என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டாம் லாதம் 15 ரன்னிலும், வில் யங் 18 ரன்னிலும ஆட்டமிழந்தனர்.
    • கான்வே நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் இன்று புனேயில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், சுப்மன் கில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

    கான்வே, டாம் லாதம் தொடக்க பேட்ஸ்மேன்களாக களம் இறங்கினர். பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் பந்து வீச்சை தொடங்கினர். புனே ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் வேகப்பந்து வீச்சில் விக்கெட் வீழ்த்த முடியவில்லை.

    ஏழு ஓவருடன் வேகப்பந்து வீச்சாளர்கள் நிறுத்தப்பட்டனர். 7-வது ஓவரில் இருந்து அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா ஆகியோர் பந்து வீசினர்.

    அஸ்வின் தான் வீசிய முதல் ஓவரிலேயே அதாவது ஆட்டத்தின் 7-வது ஓவரில் டாம் லாமை 17 ரன்னில் வெளியேற்றினார்.

    மிகவும் துல்லியமாக பந்து வீசியதால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர். மூவரும் வீசிய பந்துகள் ஸ்டம்ப் அருகில் சென்று விக்கெட் கீப்பர் கையில் புகுந்தன. ஆனால் பேட்டில் உரசவில்லை. இதனால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தப்பித்தனர். அதேபோல் பல பந்துகள் பேடில் பட்டாலும் எல்.பி.டபிள்யூ இல்லாமல் தப்பித்தனர்.

    24-வது ஓவரில் வில் யங் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். லெக்சைடு சென்ற பந்தை அடிக்க முயன்றார். கையுறையில் உரசிச் சென்று விக்கெட் கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது. இவர் 18 ரன்கள் எடுத்தார்.

    அதன்பின் கான்வே உடன் ரச்சின் ரவீந்திரா ஜோடி சேர்ந்தார். இவர்கள் முதல்நாள் உணவு இடைவேளை ஆட்டமிழக்காமல் தப்பித்தனர். நியூசிலாந்து முதல்நாள் உணவு இடைவேளை 31 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது, கான்வே 47 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    அஸ்வின் 12 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் 7 ஓவரில் 11 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஜடேஜா 5 ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    • சர்பராஸ் கான் இந்திய அணியில் நீட்டிக்கப்பட்டுள்ளார்.
    • கே.எல். ராகுல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் அணியில் இருந்து நீக்கம்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

    முதல் போட்டியில் விளையாடாத சுப்மன் கில் 2-வது போட்டியில் இந்திய அணியில் இடம் பெறுவது உறுதியானது. இதனால் சர்பராஸ் கான் அல்லது கே.எல். ராகுல் ஆகியோரில் ஒருவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இந்திய அணியில் குல்தீப் யாதவ், கே.எல். ராகுல், முகமது சிராஜ் ஆகிய மூன்று பேர் நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டதை கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "காயம் தொடர்பான கவலையைத் தவிர்த்து மற்றபடி பெரும்பாலான அணிகள் மூன்று மாற்றங்கள் செய்யும் என பார்க்கவில்லை.

    வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டது, இந்திய அணியின் பேட்டிங் குறித்து கவலைப்படுவதை சொல்கிறது. அவருடைய பந்து வீச்சை தவிர்த்து, பின்கள பேட்டிங் வரிசையை வசதியாக்க அவருடைய பேட்டிங் தேவைப்படுகிறது. நியூசிலாந்தின் இடது கை பேட்டிங் வரிசை குறித்து அதிக அளவில் பேசப்படுகிறது. ஆனால் நான் குல்தீப் யாதவை தேர்வு செய்திருப்பேன். இடது கை பேட்ஸ்மேன்களை அவரால் கட்டுப்படுத்த முடியும்.

    • ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
    • தக்கவைக்கும் வீரர்கள் விவரங்களை 31-ந்தேதிக்குள் வழங்க வேண்டும்.

    ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதனால் ஒவ்வொரு அணிகளும் ஆறு வீரர்களை தக்கவைத்துக் கொண்டு மற்ற வீரர்களை ரிலீஸ் செய்ய வேண்டும். வருகிற 31-ந்தேதிக்குள் தக்கவைத்த வீரர்கள் பட்டியலை 10 அணிகளும் தாக்கல் செய்ய வேண்டும்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டுள்ளார். கங்குலி விலகியுள்ளார். ஹேமங் பதானி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் ரிஷப் பண்ட்-ஐ ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை அவரை வெளியிட்டால் ஆர்.சி.பி. ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ரிஷப் பண்ட் தொடக்கத்தில் இருந்தே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரை ரிலீஸ் செய்தால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டும் எனத் தெரிகிறது.

    லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல். ராகுலை அந்த அணியை விடுவிக்க இருக்கிறது. இதனால் ரிஷப் பண்ட்-ஐ கேப்டனாக்க ஆர்வம் காட்டும்.

    முன்னதாக, டெல்லி அணியின் துணை-உரிமையாளரான பார்த் ஜிண்டால் சில வீரர்களை நாங்கள் தக்கவைத்துக் கொள்ள அணி ஆர்வம் காட்டும் எனத் தெரிவித்திருந்தார். "எங்கள் அணியில் சில மிகச் சிறந்த வீரர்கள் உள்ளனர். விதிமுறை வெளியிடப்பட்டுள்ளது. எங்களுடைய கிரிக்கெட் இயக்குனர் மற்றும் ஜி.எம்.ஆர். உடன் ஆலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும்.

    ரிஷப் பண்ட் நிச்சயமாக தக்கவைத்துக் கொள்ளப்படுவார். அக்சார் பட்டேல் திறமையானவர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜேக் பிராசர்-மெக்கர்க், குல்தீப் யாதவ், அபிஷேக் பொரேல், முகேஷ் குமார், கலீல் அகமது போன்ற சிறந்த வீரர்கள் அணியில் உள்ளனர்" எனக் கூறியிருந்தார்.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, அந்த அணியில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அப்படி வெளியேறினால் பெரிய தொகைக்கு அவரை ஏலம் எடுக்க வேண்டியிருக்கும். அதனால் ரிஷப் பண்ட்-ஐ ரிலீஸ் செய்ய டெல்லி நினைத்திருக்கலாம்.

    • பி.டி.உஷாவுக்கும், நிர்வாக குழுவுக்கும் இடையே மோதல் போக்கு.
    • சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    புதுடெல்லி:

    இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி. உஷா உள்ளார். 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த பொறுப்பில் அவர் இருந்து வருகிறார்.

    முன்னாள் தடகள வீராங்கனையான பி.டி.உஷா ஒலிம்பிக் ஒப்பந்தம் தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகைகள் வழங்கியதாகவும், இதனால் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.24 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதை அவர் மறுத்தார். இது தொடர்பாக அவருக்கும் நிர்வாக குழுவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

    இதற்கிடையே பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு இதற்கான இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை (25-ந்தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பி.டி.உஷா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    இதை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இயக்குனர் ஜார்ஜ் மேத்யூ நிர்வாக குழு மற்றும் உறுப்பினர்களுக்கு ஈ-மெயில் மூலம் தெரிவித்துள்ளார்.

    இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக் குழு கூட்டம் நடைபெறும் புதிய தேதி, நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என்றும் அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

    • வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் அணியில் சேர்ப்பு.
    • குல்தீப் யாதவ், முகமது சிராஜ் அதிரடி நீக்கம்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    பெங்களூருவில நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட் நவம்பர் 1-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்திய அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முகமது சிராஜ், கே.எல். ராகுல், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர், கில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்திய அணி விவரம்:-

    ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சர்பராஸ் கான், ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், பும்ரா.

    நியூசிலாந்து அணி விவரம்:-

    டாம் லாதம், கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், பிளண்டெல், கிளென் பிளிப்ஸ், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுத்தி, அஜாஸ் பட்டேல், வில்லியம் ஓ'ரூகே

    • 28-ந்தேதி வரை சந்திக்க முடியாது என சி.எஸ்.கே. நிர்வாகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளார்.
    • 31-ந்தேதிக்கு முன் உறுதிப்படுத்துவார் என நம்புகிறோம்- சி.எஸ்.கே. நிர்வாகம்

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டனாக திகழந்த எம்.எஸ். டோனி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணிக்காக விளையாடி வருகிறார். சி.எஸ்.கே. அணியின் பிராண்ட் ஆக எம்.எஸ்.டோனி மாறிவிட்டார் எனச் சொல்லலாம். அவரை காண்பதற்காகவே ரசிகர்கள் மைதானத்தில் குவிகிறார்கள்.

    கடந்த ஐ.பி.எல். தொடர்தான் எம்.எஸ். டோனியின் கடைசி தொடராக இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் எம்.எஸ். டோனி மீண்டும் விளையாடுவார் என சி.எஸ்.கே. நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் எம்.எஸ். டோனி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.

    2025 ஐ.பி.எல். தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இதனால் அனைத்து அணிகளும் குறிப்பிட்ட வீரர்களை தக்கவைத்துவிட்டு மற்ற வீரர்களை ரிலீஸ் செய்ய வேண்டும்.

    இதனால் சி.எஸ்.கே. டோனியை ரிலீஸ் செய்துவிட்டு, uncapped வீரர் என்ற வகையில் 4 கோடி ரூபாய்க்கு தக்கவைத்து கொள்ள முடிவு செய்கிறது.

    இது தொடர்பாக டோனியிடம் பேச சி.எஸ்.கே. நிர்வாகம் விரும்பியது தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களை பட்டியலை வருகிற 31-ந்தேதிக்குள் ஒவ்வொரு அணியும், ஐபிஎல் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

    இதனால் டோனி என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ஆலோசனை கூட்டம் நடத்த சி.எஸ்.கே. நிர்வாகம் விரும்பியது.

    ஆனால் தன்னால் 28-ந்தேதி வரை ஆலோசனை கூட்டத்தில் கலந்த கொள்ள முடியாது என எம்.எஸ். டோனி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் டோனியின் முடிவை தெரிந்து கொள்ள சி.எஸ்.கே. நிர்வாகம் காலக்கெடுவான 31-ந்தேதிக்கு முன் 29 அல்லது 30-ந்தேதி வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

    இது தொடர்பாக சி.எஸ்.கே. அணியின் சிஇஓ விஸ்வநாதன் கூறுகையில் "எம்.எஸ். டோனியிடம் இருந்து நாங்கள் எந்த தகவலையும் பெறவில்லை. இருந்தாலும் கூட சி.எஸ்.கே. அணிக்காக அவர் விளையாட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். 31-ந்தேதிக்கு முன்பாக அவர் உறுதிப்படுத்துவார் என்று நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களை ஏலத்திற்கு முன்னதாக தக்கவைத்துக் கொள்ள முடியும். எம்.எஸ். டோனி உறுதிப்படுத்தினால் 120 கோடி ரூபாயில் சி.எஸ்.கே. 4 கோடி ரூபாய் செலவழித்து டோனியை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

    இந்திய அணியில் இருந்து கடந்த 2020-ம் ஆண்டு ஓய்வு பெற்றபின், ஐ.பி.எல். தொடரை தவிர மற்ற எந்த தொடர்களிலும் எம்.எஸ். டோனி விளையாடவில்லை. கடந்த முறை பினிஷராக களம் இறங்கி 161 ரன்கள் அடித்தார். ஆனால் ஸ்டிரைக் 220 ஆகும். கடைசி நேரத்தில் சிக்சர்கள் அடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.

    • வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
    • இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    வியன்னா:

    வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் மார்கோஸ் கைரன் உடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி, அமெரிக்காவின் தியாபேவை 6-3, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் ஸ்வரேவ், இத்தாலியின் முசெட்டி உடன் மோதுகிறார்.

    • டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் 3 இந்தியர்கள் உள்ளனர்.
    • பந்து வீச்சாளர்கள், ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் பெரிய அளவில் மாற்றமில்லை.

    துபாய்:

    இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மற்றும் பாகிஸ்தான்-இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி முடிந்துள்ளது.

    இந்நிலையில், புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

    இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீர்ர ஜோ ரூட் மாற்றமின்றி முதலிடத்தில் நீடிக்கிறார்.

    இந்தியாவின் ஜெய்ஸ்வால் 4-வது இடத்திலும், ரிஷப் பண்ட் 3 இடங்கள் முன்னேறி விராட் கோலியை தாண்டி 6-வது இடத்திலும், விராட் கோலி (ஒரு இடம் சரிந்து) 8-வது இடத்திலும் உள்ளனர்.

    பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் பெரிய அளவில் மாற்றமில்லை. பும்ரா மற்றும் ஜடேஜா மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகின்றனர்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இலங்கை சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும், தீக்ஷனா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    கொழும்பு:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக 44 ஓவராக குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 36 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரூதர்போர்டு பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 80 ரன்கள் எடுத்தார். குடகேஷ் மோட்டி 50 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை அணி சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும், தீக்ஷனா, அசிதா பெர்னாண்டோ தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் நிஷான் மதுஷ்கா மற்றும் சதீரா சமரவிகரமா தலா 38 ரன்கள் எடுத்தனர்.

    கேப்டன் சரித் அசலங்கா சிறப்பாக ஆடி 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், இலங்கை 38.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை கைப்பற்றியுள்ளது.

    ஆட்ட நாயகன் விருது மகேஷ் தீக்ஷனாவுக்கு அளிக்கப்பட்டது.

    • வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் போபண்ணா ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    ஆஸ்திரியா:

    வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, நெதர்லாந்தின் ராபின் ஹாஸ்-ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் ஜோடி உடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 2-6, 7-5, 10-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    நாளை நடைபெறும் காலிறுதியில் போபண்ணா ஜோடி அமெரிக்காவின் நீல் கப்ஸ்கி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியுடன் மோதுகிறது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தமிழ் தலைவாஸ் அணி 2வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புதுடெல்லி:

    11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் , இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் அதிரடி ஆட்டத்தில் இறங்கியது. இறுதியில் இந்தப் போட்டியில் 35-30 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வென்று இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

    மற்றொரு போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 33-27 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி யு மும்பா அணி வெற்றி பெற்றது.

    • அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது.
    • ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது.

    இந்த தொடரில் கலந்து கொள்வதற்காக பல அணிகள் குவாலிபையர் சுற்றில் விளையாடி வருகின்றன. அந்த வகையில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. அதில் ஜிம்பாப்வே, கென்யா, ருவாண்டா, காம்பியா, மொசாம்பிக், சீஷெல்ஸ் ஆகிய அணிகள் தங்களுக்குள் மோதுகின்றன.

    இதில் இன்று நடந்த போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் காம்பியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி துவக்க வீரர்களாக களமிறங்கிய ப்ரியன் பென்னெட் மற்றும் மருமனி முறையே 50 மற்றும் 62 ரன்களை விளாசினர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய மேயர்ஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த கேப்டன் ராசா அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 133 ரன்களை விளாசினார். இதில் 15 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். இவரைத் தொடர்ந்து வந்த ரியான் பர்ல் 25 ரன்களும், மடான்டே 53 ரன்களையும் விளாசினர். இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 344 ரன்களை விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக மாறியது.

    இமாலய இலக்கை துரத்திய காம்பியா அணி 54 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் ஜிம்பாப்வே அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் கரவா மற்றும் மவுட்டா தலா மூன்று விக்கெட்டுகளையும், மத்வீர் இரண்டு விக்கெட்டுகளையும் பர்ல் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    ×