என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புரோ கபடி லீக் தொடரில் நொய்டாவில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் அரியானா அணியை வீழ்த்திய யு மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ளது.
    7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் இன்று இரவு நடந்த 130-வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் யு மும்பை அணிகள் மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 15-15 என சமனிலை வகித்தன. இரண்டாவது பாதியில் யு மும்பை அனி வீரர்கள் அதிரடி காட்டினர்.

    இறுதியில், 39 - 33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்திய யு மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் யு மும்பை அணி 69 புள்ளிகள் பெற்று நான்காவது இடம் பிடித்துள்ளது.
    மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி, தொடரை 3-0 என கைப்பற்றியது.
    லாகூர்:

    இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் போட்டி தொடரில் 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் இலங்கை அணி 2-0 என வெற்றி பெற்றிருந்தது.

    இந்நிலையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்றிரவு நடந்தது.

    முதலில் பேட் செய்த இலங்கை அணி 7 விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது. ஒஷாடா பெர்னாண்டோ 78 ரன்கள் விளாசினார்.

    இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.

    ஆனால், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இலங்கை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் நாள் ஆட்ட முடிவில் மயங்க் அகர்வாலின் சதத்தால் இந்தியா 3 விக்கெட்டுக்கு 273 ரன்களை எடுத்துள்ளது.
    புனே:

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது.
     
    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    முதல் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சதமடித்த ரோகித் சர்மா இம்முறை 14 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து இறங்கிய புஜாரா அகர்வாலுக்கு ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் சேர்ந்து நிதானமாக ஆடினர். இந்த ஜோடி 138 ரன்கள் சேர்த்தது.

    3 விக்கெட் வீழ்த்திய ரபாடா

    அரை சதமடித்த புஜாரா 58 ரன்னில் ஆட்டமிழந்தார். இரண்டாவது டெஸ்டிலும் மயங்க் அகர்வால் பொறுப்புடன் ஆடி அசத்தினார். அவர் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். அவர் 108 ரன்களில் வெளியேறினார். அப்போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலியும், அஜிங்கியா ரகானேவும் பொறுமையாக ஆடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர். கேப்டன் விராட் கோலி அரை சதமடிது அசத்தினார். 

    முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 85.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை எடுத்துள்ளது. கோலி 63 ரன்னுடனும், ரகானே 18 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்.
    புனே:

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது.
     
    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    முதல் டெஸ்டில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 14 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய புஜாரா அகர்வாலுக்கு ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் சேர்ந்து 138 ரன்கள் சேர்த்தனர்.

    அரை சதமடித்த புஜாரா 58 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இரண்டாவது டெஸ்டிலும் மயங்க் அகர்வால் பொறுப்புடன் ஆடி அசத்தினார். அவர் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். அவர் 
    108 ரன்களில் வெளியேறினார். அப்போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது. 

    இந்தியாவின் முக்கியமான 3 விக்கெட்டுகளையும் தென் ஆப்பிரிக்காவின் ரபாடா கைப்பற்றினார்.
    ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே தனது லட்சியம் என்றும் அந்த போட்டிக்காக தயாராகி வருவதாகவும் பி.வி.சிந்து கூறினார்.
    திருவனந்தபுரம்:

    உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டியில் பி.வி.சிந்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

    இதைத் தொடர்ந்து கேரள ஒலிம்பிக் அசோசியேசன் சார்பில் பி.வி. சிந்துவுக்கு திருவனந்தபுரத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பி.வி.சிந்து திறந்த ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

    பிவி சிந்துவுக்கு பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்

    திருவனந்தபுரம் ஸ்டேடியம் அருகே சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு இருந்து பி.வி. சிந்துவை உற்சாகமாக வரவேற்றனர். அவரும் பொதுமக்களை பார்த்து கை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    அதைத் தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டார். மேலும் கேரள மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசிதரூரும் இந்த விழாவில் கலந்து கொண்டார்.

    கேரள அரசு சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும், ஒலிம்பிக் அசோசியேசனின் பரிசு கோப்பையையும் பி.வி. சிந்துவுக்கு பினராயி விஜயன் வழங்கி பாராட்டினார்.

    விழாவில் பி.வி.சிந்து பேசியதாவது:-

    உங்களை போன்றவர்களின் ஊக்கம் மற்றும் ஆசீர்வாதத்தால் தான் உலக சாம்பியன் போட்டியில் என்னால் தங்க பதக்கம் வெல்ல முடிந்தது. 2020-ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. அந்த போட்டிக்காக நான் தயாராகி வருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே எனது லட்சியம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசாமி கோவில், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்களுக்கு பி.வி.சிந்து சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்குச் சென்றபோது கேரள பாரம்பரிய உடையை அணிந்தபடி பி.வி.சிந்து சென்றார்.

    11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் 5-0 என்ற கணக்கில் கொலம்பிய வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
    உலன் உடே:

    11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இதில் 51 கிலோ எடைப்பிரிவு காலிறுதி சுற்றில் 6 முறை உலக சாம்பியனான இந்தியாவின் மேரி கோம், கொலம்பிய வீராங்கனை வாலன்சியா விக்டோரியாவுடன் மோதினார். 

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மேரிகோம் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கொலம்பிய வீராங்கனையை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் மேரி கோம் அரைறுதிக்கு முன்னேறியுள்ளார். மேலும் உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டி 51 கிலோ எடைப்பிரிவில் முதன் முறையாக பதக்கத்தை உறுதி செய்துள்ளார். உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டிகளில் 8வது பதக்கத்தை உறுதி செய்திருக்கிறார்.

    இந்த ஆண்டு மட்டும், கவுஹாத்தியில் நடந்த இந்தியா ஓபன் மற்றும் இந்தோனேசியாவில் நடந்த பிரசிடெண்ட் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய தடகள வீராங்கனை நிர்மலா ஷெரானுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    மொனாக்கோ:

    இந்திய தடகள வீராங்கனை நிர்மலா ஷெரானிடம் கடந்த ஆண்டு (2018) ஜூன் மாதம் இந்தியாவில் நடந்த போட்டியின்போது ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் நிர்மலா தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

    தன் மீதான ஊக்க மருந்து புகாரை ஏற்றுக்கொண்ட அவர் மேலும் விசாரணை நடத்துமாறு கேட்கவில்லை. இதையடுத்து சர்வதேச தடகள சம்மேளனத்தின் ஒழுங்குமுறை கமிட்டி நிர்மலாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இந்த தடை 2018-ம் ஆண்டு ஜூன் 29-ந் தேதி முதல் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2016-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அவரது வெற்றிகள் அனைத்தும் தகுதி நீக்கம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2017-ம் ஆண்டு நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் நிர்மலா வென்ற தங்கப்பதக்கங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.


    கேப்டனாக 50-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இன்று களமிறங்கியதன் மூலம், முன்னாள் கேப்டன் டோனியின் சாதனையுடன் இணைந்துள்ளார்.
    புனே:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி புனேவில் இன்று தொடங்கி நடைபெறுகிறது.

    இப்போட்டி விராட் கோலி கேப்டனாக களமிறங்கும் 50வது டெஸ்ட் போட்டி ஆகும். இதன்மூலம், 50 டெஸ்ட் போட்டிகளை வழிநடத்திய இந்திய கேப்டன்கள் வரிசையில், இரண்டாவதாக இணைந்துள்ளார் கோலி. 60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக பணியாற்றிய டோனி முதலிடத்தில் உள்ளார்.

    டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைக் குவித்த கேப்டன் என்ற டோனியின் சாதனையை கோலி இந்த ஆண்டு துவக்கத்தில் முறியடித்தார். 60 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய டோனி, 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். விராட் கோலி மொத்தம் 49 போட்டிகளுக்கு தலைமை தாங்கி, அதில் 29 முறை வெற்றி பெற்றுள்ளார்.

    முன்னாள் கேப்டன் கங்குலி 28 போட்டிகளுக்கு தலைமை தாங்கி, 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது.
    புனே:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி புனேவில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் களமிறங்கினர். புனேவில் மழை பெய்ததால் முதல் நாள் பேட்ஸ்மேன்களுக்கு  சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணியில் ஹனுமா விகாரிக்கு பதிலாக கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க அணியில் நோர்ட்ஜே அறிமுகம் ஆகிறார்.

    முதல் டெஸ்ட் போட்டியைப் போன்று இந்த டெஸ்டிலும் ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இதுதவிர கேப்டன் கோலி, புஜாரா, ரஹானே ஆகியோர் கொண்ட வலுவான பேட்டிங் வரிசை உள்ளது.

    இந்திய அணி வீரர்கள்: ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, ரகானே, சகா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ்.

    தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள்: எல்கர், மார்க்ரம், புரூயின், பவுமா, டு பிளசிஸ், குயின்டன் டி காக், முத்துசாமி, பிலாண்டர், மகராஜ், ரபாடா, நோர்ட்ஜே.
    புரோ கபடி லீக் தொடரில் நொய்டாவில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
    7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் நேற்று இரவு நடந்த 128-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் பொறுப்புடன் ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 13-13 என சமனிலை வகித்தன. 

    இரண்டாவது பாதியில் வழக்கம்போல் தமிழ் தலைவாஸ் அணி சோபிக்க தவறியது.

    இறுதியில், 33 - 29 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் பெங்கால் வாரியர்ஸ் அணி 83 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

    ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட தமிழ் தலைவாஸ் அணி, இந்த சீசனில் 4 வெற்றி, 3 டிரா, 15 தோல்வி என மொத்தம் 37 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

    மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 41 - 36 என்ற புள்ளி கணக்கில் யு.பி யோதா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
    தென் ஆப்பிரிக்க பெண்கள் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி அபார வெற்றி பெற்றது.
    வதோதரா:

    இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் மோதிய முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க பெண்கள் அணியின் கேப்டன் லூஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய லிஸ்லி லீ ரன் எதுவும் எடுக்காமலும் (0), லாரா 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் இந்திய அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

    சற்று நிலைத்து நின்று ஆடிய அந்த அணியின் மரிஷனி கப் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்க பெண்கள் அணி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் கோஸ்வாமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    தென் ஆப்பிரிக்க அணி வீராங்கனை பந்தை விளாசும் காட்சி

    இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ப்ரியா மற்றும் ஜேமிமா தென் ஆப்பிரக்காவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ஜேமிமா 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்திய அணி 41.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 75 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற தொடக்க வீராங்கனை பிரியாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜமுனா போரா 5-0 என்ற கணக்கில் அல்ஜீரியா வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
    உலன் உடே:

    11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இதில் 54 கிலோ உடல் எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ஜமுனா போரா, அல்ஜீரியா வீராங்கனை ஒயிடாட் போவுடன் மோதினார். 

    முதலில் புள்ளிகளை விட்டுக் கொடுத்த ஜமுனா போரா, இறுதியில் 5-0 என்ற கணக்கில் அல்ஜீரியா வீராங்கனையை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் ஜமுனா போரா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    பெண்கள் உலக குத்துச்சண்டை காலிறுதிச் சுற்றில் மேரி கோம், ஜமுனா போரா மற்றும் மஞ்சு ராணி ஆகியோர் முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×