என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றது.
    • இந்திய அணியின் வீரர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு வைரம் பதித்த மோதிரத்தை பிசிசிஐ வழங்கியது.

    இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் பிசிசிஐயின் நாமன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றதற்கு பிசிசிஐ சார்பில் சிறப்பு 'சாம்பியன்ஸ் மோதிரம்' வழங்கப்பட்டது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்ற ஒவ்வொரு வீரரின் பெயரும் அவர்களது ஜெர்சி நம்பரும் பொறிக்கப்பட்ட வைரம் பதித்த மோதிரத்தை பிசிசிஐ வழங்கியது. இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    • இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசியுள்ளார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட், ஜோரூட் சாதனையை ஸ்மித் சமன் செய்துள்ளார்.

    காலே:

    இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அதே காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 257 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக குசல் மெண்டீஸ் 85 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், எம் குஹ்னேமன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹேட் 21, கவாஜா 36, லெபுசென் 4 என விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினர். ஸ்மித்துக்கு இது 36-வது டெஸ்ட் சதம் ஆகும்.


    இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஆஸ்திரேலிய வீரராக ஸ்மித் பல சாதனைகளை படைத்துள்ளார்.

    அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட் (36 சதம்), ஜோரூட் (36 சதம்) ஆகியோரின் சாதனையை ஸ்மித் சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் முதல் 4 இடங்கள் முறையே சச்சின் (51), கல்லீஸ் (45), பாண்டிங் (41), சங்ககாரா (38) ஆகியோர் உள்ளனர்.

    மற்றொரு சாதனையாக ஆசியாவில் அதிக ரன்கள் விளாசிய ரிக்கி பாண்டிங் சாதனையை அவர் முறியடித்துள்ளார். ஆசியாவில் பாண்டிங் 48 இன்னிங்ஸ்களில் 41.97 சராசரியுடன் 1889 ரன்கள் குவித்திருந்தார். அந்த சாதனை ஸ்மித் 42 இன்னிங்ஸ்களில் 51.08 என்ற சாராசயில் முறியடித்துள்ளார்.

    மேலும் ஆசியாவில் அதிக சதங்கள் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் என்ற ஆலன் பார்டர் சாதனையை ஸ்மித் முறியடித்துள்ளார்.

    ஆசியாவில் அதிக சதங்கள் விளாசிய ஆஸ்திரேலிய வீரர்கள் விவரம்:-

    ஸ்டீவன் ஸ்மித் - 7

    ஆலன் பார்டர் - 6

    கவாஜா - 5

    ரிக்கி பாண்டிங் - 5

    • முதல் போட்டியில் விராட் கோலி காயம் காரணமாக விளையாடவில்லை.
    • இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி 9-ந் தேதி நடக்கிறது.

    நாக்பூர்:

    இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 தொடரை 1-4 (5 போட்டிகள்) என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது.

    இதன்படி இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ராணா ஒரு நாள் போட்டியில் அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர். நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு, முந்தைய நாள் பயிற்சியின்போது வலதுகால் முட்டியில் காயம் ஏற்பட்டதால் அவரால் இந்த ஆட்டத்தில் ஆட முடியவில்லை.

    இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி வருகிற 9-ந்தேதி கட்டாக்கில் நடக்கிறது.

    இந்த 2-வது போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? இல்லையா? என்பது குறித்து இந்திய துணை கேப்டன் சுப்மன் கில்லிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்த கில், விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரிய அளவில் இல்லை. எனவே நிச்சயமாக அவர் 2-வது போட்டியில் விளையாடுவார். என கூறினார்.

    • ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி தொடங்குகிறது.
    • முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

    8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.

    பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

    இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பிரத்யேக பாடல் வெளியாகி உள்ளது. இதனை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. ஜீத்தோ பாஸி கேல் கே என்ற போட்டிக்கான பாடலை பாகிஸ்தான் பாடகர் அதிஃப் அஸ்லம் பாடி அதில் நடித்துள்ளார்.

    இவர் பாலிவுட் மற்றும் பாகிஸ்தான் படங்களில் பின்னணி பாடகராக இருந்தவர். பிரபலமான அதிஃப் அஸ்லமுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    சாம்பியன்ஸ் டிராபி கீதத்தை அப்துல்லா சித்திக் தயாரித்துள்ளார். பாடல் வரிகளை அட்னான் தூல் மற்றும் அஸ்பாண்ட்யார் அசாத் எழுதியுள்ளனர்.

    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
    • இந்திய தரப்பில் சுப்மன் கில் அதிகபட்சமாக 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பட்லர் 52 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா, ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 87 ரன்கள் குவித்த சுப்மன் கில் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் விராட் கோலி மற்றும் முகமது சமியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    2022 முதல் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்ற வீரர்களில் முகமது ஷமி மற்றும் விராட் கோலியை சுப்மன் கில் சமன் செய்துள்ளார்.

    முகமது சமி, விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோர் 5 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். அதற்கு அடுத்தப்படியாக ஷ்ரேயாஸ் 4, ரோகித் சர்மா, குல்தீப் யாதவ் 3 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளனர்.

    • நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறோம்.
    • போட்டியில் தொடக்கத்தில் எங்களுக்கு இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அழுத்தம் கொடுத்தனர்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. நாக்பூரில் நேற்று இரு அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 47.4 ஓவர்களில் 248 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 52 ரன்னும், பெத்தேல் 51 ரன்னும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா, ராணா தலா 3 விக்கெட் கைப்பற்றினர். பின்னர் விளையாடிய இந்தியா 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்து வென்றது. சுப்மன் கில் 87 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 59 ரன்னும், அக்சர் பட்டேல் 52 ரன்னும் எடுத்தனர்.

    வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறோம். ஒரு அணியாக விரைவாக மீண்டும் ஒருங்கிணைந்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் அறிய விரும்பினோம். எனவே இப்போட்டியில் வென்றது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது.

    இந்த போட்டியில் தொடக்கத்தில் எங்களுக்கு இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அழுத்தம் கொடுத்தனர். ஆனால் நாங்கள் ஆட்டத்துக்குள் திரும்பி வந்த விதம் சிறப்பாக இருந்தது.

    பந்துவீச்சாளர்கள் அனைவரும் உறுதுணையாக இருந்தனர். முக்கியமான நேரத்தில் நாங்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினோம். மைதானத்தில் வீரர்களிடம் உத்வேகமும் அற்புதமாக இருந்தது. அக்சர் பட்டேல் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்து வருகிறார். அதை இன்று பார்க்க முடிந்தது. எங்களுக்கு ஒரு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டபோது சுப்மன் கில்-அக்சர் பட்டேல் ஜோடி நன்றாக பேட்டிங் செய்தது.

    சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்பாக குறிப்பிட்ட எந்த இலக்கும் இல்லை. ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக நாங்கள் தொடர்ந்து சரியான விஷயங்களைச் செய்வதை உறுதிசெய்ய விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி நாளை மறுநாள் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடக்கிறது.

    • சாம்பியன்ஸ் டிராபியில் முதல் 8 சிறந்த அணிகள் விளையாடுகின்றன.
    • சமீப காலமாக 20 ஓவர் கிரிக்கெட்டில் 200 ரன்கள் அளவுகோலாக மாறி விட்டது.

    8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.

    இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி 23-ந்தேதி துபாயில் நடக்கிறது. இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தலைமை பயிற்சியாளர் ஆகிப் ஜாவேத் கூறியதாவது:-

    சாம்பியன்ஸ் டிராபியில் முதல் 8 சிறந்த அணிகள் விளையாடுகின்றன. இதில் எந்த அணியையும் நீங்கள் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. எந்த அணியிலும் பும்ரா போன்ற ஒரு பந்து வீச்சாளர் இருந்தால், அது அந்த அணிக்கு பலமாக இருக்கும். ஆனால் நாங்கள் அவரைச் சுற்றி எல்லாவற்றையும் திட்டமிடமாட்டோம். பும்ராவின் உடற்தகுதி குறித்து அவர்கள் (இந்தியா) கவலைப்பட வேண்டும். பும்ரா பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

    சமீப காலமாக 20 ஓவர் கிரிக்கெட்டில் 200 ரன்கள் அளவுகோலாக மாறி விட்டது. எனவே ஒருநாள் போட்டிகளில் 325 அல்லது 350 ரன்கள் கூட சாத்தியமாகும்.

    குறிப்பாக பீல்டிங் கட்டுப்பாடுகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டதால் அதிக ரன்கள் குவிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
    • ஹர்ஷித் ராணா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

    இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. டி20 தொடரை போன்றே ஒருநாள் தொடரையும் இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

    நேற்றைய முதல் ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய ஒருநாள் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஹர்ஷித் ராணா அறிமுகமாகினர். இந்த நிலையில், அறிமுக போட்டியிலேயே ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை ஹர்ஷித் ராணா படைத்துள்ளார்.

    டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நிலையில், இங்கிலாந்து அணி பேட்டிங்கின் போது ஹர்ஷித் ராணா வீசிய ஒரே ஓவரில் 26 ரன்கள் அடிக்கப்பட்டன. இதன் மூலம் அறிமுக போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை ஹர்ஷித் ராணா படைத்துள்ளார்.

    இது ஒருபக்கம் இருந்த போதிலும், நேற்றைய போட்டியில் ஹர்ஷித் ராணா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற் சாதனையையும் ஹர்ஷித் ராணா படைத்துள்ளார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இருந்து ஹாலெப் விலகினார்.
    • கடந்த 2017-ம் ஆண்டில் முதல் முறையாக நம்பர் ஒன் தரவரிசையை அடைந்தார்.

    டென்னிஸ் வீராங்கனைகளில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் சிமோனா ஹாலெப்.

    இந்நிலையில், ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப் டென்னிசில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். தனது உடல்நலப் பிரச்சனைகளே ஓய்வுபெறுவதற்கான முதன்மை காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

    நான் உலக நம்பர் 1 ஆனேன். கிராண்ட்ஸ்லாம் வென்றேன். டென்னிசுக்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறது. நாம் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்ப்போம் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

    முழங்கால் மற்றும் தோள்பட்டை பிரச்சனை காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இருந்து ஹாலெப் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிமோனா ஹாலெப் கடந்த 2017-ம் ஆண்டில் முதல் முறையாக நம்பர் ஒன் தரவரிசையை அடைந்தார். 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    ரோட்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் வவாசோரி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.

    இதில் சிட்சிபாஸ் 6-7 (5-7) என இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் அடுத்த இரு செட்களை 7-6 (8-6), 7-5 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஹர்ஷித் ராணா அறிமுகமானார்.
    • இந்தப் போட்டியில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    நாக்பூர்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    இப்போட்டிக்கான இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ராணா ஆகியோர் அறிமுகமாகினர்.

    முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் பிலிப் சால்ட் ஜோடி அதிரடி தொடக்கத்தைக் கொடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 75 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இறுதியில், இங்கிலாந்து அணி 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹர்ஷித் ராணா 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

    இந்நிலையில், மூன்று வித அறிமுக போட்டியிலும் தலா 3 விக்கெட் சாய்த்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் ஹர்ஷித் ராணா.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் அறிமுகம் ஆன ஹர்ஷித் ராணா, முதல் இன்னிங்சில் 3 விக்கெட் சாய்த்தார்.

    சமீபத்தில் புனேவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான ஹர்ஷித் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதேபோல், நேற்று நடந்த நாக்பூர் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன ஹர்ஷித் ராணா, 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

    • முதலில் ஆடிய பார்ல் ராயல்ஸ் அணி 175 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 177 ரன்கள் எடுத்து வென்றது.

    கேப் டவுன்:

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 3-வது சீசன் தற்போது நடந்து வருகிறது.

    மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.

    தகுதிச்சுற்று 1 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எம்.ஐ.கேப்டவுன் அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வீழ்த்தியது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற தகுதிச்சுற்று 2 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பார்ல் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ரூபின் ஹெர்மான் 53 பந்தில் 81 ரன்கள் குவித்தார். பிரேடோரியஸ் 59 ரன்கள் சேர்த்தார்.

    தொடர்ந்து ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 19.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 177 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் டோனி டி ஜோர்சி 49 பந்தில் 78 ரன்கள் குவித்தார். ஜோர்டான் ஹெர்மான் 69 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் எஸ்.ஏ.20 தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது டோனி டி ஜோர்சிக்கு வழங்கப்பட்டது.

    ×