என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • டி.என்.பி.எல். 2025 சீசன் நேற்று தொடங்கியது.
    • முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் வீழ்த்தியது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 சீசன் நேற்று தொடங்கியது. இன்று கோவையில் நடைபெறும் 2ஆவது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் பாபா அபரஜித் டாஸ் வென்று பந்து வீச்சை தெர்வு செய்துள்ளார்.

    நேற்று நடைபெற்ற தொடக்க போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் வீழ்த்தியது.

    திருப்பூர் தமிழன்ஸ் அணி:-

    அமித் சாத்விக், துஷார் ராஹேஜா, உதிரசாமி சசிதேவ், கே. ராஜ்குமார், சாய் கிஷோர், முகமது அலி, பிரதோஷ் ரஞ்சன் பால், பிரபஞ்சன், எம். மதிவண்ணன், ஆர். சிலம்பரசன், டி. நடராஜன்

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி:-

    என். ஜெகதீசன், பாபா அபரஜித், அபிஷேக் தன்வர், எஸ் தினேஷ் ராஜ், ஆஷிக் ரஹ்மான், மோஹித் ஹரிகரன், விஜய் சங்கர், ஸ்வப்னில் சிங், பிரேம் குமார், எம். சிலம்பரசன், லோகேஷ் ராஜ்.

    • ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா விளையாட உள்ளது.
    • இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 11-ந் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி மற்றும் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி மோதுகிறது.

    இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அதனை தொடர்ந்து முத்தரப்பு தொடரிலும் விளையாட உள்ளது. முத்தரப்பு தொடரில் ஜிம்பாப்வே, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகிறது.

    இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியின் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், டெவால்ட் ப்ரீவிஸ் ஆகியோர் அறிமுகமாகின்றனர்.

    தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி:

    டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெவால்ட் பிரீவிஸ், கார்பின் போஷ், டோனி டி ஜோர்ஜி, ஜுபைர் ஹம்சா, கேசவ் மஹாராஜ், குவேனா மபாகா, வியான் முல்டர், லுங்கி என்கிடி, லுவான்-ட்ரே ப்ரிடோரியஸ், லெசெகோ செனோக்வானே, பிரெனலன் சுப்ராயென், கைல் வெர்ரெய்ன், கோடி யூசுப்.

    • பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் ஸ்டீட் அறிவித்திருந்தார்.
    • நியூசிலாந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராப் வால்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டிக்கும் தலைமை பயிற்சியாளராக கேரி ஸ்டீட் 2018-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தார். இடையில், இரண்டு முறை அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. சமீபத்தில் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்டீட் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் நியூசிலாந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராப் வால்டர் நியமிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் அறிவித்துள்ளது. கேரி ஸ்டீட் பதவி விலகிய நிலையில் 49 வயதான வால்டர் பொறுப்பேற்றுள்ளார்.

    வால்டரின் பதவிகாலம் ஜூன் நடுப்பகுதியில் இருந்து தொடங்கி 2028 ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதி வரை நீடிக்கும். இது நவம்பர் மாதத்தில் முடிவடையும்.


    • 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்தார்.
    • பியூஷ் சாவ்லா ஐபிஎல் தொடரில் பல அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் பியூஷ் சாவ்லா. சுழற்பந்து வீச்சாளரான இவர் ஒட்ட மொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்தார்.

    பியூஷ் சாவ்லா ஐபிஎல் தொடரில் பல அணிகளுக்காக விளையாடியுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,

    சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ளார். 2024 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎலில் 150+ விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய ஸ்பின்னர்களில் இவரும் ஒருவர்.

    அவர் இந்திய அணிக்காக 3 போட்டிகள் (7 விக்கெட்டுகள்), 25 ஒருநாள் (32 விக்கெட்டுகள்), 7 டி20 (4 விக்கெட்டுகள்) போட்டிகளில் விளையாடியுள்ளார். 265 ஓட்டங்கள் அனுமதிக்கப்பட்டன.

    2006 இல் இங்கிலாந்துக்கு எதிராக மொகாலியில் தனது டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். 17 வயதில் அறிமுகமான அவர், இளம் வயதில் இந்தியாவுக்காக டெஸ்ட் விளையாடியவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவரது முதல் டெஸ்ட் விக்கெட்டாக அலெஸ்டர் குக் இருந்தார்.

    வங்கதேசத்துக்கு எதிராக 2007-ல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.

    2012-க்குப் பிறகு அவர் இந்திய அணியில் இடம் பிடிப்பது கடினமானது. ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற ஸ்பின்னர்களின் ஆதிக்கத்தால் அவருக்கு இடம் கிடைப்பது கேள்வி குறியானது.

    அவரது இங்கிலாந்துக்கு எதிராக 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கடைசி சர்வதேச போட்டி விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • என் தந்தை எப்போதும், டெஸ்ட் கிரிக்கெட் மீது தனி பிரியம் கொண்டுள்ளார்.
    • அவருக்கு புதிய தலைமுறை கிரிக்கெட் பிடிக்காது.

    இந்திய வீரர் ரோகித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் திடீரென ஓய்வை அறிவித்தது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ரோகித் சர்மா புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். சத்தீஷ்வர் புஜாராவின் மனைவி பூஜா புஜாரா எழுதிய "கிரிக்கெட்டர் மனைவியின் டைரி" என்ற புத்தகத்தை வெளியிட்ட ரோகித் சர்மா அந்த நிகழ்வில் தனது தந்தை பற்றி மனம் திறந்து பேசினார். அப்போது, தனது தந்தைக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீது தனி மரியாதை உண்டு என தெரிவித்தார்.

    இது குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:-

    என் தந்தை போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றினார். என் தாய் என்ன செய்தார் என்பதை நான் கூறியிருந்தேன். அதை போன்றே என் தந்தை நாங்கள் தற்போது வாழும் வாழ்க்கைக்காக நிறைய தியாகங்களை செய்திருக்கிறார். என் தந்தை எப்போதும், டெஸ்ட் கிரிக்கெட் மீது தனி பிரியம் கொண்டுள்ளார்.

    அவருக்கு புதிய தலைமுறை கிரிக்கெட் பிடிக்காது. நான் ஒருநாள் போட்டிகளில் 264 ரன்களை அடித்த நாள் இன்றும் நினைவில் உள்ளது. அன்றைய தினம் போட்டிக்கு பிறகு அவரை சந்தித்தேன். அப்போது அவர் எல்லாம் சரி, நன்றாக விளையாடினாய் என்று கூறினார். எனினும், அவரது பாராட்டில் எவ்வித சுவாரஸ்யமும், அதீத மகிழ்ச்சியம் காணப்படவில்லை.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் 30, 40, 50 அல்லது 60 ரன்களை குவித்தால் கூட அவர் அதைப் பற்றி விரிவாக என்னிடம் பேசிக் கொண்டிருப்பார். அவர் டெஸ்ட் கிரிக்கெட் மீது அத்தகைய காதல் கொண்டிருந்தார். அவர் எப்படியிருந்தாலும், முன்னேற வேண்டும் என்றே விரும்புவார் என ரோகித் கூறினார்.

    • நான் சிவப்பு பந்துடன் நிறைய கிரிக்கெட் விளையாடுவதை என் அப்பா பார்த்திருக்கிறார்.
    • நான் ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது அவர் கொஞ்சம் ஏமாற்றமடைந்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மே 2025-ல் அறிவித்தார். அவரது ஓய்வு அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.

    இந்த முடிவுக்கு சமீபத்திய ஆட்டங்கள் காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2024-25 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் பேட்டிங் (5 இன்னிங்ஸ்களில் 31 ரன்கள், சராசரி 6.20) மற்றும் கேப்டன்ஷிப்பில் ஏமாற்றமளித்ததாக இருக்கலாம்.

    இந்நிலையில் தாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பு தனது தந்தைக்கு ஏமாற்றமடைந்தது என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சிவப்பு பந்தில் நான் விளையாடிய போட்டிகளை என் தந்தை அதிகளவில் பார்த்திருக்கிறார். அவர் சிவப்பு பந்து கிரிக்கெட்டை அதிகம் பாராட்டுவார். அந்த வகையில், நான் ஓய்வு அறிவித்தது அவரை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியது. எனினும், அவரிடம் அதே அளவுக்கு மகிழ்ச்சியும் இருந்தது. அது தான் என் தந்தை.

    நான் இன்று இந்த நிலையில், இருப்பதற்கு அவர் மிகப்பெரிய பங்களிப்பை செலுத்தியுள்ளார். அவரது உதவியின்றி, இது எதுவும் சாத்தியமில்லை என ரோகித் கூறினார்.

    • ஆர்.சி.பி. அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
    • இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பெங்களூருவில் நடைபெற்ற ஆர்.சி.பி. அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக கிரிக்கெட் அசோசியேசன் சார்பில் ரிட் மனு பெங்களூரு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. மேலும் 2 பேர் கைது செய்யப்படலாம் என்பதால் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரி இந்த ரிட் மனு கொடுத்துள்ளனர்.

    இதனிடையே தனிப்படை போலீசார் அதிரடியாக இன்று காலை முதல் கர்நாடக கிரிக்கெட் அசோசியேசன் சங்க செயலாளர், பொருளாளர் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற 12-ந் தேதி தொடங்கி ஜூலை 13 வரை நடைபெற உள்ளது.
    • இந்த தொடரில் ரஷித்கான், ஓமர்சாய், நவீன் உல் ஹக் உள்ளிட்ட ஆப்கன் வீரர்கள் வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    மேஜர் லீக் கிரிக்கெட் 2023-ல் தொடங்கியது. இந்திய பிரீமியர் லீக் (IPL) உடன் தொடர்புடைய பல அணிகள் இந்த தொடரில் முதலீடு செய்துள்ளன. உதாரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகியவை எம்எல்சி தொடரில் தங்களுக்கான அணிகளை வாங்கியுள்ளன.

    அதன்படி சியாட்டில் ஓர்காஸ், மியாமி நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றனர்.

    நடப்பு அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற 12-ந் தேதி தொடங்கி ஜூலை 13 வரை நடைபெற உள்ளது. தொடக்கப் போட்டியில் நடப்பு சாம்பியனான வாஷிங்டன் ஃப்ரீடம், சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்சுடன் மோதுகிறது.

    இந்நிலையில் அமெரிக்காவின் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் ரஷித், ஓமர்சாய், நவீன் உல் ஹக் உள்ளிட்ட ஆப்கன் வீரர்கள் வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அது என்னவென்றால் ஆப்கன், பர்மா, காங்கோ, ஈரான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அதிபர் ட்ரம்ப் தடை விதித்த நிலையில், இந்த தொடரில் பங்கேற்க முடியாத சூழலில் ஆப்கானிதான் வீரர்கள் உள்ளனர்.

    மேஜர் கிரிக்கெட் லீகை 'மிகப்பெரிய விளையாட்டுத் தொடர்' என வரையறுத்து அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான அனுமதி பெறுவதற்கு ஆலோசித்து வருவதாக மேஜர் லீக் கிரிக்கெட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

    • முதலில் விளையாடிய கோவை அணி 149 ரன்கள் எடுத்தது.
    • திண்டுக்கல் அணி 17.2 ஓவரில் 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கோவை:

    9-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவை, நெல்லை, சேலம், திண்டுக்கல் ஆகிய 4 இடங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இத்தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி-முன்னாள் சாம்பியன் கோவை கிங்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பி. சச்சின் 51 ரன்கள் எடுத்தார். திண்டுக்கல் அணி தரப்பில் அஸ்வின், சந்தீப் வாரியர், பெரியசாமி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் அணி 17.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ஷிவம் சிங் 50 பந்தில் 82 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். இதில் 5 பவுண்டரி, 5 சிக்சர் அடங்கும்.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷிவம் சிங் கூறியதாவது:-

    நாங்கள் அவர்களை (கோவை) ஒரு நல்ல ரன் இலக்குக்குள் கட்டுப்படுத்தினோம். இது எங்களுக்கு இலக்கை எளிதாக துரத்த உதவியது. ஒரு சீனியர் வீரராக கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

    • இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
    • சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, விமானம் மூலம் நேற்றிரவு இங்கிலாந்துக்கு புறப்பட்டது.

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025-27) தொடரின் அங்கமாக நடைபெற உள்ளதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்த தொடர் வருகிற 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதி வரை உள்ளது. இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில்லின் முதல் சோதனை இது என்பதால் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மும்பையில் இருந்து விமானம் மூலம் இங்கிலாந்துக்கு நேற்றிரவு புறப்பட்டது.

    அப்போது ரசிகர் ஒருவர், ரிஷப் பண்ட்டிடம் ரோகித் சர்மா எங்கே என கேள்வி எழுப்பினர். அதற்கு ரிஷப் பண்ட், அவர் தோட்டத்தில் ஜாலியாக இருக்கிறார். அந்த தோட்டத்தை நான் மிஸ் செய்கிறேன் என சிரித்தபடி பதில் அளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

    இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர் 2007-ம் ஆண்டு முதல் பட்டோடி கோப்பை என்று அழைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பட்டோடி கோப்பைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் ஓய்வு கொடுத்தது.

    அதற்கு பதிலாக ஆஸ்திரேலியா-இந்தியா மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை போல இந்தியா-இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த 2 ஜாம்பவான்களின் பெயரில் புதிய கோப்பையை உருவாக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.

    அந்த வகையில் இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டிக்கான டிராபி பெயரை 'டெண்டுல்கர் -ஆண்டர்சன்' என மாற்றப்பட்டுள்ளது.

    டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த சச்சினையும், அதிக விக்கெட்கள் வீழ்த்திய ஆண்டர்சனையும் கவுரவிக்கும் விதமாக இவர்கள் பெயரை சூட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
    • இதில் 6-ல் சேப்பாக் சூப்பர் கில்லீசும், ஒன்றில் திருப்பூரும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.

    கோவை:

    9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில், கோவையில் இன்றிரவு நடக்கும் 2-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருப்பூர் தமிழன்சை சந்திக்கிறது.

    4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் புதிய சீசனை வெற்றியுடன் தொடங்கும் வேட்கையுடன் தயாராகியுள்ளது. கேப்டன் பாபா அபராஜித், என்.ஜெகதீசன், ஆல்-ரவுண்டர்கள் விஜய் சங்கர், அபிஷேக் தன்வர், சுழற்பந்து வீச்சாளர் ஸ்வப்னில் சிங் போன்ற முன்னணி வீரர்கள் கில்லீஸ் அணியில் உள்ளனர்.

    சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியில் பிரதோஷ் ரஞ்சன் பால், ராதாகிருஷ்ணன், சசிதேவ், அமித் சாத்விக், வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் என்று திறமையான வீரர்களுக்கு குறைவில்லை. அதனால் அவர்கள் கடும் சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6-ல் சேப்பாக் சூப்பர் கில்லீசும், ஒன்றில் திருப்பூரும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.

    இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    ×