என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
    • இதில் 6-ல் சேப்பாக் சூப்பர் கில்லீசும், ஒன்றில் திருப்பூரும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.

    கோவை:

    9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில், கோவையில் இன்றிரவு நடக்கும் 2-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருப்பூர் தமிழன்சை சந்திக்கிறது.

    4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் புதிய சீசனை வெற்றியுடன் தொடங்கும் வேட்கையுடன் தயாராகியுள்ளது. கேப்டன் பாபா அபராஜித், என்.ஜெகதீசன், ஆல்-ரவுண்டர்கள் விஜய் சங்கர், அபிஷேக் தன்வர், சுழற்பந்து வீச்சாளர் ஸ்வப்னில் சிங் போன்ற முன்னணி வீரர்கள் கில்லீஸ் அணியில் உள்ளனர்.

    சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியில் பிரதோஷ் ரஞ்சன் பால், ராதாகிருஷ்ணன், சசிதேவ், அமித் சாத்விக், வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் என்று திறமையான வீரர்களுக்கு குறைவில்லை. அதனால் அவர்கள் கடும் சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6-ல் சேப்பாக் சூப்பர் கில்லீசும், ஒன்றில் திருப்பூரும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.

    இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • பெங்களூரு அணி மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • போலீஸ் கமிஷனர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி கோப்பையை வென்றதை அடுத்து கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அக்கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இச்சம்பத்திற்கு பலர் கண்டனமும் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்த 11 பேர் பலியானது தொடர்பாக பெங்களூரு அணி மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், போலீஸ் கமிஷனர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில், 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆர்சிபி அணி நிர்வாகி நிகில் சோசாலே, டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த சுனில், கிரண் உள்ளிட்ட 4பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது.

    மும்பை:

    இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியதாவது:

    பெங்களூருவில் நடந்த உயிரிழப்பு குறித்து கேட்கிறீர்கள். அதற்கு நான் பதில் சொல்ல வேண்டியது அவசியம். எனக்கு எப்போதும் வெற்றி கொண்டாட்ட ஊர்வலங்களை நடத்துவதில் நம்பிக்கை இருந்ததில்லை.

    2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வென்றபோது கூட இதையே நான் கூறினேன். ஏனெனில் வெற்றி கொண்டாட்டத்தை விட மக்களின் வாழ்க்கை முக்கியமானது. ரோடு ஷோ நடத்துவதற்கு ஏற்ப நீங்கள் முழுமையாக தயாராக இல்லை என்றால், அதை நடத்தியிருக்கக் கூடாது. எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்களில் நாம் இன்னும் பொறுப்புணர்வுடன் இருக்கவேண்டும். மைதானத்திலோ அல்லது மூடிய அரங்கிலோ இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தலாம்.

    இங்கிலாந்தில் விளையாடும்போது ஆடுகளத்தன்மை மட்டுமின்றி, மேகமூட்டமான சீதோஷ்ண நிலையையும் கவனிக்க வேண்டும். இதற்கு ஏற்ப ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வோம்.

    இளம் வீரர்கள் உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டில் விளையாட வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். உள்ளூர் போட்டியில் தொடர்ந்து சிறப்பாக ஆடினால் தேசிய அணிக்கான கதவு திறக்கும். அதற்கு சரியான உதாரணம் இப்போது அணிக்கு திரும்பியிருக்கும் கருண் நாயர். அவரது அனுபவம் நிச்சயம் அணிக்கு உதவிகரமாக இருக்கும். ஆனால் ஒன்றிரண்டு டெஸ்ட் போட்டியை வைத்து ஒரு வீரரின் திறமையை மதிப்பிட மாட்டோம் என தெரிவித்தார்.

    • இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது.

    மும்பை:

    இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது:

    ஒவ்வொரு தொடரிலும் ஏதாவது ஒரு வகையில் நெருக்கடி இருக்கும்.

    நீண்ட காலம் சிறப்பாக விளையாடிய இரு முன்னணி வீரர்கள் இல்லாமல் இந்திய அணி களமிறங்குகிறது.

    அவர்களது இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல. சீனியர் வீரர்கள் இல்லாமல் விளையாட பழகி வருகிறோம்.

    மற்றபடி டெஸ்ட் அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட உடன் திகைத்து விட்டேன்.

    இது மிகப்பெரிய பொறுப்பு. இதற்கான சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். கேப்டன் பணியில் எனக்கென ஸ்டைல் எதுவும் இல்லை.

    அணியின் மற்ற வீரர்களின் பலம், பலவீனங்களை அவர்களுக்கு தெரிவிக்க முயற்சிப்பேன். அணியில் தங்களது இடம் பாதுகாப்பானது என்பதை அவர்கள் உணர வேண்டும். அப்போது தான் சிறப்பாக செயல்படுவர்.

    டெஸ்ட் தொடருக்கான பேட்டிங் ஆர்டர் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இந்திய வீரர்கள் இரு அணியாக பிரிந்து பயிற்சி போட்டியில் பங்கேற்க உள்ளோம். பும்ரா விளையாடினால் சிறப்பாக இருக்கும். அவர் இல்லாதபோது சமாளிக்கத் தேவையான பவுலர்கள் அணியில் உள்ளனர்.

    என்னைப் பொறுத்தவரையில் சராசரிகளை நம்புவது இல்லை. கேப்டனாக, மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க முயற்சிப்பேன் என தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த லைகா கோவை கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது.

    கோவை:

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 2025 சீசனின் முதல் போட்டி கோவையில் இன்று நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.

    பாலசுப்ரமணியன் சச்சின் சிறப்பாக விளையாடி 38 பந்தில் 51 ரன்கள் எடுத்தார். ஆந்த்ரே சித்தார்த் 23 பந்தில் 25 ரன்களும், ஷாருக் கான் 14 பந்தில் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சார்பில் அஸ்வின், சந்தீப் வாரியர், ஜி.பெரியசாமி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அஸ்வின் 15 ரன்னில் வெளியேறினார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அணியை கடைசி வரை நின்று வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஷிவம் சிங் 82 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், திண்டுக்கல் அணி 17.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    • பாலசுப்ரமணியன் சச்சின் 38 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • அஸ்வின் 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 2025 சீசனின் முதல் போட்டி கோவையில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி லைகா கோவை கிங்ஸ் அணியின் விஷால் வைத்யா, சுரேஷ் லோகேஷ்வர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விஷால் 6 ரன்னிலும், லோகேஷ்வர் 15 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த பாலசுப்ரமணியன் சச்சின் சிறப்பாக விளையாடினார். அவர் 38 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆந்த்ரே சித்தார்த் 23 பந்தில் 25 ரன்களும், ஷாருக் கான் 14 பந்தில் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியாக லைகா கோவை கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் அஸ்வின் 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், ஜி. பெரியசாமி 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • சின்னசாமி மைதான நுழைவாயில் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
    • ஆர்சிபி அணிக்கெதிராக போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனால் நேற்று ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விதான சவுதாவில் (சட்டசபை, தலைமை செயலகம் அமைந்துள்ள இடம்) முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். நுழைவாயில் அருகே திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்திய அணி இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து புறப்படுகிறார்கள். புறப்படுவதற்கு முன்னதாக இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

    அப்போது பெங்களூரு சின்னசாமி மைதானம் நுழைவாயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து கம்பீர் கூறியதாவது:-

    நான் ஒருபோதும் ரோடு ஷோ நடத்துவதை நம்புவதில்லை. ரோடு ஷோ நடத்தக்கூடாது. மக்களின் உயிர் முக்கியமானது.

    இவ்வாறு தெரிவித்தார்.

    மேலும், இங்கிலாந்து டெஸ்ட் குறித்து கூறுகையில் "பும்ரா எந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. அணி தோற்றாலும், வெற்றி பெற்றாலும் எப்போதும் நான் நெருக்கடியில் இருப்பேன். சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு முடிவு தரக்கூடிய சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்வோம்" என்றார்.

    • 2021ஆம் ஆண்டில் இருந்து டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
    • ஐபிஎல் தொடரின்போது கை விரலில் முறிவு ஏற்பட்டது.

    இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்ச்சர். இவர் கடந்த 2021-ல் இருந்து தொடர் காயம் காரணமாக டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் உள்ளார். இந்தியா இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

    இந்த தொடரில் ஆர்ச்சர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும்போது கை விரலில் முறிவு ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார்.

    தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் ஆர்ச்சர் விளையாட வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து அணியின் தேர்வாளர் லூக் ரைட் தெரிவித்துள்ளார்.

    அவரை சசக்ஸின் 2ஆம் கட்ட அணியில் விளையாட வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின் துர்ஹாம் அணிக்கெதிரான சசக்ஸ் விளையாடும் போட்டியில் களம் இறக்கப்படுவார். சசக்ஸ் அணிக்காக விளையாடி, அனைத்து விசயங்களும் நன்றாக சென்றால், அதன்பின் இந்திய அணிக்கெதிரான இங்கிலாந்து அணியில் இடம் பெறுவார்" என்றார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் (ஹெட்டிங்லே) ஜூன் 20ஆம் தேதி தொடங்குகிறது. 2ஆவது டெஸ்ட் (எட்ஜ்பாஸ்டன்) ஜூலை 2ஆம் தேதியும், 3ஆவது டெஸ்ட் (லார்ட்ஸ்) ஜூலை 10ஆம் தேதியும், 4ஆவது டெஸ்ட் (ஓல்டு டிராஃப்போர்டு) ஜூலை 23ஆம் தேதியும், 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் (ஓவல்) ஜூலை 31ஆம் தேதியும் தொடங்குகிறது.

    • திண்டுக்கல் அணியில் அஸ்வின், வருண் சக்ரவர்த்தி உள்ளனர்.
    • லைகா கோவை கிங்ஸ் அணியில் ஷாருக்கான், மணிமாறன் சித்தார்த் உள்ளனர்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 2025 சீசனின் முதல் போட்டி கோவையில் இன்று தொடங்குகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    லைகா கோவை கிங்ஸ் அணி:-

    விஷால் வைத்யா, சுரேஷ் லோகேஷ்வர், பி. சச்சின், அந்த்ரே சித்தார்த், ஷாருக் கான், ஜிதேந்திர குமார், பிரதீப் விஷால், மணிமாறன் சித்தார்த், பி. புவனேஸ்வரன், ராமலிங்கம் ரோகித், ஜே. சுப்ரமணியன்.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணி:-

    ஷிவம் சிங், அஸ்வின், விமல் குமார், பாபா இந்திரஜித், மான் பஃவ்னா, ஆகாஷ் சர்மா, எம். கார்த்திக் சரண், வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், டி.டி. சந்திரசேகர், ஜி. பெரியசாமி.

    • கொழும்பு கிங்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த இருவருடன் சூதாட்டத்தில் ஈடுபடுவது குறித்து சச்சித்திர சேனநாயக்கா பேசியுள்ளார்.
    • சச்சித்திர சேனநாயக்கா 2023-ல் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    கொழும்பு:

    இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்திர சேனநாயக்கா. சுழற்பந்து வீச்சாளரான இவர் இலங்கையில் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கிய லங்கா பிரீமியர் லீக் தொடரில் கொழும்பு கிங்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த இருவருடன் சூதாட்டத்தில் ஈடுபடுவது குறித்து பேசியுள்ளார்.

    அவர் துபாயில் இருந்து தொலைபேசி மூலம் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இதற்காக அவர் 2023-ல் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் சச்சித்ர, லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டியின் போது சக வீரரை மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுத்த முயன்றதாக இவர் மீது ஹம்பாந்தோட்டை உயர் நீதிமன்றம் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், மேட்ச் பிக்சிங்கிற்காக தேசிய அளவிலான கிரிக்கெட் வீரர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட முதல் குற்றச்சாட்டு இதுவாகும்.

    சச்சித்ர சேனநாயக் 2012 முதல் 2016 வரை இலங்கை அணிக்காக ஒரு டெஸ்ட், 49 ஒருநாள் மற்றும் 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 2014-ம் ஆண்டு இலங்கை அணியுடன் டி20 உலகக் கோப்பையை வென்ற குழுவில் முக்கிய வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த அணியில் காயம் காரணமாக கஸ் அட்கின்சன் இடம்பிடிக்கவில்லை.
    • கிறிஸ் வோக்ஸ், ஜேமி ஓவர்டன், ஜேக்கப் பெத்தெல் மற்றும் பிரைடன் கார்ஸ் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரானது வரும் 13-ம் தேதி முதல் தொடங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லும், துணைக்கேப்டனாக ரிஷப் பண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சாய் சுதர்ஷன், கருண் நாயர், ஷர்துல் தாக்கூர், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கும் வய்ப்பு கிடைத்துள்ளது.

    இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தாலைமையிலான இந்த அணியில் காயம் காரணமாக கஸ் அட்கின்சன் இடம்பிடிக்கவில்லை. அதேசமயம் கிறிஸ் வோக்ஸ், ஜேமி ஓவர்டன், ஜேக்கப் பெத்தெல் மற்றும் பிரைடன் கார்ஸ் உள்ளிட்டோர் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.

    இங்கிலந்து அணி (முதல் டெஸ்ட்):-

    பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஓல்லி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்.

    • 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கோப்பை கிடைத்த மகிழ்ச்சியில் ஆர்சிபி ரசிகர்கள் சின்னசாமி திடலில் குவிந்தார்கள்.
    • அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

    ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக ஆர்சிபி அணி வென்றது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கோப்பை கிடைத்த மகிழ்ச்சியில் ஆர்சிபி ரசிகர்கள் சின்னசாமி திடலில் குவிந்தார்கள். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்துக்காக ஆர்சிபி நிர்வாகம், விராட் கோலி, ஏபிடி தங்களது இரங்களை பகிர்ந்துகொண்ட நிலையில் ஸ்மிருதி மந்தனா தனது வருத்தத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பெங்களூரில் உயிரிழந்தவர்கள் செய்தி கேட்டு இதயம் உடைந்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கும் உறவினர்களும் எனது அஞ்சலிகள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனக் கூறியுள்ளார்.

    ஆர்சிபி அணிக்கு முதல் கோப்பையை வென்று கொடுத்தது ஸ்மிருதி மந்தனா என்பது குறிப்பிடத்தக்கது.

    ×