என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஒன்றிரண்டு டெஸ்ட் போட்டியை வைத்து ஒரு வீரரின் திறமையை மதிப்பிடமாட்டோம்: கம்பீர் பேட்டி
- இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது.
மும்பை:
இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியதாவது:
பெங்களூருவில் நடந்த உயிரிழப்பு குறித்து கேட்கிறீர்கள். அதற்கு நான் பதில் சொல்ல வேண்டியது அவசியம். எனக்கு எப்போதும் வெற்றி கொண்டாட்ட ஊர்வலங்களை நடத்துவதில் நம்பிக்கை இருந்ததில்லை.
2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வென்றபோது கூட இதையே நான் கூறினேன். ஏனெனில் வெற்றி கொண்டாட்டத்தை விட மக்களின் வாழ்க்கை முக்கியமானது. ரோடு ஷோ நடத்துவதற்கு ஏற்ப நீங்கள் முழுமையாக தயாராக இல்லை என்றால், அதை நடத்தியிருக்கக் கூடாது. எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்களில் நாம் இன்னும் பொறுப்புணர்வுடன் இருக்கவேண்டும். மைதானத்திலோ அல்லது மூடிய அரங்கிலோ இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தலாம்.
இங்கிலாந்தில் விளையாடும்போது ஆடுகளத்தன்மை மட்டுமின்றி, மேகமூட்டமான சீதோஷ்ண நிலையையும் கவனிக்க வேண்டும். இதற்கு ஏற்ப ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வோம்.
இளம் வீரர்கள் உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டில் விளையாட வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். உள்ளூர் போட்டியில் தொடர்ந்து சிறப்பாக ஆடினால் தேசிய அணிக்கான கதவு திறக்கும். அதற்கு சரியான உதாரணம் இப்போது அணிக்கு திரும்பியிருக்கும் கருண் நாயர். அவரது அனுபவம் நிச்சயம் அணிக்கு உதவிகரமாக இருக்கும். ஆனால் ஒன்றிரண்டு டெஸ்ட் போட்டியை வைத்து ஒரு வீரரின் திறமையை மதிப்பிட மாட்டோம் என தெரிவித்தார்.






