என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நாளை தொடங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டிகான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.
    • இந்த அணியில் கஸ் அட்கின்சன் மற்றும் ஜேமி ஸ்மித் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெற்றுள்ளனர்.

    லண்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி கிரேக் பிராத்வைட் தலைமையிலும், இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நாளை தொடங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டிகான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இந்த அணியில் கஸ் அட்கின்சன் மற்றும் ஜேமி ஸ்மித் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். நட்சத்திர ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் மீண்டும் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளார்.

    இங்கிலாந்து ஆடும் லெவன் விவரம்:

    ஜேக் க்ராவ்லி, பென் டக்கட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஷோயப் பாஷிர், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    டெஸ்ட் தொடர் அட்டவணை விவரம்:

    முதல் டெஸ்ட்: ஜூலை 10-14 - லண்டன்

    2வது டெஸ்ட்: ஜூலை 18-22 - நாட்டிங்ஹாம்

    3வது டெஸ்ட்: ஜூலை 26-30 - பர்மிங்ஹாம்.

    • டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றுள்ளார்.
    • கோலி ஓய்வுக்கு பின்னர் லண்டனில் குடியேற திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியுள்ளன.

    டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இப்போது தான் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்தது. இதில் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 2007-ம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும். அதேபோல 2013-க்கு பிறகு இந்திய அணி ஐசிசி டிராபியை வெல்வதும் இதுவே முதல்முறை.

    இறுதி போட்டியில் விராட் கோலி எடுத்த 76 ரன்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த போட்டி தொடருடன் கோலி சர்வேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார். இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விராட் கோலி முன்னணி இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணிக்கு பல முக்கியமான போட்டிகளில் விராட் கோலி சிறப்பாக விளையாடி வெற்றியை தேடி தந்துள்ளார்.

    இன்னும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விராட் கோலி விளையாடுவார். அதனால் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் அவர் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனையடுத்து அவர் ஓய்வுக்கு பின்னர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் லண்டனில் குடியேற திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியுள்ளன.

    இந்நிலையில் மும்பையில் உள்ள அலிபாக் நகரில் நீண்ட நாட்களாக கட்டி வந்த வீடு நிறைவு பெற்றுள்ளது. அந்த புதிய வீட்டை ரசிகர்களுக்கு காண்பிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மூலம் லண்டனுக்கு குடியேற உள்ளார் என்ற வதந்திக்கு கோலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்றே சொல்லலாம்.

    புதிய வீடு குறித்து விராட் கோலி கூறியதாவது:-

    எனது அலிபாக் வீட்டைக் கட்டுவதற்கான பயணம் ஒரு தடையற்ற அனுபவமாக இருந்தது. இவை அனைத்தும் ஒன்றிணைவதைப் பார்ப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் கனவு இல்லத்தை நனவாக்கிய அவாஸ் குழுவிற்கும் மிகப்பெரிய நன்றி. இங்கு என் அன்புக்குரியவர்களுடன் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்க காத்திருக்க முடியாது.

    இவ்வாறு கோலி கூறினார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • எம்.எஸ். டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆஃப்-ஸ்பின்னராக தனது வாழ்க்கையை தொடங்கிய அஸ்வின்.
    • சென்னை அணிக்காக அவர் என்னை தொடர்ந்து பயன்படுத்தினார்.

    விளையாட்டு உலகில் சிறந்த ஐகான், ரோல்மாடல், ஆசான் என பல்வேறு பெருமைகள் கொண்டவராக இருப்பவர் எம்.எஸ்.டோனி. பொதுவாக விளையாட்டு என்றாலே வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரண்டில் ஒன்றில் முடிந்து போகும் விஷயம்தான்.

    ஆனால் அதில் கற்ற படிப்பினைகளையும், பாடங்களையும், போராட்டங்களையும், நுணுக்கங்களையும் என பல்வேறு விஷயங்களையும் இளம் தலைமுறையினருக்கு கற்றுக்கொடுத்த வல்லவராக இருப்பதால் தான் டோனியை ஒரு தலைவனாகவே பலரும் பார்க்கிறார்கள்.

    சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக உள்ளார். "கேரம் பால்" அஸ்வின் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியாவின் நட்சத்திர மற்றும் முண்ணனி பந்து வீச்சாளார் ஆவார். மூத்த வீரர்களான சச்சின் & டிராவிட் அவர்களுக்கு அடுத்து ஐசிசி கிரிக்கெட் வீரர் விருதை பெற்ற ஒரே இந்திய வீரர் அஸ்வின். உலகில் கேரம்பால் வீசுவதில் உலகில் 2 பேர் அவற்றில் இவரும் ஒருவர்.

    எம்.எஸ். டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆஃப்-ஸ்பின்னராக தனது வாழ்க்கையை தொடங்கிய அஸ்வின், ரேங்க்களில் விரைவாக உயர்ந்து இந்திய அணிக்கு வலிமையான சக்தியாக மாறினார். இன்றும் இந்திய டெஸ்ட் அணியில் தூணாக தொடர்கிறார்.

    தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் எம்.எஸ்.டோனியின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றும் அதிர்ஷ்டமும் பெற்றார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக டோனி தன்னிடம் ஒரே அறிவுரையை தான் கூறியதாக அஸ்வின் சமீபத்தில் தெரிவித்தார்.

    மேலும், அவர் 15 ஆண்டுகளாக சொன்ன அறிவுரை தற்போது தான் தனக்கு புரிந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து பேசும்போது, சென்னை அணிக்காக அவர் என்னை தொடர்ந்து பயன்படுத்தினார்.

    ஒருகட்டத்தில் புதிதாக முயற்சிக்கும் உனது வழக்கத்தை யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாதே. தொடர்ந்து உற்சாகமாகவும், வேடிக்கையாகவும் இரு என்று கூறினார். அவர் அப்படி சொன்னது கிரிக்கெட் மட்டுமின்றி ஒருவரின் மனவலிமை மற்றும் பல்வேறு விஷயங்களை பற்றி என்பதை இப்போது தான் புரிந்து கொண்டேன் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    • சூர்யகுமார் யாதவ் தனது மனைவியுடன் இணைந்து ராட்சத கேக் வெட்டும் படங்களை பகிர்ந்துள்ளார்.
    • நான் பிடித்த அந்த கேட்ச் நேற்றுடன் 8 நாட்களை நிறைவு செய்தது.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ். 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு சாதகமாக மாறியது டேவிட் மில்லரின் விக்கெட் தான். டேவிட் மில்லர் அடித்த சிக்சரை சூர்யகுமார் யாதவ் சாமர்த்தியமாக செயல்பட்டு கேட்ச் ஆக மாற்றினார். இது இந்திய வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது.

    இந்த நிலையில், உலகக் கோப்பையில் தான் பிடித்த கேட்ச் தனது வாழ்க்கையின் "மிக முக்கியமான கேட்ச்" அல்ல என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இது சமூக ஊடகங்களில் ரசிகர்களை சந்தேகத்தில் ஆழ்த்தியது. அவர் தேவிஷா ஷெட்டியை திருமணம் செய்துகொண்டார்.

    சூர்யகுமார் யாதவ் - தேவிஷா ஷெட்டியின் எட்டாவது திருமண நாள் கொண்டாட்டத்தின் போது, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்த பதிவில் சூர்யகுமார் யாதவ் தனது மனைவியுடன் இணைந்து ராட்சத கேக் வெட்டும் படங்களை பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவுக்கு, "நான் பிடித்த அந்த கேட்ச் நேற்றுடன் 8 நாட்களை நிறைவு செய்தது. ஆனால் என் வாழ்நாளில் மிக முக்கியமான கேட்ச் 8 ஆண்டுகளுக்கு முன்பே பிடிக்கப்பட்டு விட்டது! 8 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது, எல்லையற்ற ஆண்டுகள் செல்ல வேண்டும்," என்று தலைப்பிட்டுள்ளார்.

    இன்ஸ்டாகிராமில் ஆறு மணி நேரத்தில் 700,000 க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றது. பல ரசிகர்கள் மனதை கவரும் தலைப்பை பதிவு செய்து தம்பதியினரை வாழ்த்தினர்.

    சூர்யகுமார் யாதவ் (33) தேவிஷா (30) என்பவரை ஜூலை 7, 2016 அன்று திருமணம் செய்து கொண்டார். இருவரும் முதன் முதலில் 2010 இல் சந்தித்தனர்.

    • மாணவர்களான நீங்கள் ஒரு இலக்கை நோக்கி போகும் போது அதை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆக வேண்டும்.
    • கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் நடராஜன் மாணவர்களிடையே கலந்துரையாடினர்.

    சேலம் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் 2020 ம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்தார்.

    ஐபிஎல் போட்டியில் தற்போது ஹைதாராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சேலத்தில் தான் படித்த கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் நடராஜன் மாணவர்களிடையே கலந்துரையாடினர்.

    அப்போது பேசிய நடராஜன், மாணவர்களான நீங்கள் ஒரு இலக்கை நோக்கி போகும் போது அதை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆக வேண்டும். அப்பொழுது தான் அந்த இலக்கை உங்களால் அடைய முடியும்.

    பஞ்சாப் அணிக்கு முதன் முதலில் நான் செல்லும்போது இந்தி தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். அங்கு தனிமையை உணர்ந்தேன். எனக்கு தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. அங்கு இருந்த ஸ்ரீதர் என்ற பயிற்சியாளருக்கு தமிழ் தெரிந்ததால் அவர் தமிழில் பேசி எனக்கு உதவினார். அப்போது விரேந்தர சேவாக்கும் எனக்கு துணையாக இருந்தார்.

    இந்தி தெரியவில்லை என்பதால் நான் சோர்ந்து போகவில்லை. எனவே நீங்கள் கல்லூரியிலேயே பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். கல்லூரியில் நீங்கள் பேசத் தொடங்கினால், நாளை உங்களால் எங்கு வேண்டுமானாலும் தில்லாக பேச முடியும் என்று நடராஜன் தெரிவித்தார்.

    • ஓட்டல் மீது பெங்களூரு நகர காவல் துறை சட்ட நடவடிக்கை.
    • ஒன்8 கம்யூன் மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. கிரிக்கெட் தவிர இவர் வேறு சில வியாபாரங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், விராட் கோலி இணை உரிமையாளராக இருக்கும் ஒன்8 கம்யூன் என்ற ஓட்டல் மீது பெங்களூரு நகர காவல் துறை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

    இது தொடர்பாக ஓட்டல் மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெங்களூருவில் ஓட்டல்கள் நள்ளிரவு 1 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

    எனினும், இந்த ஓட்டலின் பார் நள்ளிரவு 1 மணியை கடந்தும் இயங்கி வந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து கப்பன் பார்க் காவல் நிலையத்தில் ஒன்8 கம்யூன் மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒன்8 கம்யூன் மட்டுமின்றி பெங்களூரு முழுக்க நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக நேரம் சட்டவிரோதமாக இயங்கி வந்த பல்வேறு பார்கள் மீதும் அதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    கடந்த ஆண்டு டிசம்பரில் துவங்கப்பட்ட ஒன்8 கம்யூன் பெங்களூரு மட்டுமின்றி நாடு முழுக்க பல்வேறு முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பூனே மற்றும் கொல்கட்டா உள்ளிட்ட இடங்களிலும் கிளைகளை கொண்டுள்ளது.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
    • ஜெர்மனியின் ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பியாவின் ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்கின் ஹோல்கர் ரூன்னை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனியின் ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 6-4, 7-6 (7-4), 6-4, 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

    • நிகழ்ச்சியில் சரத்கமலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • ஒலிம்பிக்கில் தேசிய கொடியை ஏந்திச் செல்லும் சரத்கமல், 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார்.

    உலக தரம் வாய்ந்த சில நிறுவனங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாக டைம்லிங்க்ஸ், பாரிஸ் ஒலிம்பிக் 2024-க்கான அதன் பிராண்ட் தூதராக டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமலை பெருமையுடன் அறிவித்துள்ளது.

    இதற்கான நிகழ்ச்சி டைம்லிங்க்ஸ் நிர்வாக இயக்குநர்கள் சிவகுமார், சித்ரா சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சரத்கமலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அவரும், இந்திய அணியும் ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட டைம் லிங்க்ஸ் வாழ்த்து தெரிவித்தது.

    ஒலிம்பிக்கில் தேசிய கொடியை ஏந்திச் செல்லும் சரத்கமல், 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார். 10 முறை தேசிய சாம்பியனும் ஆவார். பத்மஸ்ரீ, கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளையும் பெற்றவர்.

    • அன்புத் தொல்லைகளிலிருந்து தப்பிக்க மெஸ்ஸி, மெய்ப்பாதுகாப்பாளர் அதாவது பாடிகார்ட் ஒருவரை நியமித்துள்ளார்.
    • அதவாது கிட்டத்தட்ட கருடன் பட சூரி போல் மெஸ்ஸி மீது யாரவது கை வைக்க முயன்றால் கூட உடனே தடுத்து விடுகிறார்.

    அர்ஜென்டினவைச் சேர்ந்த கால்பந்துலகின் ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பிரபலமாக இருப்பதில் பல்வேறு பிரச்சைனைகளும் உள்ளது. பொது நிகழ்ச்சிகள், விமான நிலையங்கள் என ரசிகர்களின் அன்புத் தொல்லையை பல பிரபலங்கள் சமாளிக்க வேண்டியுள்ளது. இதில் சில ரசிகர்கள் ஆர்வ மிகுதியில், வேலியை எகிறிக் குதித்து மைதானதுக்குள்ளேயே வந்துவிடும் நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கிறது.

    எனவே இவ்வாறான அன்புத் தொல்லைகளிலிருந்து தப்பிக்க மெஸ்ஸி, மெய்ப்பாதுகாப்பாளர் அதாவது பாடிகார்ட் ஒருவரை நியமித்துள்ளார். இப்போது விஷயம் என்னவென்றால் மெஸ்ஸியின் பாடிகார்டான யாசைன் சூகோ தனது அசாதாரணமான முன்னுணர்வால் அதாவது ரிப்ளெக்ஸ்கலால் மெஸ்ஸியிடம் ஓடிவரும் ரசிகர்களை அவர்கள் நெருங்குவதற்குள் சடாரென முன்வந்து தடுத்துவிடுகிறார்.

    Messi's bodyguard byu/Efficient_Sky5173 ininterestingasfuck

    அதவாது கிட்டத்தட்ட கருடன் பட சூரி போல் மெஸ்ஸி மீது யாரவது கை வைக்க முயன்றால் கூட உடனே தடுத்து விடுகிறார். அவரின் இந்த வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. அமெரிக்க ராணுவத்தின் கடற்படையில் இருந்த யாசைன் சூகோ ஈராக்கிலும் , ஆப்கனிஸ்தானிலும் பணியாற்றியுள்ளார். மெஸ்ஸி கேப்டனாக இருக்கும் மியாமி கிளப் கால்பந்து அணியின் தலைவர் டேவிட் பெக்கம் ரெக்கமெண்டேஷனில் யாசைன் மெஸ்ஸியின் பாடிகார்ட் ஆகியுள்ளாராம்.  தனது சமூக வலைதள பக்கத்தில் ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டும்  பிரபலமாகியுள்ளார் யசைன் சூகோ.

     

    • சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
    • 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    சேலம்:

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    நாளை இரவு 7.15 மணிக்கு நடக்கும் 8-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தான் மோதி உள்ள இரண்டு ஆட்டங்களிலும் தோற்றது. கோவை கிங்சிடம் 13 ரன்கள் வித்தியாசத்திலும், நெல்லை அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றியை பறி கொடுத்தது.

    முன்னாள் சாம்பியனான அந்த அணி வெற்றி கணக்கை தொடங்கும் வேட்கையில் உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ஜெகதீசன், பிரதோஷ் ரஞ்சன்பால், சந்தோஷ்குமார், ஆண்ட்ரே சித்தார்த் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் அபிஷேக் தன்வர், சதீஷ், பெராரியோ ஆகியோரும் பந்து வீச்சில் பெரியசாமி, ரஹில்ஷா, அஸ்வின் கிறஸ்ட் ஆகியோரும் உள்ளனர்.

    விஜய் சங்கர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் கோவையிடம் தோற்றது. அந்த அணியும் வெற்றியை எதிர்நோக்கி உள்ளது.

    அந்த அணியில் துஷார் ரஹேஜா, சாத்வீக், அனிரூத், முகமது அலி, கணேஷ் அஜித்ராம், புவனேஷ்வரன், டி.நடராஜன், மதிவாணன், கருப்பசாமி ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 42 பேர் கொண்ட குழுவுக்கு 125 கோடி ரூபாயை பரிசாக பி.சி.சி.ஐ. வழங்கியது.
    • 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 11 வருட காத்திருப்புக்கு பிறகு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்தது. தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது. இதையடுத்து டி 20 உலகக் கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான அணி, ஊழியர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் என 42 பேர் கொண்ட குழுவுக்கு 125 கோடி ரூபாயை பரிசாக பி.சி.சி.ஐ. வழங்கியது.

    இதில், இந்திய அணியில் வீரர்களுக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். இந்த பட்டியலில் ஒரு போட்டியில் கூட விளையாடாத வீரர்களும் உள்ளனர்.

    இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ரூ.5 கோடியும், அவரது பயிற்சியாளர் ஊழியர்களுக்கு தலா ரூ. 1 கோடி வழங்கப்படுகிறது.

    பிசியோ, த்ரோ டவுன் நிபுணர்கள் போன்றவர்களுக்கு தலா ரூ. 2 கோடியும், தேர்வாளர்களுக்கு தலா ரூ.1 கோடி என பரிசு தொகை பிரித்து வழங்கப்பட்டது.

    2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 11 வருட காத்திருப்புக்கு பிறகு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஐசிசி தொடர்களில் வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்கள் பெற்ற பரிசுகள் விவரம் வருமாறு:-

    2013ஆம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றபோது ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்தது. அப்போது, உதவி ஊழியர்களுக்கு தலா ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது.

    2011 ஒருநாள் உலகக் கோப்பை வெற்றிக்கு முதலில் வீரர்களுக்கு தலா ரூ. 1 கோடி பரிசுத் தொகையை அறிவித்த வாரியம், அதன்பின்னர் ரூ. 2 கோடியாக மாற்றி அறிவித்து வழங்கியது. துணை ஊழியர்களுக்கு ரூ.50 லட்சமும், தேர்வாளர்களுக்கு தலா ரூ.25 லட்சமும் வெகுமதியாக வழங்கப்பட்டது.

    2007 ஐசிசி உலக டி20யை இந்தியா வென்ற பிறகு, ஒட்டுமொத்த அணிக்கும் 12 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

    • ஜிம்பாப்வே தொடரில் முதல் 2 போட்டியில் இவர்கள் இடம் பெற முடியவில்லை.
    • சாய்சுதர்சன் 2-வது 20 ஓவர் போட்டியில் அறிமுகமாகி இருந்தார்.

    ஹராரே:

    சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் தொடரில் 2 போட்டி முடிவில் 1-1 என்ற சமநிலை காணப்படுகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 13 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. 2-வது போட்டியில் இந்தியா 100 ரன் வித்தியா சத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் ஆட்டம் ஹராரேயில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

    இந்த போட்டியிலும் இந்திய அணி அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும், பந்துவீச்சில் ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். கடந்த போட்டியில் இந்திய அணி 234 ரன் குவித்து இருந்தது. இந்த போட்டியிலும் வென்று இந்தியா முன்னிலை பெறும் வேட்கையில் உள்ளது.

    சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 11-வது ஆட்ட மாகும். இதுவரை நடந்த 10 போட்டிகளில இந்தியா 7-ல், ஜிம்பாப்வே 3-ல் வெற்றி பெற்றுள்ளன.

    நாளைய போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

    ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணியுடன் ஜெய்ஸ்வால், சஞ்சுசாம்சன், ஷிவம்துபே ஆகியோர் இணைந்துள்ளனர்.

    வெஸ்ட்இண்டீசில் 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இவர்கள் 3 பேரும் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஜிம்பாப்வே தொடரில் முதல் 2 போட்டியில் இவர்கள் இடம் பெற முடியவில்லை.

    தற்போது அவர்கள் இந்திய அணியில் இணைந்து உள்ளதால் சாய்சுதர்சன், ஹர்ஷித் ரானா, ஜிதேஷ் சர்மா ஆகியோர் நாடு திரும்புகிறார்கள். இவர்கள் முதல் 2 போட்டிகளுக்கு மட்டும் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

    இதில் சாய்சுதர்சன் 2-வது 20 ஓவர் போட்டியில் அறிமுகமாகி இருந்தார். ஆனால் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×