என் மலர்
விளையாட்டு
- டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.
கோபன்ஹெகன்:
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, சீன தைபே வீராங்கனையான பை யூ போ உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 21-8 என பிவி சிந்து வென்றார். இரண்டாவது செட்டில் 13-7 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது சீன தைபே வீராங்கனை போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஏற்கனவே நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஆகர்ஷி காஷ்யப் ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறினர்.
- மந்தமாக விளையாடிய நிசங்கா 49 பந்தில் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மந்தமாக விளையாடிய நிசங்கா 49 பந்தில் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா- குசல் மெண்டீஸ் களமிறங்கினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 77 ரன்கள் குவித்தது. இதில் குசல் மெண்டீஸ் 26 ரன்னில் வெளியேறினார். நிதானமாக விளையாடிய நிசங்கா 49 பந்தில் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த வீரர்கள் குசல் பெரேரா 24, கமிந்து மென்டிஸ் 19, அசலங்கா 9 என வெளியேறினர். இதனால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாட உள்ளார்.
- அந்த போட்டியில் விளையாடுவதற்காக சூர்யகுமார் யாதவ் கோயம்புத்தூர் வந்துள்ளார்.
இந்தியாவின் பிரபலமான முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த சீசனுக்கான 90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 2 கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் 2-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த தொடரில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மும்பை அணிக்காக விளையாட உள்ளார். அதற்காக தமிழ்நாட்டில் உள்ள கோயமுத்தூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அந்த கிரிக்கெட் மைதான ஊழியர்களை இன்ஸ்டாகிராமில் பாராட்டி உள்ளார். அதில் நம்பமுடியாத காட்சிகள்... கிரிக்கெட் விளையாட்டிற்குப் பிறகு இது போன்ற விஷயங்கள் கவனிக்கப்படாமல் போகிறது. கிரவுண்ட்ஸ்டாஃப்... ஜஸ்ட் வாவ், என பதிவிட்டிருந்தார்.
அக்டோபர் 13-ந் தேதி மாலை 5 மணிக்கும், அக்டோபர் 14-ம் தேதி காலை 7 மணிக்கும் மைதானத்தைக் காண்பிக்கும் முன்-பின் படங்களைப் பகிர்ந்துள்ளது.
அவர் கூறுவது போல கிரிக்கெட் போட்டியை மட்டும் பார்த்து ரசிக்கின்றோம். ஆனால் அதற்கு உதவியாக இருக்கும் ஊழியர்களை நினைத்து பார்ப்பது எத்தனை பேர் என்பது சந்தேகம் உள்ளது.
- பாகிஸ்தான் தரப்பில் கம்ரான் குலாம் 118 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 2 விக்கெட் வீழ்த்தினார்.
முல்தான்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் சைம் அயூப் களமிறங்கினர். இதில் அப்துல்லா ஷபீக் 7 ரன்னிலும், அடுத்து வந்த ஷான் மசூத் 3 ரன்னிலும் வெளியேறினர்.
இதனையடுத்து சைம் அயூப் உடன் கம்ரான் குலாம் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தனர். இதில் சைம் அயூப் 77 ரன்னிலும், அடுத்து வந்த சவுத் ஷகீல் 4 ரன்னிலும் அவுட் ஆகினர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கம்ரான் குலாம் அறிமுக போட்டியில் சதம் அடித்து அசத்தினார். முதல் நாள் ஆட்டம் நேரம் முடிய 5 ஓவர்களே இருந்த நிலையில் கம்ரான் 118 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து முகமது ரிஸ்வான் மற்றும் ஆகா சல்மான் ஜோடி சேர்ந்து விளையாடினர்.
இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 90 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் முகமது ரிஸ்வான் 37 ரன்னுடனும், ஆகா சல்மான் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 2 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
- டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் தோல்வி அடைந்தார்.
கோபன்ஹெகன்:
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் காங்சு உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 21-12 என வென்ற லக்ஷயா சென், அடுத்த இரு செட்களை 21-19, 21-14 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் தொடரில் இருந்து வெளியேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், வியட்நாமின் குயென் உடன் மோதினார். இதில் மாளவிகா 13-21, 12-21 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான் ஆகர்ஷி காஷ்யப், தாய்லாந்து வீராங்கனையிடம் 13-21, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
- கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஹத்துருசிங்க வங்கதேச அணியின் பயிற்சியாளராக 2-வது முறையாக பதவியேற்றார்.
- இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் மற்றும் டி20 தொடரை வங்கதேசம் முழுவதுமாக இழந்தது.
வங்கதேச அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இந்த இரண்டு தொடரையும் வங்கதேசம் முழுவதுமாக இழந்தது.
இந்நிலையில் வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஹத்துருசிங்கவை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் அவர் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஹத்துருசிங்க வங்கதேச அணியின் பயிற்சியாளராக 2-வது முறையாக பதவியேற்றார். அவர் தலைமையிலான வங்கதேசம் கடந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் மோசமாக செயல்பட்டது.
இந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது குறிப்பிடத்தக்க சாதனையாகும். இது பாகிஸ்தானில் அவர்கள் பெற்ற முதல் வெற்றி மற்றும் 15 ஆண்டுகளில் முதல் வெளிநாட்டு டெஸ்ட் தொடர் வெற்றியாகும்.
இவருக்கு பதிலாக முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான பில் சிம்மன்ஸ் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி வரை பொறுப்பில் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகளுடன் பயிற்சியாளராக இருந்தவர், 2025 சாம்பியன்ஸ் டிராபி வரை இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 56 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- இதன்மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி- நியூசிலாந்து மகளிர் அணி மோதியது. இதில் முதலில் விளையாடிய நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 56 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் படுதோல்வியைச் சந்தித்துள்ள பகிஸ்தான் அணி மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. அதன்படி மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 2-வது இரண்டாவது குறைந்த ஸ்கோரை அடித்த அணி என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது.
முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக வங்கதேச அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே மோசமான சாதனையில் முதல் இடமாக உள்ளது.
அதேசமயம் இப்போட்டியில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நியூசிலாந்து மகளிர் அணி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் டி20 உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. இதற்கு முன் நியூசிலாந்து அணி கடந்த 2016-ம் ஆண்டு அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
- நான் எல்லா வழிகளிலும் ஒரு நியூசிலாந்து நாட்டவர் தான்.
- ஆனால் எனது இந்திய பாரம்பரியத்தைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாளை பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேயத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் இடம்பிடித்துள்ள இளம் நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திரா, பெங்களூருவில் நடைபெறவுள்ள முதல் போட்டி குறித்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது:-
குடும்ப இணைப்பு காரணமாக இந்த சோதனை எனக்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் நான் வெலிங்டனில் பிறந்து வளர்ந்தவன். அப்படி பார்க்கையில் நான் எல்லா வழிகளிலும் ஒரு நியூசிலாந்து நாட்டவர் தான்.
ஆனால் எனது இந்திய பாரம்பரியத்தைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது குடும்பத்தில் பலர் இருக்கும் இடத்தில் விளையாடுவது மிகவும் சிறப்பான ஒன்று. கூட்டத்தில் சிலர் எனது குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அதில் எனது அப்பாவும் என்னுடைய ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார் என்று எனக்குத் தெரியும். மேலும் எங்கள் அணியில் கேன் வில்லியம்சன், டாம் லேதம், கான்வே, டேரில் மிட்செல் என சில தரமான வீரர்கள் உள்ளனர்.
ரிவர்ஸ் ஸ்வீப்பிங் மற்றும் ஸ்வீப்பிங் செய்வதில் கான்வே மிகவும் திறமையானவர். டேரில் மிட்செலும் அப்படித்தான். அதனால் நாங்கள் எங்ளுடைய சிறந்த டெக்னிக்கை கண்டறிந்து அதற்கேற்வாறு செயல்படுவதில் உறுதியுடன் இருக்கிறோம். ஆனால் இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் விளையாடுவாரா என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால் அவர் விளையாடுவார் என்றே தோன்றுகிறது. கூடிய விரைவில் இதுகுறித்த ஏதெனும் தகவல் வரும்.
என்று ரவீந்திரா கூறினார்.
- இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
- இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நியூசிலாந்து அணியில் இடம் பிடித்த பென் சியர்ஸ் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஜேக்கப் டஃபி அணியில் இணைந்துள்ளார்.
- இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஐந்து சாதனைகளை படைக்க வாய்ப்பு.
- 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஐந்து சாதனைகளை படைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைக்க முடியும். தற்போது ஆஸ்திரேலிய அணியின் லயன் 187 விக்கெட்டுகளையும், இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் 185 விககெட்டும் வீழத்தியுள்ளனர்.
11 விக்கெட்டுகளை எடுத்தால் இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய கும்ப்ளேவின் சாதனையை அஷ்வின் முறியடிப்பார். 15 விக்கெட்டுகளை கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமை அஷ்வினை சேரும்.
ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினால் டெஸ்ட் வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வார்னேவின் சாதனையை அவர் முறியடித்து 2-வது இடத்தை பிடிப்பார். 3 விக்கெட்டுகளை கைப்பற்றினால் சர்வதேச டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் லயனை பின்னுக்கு தள்ளி அஸ்வின் 7-வது இடத்தை பிடிப்பார்.
- வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி இழந்தது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களுரூவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நாளை (16ந் தேதி) தொடங்குகிறது.
இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான போட்டி நடைபெறும் சின்னசாமி மைதானத்தில் ஐந்து நாட்களும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்தியா வங்கதேசம் அணிகள் மோதிய கடைசி டெஸ்ட் போட்டியின் போதும் மழை குறுக்கிட்டது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் நியூசிலாந்தை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்.
இந்திய அணி தொடர்ச்சியாக சொந்த மண்ணில் 18 டெஸ்ட் தொடரை கைப்பற்றி முத்திரை பதித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிராகவும் இது நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்திலும், நியூசிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நுழைய எந்தவித சிக்கலும் இல்லாமல் இருக்க இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வெல்லும் வேட்கையில் இந்திய அணி இருக்கிறது.
நியூசிலாந்து அணி சமீபத்தில் இலங்கையில் 0-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணிக்கு இந்தியாவில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
- பாபர் அசாம் ஓய்வு என்று பெயரில் வலுக்கட்டாயமாகக் கழற்றி விடப்பட்டுள்ளதற்கு பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
- பாகிஸ்தான் கிரிக்கெட் என்பது ஆச்சர்யங்கள் நிறைந்த ஒன்றாக நான் பார்க்கிறேன்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் இன்னும் மிச்சமிருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணியின் கேட்பன் பாபர் அசாம் அப்போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள்ளார். கடந்த சில மாதங்களாகவே சுமாராக செயல்பட்டுவருவதாக விமர்சனத்துக்குள்ளான பாபர் அசாம் ஓய்வு என்று பெயரில் வலுக்கட்டாயமாகக் கழற்றி விடப்பட்டுள்ளதற்கு பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதற்குப் பாகிஸ்தான் வீரர் ஃபகர் சமான் முன்னதாக கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாகிஸ்தான் கிரிக்கெட் என்பது ஆச்சர்யங்கள் நிறைந்த ஒன்றாக நான் பார்க்கிறேன்.

ஆனால் இந்த முடிவு அந்த எல்லாவற்றையும் விட அதிக ஆச்சர்யம் தருவதாக உள்ளது. இது ஒரு முட்டாள்தனமான முடிவு. அவராகவே [பாபர் அசாம்] விருப்பப்பட்டு ஓய்வு கேட்காமல் இது நடந்திருக்கும் பட்சத்தில் நிச்சயம் இது முட்டாள்தனமானதுதான் என்று தெரிவித்துள்ளார்.






