என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜமுனா போரா 5-0 என்ற கணக்கில் அல்ஜீரியா வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
    உலன் உடே:

    11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இதில் 54 கிலோ உடல் எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ஜமுனா போரா, அல்ஜீரியா வீராங்கனை ஒயிடாட் போவுடன் மோதினார். 

    முதலில் புள்ளிகளை விட்டுக் கொடுத்த ஜமுனா போரா, இறுதியில் 5-0 என்ற கணக்கில் அல்ஜீரியா வீராங்கனையை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் ஜமுனா போரா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    பெண்கள் உலக குத்துச்சண்டை காலிறுதிச் சுற்றில் மேரி கோம், ஜமுனா போரா மற்றும் மஞ்சு ராணி ஆகியோர் முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    வலைப்பயிற்சியின்போது கால் பாதத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக தென்ஆப்பிரிக்க ஒரு நாள் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை மந்தனா விலகி உள்ளார்.
    வதோதரா:

    இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று (காலை 9 மணி) நடக்கிறது.

    இந்திய அணிக்கு திடீர் பின்னடைவாக நட்சத்திர தொடக்க வீராங்கனை 23 வயதான ஸ்மிர்தி மந்தனா இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். வலைப்பயிற்சியின்போது பந்து தாக்கியதில் அவரது வலது கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. இதுகுறித்து பெண்கள் அணியின் பயிற்சியாளர் டபிள்யூ.வி.ராமன் கூறுகையில், ‘இது லேசான எலும்பு முறிவு தான். அவரது கால்பாதத்தில் கொஞ்சம் வீக்கம் உள்ளது. காயத்தன்மையை அறிய இன்னும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து சோதிக்க வேண்டி உள்ளது. அதனால் மந்தனா எப்போது களம் திரும்புவார் என்பதை இப்போதே கணிப்பது கடினம்’ என்றார். அடுத்து வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் மந்தனா ஆடுவது சந்தேகம் தான். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் 20 வயதான பூஜா வஸ்ட்ராகர் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணியின் கேப்டன் மிதாலிராஜ் கூறுகையில், ‘மந்தனா அனுபவம் வாய்ந்த வீராங்கனை. ஆனால் மந்தனா இல்லாததால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நிறைய ரன்கள் குவித்துள்ள பிரியா பூனியா போன்ற மற்ற வீராங்கனைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த தொடர், உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்டது கிடையாது. அதனால் புதிய வீராங்கனைகளை பரிசோதித்து பார்க்க முயற்சிப்போம். அவருக்கு பதிலாக களம் காணும் வீராங்கனை வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன்’ என்றார்.
    ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, அஸ்வின் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
    துபாய்:

    விசாகப்பட்டினத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் வீரர்கள் செயல்பாட்டின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இதன்படி டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் 937 புள்ளிகளுடன் ‘நம்பர் ஒன்’ இடத்தில் நீடிக்கிறார்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் பெரிய அளவில் சோபிக்காத இந்திய கேப்டன் விராட் கோலி (20 மற்றும் 31 ரன்) தரவரிசையில் சற்று சறுக்கலை சந்தித்துள்ளார். 4 புள்ளிகளை இழந்துள்ள அவர் 899 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடருகிறார். 2018-ம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு முதல்முறையாக 900 புள்ளிகளுக்கு கீழ் அவர் இறங்கியுள்ளார். துணை கேப்டன் ரஹானே 3 இடங்களை பறிகொடுத்து 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

    இந்த டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் (176 ரன், 127 ரன்) விளாசியதோடு 13 சிக்சர்கள் நொறுக்கி உலக சாதனை படைத்த இந்திய தொடக்க வீரர் ரோகித் சர்மா தரவரிசையில் கிடுகிடுவென ஏற்றம் கண்டுள்ளார். 36 இடங்கள் எகிறியுள்ள அவர் 17-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும். இரட்டை செஞ்சுரி அடித்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 63-வது இடத்தில் இருந்து 25-வது இடத்துக்கு வந்திருக்கிறார்.

    இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 111 ரன்கள் எடுத்த தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 4 இடங்கள் அதிகரித்து டாப்-10 இடத்துக்குள் நுழைந்து அதாவது 7-வது இடத்தை பெற்றுள்ளார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சதத்தை கடந்த இன்னொரு தென்ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கர் 5 இடங்கள் உயர்ந்து 14-வது இடம் வகிக்கிறார்.

    பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் ‘நம்பர் ஒன்’ வீரராக வலம் வருகிறார். விசாகப்பட்டினம் டெஸ்டில் மொத்தம் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி சுழலில் வித்தை காட்டிய இந்திய வீரர்அஸ்வின் 4 இடங்கள் முன்னேறி மீண்டும் டாப்-10 இடத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். டெஸ்டில் அதிவேகமாக 350 விக்கெட் வீழ்த்தி முரளிதரனின் சாதனையை சமன் செய்த அஸ்வின் தற்போது 10-வது இடம் வகிக்கிறார்.

    2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை அள்ளிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2 இடம் உயர்ந்து 16-வது இடத்தை (710 புள்ளி) பிடித்துள்ளார். தரவரிசையில் இது அவரது அதிகபட்ச புள்ளி எண்ணிக்கையாகும்.

    டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்தை எட்டியுள்ளார்.
    11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
    உலன் உடே:

    11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இதில் 51 கிலோ உடல் எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6 முறை சாம்பியனான இந்தியாவின் மேரி கோம், தாய்லாந்து வீராங்கனை ஜுதாமா ஜிட்பாங்குடன் மோதினார். 

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மேரிகோம் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் மேரி கோம் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
    புரோ கபடி லீக் தொடரில் நொய்டாவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ் அணி.
    7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் நேற்று இரவு நடந்த 127வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் பொறுப்புடன் ஆடினர். இதனால் அந்த அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 19-14 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக ஆடியது.

    இறுதியில், 35 - 33 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தி வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ் அணி. ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட தமிழ் தலைவாஸ் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

    மற்றொரு போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயண்டஸ் அணி 48 - 38 என்ற புள்ளி கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
    விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த இந்திய அணியின் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணிக்கு 40 புள்ளிகள் கிடைத்துள்ளது.  

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் வெளியானது. இதில் இந்திய அணி 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் துவங்கி இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளதால் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. 

    மேலும், இந்தப் பட்டியலில் நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் தலா 60 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளன. 
    பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில், 35 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் கைப்பற்றியது.
    லாகூர்:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் 2-0 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

    அதைத்தொடர்ந்து கடந்த 5ம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைதொடர்ந்து நேற்று 2-வது டி20 போட்டி லாகூரில் நடைபெற்றது.
        
    டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பனுகா ராஜபக்சா அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் 183 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்த ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அதில் பக்தர் சமான் 6(4) ரன்னும், பாபர் அசாம் 3(10) ரன்னும் எடுத்து வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய அகமது ஷஸாத் 13(16), உமர் அக்மல் 0(1), அதிரடி காட்டிய சர்பராஸ் அகமது 26 (16) ரன்களு எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக ஆசிப் அலி மற்றும் இமாத் வாசிம் ஆகியோர் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த நிலையில், இமாத் வாசிம்  47 (29) ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

    முடிவில் பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியின் சார்பில், நுவான் பிரதீப் 4 விக்கெட்டுகளும், வானிந்து ஹஸரங்கா 3 விக்கெட்டுகளையும், இசுரு உடானா 2 விக்கெட்டுகளையும், கசுன் ரஜிதா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் வென்றதன் மூலம், இலங்கை அணி தொடரை 2-0 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது.

    இரு அணிகளுக்கிடையிலான கடைசி மற்றும் 3-வது டி20 போட்டி வரும் 9ந் தேதி நடைபெற உள்ளது. 
    ஜெய்ப்பூரில் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி போட்டியில் திரிபுரா அணியை 187 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழ்நாடு.
    ஜெய்ப்பூர்:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

    இதில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி நேற்று தனது 6-வது லீக் போட்டியில் திரிபுரா அணியை சந்தித்தது.முதலில் பேட் செய்த தமிழக அணி 8 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய அபினவ் முகுந்த் 84 ரன்களும், பாபா அபராஜித் 87 ரன்களும் எடுத்தனர். கேப்டன் தினேஷ் கார்த்திக் 40 ரன்னில் அவுட்டானார். 

    இதையடுத்து, 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் திரிபுரா அணி களமிறங்கியது. ஆனால் தமிழக வீரர்களின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கி நிலைகுலைந்தது.

    இதனால் திரிபுரா அணி 34.3 ஓவர்களில் 128 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் தமிழக அணி 187 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றதற்கு ஷமி உள்ளிட்ட பந்து வீச்சாளர்கல்தான் காரணம் என கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.
    விசாகப்பட்டினம்:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ரவீந்திர ஜடேஜா, அஷ்வின் இருவரும் அபாரமாக பந்துவீசினர். பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் நமது சுழற்பந்து வீச்சாளர்கள் முதல் இன்னிங்சில் கொஞ்சம் அதிகமாக ரன்களை விட்டுக்கொடுத்தனர். ஆனால் நாங்களும் 500 ரன்களுக்கு மேல் குவித்த நிலையில் இதை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

    இந்த ஆடுகளத்தில் 2-வது இன்னிங்சில்தான் பந்துவீச்சாளர்களின் தாக்கம் இருக்கும் என்பது தெரியும். மொகமது ஷமி 2-வது இன்னிங்சில் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி வருகிறார். 5 விக்கெட் வீழ்த்திய 4 முறையும் 2-வது இன்னிங்சில் நிகழ்ந்தவைதான். இங்கு பேட்ஸ்மேன்கள் ரன்களை குவித்ததில் ஆச்சரியமில்லை. கடினமான இந்த ஆடுகளத்தில் சாதித்த பந்து வீச்சாளர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். ரோகித் சர்மா இரண்டு இன்னிங்சிலும், மயங்க் அகர்வால் முதலாவது இன்னிங்சிலும் அருமையாக ஆடினர் என தெரிவித்தார்.
    மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களை சினிமா பிரபலங்கள் பலரும் ஊக்குவித்து பரிசுகளை வழங்கி இருக்கிறார்கள்.
    சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் தொடக்க நாளில் நடந்த ஆண்களுக்கான 60 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எம்.செண்பகமூர்த்தி முதலிடம் பிடித்தார். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 5 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயத்தில் கிருஷ்ணசாமியும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான டிரிபிள்ஜம்ப்பில் எஸ்.துரைராஜனும், 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஈட்டி எறிதலில் விஷ்வாம்பரமும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான குண்டு எறிதலில் டி.சித்தரஞ்சனும், 85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நம்பீசனும் முதலிடம் பிடித்தனர்.

    பெண்களுக்கான 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போல்வால்ட் பந்தயத்தில் டி.ருக்மணி தேவியும், 50 வயதுக்கு
    மேற்பட்டவர்களுக்கான 5 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயத்தில் சுந்தராம்பாளும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான டிரிபிள்ஜம்ப்பில் பி.சசிகலாவும் முதலிடம் பெற்றனர். 

    சினிமா பிரபலங்கள்

    முதல் நாள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர்கள் ஆர்யா, எஸ்.ஜே. சூர்யா, நடிகை அதுல்யா, டைரக்டர்கள் கே.ஆர்., பிரபு சாலமன், மகிழ் திருமேணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்க தலைவர் எம்.செண்பகமூர்த்தி, செயலாளர் டி.ருக்மணி தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    புரோ கபடி லீக் தொடரில் நொய்டாவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது பாட்னா பைரேட்ஸ் அணி.
    7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் நேற்று இரவு நடந்த 124வது லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி வீரர்கள் அதிரடியாக ஆடி புள்ளிகளை குவித்தனர். இறுதியில், 69 - 41 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி வெற்றி பெற்றது பாட்னா பைரேட்ஸ் அணி.

    ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட பாட்னா பைரேட்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தை ஆறுதல் வெற்றியோடு முடித்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் பர்தீப் நர்வால் 36 புள்ளிகள் குவித்தார்.

    மற்றொரு போட்டியில் புனேரி பால்டன் அணியை 43-39 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தா அணி வென்றது.
    11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னாள் உலக சாம்பியனான சரிதாதேவி, நடாலியாவிடம் 0-5 என்ற கணக்கில் தோற்று வெளியேறினார்.
    உலன் உடே:

    11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இதில் 60 கிலோ உடல் எடைப்பிரிவில் நேரடியாக கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் அடியெடுத்து வைத்த முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் சரிதாதேவி, ரஷியாவின் நடாலியா ஷட்ரினாவுடன் மோதினார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சரிதாதேவி 0-5 என்ற கணக்கில் தோற்று வெளியேறினார். இதே போல் உலக போட்டியில் முதல்முறையாக களம் கண்ட இந்தியாவின் நந்தினி (81 கிலோ எடைப்பிரிவு), ஜெர்மனியின் அரினா நிகோலெட்டாவிடம் தாக்குப்பிடிக்க முடியாமல் 0-5 என்ற கணக்கில் வீழ்ந்தார்.

    ×