என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கிரிக்கெட் சூதாட்டம்: இலங்கை முன்னாள் வீரர் மீது குற்றச்சாட்டு
- கொழும்பு கிங்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த இருவருடன் சூதாட்டத்தில் ஈடுபடுவது குறித்து சச்சித்திர சேனநாயக்கா பேசியுள்ளார்.
- சச்சித்திர சேனநாயக்கா 2023-ல் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கொழும்பு:
இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்திர சேனநாயக்கா. சுழற்பந்து வீச்சாளரான இவர் இலங்கையில் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கிய லங்கா பிரீமியர் லீக் தொடரில் கொழும்பு கிங்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த இருவருடன் சூதாட்டத்தில் ஈடுபடுவது குறித்து பேசியுள்ளார்.
அவர் துபாயில் இருந்து தொலைபேசி மூலம் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இதற்காக அவர் 2023-ல் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சச்சித்ர, லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டியின் போது சக வீரரை மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுத்த முயன்றதாக இவர் மீது ஹம்பாந்தோட்டை உயர் நீதிமன்றம் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், மேட்ச் பிக்சிங்கிற்காக தேசிய அளவிலான கிரிக்கெட் வீரர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட முதல் குற்றச்சாட்டு இதுவாகும்.
சச்சித்ர சேனநாயக் 2012 முதல் 2016 வரை இலங்கை அணிக்காக ஒரு டெஸ்ட், 49 ஒருநாள் மற்றும் 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 2014-ம் ஆண்டு இலங்கை அணியுடன் டி20 உலகக் கோப்பையை வென்ற குழுவில் முக்கிய வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






