என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • கான்வே 10 ரன்னிலும், கேன் வில்லியம்சன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
    • வில் யங் 56 பந்தில் அரைசதம் கடந்தார்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று பாகிஸ்தான் கராச்சி மைதானத்தில் தொடங்கியது. நடைபெற்று வரும் முதல் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் வில் யங், டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கான்வே 17 பந்தில் 10 ரன் எடுத்த நிலையில் அப்ரார் அகமது பந்தில் க்ளீன் போல்டானார்.

    அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 2 பந்துகளை சந்தித்த நிலையில் 1 ரன் எடுத்து நசீம் ஷா பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து 40 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய டேரில் மிட்செலும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இவரும் 10 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். டேரில் மிட்செல் 10 ரன்னில் ஹாரிஸ் ராஃப் பந்தில் ஆட்டமிழந்தார்.

    ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் வில் யங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

    இதற்கிடையே நியூசிலாந்து 10 ஓவரில 48 ரன்கள் சேர்த்தது. 11 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது, வில் யங் 56 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் விளாசினார். 22.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

    நியூசிலாந்து 28.4 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுது்து விளையாடி வருகிறது. டாம் லாதம் 25 ரன்களுடனும், வில் யங் 87 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • சுப்மன் கில் 796 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    • பாபர் அசாம் 776 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு பின்னடைந்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கமிட்டி (ICC) வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி இந்திய தொடக்க வீரர் சுப்மன் கில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    கடந்த வாரம் வெளியிடப்பட்ட தரவரிசையின்போது சுப்மன் கில் 2-வது இடம் பிடித்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் சதம் விளாசியதன் மூலம் தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். சுப்மன் கில் 796 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியில் பாபர் அசாம் சிறப்பான விளையாடவில்லை. இதனால் 776 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் சதம் விளாசிய ரோகித் சர்மா கடந்த வாரம் 3-வது இடத்தில் இருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான 3-வது போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் 761 புள்ளிகளுடன் அதே இடத்தில் நீடிக்கிறார்.

    தென்ஆப்பிரிக்க வீரர் கிளாசன் 756 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் 2 இடங்களில் முன்னேறி 740 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி 727 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் நீடிக்கிறார்.

    ஷ்ரேயாஸ் அய்யர் 679 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். அயர்லாந்து வீரர் டெக்கர் 7-வது இடத்தையும், இலங்கை வீரர் அசலங்கா 8-வது இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது
    • 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

    8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கட் தொடர் பாகிஸ்தானில் இன்று மதியம் தொடங்கியது. கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    நியூசிலாந்து அணி:-

    1. வில் யங், 2. கான்வே, 3. கேன் வில்லியம்சன், 4. டேரில் மிட்செல், 5. டாம் லாதம், 6. பிலிப்ஸ், 7. பிரேஸ்வெல், 8. சான்ட்னெர், 9. மேட் ஹென்றி, 10. நாதன் ஸ்மித், 11. வில் ஓ, ரூர்கே.

    பாகிஸ்தான் அணி:-

    1. ஃபஹர் ஜமான், 2. பாபர் அசாம், 3. சாத் ஷாகீல், 4. முகமது ரிஸ்வான், 5. சல்மான் ஆகா, 6. தையப் தாஹிர், 7. குஷ்தில் ஷா, 8. ஷாஹீன் ஷா அப்ரிடி, 9. நசீம் ஷா, 10. ஹாரிஷ் ராஃப், 11. அப்ரார் அகமது.

    இந்த தொடரில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய 4 அணிகள் ஏ பிரிவிலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகளும பி பிரிவிலும் இடம் பிடித்துள்ளனர்.

    ஒவ்வொரு பிரிவில் உள்ள அணிகள் அதேபிரிவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் சாம்பியன்ஸ் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும்.

    • புதிய பந்தில் ராணா எவ்வாறு பந்து வீசினார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஹர்ஷித் ராணா
    • ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் வலது கை பேட்ஸ்மேன்கள், இடதுகை வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறுவார்கள்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் பும்ரா இல்லாதது மிகப்பெரிய பின்னடைவை இந்திய அணிக்கு ஏற்படுத்திருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    மேலும் பும்ராவுக்கு பதில் இடது கை வேகப் பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்வேன் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டி 20 கிரிக்கெட்டில் அவர் எவ்வளவு அபாரமாக பந்து வீசினார் என்று அனைவருக்கும் தெரியும். அர்ஸ்தீப் சிங்கிடம் நல்ல திறமை இருக்கிறது. பும்ரா போல் அவரால் பந்து வீச முடியும். புதிய பந்தையும், பழைய பந்தையும் பயன்படுத்தி அர்ஸ்தீப் சிங் சிறப்பாக செயல்படுவார். இதனால் பும்ராவுக்கு பதில் அர்ஸ்தீப் சிங்கை தான் பயன்படுத்த வேண்டும்.

    இதற்காக ஹர்ஷித் ராணாவை நான் குறை சொல்லவில்லை. அவரிடமும் நிறைய திறமை இருக்கின்றது. புதிய பந்தில் அவர் எவ்வாறு பந்து வீசினார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஆட்டத்தின் டெத் ஓவரில் பந்து வீச முடியாது என்பது உண்மையே. ஏனென்றால் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் முறை என்பது முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கும். அவர்களால் புதிய பந்தை சிறப்பாக பயன்படுத்த முடியும்.

    அது போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் வலது கை பேட்ஸ்மேன்கள், இடதுகை வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறுவார்கள். எனவே நான் கேப்டன் ஆக இருந்தால், அர்ஸ்தீப் சிங்கை தான் பயன்படுத்துவேன்.

    என்று பாண்டிங் கூறியுள்ளார். 

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் கிறிஸ் கெய்ல் முதலிடம் வகிக்கிறார்.
    • 3-வது இடத்தில் இந்தியாவின் ஷிகர் தவான் உள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெஸ்ட்இண்டீசின் கிறிஸ் கெய்ல் முதலிடம் (17 ஆட்டத்தில் 3 சதம் உள்பட 791 ரன்) வகிக்கிறார்.

    2-வது இடத்தில் இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனேவும் (742 ரன்), 3-வது இடத்தில் இந்தியாவின் ஷிகர் தவானும் (10 ஆட்டத்தில் 3 சதம் உள்பட 701 ரன்) உள்ளனர். இவர்கள் அனைவரும் ஓய்வு பெற்று விட்டனர்.

    கெய்லின் சாதனையை முறியடிக்க இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அருமையான வாய்ப்பு கிட்டியுள்ளது. கோலி இதுவரை 13 ஆட்டத்தில் ஆடி 5 அரைசதம் உள்பட 529 ரன் எடுத்துள்ளார். இன்னும் 263 ரன்கள் எடுத்தால் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை படைக்க முடியும்.

    இந்திய கேப்டன் ரோகித் சர்மா 481 ரன்கள் (10 ஆட்டம்) எடுத்துள்ளார். அனேகமாக ரோகித் சர்மாவின் கடைசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியாக இது இருக்கும் என்பதால் அவரும் முத்திரை பதிக்க முயற்சிப்பார்.

    அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் டாப்-3 இடங்களில் நியூசிலாந்தின் கைல் மில்ஸ் (28 விக்கெட்), இலங்கையின் மலிங்கா (25 விக்கெட்), முரளிதரன் (24 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆகாஷ் 106 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • விதர்பா அணி தரப்பில் பார்த் ரேகாடே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    நாக்பூர்:

    ரஞ்சி கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் மும்பை- விதர்பா அணிகள் இடையிலான அரையிறுதி ஆட்டம் நாக்பூரில் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த விதர்பா அணி முதல் இன்னிங்சில் 383 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. யாஷ் ரதோட் 54 ரன்களிலும், அக்ஷய் வாத்கர் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மும்பை தரப்பில் ஷிவம் துபே 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன ஆகாஷ் ஆனந்த் நிலைத்து விளையாட மறுமுனையில் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் இழந்த வண்ணம் இருந்தது.

    முன்னணி வீரர்களான ரகானே 18 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே இருவரும் டக் அவுட் ஆனதும் மும்பை அணிக்கு பின்னடைவை கொடுத்தது. 2-வது நாள் ஆட்ட முடிவில் மும்பை 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களுடன் தடுமாறியது. ஆகாஷ் ஆனந்த் 67 ரன்களுடனும், தனுஷ் கோட்டியான் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து இன்று 3-நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆகாஷ் ஆனந்த் சதம் விளாசி அசத்தினார். அவர் 106 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி 92 ஓவர்களில் 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 113 ரன்கள் விதர்பா அணி முன்னிலையி உள்ளது.

    • போட்டியில் விளையாடும் 8 நாடுகளின் தேசிய கொடிகள் ஸ்டேடியங்களில் ஏற்றப்பட வேண்டும்.
    • பாகிஸ்தான் ஸ்டேடியத்தில் இந்திய தேசிய கொடி மட்டும் ஏற்றப்படவில்லை.

    கராச்சி:

    சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி பாதுகாப்பு கருதி பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது. இதனால் இந்தியா மோதும் ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் நடக்கிறது.

    பாகிஸ்தானில் உள்ள கராச்சி, லாகூர், ராவல் பிண்டி ஆகிய 3 நகரங்களில் போட்டி நடக்கிறது. போட்டியில் விளையாடும் 8 நாடுகளின் தேசிய கொடிகள் ஸ்டேடியங்களில் ஏற்றப்பட வேண்டும். ஆனால் பாகிஸ்தான் ஸ்டேடியத்தில் இந்திய தேசிய கொடி மட்டும் ஏற்றப்படவில்லை.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியானது. அதில் லாகூர் ஸ்டேடியத்தில் இந்திய கொடி மட்டும் இல்லை. மற்ற நாட்டு கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தது. இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் வேண்டுமென்றே இந்தியாவின் கொடியை ஏற்றவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த புறக்கணிப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் சர்ச்சையை தொடர்ந்து இந்தியாவின் கொடி பாகிஸ்தான் ஸ்டேடியங்களில் ஏற்றப்பட்டது.

    சாம்பியன்ஸ் டிராபி இன்று தொடங்க உள்ள நிலையில் கராச்சி ஸ்டேடியத்தில் இந்திய கொடி காணப்பட்டது.

    • ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக ஷர்துல் தாகூர் விளையாடி வருகிறார்.
    • கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ESSEX அணிக்காக இந்திய வீரர் ஷர்துல் தாக்கூர் ஒப்பந்தமாகியுள்ளார்.

    இந்தியாவில் ரஞ்சி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் அரையிறுதியில் மும்பை, விதர்பா, கேரளா, குஜராத் அணிகள் முன்னேறியுள்ளனர். ஒரு அரையிறுதியில் குஜராத் -கேரளா அணிகளும் மற்றொரு அறையிறுதியில் மும்பை- விதர்பா அணிகளும் மோதுகின்றனர்.

    இந்நிலையில் இந்த தொடர் முடிந்தவுடன் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் மும்பை அணியில் இடம்பிடித்துள்ள ஷர்துல் தாகூர் விளையாட உள்ளார்.

    கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ESSEX அணிக்காக இந்திய வீரர் ஷர்துல் தாக்கூர் ஒப்பந்தமாகியுள்ளார். ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் 7 கவுண்டி போட்டிகளில் அவர் விளையாடுகிறார்.

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வரும் ஜூனில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதற்கான பயிற்சியாக கவுண்டி போட்டிகள் அமையும் என பார்க்கப்படுகிறது.

    • நிச்சயம் பாபர் அசாம் தான் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும்.
    • எங்களுக்கு வேறு வழியில்லாமல் இதனை நான் கூறவில்லை.

    சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் தொடங்குகிறது. இந்த தொடரில் முதல் லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

    சமீப காலமாக பேட்டிங்கில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் தடுமாறி வருவது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பாபர் அசாம் கடைசி 21 போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

    இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இடத்திற்கு பாபர் அசாம் தான் சரியான தேர்வு என அந்த அணி கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    பாபர் அசாம் கேப்டனாக இருந்தபோது, நாங்கள் ஐசிசி தொடர்களில் ஒரு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடினோம். ஆனால் தற்போது நாங்கள் அந்த ஒரு சதவீதத்தையும் பூர்த்தி செய்து சாம்பியன் பட்டத்தை அடைய முயற்சிக்கிறோம்.

    சூழ்நிலைகளைப் பார்த்து, அணிக்கு எது சிறந்தது என்பதை ஆராய்ந்தால், நிச்சயம் பாபர் அசாம் தான் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும். எங்களுக்கு வேறு வழியில்லாமல் இதனை நான் கூறவில்லை.

    எங்களிடம் தொடக்க வீரர் இடத்திற்கு நிறைய தேர்வுகள் இருக்கும் நிலையிலும், தற்போது அணியின் தொடக்க வீரர் இடத்திற்கு பாபர் அசாம் மிகச்சிறந்த தேர்வாக உள்ளார். மேலும் அவரும் அதனை விரும்புகிறார்.

    எங்களுக்கு உண்மையான தொடக்க வீரர்கள் வேண்டும். ஆனால் அணியின் தேவைகளைப் பொறுத்தவரை, தொழில்நுட்ப ரீதியாக வலுவான பேட்ஸ்மேன் என்பதால் பாபர் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். எனவே அவர் தான் தற்போது எங்கள் அணியின் தொடக்க வீரர் என்று தெரிவித்துள்ளார். 

    • அயர்லாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பென் கரண் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
    • பென் கரணின் சகோதரர்களான டாம் கரண், சாம் கரண் ஆகியோர் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகின்றனர்.

    அயர்லாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்றது. இதில் முதல் 2 போட்டிகள் முடிவில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரை சமன்செய்திருந்தது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களைச் சேர்த்தது.

    அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி 39.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியதுடன் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. இப்போட்டியில் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த பென் கரண் ஆட்டநாயகன் விருதை வென்றார்.


    இந்நிலையில் பென் கரண் குடும்பத்தில் முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை பென் கரண் படைத்துள்ளார். பென் கரணின் சகோதரர்களான டாம் கரண், சாம் கரண் ஆகியோர் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் சர்வதேச போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • முதலில் பேட் செய்த அமெரிக்கா 35.3 ஓவர்களில் 122 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • இலக்கை நோக்கி களமிறங்கிய உள்ளூர் அணியான ஓமன் 25.3 ஓவர்களில் 65 ரன்னில் சுருண்டது.

    அல் அமராட்:

    உலகக் கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தகுதி சுற்றின் ஒரு பகுதியான உலகக் கோப்பை கிரிக்கெட் லீக்2 ஓமனின் அல் அமராட் நகரில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்கா - ஓமன் இடையிலான ஒரு ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த அமெரிக்கா 35.3 ஓவர்களில் 122 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    அடுத்து 123 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய உள்ளூர் அணியான ஓமன் 25.3 ஓவர்களில் 65 ரன்னில் சுருண்டது. இதனால் அமெரிக்கா 57 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஓவர் எதுவும் குறைக்கப்படாமல் முழுமையாக நடந்த ஒரு நாள் போட்டி ஒன்றில் மிக குறைந்த ஸ்கோரை இலக்காக நிர்ணயித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை அமெரிக்கா படைத்துள்ளது. இதற்கு முன்பு 1985-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 125 ரன்களை இலக்காக நிர்ணயித்து எதிரணியை 87 ரன்னில் முடக்கி வென்றதே இந்த வகையில் சாதனையாக இருந்தது. அந்த 40 ஆண்டு கால சாதனையாக அமெரிக்கா முறியடித்தது.

    மேலும் ஓமன் தரப்பில் 5 பவுலர்களும், அமெரிக்கா தரப்பில் 4 பவுலர்களும் பந்து வீசினர். இவர்கள் அனைவரும் சுழற்பந்து வீச்சாளர்கள். ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில், முழுமையாக நடந்த ஒரு ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கூட பந்து வீசாதது இதுவே முதல் நிகழ்வாகும்.

    • கராச்சி ஆடுகளம் பவுலிங்கை விட பேட்டிங்குக்கே அதிகமாக ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய 3 ஆட்டங்களிலும் நியூசிலாந்தே வெற்றி பெற்றுள்ளது.

    கராச்சி:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில், மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1998-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. குறுகிய காலத்தில் நடத்தப்படும் இந்த போட்டிக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உண்டு.

    கடைசியாக 2017-ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி, இந்தியாவை வீழ்த்தி மகுடம் சூடியது. அத்துடன் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நிறுத்துவதாக அறிவித்த ஐ.சி.சி., ஓரிரு ஆண்டுக்கு பிறகு சில நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் கோரிக்கையை ஏற்று சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை மீண்டும் நடத்தும் முடிவுக்கு வந்தது.

    இந்த நிலையில் 8 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த போட்டி தற்போது நடத்தப்பட உள்ளது. இதன்படி 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் இன்று முதல் அடுத்த மாதம் (மார்ச்) 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் அதுவும் துபாயிலேயே நடத்தப்படும். மாறாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு வராவிட்டால் இறுதிப்போட்டி லாகூரில் அரங்கேறும்.

    இந்த கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    சாம்பியன்ஸ் கோப்பையில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும். அதனால் ஒவ்வொரு அணியினரும் நீயா-நானா? என்று வரிந்து கட்டி நிற்பார்கள்.

    சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்திய இந்தியா, பாகிஸ்தானில் நடந்த முத்தரப்பு தொடரில் வாகை சூடிய நியூசிலாந்து மற்றும் 2 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் பிரதான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் இடம்பெறவில்லை. ஆனாலும் பலம் வாய்ந்த அணியாகவே காணப்படுகிறது.

    முதல் நாளான இன்று (புதன்கிழமை) கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, மிட்செல் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

    நியூசிலாந்து அணியை பொறுத்தவரை கடந்த வாரம் நடந்த முத்தரப்பு தொடரில் பாகிஸ்தானை இரண்டு முறை தோற்கடித்து மிரட்டியது. அதனால் அவர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணுவார்கள். கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், வில் யங், டிவான் கான்வே, கிளென் பிலிப்ஸ் ஆகியோர் பேட்டிங்கிலும், சான்ட்னெர், பிரேஸ்வெல், மேட் ஹென்றி, வில்லியம் ஓ ரூர்கே உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் வலுசேர்க்கிறார்கள். பந்து தாக்கி நெற்றியில் காயமடைந்த ரச்சின் ரவீந்திரா உடல்தகுதியை எட்டும்பட்சத்தில் அந்த அணியின் பேட்டிங் மேலும் வலிமையடையும்.

    உள்ளூர் சூழல் பாகிஸ்தானுக்கு சாதகமான அம்சமாகும். முத்தரப்பு தொடரில் சோபிக்காத முன்னாள் கேப்டன் பாபர் அசாம் பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளார். இந்த போட்டியிலும் அவர் தொடக்க வீரராக இறங்குவதை கேப்டன் ரிஸ்வான் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் காயத்தில் இருந்து மீண்டு முழு உடல்தகுதியை எட்டி விட்டதாகவும் ரிஸ்வான் கூறினார். மற்றபடி ரிஸ்வான், சல்மான் ஆஹா, ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இவ்விரு அணிகள் இதுவரை 118 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 53-ல் நியூசிலாந்தும், 61-ல் பாகிஸ்தானும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. 3 ஆட்டத்தில் முடிவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய 3 ஆட்டங்களிலும் நியூசிலாந்தே வெற்றி பெற்றுள்ளது.

    மொத்தத்தில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கராச்சி ஆடுகளம் பவுலிங்கை விட பேட்டிங்குக்கே அதிகமாக ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இங்கு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 353 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து வரலாறு படைத்தது நினைவு கூரத்தக்கது.போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    நியூசிலாந்து: கான்வே, ரச்சின் ரவீந்திரா அல்லது வில் யங், வில்லியம்சன், டாம் லாதம், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), மேட் ஹென்றி, ஜேக்கப் டப்பி, வில்லியம் ஓ ரூர்கே.

    பாகிஸ்தான்: பாபர் அசாம், பஹர் ஜமான், சாத் ஷகீல், முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் ஆஹா, தயாப் தாஹிர், குஷ்தில் ஷா, ஹாரிஸ் ரவுப், ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது.

    பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ்18 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் பார்க்கலாம்.

    போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.60 கோடியாகும். இதில் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.19½ கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.9¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

    ×