த்:

    பிக்பாஷ் லீக் தொடரின் லீக் சுற்றுகள் முடிந்து தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், பெர்த்தில் இன்று நடைபெற்ற குவாலிபையர் சுற்றில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்சர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 147 ரன்கள் எடுத்தது. பின் ஆலன் 49 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் அணி களமிறங்கியது. பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், சிட்னி சிக்சர்ஸ் 15 ஓவரில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

    பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி சார்பில் மாலி பேர்ட்மேன் 3 விக்கெட்டும், டேவிட் பைன், கூப்பர் கன்னோலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது பின் ஆலனுக்கு அளிக்கப்பட்டது.

    • மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது பிரேஸ்வெல்க்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது.
    • காயம் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஓய்வு வழங்கியுள்ளது.

    இந்தியா -நியூசிலாந்து அணிகள் ஒருநாள், டி20 போட்டிகளில் மோதி வருகிறது. முதல் நடந்த ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இரு அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இத்தொடர் நாளை நாக்பூரில் தொடங்குகிறது.

    இந்நிலையில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல், டி20 தொடரில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. இந்தூரில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது அவருக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது.

    காயம் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஓய்வு வழங்கியுள்ளது. மாற்று வீரராக கிறிஸ்டியன் கிளார்க், இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்காக டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சர்வதேச போட்டியில் இவர் அறிமுகமானார். இந்த தொடரில் இருமுறை தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, மொத்தம் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நியூசிலாந்தின் வெற்றிக்கு பேட்டிங்கிலும் அவர் முக்கிய பங்கை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முகமது ஷமி, கிரிக்கெட்டுக்காக சிறு வயதிலேயே கொல்கத்தாவில் குடியேறிவிட்டார்.
    • எஸ்.ஐ.ஆர். படிவத்தை முகமது ஷமி சரியாக பூர்த்தி செய்யவில்லை.

    கொல்கத்தா:

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டபோதும், விவரங்கள் போதுமானதாக இல்லை என ஒரு கோடி பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    அதன்படி, கொல்கத்தாவில் வாக்குரிமை பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரரான முகமது ஷமிக்கும் தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. எஸ்.ஐ.ஆர்.படிவத்தை முகமது ஷமி சரியாக பூர்த்தி செய்யவில்லை என கூறப்படும் நிலையில், உரிய ஆவணங்களுடன் வாக்குச்சாவடியில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட முகமது ஷமி, கிரிக்கெட்டுக்காக சிறு வயதிலேயே கொல்கத்தாவில் குடியேறிவிட்டார்.

    இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற எஸ்ஐஆர் விசாரணைக்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இன்று ஆஜரானார். மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் (SIR) நடைமுறையின் கீழ் திட்டமிடப்பட்ட விசாரணைக்காக, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இன்று கொல்கத்தாவில் உள்ள தேர்தல் அதிகாரிகளிடம் ஆஜராகி உள்ளார்.

    தெற்கு கொல்கத்தாவின் பிக்ரம்கர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், ஷமி தேவையான ஆவணங்களுடன் தேர்தல் அதிகாரிகளிடம் ஆஜராகி உள்ளார்.

    ×