என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 23 கோடி ரூபாய் கொடுத்து ஹென்ரிக் கிளாசனை தக்க வைக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முடிவு
    • அக்டோபர் 31ம் தேதிக்குள் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகம் வெளியிட வேண்டும்

    ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

    வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ளலாம். சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் அதிகபட்சம் 5 பேரையும், உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள UNCAPPED வீரர்களில் அதிகபட்சம் 2 பேரையும் தக்க வைக்கலாம்.

    இதனை குறிப்பிட்ட தொகைக்கு தக்க வைக்கும் RETENTION எனும் முறையிலும், வீரர்களை விடுவித்துவிட்டு அவர்கள் ஏலம் போகும் தொகையை கொடுத்து திரும்பி பெற்றுக்கொள்ளும் RTM எனும் முறையிலும் தக்க வைக்கலாம். அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணி நிர்வாகமும் வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ கேடு விதித்துள்ளது.

    வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் வீரர்களை ஏலம் எடுப்பதற்கான மொத்த தொகையாக ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 23 கோடி ரூபாய் கொடுத்து தென்னாபிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் ஹென்ரிக் கிளாசனை தக்க வைக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கிளாசனுக்கு அடுத்தபடியாக கேப்டன் பேட் கம்மின்சுக்கும் 18 கோடி ரூபாய் கொடுத்தும் அபிஷேக் சர்மாவுக்கு 14 கோடி ரூபாய் கொடுத்தும் தக்க வைக்கவும் ஐதராபாத் அணி முடிவு செய்துள்ளது.

    மேலும், டிராவிஸ் ஹெட், நிதிஷ்குமார் ரெட்டியையும் தக்க வைக்க ஐதராபாத் அணி திட்டமிட்டு வருவதாகவும் RTM கார்டை பயன்படுத்தி இருவரையும் தக்க வைக்கலாம் என அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தது.
    • இதனால் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது.

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    இந்நிலையில் இந்த தொடரில் இந்தியாவுக்கு பயிற்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மற்ற அணிகள் பயிற்சி செய்ய இடம் கிடைக்காமல் இருந்தது என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டோனி லூயிஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஷார்ஜாவில் சரியான முறையில் பயிற்சி செய்ய இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மற்ற அணிகள் தங்கள் போட்டிகளுக்கு வார்ம்-அப் செய்ய இரண்டாம் நிலை ஐசிசி அகாடமி மைதானத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. இந்த தொடரில் துபாய் சர்வதேச ஸ்டேடியம் மற்றும் ஷார்ஜா மட்டுமே மைதானமாக பயன்படுத்தப்படுகிறது.

    இங்கு (துபாய் சர்வதேச மைதானம்) பயிற்சி பெற யாருக்கும் வாய்ப்பு இல்லை. நாங்கள் ஐசிசி அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறோம். ஆனால் இந்தியாவுக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. இதை இந்தியா தான் கேட்டு வாங்கியதா என்பது எனக்கு தெரியவில்லை. அவர்கள் விரும்பியது அவர்களுக்கு கிடைக்கிறது இல்லையா?

    என்று கேள்வியுடன் உரையை டோனி லூயிஸ் முடித்தார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த ஆடவர் டி20 உலகக் கோப்பையில் இதேபோல் இந்தியா அணியின் மீதும் புகார் வந்தது குறிப்பிடத்தக்கது.

    • கேப்டனை மாற்ற விரும்பினால் நான் இளைய தலைமுறையை தேர்வு செய்வேன்.
    • இந்திய மகளிர் அணியில் எந்த முன்னேற்றமும் இல்லை.

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

    இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது.

    இந்நிலையில் கடந்த 2- 3 வருடமாக இந்திய அணியில் ஒரு முன்னேற்றமும் இல்லை என இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தேர்வுக்குழு அணியின் கேப்டனை மாற்ற விரும்பினால் நான் இளைய தலைமுறையை தேர்வு செய்வேன். இதுதான் மாற்றத்துக்கான நேரம். அடுத்தாண்டு மீண்டும் ஒரு உலகக் கோப்பை (ஒருநாள் உலகக் கோப்பை 2025) இருக்கிறது. இப்போது மாற்றம் செய்யாவிட்டால் பிறகு செய்யாதீர்கள். ஏனெனில் அடுத்த உலகக் கோப்பை விரைவில் வரவிருக்கிறது.

    ஸ்மிருதி மந்தனா 2016-ல் இருந்து துணை கேப்டனாக இருக்கிறார். ஆனால், நான் இன்னும் இளமையான 24 வயதாகும் ஜெமிமா மாதிரி ஆள்களை தேர்வு செய்வேன். ஜெமிமா எல்லோரிடமும் கலந்துரையாடுகிறார். அவரது செயல்பாடுகள் இந்தத் தொடரில் சிறப்பாக இருந்தது. கடந்த 2-3 வருடமாக இந்திய அணியில் ஒரு முன்னேற்றமும் இல்லை. எந்த அர்த்தத்தில் என்றால் சிறந்த அணியை வீழ்த்த தயாராக வேண்டும்.

    ஆடவர் அணி எப்படி நன்றாக விளையாடுகிறது? ஒரு பெரிய தொடரை இழந்த பிறகு அணியில் மாற்றத்தை கொண்டு வருகிறார்கள். ஆழமாக பேசினால், மற்றவர்களுக்கு நாம் எப்போது வாய்ப்பளிப்போம்? அதிலும் ஆஸி.க்கு எதிராக ராதா யாதவ், ஜெமிமா தவிர்த்து யாரும் சரியாக விளையாடவில்லை. 11இல் 2 நபர் மட்டுமே விளையாடுவது நல்லதல்ல.

    ஃபிட்னஸ் சார்ந்து நாம் ஒரு புதிய அளவுகோலை முன்வைக்க வேண்டும். ஒரு தொடருக்கு முன்பு மட்டுமே பயிற்சி எடுக்கக் கூடாது. ஆண்டு முழுவதும் பயிற்சி செய்தால் நிச்சயமாக களத்தில் வித்தியாசம் தெரியும்.

    இவ்வாறு மிதாலி ராஜ் கூறினார்.

    • பென் டக்கெட் 114 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
    • பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 4 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

    முல்தான்:

    பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி முல்தானில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 259 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து இன்று 2-வது நாளில் விளையாடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 366 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 118 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேக் க்ராவ்லி மற்றும் பென் டக்கெட் களம் இறங்கினர். இதில் க்ராவ்லி 27 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த போப் 29, ரூட் 34 என ஆட்டமிழந்தனர்.

    ஒருபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் சதம் அடித்த நிலையில் 114 ரன்னில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து களம் இறங்கிய ஹாரி புரூக் 9 ரன், பென் ஸ்டோக்ஸ் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

    இறுதியில் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து தனது 53 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 239 ரன்கள் எடுத்துள்ளது. ஜேமி ஸ்மித் 12 ரன், பிரைடன் கார்ஸ் 2 ரன் எடுத்து களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 4 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இங்கிலாந்து அணி இன்னும் 127 ரன்கள் பின்னிலையில் உள்ளது. 

    • சிவப்பு பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் திறன் என்னிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
    • நான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாட விரும்பவில்லை.

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், இந்திய அணிக்காக அறிமுகமாகி 9 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இதுவரை அவர் 50 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். சிறப்பான திறமை இருந்தும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று பேசப்பட்டு வந்த வேளையில் தற்போது அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

    அந்த வகையில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு வழங்கினர். இந்த வாய்ப்பில் வங்கதேசம் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சதம் அடித்து தான் அசத்தினார். இதனை தொடர்ந்து பயிற்சியாளர் கம்பீர் மற்றும் டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மாவிடம் டெஸ்ட் போட்டியில் விளையாட விருப்பம் உள்ளதாக சாம்சன் தெரிவித்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்றால் சில நிபந்தனைகளை அவர்கள் கூறியதாக சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

    இது குறித்து சாம்சன் கூறியதாவது:-

    சிவப்பு பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் திறன் என்னிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாட விரும்பவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதும் தான் என்னுடைய ஆசை. அந்த வகையில் தற்போது இந்திய அணியின் நிர்வாகம் என்னிடம் சிவப்பு பந்தில் பயிற்சி செய்யுமாறு கூறியுள்ளது.

    அதுமட்டும் இன்றி உள்ளூர் கிரிக்கெட்டில் சிவப்பு பந்தில் சிறப்பாக விளையாடினால் டெஸ்ட் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நான் ரஞ்சி டிராபி போட்டிகளில் தொடர்ந்து விளையாட இருக்கிறேன். இந்திய அணியின் நிர்வாகமும் என்னிடம் அடுத்து அதைத்தான் விரும்புகிறது.

    எனவே உள்ளூர் போட்டிகளில் சிவப்பு பந்தில் என்னுடைய திறமையை நிரூபித்து நிச்சயம் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவேன்.

    இவ்வாறு சஞ்சு சாம்சன் கூறினார்.

    • கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 3 பேரை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • இந்த பட்டியலில் இந்திய வீராங்கனை நீது டேவிட் இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 'ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

    அதன்படி அந்த கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 3 பேரை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இங்கிலாந்து அணியின் அலெஸ்டைர் குக் மற்றும் இந்திய வீராங்கனை நீது டேவிட், தென் ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் ஆகிய 3 கிரிக்கெட் நட்சத்திரங்களை 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவப்படுத்தியது.

    இந்திய வீரர்களான பிஷன்சிங் பெடி, கவாஸ்கர், கபில்தேவ், கும்ப்ளே மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் ஏற்கனவே இந்த கவுரவத்தை பெற்றுள்ளனர்.

    சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த கவுரவத்துக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




    • பாகிஸ்தான் தரப்பில் கம்ரான் குலாம் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    முல்தான்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி முல்தானில் நேற்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் கம்ரான் குலாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அறிமுக போட்டியில் சதம் விளாசிய அவர் 118 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 90 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 259 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் ரிஸ்வான் 41 ரன்னிலும், ஆகா சல்மான் 31 ரன்னிலும் அடுத்து வந்த அமீர் ஜமால் 37 ரன், சஜித் கான் 2 ரன், நோமன் அலி 32 ரன் எடுத்து அவுட் ஆகினர். இறுதியில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 366 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட் வீழ்த்தினார். 

    • அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கு முன் மெகா ஏலம் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.
    • ஐ.பி.எல். ஏலத்திற்கு முன் பல்வேறு அணிகளும் தங்களது அணிகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது.

    புதுடெல்லி:

    ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த ஐ.பி.எல். தொடர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டன. அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கு முன் மெகா ஏலம் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.

    ஐ.பி.எல். ஏலத்திற்கு முன் பல்வேறு அணிகளும் தங்களது அணிகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான், கொல்கத்தா, மும்பை ஆகிய அணிகள் அடுத்த சீசனுக்கு முன் தங்களது அணிகளைச் சேர்ந்த தலைமை பயிற்சியாளர்களை நியமித்து உள்ளனர்.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது பந்து வீச்சு பயிற்சியாளரை அறிவித்துள்ளது. அதன்படி மும்பை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பராஸ் மாம்ப்ரே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர் நவம்பர் 2021 முதல் ஜூன் மாதம் 2024 டி20 உலகக் கோப்பையை வெல்லும் வரை இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டவர். மாம்ப்ரே, தற்போதைய பந்துவீச்சு பயிற்சியாளர் லசித் மலிங்காவுடன் தலைமைப் பயிற்சியாளர் ஜெயவர்த்தனேவின் கீழ் பயிற்சியாளர் குழுவின் ஒரு பகுதியாக பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நியூசிலாந்து அணி சமீபத்தில் இலங்கை மண்ணில் 2 டெஸ்டிலும் தோற்று இருந்தது.
    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பட்டியலில் இந்தியா முதல் இடத்திலும், நியூசிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன.

    பெங்களூரு:

    டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டியது.

    ஆனால் இன்று காலை 7 மணியளவில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போட முடியாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    நியூசிலாந்து அணி சமீபத்தில் இலங்கை மண்ணில் 2 டெஸ்டிலும் தோற்று இருந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பட்டியலில் இந்தியா முதல் இடத்திலும், நியூசிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன.

    • இன்று காலை நடந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா-பொலிவியா அணிகள் மோதின.
    • பிரேசில் 5 வெற்றியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.

    உலக கோப்பை கால்பந்து போட்டி 2026-ம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடை பெற்று வருகின்றன.

    அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் இந்திய நேரப்படி இன்று காலை நடந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா-பொலிவியா அணிகள் மோதின. இதில் அர்ஜெண்டினா 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    காயத்துக்கு பிறகு அணிக்கு திரும்பிய அர்ஜெண்டினா கேப்டன் லியோனல் மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 37 வயதான அவர் 3 கோல்கள் அடித்து முத்திரை பதித்தார். மெஸ்சி 19, 84 மற்றும் 86-வது நிமிடங்களில் கோல் அடித்தார். மார்ட்டினஸ் (43-வது நிமிடம்) ஜூலியன் அல்வா ரெஸ் (48), தியோகோ அல்மடா (69) ஆகியோர் தலா 1 கோலும் அடித்தனர்.

    அர்ஜெண்டினா பெற்ற 7-வது வெற்றியாகும். அந்த அணி 22 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. மற்றொரு ஆட்டத்தில் பிரேசில் 4-0 என்ற கோல் கணக்கில் பெருவை தோற்கடித்தது. பிரேசில் 5 வெற்றியுடன் 16 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.

    • வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி இழந்தது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களுரூவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

    இந்த நிலையில், இன்றைய போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக இந்தியா வங்கதேசம் அணிகள் மோதிய கடைசி டெஸ்ட் போட்டியின் போதும் மழை குறுக்கிட்டது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

    • இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இதன் மூலம் உலகக் கோப்பை அரையிறுதிக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னேறியது.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக நாட் ஸ்கிவர்-பிரண்ட் 57 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பிளெட்சர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து 142 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக ஹேலி மேத்யூஸ்- கியானா ஜோசப் ஜோடி தொடக்க முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டு 102 ரன்கள் குவித்தது.

    கியானா ஜோசப் 52 ரன்னிலும் ஹேலி மேத்யூஸ் 50 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஷெமைன் காம்பெல்லே 5 ரன்னிலும் டீன்ட்ரா டாட்டின் 27 ரன்னிலும் வெளியேறினார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 142 ரன்கள் எடுத்தது.

    ×