என் மலர்
விளையாட்டு
- ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
- கூகுள் தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகிறது.
9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் தொடங்கியது.
வருகிற 29-ந்தேதி வரை நடைபெறும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா அணியும், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமிபியா, ஸ்காட்லாந்து, ஓமன் அணியும், 'சி' பிரிவில் வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, உகாண்டா, ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா அணியும், 'டி' பிரிவில் தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணியும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று பிரிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர்-8 சுற்றுக்குள் நுழையும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும். தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
- இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் பொரூஸியா டார்முண்ட் அணியும் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியும் மோதின.
- டோர்முண்ட் அணியின் டிபெண்டர் டானி கார்வஜால் அசந்த நேரத்தில் ரியல் மாட்ரிட் அணி ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது.
UEFA சாம்பியன் ஷிப் லீக் என்று அழைக்கப்படும் ஐரோப்பிய கோப்பை கால்பந்து 69 வது சீசன் போட்டிகள் கடந்த வருடம் ஜூன் மாதம் தொடங்கி நடந்து வந்த நிலையில் சாம்பியன் லீக் பட்டத்தை வெல்வதற்காக இறுதிப்போட்டியானது நேற்று (ஜூன் 1) சனிக்கிழமை லண்டனில் உள்ள வெம்ப்லே மைத்தனத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் பொரூஸியா டார்முண்ட் அணியும் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. இந்த லீக் தொடர் முழுவதிலும் இரண்டாவது சிறந்த அணியாக விளங்கிய டொர்முண்ட் அணி ஆட்டத்தின் முதல் பாதியில் வாய்ப்பு கிடைத்தும் 3 கோல்களை தவறவிட்டது.
டோர்முண்ட் அணியின் டிபெண்டர் டானி கார்வஜால் அசந்த நேரத்தில் ரியல் மாட்ரிட் அணி ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது. தொடர்ந்து ரியல் மத்ரித் வீரர் வினீசியஸ் ஜூனியர், 9 நிமிட இடைவெளியில் ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இதன்மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியின் பொரூஸியா டார்முண்ட் அணியை வீழ்த்தி ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஷிப் லீக் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. ஐரோப்பிய லீக் கோப்பையை ரியல் மாட்ரிட் அணி வெல்வது இது 15 ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிரடிக்கு பெயர் போன 20 ஓவர் வடிவிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் ஆனது.
- இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று தொடங்கியது.
அதிரடிக்கு பெயர் போன 20 ஓவர் வடிவிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. தென்ஆப்பிரிக்காவில் நடந்த முதலாவது உலகக் கோப்பையில் டோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து வரலாறு படைத்தது.
இதன்படி 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன.
நேற்று தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று தொடங்கியது. தொடக்க போட்டியில் அமெரிக்கா கனடா அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனக் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , கனடா முதலில் பேட்டிங் செய்து வருகிறது . கனடா பேட்ஸ்மேனான ஆரோன் ஜான்சன் முதல் பாலை எக்ஸ்ட்ரா கவரில் அடித்து அதிரடியாக் ஆட்டத்தை தொடங்கினார்.
17 ஓவர்கள் கடந்த நிலையில் கனடா அணி 156 ரன்கள் 3 விக்கெட் இழப்பில் ஸ்கோர் செய்துள்ளது.
- ரோகித் சர்மா 19 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- சூர்யகுமார் யாதவ் தனது பங்கிற்கு 18 பந்தில் 31 ரன்கள் எடுத்தார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியா இன்று பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 6 பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் எம்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.
அடுத்து ரோகித் சர்மா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 32 பந்தில் 53 ரன்கள் (தலா நான்கு பவுண்டரி, சிக்ஸ்) எடுத்து ரிட்டையர்டு அவுட் மூலம் வெளியேறினார்.

அடுத்து சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார். ரோகித் சர்மா 19 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் தனது பங்கிற்கு 18 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். ஷிவம் டுபே 16 பந்தில் 14 ரன்கள் எடுத்தார்.
ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 40 ரன்கள் (2 பவுண்டரி, 4 சிக்ஸ்) அடிக்க இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
- இதில் ரஷியாவின் மெத்வதேவ் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பாரிஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. இரு சுற்றுகள் முடிந்து 3-வது சுற்றுப் போட்டிகள் இன்று நடந்தன.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், செக் வீரர் தாமஸ் மசாக்குடன் மோதினார்.
இதில் மெத்வதேவ் முதல் இரு செட்டை 7-6 (7-4), 7-5 என கைப்பற்றினார். தாமஸ் மசாக் 3வது செட்டை 6-1 என கைப்பற்றினார்.
நான்காவது செட்டை மெத்வதேவ் 6-4 என வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- தினேஷ் கார்த்திக் இன்றளவும் சிறப்பான பேட்டிங் வெளிப்படுத்தி வருகிறார்.
- சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக அவர் அறிவித்தார்.
புதுடெல்லி:
தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் இன்றளவும் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியுடன் ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்தார். ஐ.பி.எல் தொடரில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4,842 ரன்களை குவித்துள்ளார்.
இந்நிலையில், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.
இதுதொடர்பாக, தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்த நீண்ட பயணத்தை இனிமையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய எனது பயிற்சியாளர்கள், கேப்டன்கள், தேர்வாளர்கள், அணியினர் மற்றும் துணைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
மில்லியன் கணக்கானோர் விளையாடும் இந்த நாட்டில், நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். பல ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் நன்மதிப்பை பெற்றிருப்பது எனக்கு கிடைத்த கூடுதல் பாக்கியம்.
இத்தனை ஆண்டுகள் எனக்குத் துணையாகவும், தூணாகவும் இருந்தவர்கள் என்னுடைய பெற்றோர். அவர்களின் ஆசீர்வாதம் இல்லாவிட்டால் நான் இன்று இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. என்னுடைய இந்தப் பயணத்துக்காக தன்னுடைய தொழில்முறை விளையாட்டிலிருந்து வெளியேறி, எனக்காக துணைநின்ற தீபிகாவுக்கு நான் என்றும் கடன்பட்டிருக்கிறேன்.
விளையாட்டைப் பின்பற்றும் ரசிகர்களுக்கும், பாலோயர்ஸ்களுக்கும் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
It's official ?
— DK (@DineshKarthik) June 1, 2024
Thanks
DK ?? pic.twitter.com/NGVnxAJMQ3
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
- இதில் ஸ்பெயினின் அல்காரஸ் நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
பாரிஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. இரு சுற்றுகள் முடிந்து 3வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் மூன்றாம் நிலை வீரரான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 6-4, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், சீனாவின் ஜாங் ஜீஜெனுடன் மோதினார். இதில் சிட்சிபாஸ் 6-3, 6-3, 6-1 என கைப்பற்றி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
- போட்டியின் அடுத்தடுத்த சவால்களை எதிர்கொள்ளும் முனைப்பில் டொமிக் களமிறங்கினார்.
- ஜப்பான் வீரர் யுடா ஷிமிசு முதல் செட்-ஐ 6-க்கு 1 என்ற அடிப்படையில் கைப்பற்றினார்.
அமெரிக்காவின் அர்கன்சாசில் ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் பெர்னார்ட் டொமிக் மற்றும் ஜப்பானை சேர்ந்த யுடா ஷிமிசு மோதினர். சர்வதேச தரவரிசையில் இவர்கள் முறையே 247 மற்றும் 265 இடங்களில் உள்ளனர்.
இத்தகைய போட்டிகளில் விளையாடி தனது தரவரிசையை முன்னேற்றி, போட்டியின் அடுத்தடுத்த சவால்களை எதிர்கொள்ளும் முனைப்பில் டொமிக் களமிறங்கினார். எனினும், துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஜப்பான் வீரர் யுடா ஷிமிசு முதல் செட்-ஐ 6-க்கு 1 என்ற அடிப்படையில் கைப்பற்றினார்.
போட்டியின் போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பலமுறை கூறிய டொமிக், மருத்துவர்கள் உதவியை நாடினார். எனினும், களத்தில் மருத்துவர்கள் யாரும் இல்லை என்று கூறி போட்டி நடுவர் அவரை விளையாடுமாறு கூறியுள்ளார்.
இதனிடையே இந்த போட்டியை காண டொமிக்-இன் காதலி கீலி ஹண்ணா வந்திருந்தார். போட்டியின் போது டொமிக் மற்றும் அவரது காதலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விளையாடிய அவர் போட்டியில் கவனம் செலுத்த முடியாதவராக காணப்பட்டார்.
இரண்டாவது செட்-இல் 5 புள்ளிகளை மட்டும் பெற்ற டொமிக் அதன்பிறகு போட்டியில் இருந்து வெளியேறினார். உடல்நிலை மோசமாவதால், தொடர்ந்து விளையாட முடியாது என்று கூறி டொமிக் போட்டியில் இருந்து வெளியேறியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து டொமிக்-இன் காதலியும் களத்தில் இருந்து வெளியேறினார்.
- நாட்டுக்காக விளையாட வெளியேறிய இந்த முடிவு மிகவும் நியாயமானது என்றார் வாகன்.
- பாகிஸ்தான் பற்றி மைக்கேல் வாகன் கூறியது உண்மைதான் என்றார் கம்ரான் அக்மல்.
கராச்சி:
டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து ஜாஸ் பட்லர், மொயீன் அலி, ரீஸ் டாப்லி, வில் ஜாக்ஸ் போன்ற இங்கிலாந்து வீரர்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்பே வெளியேறினர்.
இதனால், முழுமையாக விளையாடுங்கள். இல்லையெனில் ஐ.பி.எல். தொடரில் விளையாட இந்தியாவுக்கு வராதீர்கள் என இர்பான் பதான் விமர்சித்தார். அதேபோல, பாதியில் வெளியேறும் இங்கிலாந்து வீரர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என சுனில் கவாஸ்கர் விமர்சித்தார்.
இதற்கிடையே, நாட்டுக்காக விளையாடுவதற்காக வெளியேறிய இந்த முடிவு மிகவும் நியாயமானது என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பதிலடி கொடுத்திருந்தார். மேலும், சுமாரான பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதைவிட தரமான ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதே சிறந்தது என தெரிவித்தார். இதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சில முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், சமீப காலங்களில் அயர்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகளிடம் தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் பற்றி மைக்கேல் வாகன் கூறியது உண்மைதான் என கம்ரான் அக்மல் ஒப்புக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக கம்ரான் அக்மல் கூறியதாவது:
அது மிகவும் வலியைக் கொடுக்கும் கருத்தாகும். ஆனால் அவருடைய கருத்து சரியானது என நினைக்கிறேன்.
அனைவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் லெவல் தெரியும். இப்போதெல்லாம் நாம் அயர்லாந்து போன்ற சிறிய அணிக்கு எதிராக தோற்கிறோம்.
எனவேதான் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் கடினமானது அல்ல என மைக்கேல் வாகன் தெரிவித்தார். அதனால் தவறு நம்முடையது.
ஒருவேளை நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடியிருந்தால் அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார்.
ஐ.பி.எல். தொடரைப் பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டும். அங்கே 40,000 முதல் 50,000 ரசிகர்களுக்கு முன் சிறந்த பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் பங்கேற்கின்றனர். எனவே அது கடினமான மற்றும் தரமான கிரிக்கெட்டாகும் என தெரிவித்தார்.
- இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு.
- இந்தியா டி20 அணியை போன்று விளையாட வேண்டும்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய அணிக்கு சிறப்பான பயிற்சியாளராக கவுதம் காம்பீர் இருப்பார் என்று தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்குலி, நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், "நான் இந்திய பயிற்சியாளருக்கு ஆதரவாக இருக்கிறேன். அவர் விண்ணப்பித்து இருந்தால், காம்பீர் சிறப்பான பயிற்சியாளராக இருப்பார். உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு நல் வாய்புகள் உண்டு. இந்தியா டி20 அணியை போன்று விளையாட வேண்டும். அபாரமான திறமை நம்மிடம் உள்ளது," என்று தெரிவித்தார்.

முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் காம்பீர் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். அந்த வகையில், பத்து ஆண்டுகள் கழித்து கொல்கத்தா அணி இந்த முறை ஐ.பி.எல். கோப்பையை வென்று அசத்தியது.
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் பற்றிய கேள்விக்கு விளக்கம் அளித்த பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா, "நமது அணிக்கு சரியான பயிற்சியாளரை கண்டுபிடிப்பது முழுமையான செயல்முறை. இந்திய கிரிக்கெட் கட்டமைப்பு பற்றிய புரிதல், தரவரிசையில் வளர்ச்சி பெற்றுள்ள வீரர்களை அடையாளம் காண்பதில் சிறப்பான ஒருத்தரை நியமிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்," என்று தெரிவித்தார்.
- ஓட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்மீது புகார் எழுந்தது.
- தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
காத்மண்டு:
நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சேன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். 2022-ம் ஆண்டு ஓட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்மீது பாலியல் புகார் எழுந்தது
இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரை குற்றவாளியாக அறிவித்த காத்மண்டு நீதிமன்றம், அவருக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் சந்தீப் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தீப் லமிச்சேனை விடுதலை செய்தது
எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கான நேபாள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், மே 25 வரை அணியில் மாற்றம் செய்யலாம் என்பதால் சந்தீப் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, நேபாளத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் சந்தீப் லமிச்சேனின் விசாவை நிறுத்தி வைத்தது. அமெரிக்க தூதரகத்தின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக சந்தீப் லமிச்சேன் தெரிவித்தார்.
இந்நிலையில், நேபாள வீரர் சந்தீப் லமிச்சேனின் அமெரிக்க விசா விண்ணப்பம் 2-வது முறையாக நிராகரிக்கப்பட்டது. இதனால் டி20 உலகக் கோப்பையில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.
- மூன்று கூட்டமைப்புகள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளன.
- இம்மாத இறுதியில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
உலக செஸ் கூட்டமைப்பு (FIDE) சார்பில் இந்த ஆண்டு இறுதியில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்பட இருக்கிறது. இந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 15, 2024 வரை உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த தொடரில் அடுத்த இரு ஆண்டுகள் உலக செஸ் சாம்பியனாக இருக்கப் போவது யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்துவிடும். உலக செஸ் சாம்பியன் படத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் சீனாவின் டிங் லைரென் களமிறங்குகிறார்.
மறுப்பக்கம் செஸ் வரலாற்றிலேயே இளம் வயதில் பங்கேற்கும் முதல் வீரர் என்ற பெருமையுடன் இந்திய வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெறும் முனைப்பில் களமிறங்க உள்ளார். உலகின் அடுத்த செஸ் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டிகளை நடத்த உலக செஸ் கூட்டமைப்பிடம் மூன்று கூட்டமைப்புகள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளன.
இதில் தமிழ்நாடு அரசு சார்பில் சமர்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என்றும் டெல்லியில் நடத்த வேண்டும் என்று அகில இந்திய செஸ் கூட்டமைப்பும், சிங்கப்பூரில் நடத்த அந்நாட்டு அரசும் விண்ணப்பித்துள்ளன.
மூன்று விண்ணப்பங்களும் அடுத்த வாரம் நடைபெறும் உலக செஸ் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படும். இந்த ஆலோசனை கூட்டத்தில் விண்ணப்பதாரர்கள் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். ஆலோசனை கூட்டத்தில் செஸ் சாம்பியன்ஷிப் தொடர்பான கேள்விகளுக்கு பிரதிநிதிகள் பதில் அளிக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக இம்மாத இறுதியில் உலக செஸ் கூட்டமைப்பு சார்பில் முடிவுகள் அறிவிக்கப்படும்.






