என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு சோதனையில் தேர்ச்சி பெறுவதும் ஒரு அளவுகோலாக வைக்கப்பட்டுள்ளது.
    • வீரர்கள் ஓய்வு இல்லாமல் 5 தொகுப்புகளை தொடர்ச்சியாக முடிக்க வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது உடற்தகுதியை நிரூபிக்க யோ-யோ என்ற சோதனை நடத்தப்படுகிறது. இந்த நிலையில் யோ-யோ சோதனையுடன் பிரான்கோ என்ற மேலும் ஒரு சோதனையை புதிய அளவுகோலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு அந்த சோதனையில் தேர்ச்சி பெறுவதும் ஒரு அளவுகோலாக வைக்கப்பட்டுள்ளது. அந்த பிரான்கோ சோதனை ஏற்கனவே நடைமுறையில் உள்ள யோ யோ சோதனையைவிட கடினமானது. இந்த சோதனையில் 20 மீட்டர், 40 மீட்டர், 60 மீட்டர் என்ற 3 கட்டங்கள் உள்ளன. ஒரு தொகுப்பில் 3 தூரங்களிலும் ஓட வேண்டும்.

    இதில் வீரர்கள் ஓய்வு இல்லாமல் 5 தொகுப்புகளை தொடர்ச்சியாக முடிக்க வேண்டும். அந்த 5 கட்டங்களையும் வீரர்கள் 6 நிமிடத்திற்குள் முடித்தால் தேர்ச்சியடைந்ததாக கருதப்படுவார்கள். சமீபத்திய இங்கிலாந்து தொடரில் முகமது சிராஜை தவிர மற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முழுமையாக விளையாட முடியாததால் இந்த புதிய சோதனை கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.

    • ஆசிய கோப்பைக்கான (டி20) இந்திய அணி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
    • ஸ்ரேயாஸ் அய்யர், ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர் இல்லாதது விமர்சனத்திற்கு உள்ளானது.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் தொடங்குகிறது. ஆசிய கோப்பைக்கான (டி20) இந்திய அணி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடருகிறார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஸ்ரேயாஸ் அய்யர், ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தருக்கு இடம் இல்லாதது விமர்சனத்திற்கு உள்ளானது.

    இந்நிலையில், ஆசிய போட்டிக்கான இந்திய அணி குறித்து முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் பேசியதாவது:

    இந்த இந்திய அணியை கொண்டு ஆசிய கோப்பையை வேண்டுமென்றால் வெல்லலாம். ஆனால் இந்த வீரர்களைக் கொண்டு டி20 உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பில்லை.

    இந்த அணியை உலகக் கோப்பைக்கு எடுத்துச்செல்ல போகிறீர்களா? 6 மாதத்தில் தொடங்கும் உலகக் கோப்பைக்கான தயாரிப்பு பணிகள் இதுதானா?. இது இந்திய அணியை பின்நோக்கி எடுத்துச் செல்கிறது.

    துணை கேப்டன் பதவியில் இருந்து அக்ஷர் பட்டேல் நீக்கப்பட்டுள்ளார். ரிங்கு சிங், ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா எப்படி அணியில் இடம் பிடித்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

    ஐ.பி.எல். தொடரே அணி தேர்வுக்கான முக்கியமானது. ஆனால் தேர்வாளர்கள் அதற்கு முன்பு வீரர்கள் செயல்பட்டதை கருத்தில் கொண்டதாக தெரிகிறது என தெரிவித்தார்.

    10-வது டி20 உலகக் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
    • இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 29-ம் தேதி நடக்கிறது.

    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலன்கா தலைமையிலான அந்த அணியில் முன்னணி ஆல் ரவுண்டரான வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இடம்பெறவில்லை.

    இலங்கை அணி விவரம்:

    சரித் அசலன்கா (கேப்டன்), பதும் நிசங்கா, நிஷான் மதுஷ்கா, குசால் மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்கே, துனித் வெல்லலகே, மிலன் ரத்நாயக்கே, மஹீஸ் தீக்சனா, ஜெப்ரி வான்டர்சே, அசித்த பெர்னாண்டோ, துஷ்மந்த சமீரா, தில்ஷன் மதுஷன்கா.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது.
    • ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் செப்டம்பர் 14-ல் நடக்கிறது.

    புதுடெல்லி:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது.

    இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

    இதில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் செப்டம்பர் 14-ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனையால் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து வருகின்றன.

    இந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடுமா என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது.

    இந்நிலையில் ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் எக்காரணம் கொண்டும் இருதரப்பு தொடர்களில் பாகிஸ்தானுடன் விளையாடாது என்று கூறியுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகம் கூறியதாவது:

    பாகிஸ்தான் உடனான விளையாட்டு நிகழ்வுகளுக்கான அணுகுமுறை, இந்திய நாட்டின் ஒட்டுமொத்த கொள்கையை பிரதிபலிக்கிறது.

    பாகிஸ்தான் உடனான இருதரப்பு தொடர்களை இந்திய அணி புறக்கணிக்கும். இந்திய அணிகள் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்காது. அதேபோல், பாகிஸ்தான் அணிகளை இந்தியாவில் விளையாட அனுமதிக்க மாட்டோம்.

    ஆனால் ஆசிய கோப்பையில் விளையாடுவதை நாங்கள் தடுக்க மாட்டோம். ஏனெனில் அது பன்முக நிகழ்வாகும். இருதரப்பு போட்டிகளுக்கு பாகிஸ்தானை இந்திய மண்ணில் அனுமதிக்க மாட்டோம். அதேபோல் ஐ.சி.சி. தொடராகவே இருந்தாலும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாது என தெரிவித்தது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடந்த இறுதிப்போட்டியில் இகா ஸ்வியாடெக், காஸ்பர் ரூட் ஜோடி தோல்வி அடைந்தது.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.

    கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக்-நார்வேயின் காஸ்பர் ரூட் ஜோடி, இத்தாலியின் சாரா எர்ரானி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இத்தாலி ஜோடி முதல் செட்டை 6-3 என வென்றது. 2வது செட்டை இகா ஸ்வியாடெக் ஜோடி 7-5 என வென்றது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 10-6 என வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியது.

    • இந்திய ஆண்கள் அணியின் தலைமை தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் பணியாற்றி வருகிறார்.
    • 2023 ஜூலை 4 முதல் இவர் இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.

    அஜித் அகர்கர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்கள் அணியின் தலைமை தேர்வுக்குழு தலைவராக பணியாற்றி வருகிறார்.

    2023 ஜூலை 4 முதல் இவர் இந்த பொறுப்பில் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூன் வரை இருந்தது.

    இந்நிலையில் அஜித் அகர்கரின் ஒப்பந்தத்தை ஜூன் 2026 வரை பிசிசிஐ நீட்டித்துள்ளது.

    • ஒரு புதிய தலைவரை வளர்த்தெடுக்க இதுவே சரியான நேரம் என்று நான் நம்புகிறேன்.
    • இதனால் கேப்டன் பொறுப்பில் தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.

    இந்திய கிரிக்கெட்டின் சீனியர் வீரரும், மும்பை கிரிக்கெட் அணியின் கேப்டனுமான அஜிங்க்யா ரஹானே, உள்நாட்டு சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, மும்பை ரஞ்சி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஒரு வீரராக மட்டுமே விளையாட முடிவு செய்து இருக்கிறார்.

    புதிய தலைமுறைத் தலைவர்களை உருவாக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக ரகானேதெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மும்பை அணிக்கு கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டங்களை வென்றது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதை. புதிய உள்நாட்டு சீசன் தொடங்க உள்ள நிலையில், ஒரு புதிய தலைவரை வளர்த்தெடுக்க இதுவே சரியான நேரம் என்று நான் நம்புகிறேன். எனவே, கேப்டன் பொறுப்பில் தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.

    ஒரு வீரராக எனது சிறந்த பங்களிப்பை அளிப்பதற்கு நான் முழு அர்ப்பணிப்புடன் இருப்பேன். மும்பை கிரிக்கெட் சங்கத்துடன் எனது பயணத்தைத் தொடர்ந்து, மேலும் பல கோப்பைகளை வெல்ல உதவுவேன். வரவிருக்கும் சீசனை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

    என்று ரகானே குறிப்பிட்டுள்ளார். 

    • முதல் நாளில் தமிழ்நாட்டுக்கு 4 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் ஆக மொத்தம் 7 பதக்கம் கிடைத்தது.
    • பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தனலட்சுமி 11.36 வினாடியில் கடந்து தங்கம் வென்றார்.

    சென்னை:

    தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 64-வது மாநிலங்கள் இடையேயான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 700 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    தொடக்க நாளில் தமிழக வீரர்-வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினார்கள். முதல் நாளில் தமிழ்நாட்டுக்கு 4 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் ஆக மொத்தம் 7 பதக்கம் கிடைத்தது.

    ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் எஸ். தமிழரசு புதிய போட்டி சாதனையுடன் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 10.22 வினாடியில் கடந்தார். இதற்கு முன்பு பஞ்சாப் வீரர் குரீந்தர்வீர் சிங் 2021-ம் ஆண்டு 10.27 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.

    23 வயதான தமிழரசின் சிறந்த நிலை இதுவாகும். இதற்கு முன்பு இந்த ஆண்டு கொச்சியில் நடந்த பெடரேஷன் கோப்பை போட்டியில் 10.42 வினாடியில் கடந்ததே சிறந்ததாக இருந்தது. மற்றொரு தமிழக வீரர் ராகுல் குமார் 10.40 வினாடியில் கடந்து வெண்கல பதக்கம் பெற்றார். கர்நாடகாவுக்கு வெள்ளி கிடைத்தது.

    பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தனலட்சுமி 11.36 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். மற்றொரு தமிழக வீராங்கனை அபிநயா 11.58 வினாடியில் கடந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

    ஆண்களுக்கான போல்வால்ட் பந்தயத்தில் தமிழக வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். ரீகன், கவுதம் ஆகிய இருவரும் 5.20 மீட்டர் உயரம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் கூட்டாக தங்கத்தை வென்றனர். இதற்கு முன்பு கடந்த 2023-ம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த எஸ்.சிவா 5.11 மீட் டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. இதை ரீகனும், கவுதமும் முறியடித்தனர்.

    மற்றொரு தமிழக வீரர் கமல் லோகநாதன் 5 மீட்டர் உயரம் தாண்டி வெண்கல பதக்கம் பெற்றார். போல் வால்டில் 3 பதக்கமும் தமிழகத்துக்கே கிடைத்தது.

    ஆண்களுக்கான டெகத்லானில் 5 போட்டி முடிவில் (100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், 400 மீட்டர்) தமிழக வீரர் மனோஜ் குமார் 3721 புள்ளியுடன் முன்னிலையில் உள்ளார். மற்ற தமிழக வீரர்களான ஜான்பால் 3664 புள்ளியுடன் 2-வது இடத்திலும், ஸ்டாலன் ஜோஸ் 3611 புள்ளியுடன் 4-வது இடத்திலும் உள்ளார். டெகத்லானில் இன்னும் 5 போட்டிகள் இருக்கிறது.

    பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இமாசலபிரதேச வீராங்கனை சீமா 15 நிமிடம் 46.92 வினாடியில் கடந்து புதிய போட்டி சாதனையோடு தங்கம் வென்றார்.

    பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, தமிழ்நாடு தடகள சங்க சேர்மன் டபிள்யு.ஐ. தேவாரம், தலைவர் டி.கே. ராஜேந்திரன், பொதுச் செயலாளர் சி.லதா, சென்னை மாநகராட்சி துணை மேயர் எம்.மகேஷ், தி.மு.க. விளையாட்டு பிரிவு செயலாளர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    2-வது நாள் போட்டிகள் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது. டெகத்லான் போட்டிகளுக்கான 110 மீட்டர் தடை தாண்டுதல், வட்டு எறிதல், போல்வால்ட் ஆகியவை நடைபெற்றது.

    • டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஏற்கனவே விலகியுள்ளார்.
    • அடுத்து ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ரோகித் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    மும்பை:

    இந்திய கிரிகெட் அணியின் 3 நிலைக்கு (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) ரோகித் சர்மா கேப்டனாக பணியாற்றி வந்தார்.

    கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்றதோடு அவர் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இதை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 20 ஓவர் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். இதனால் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் தேர்வானார். ரோகித் சர்மா ஒருநாள் போட்டிக்கு மட்டுமே தற்போது கேப்டனாக இருக்கிறார்.

    இந்த நிலையில் ஒருநாள் போட்டிக்கான இந்திய கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யரை கேப்டனாக நியமிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐய்யருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கடும் விமர்சனம் எழுந்தது. அதே நேரத்தில் டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் 20 ஓவர் அணிக்கு மீண்டும் திரும்பினார். அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது.

    ஷ்ரேயாஸ் ஐய்யருக்கு ஒருநாள் போட்டி கேப்டன் பதவியை கொடுத்து நீண்ட காலம் அவரை அந்த பொறுப்பில் அமர்த்த பி.சி. சி.ஐ. முடிவு செய்கிறது.

    ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் ஒருநாள் போட்டி எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க அனுமதிக்கப்படும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அவர்களது கடைசி போட்டியாக இருக்கும். இருவரது கிரிக்கெட் வாழ்க்கையும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் சுப்ராயன் அறிமுகம் ஆனார்.
    • ஆப்-ஸ்பின்னரான அவர் முதல் ஆட்டத்தில் ஒரு விக்கெட் எடுத்தார்.

    கெய்ன்ஸ்:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரெனெலன் சுப்ராயன் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். ஆப்-ஸ்பின்னரான அவர் முதல் ஆட்டத்தில் ஒரு விக்கெட் எடுத்தார்.

    இந்த நிலையில் அவரது பந்து வீச்சு எறிவது போன்று இருப்பதாக கள நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். பந்துவீசும் போது முழங்கை 15 டிகிரி கோணத்துக்கு மேல் வளையக்கூடாது. ஆனால் அவரது பவுலிங் அதை மீறும் வகையில் உள்ளது. 31 வயதான சுப்ராயன் அடுத்த 14 நாட்களுக்குள் தனது பந்துவீச்சு முறையை சரி செய்து சோதனைக்குட்படுத்த வேண்டும்.

    இதன் முடிவு வரும் வரை அவர் தொடர்ந்து பந்து வீசலாம். ஆனால் சோதனையில் தேர்ச்சி பெற தவறினால் பவுலிங் செய்ய இடைக்கால தடை விதிக்கப்படும். ஏற்கனவே அவர் இரு முறை இதே போன்ற சர்ச்சையில் சிக்கி இருப்பது நினைவு கூரத்தக்கது.

    • இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
    • ‘ஏ’ பிரிவில் இந்தியா, சீனா, ஜப்பான், கஜகஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன.

    புதுடெல்லி:

    12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் வருகிற 29-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, சீனா, ஜப்பான், கஜகஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, மலேசியா, வங்காளதேசம், சீனதைபே அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவுடன் மோதுகிறது.

    இந்த போட்டியில் மகுடம் சூடும் அணி அடுத்த ஆண்டு நெதர்லாந்து, பெல்ஜியத்தில் நடக்கும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணி இந்தியா வர மறுத்து விட்டது.

    இந்த நிலையில் ஆசிய போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங் தொடருகிறார். நடுகள வீரர் ரஜிந்தர்சிங், முன்கள வீரர்கள் ஷில்லானந்த் லக்ரா, தில்பிரீத் சிங் இடத்தை தக்க வைத்துள்ளனர்.

    அணியின் தலைமை பயிற்சியாளர் கிரேக் புல்டான் கூறுகையில், 'ஆசிய கோப்பை தொடர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான தகுதி சுற்று என்பதால் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பொறுமை, சரிவில் இருந்து மீளும் மனவலிமை, களத்தில் எப்படி திறமையை வெளிப்படுத்துவது என்பதை அறிந்த வீரர்கள் தான் தேவை. அப்படிப்பட்ட வீரர்களைத் தான் அணிக்கு எடுத்துள்ளோம். சரியான கலவையில் தரமான அணியாக அமைந்திருப்பது திருப்தி அளிக்கிறது. தற்காப்பு, நடுகளம், தாக்குதல் ேபான்ற ஒவ்வொரு வரிசைக்கும் எங்களிடம் தலைவர்கள் உள்ளனர். இந்த கூட்டு வலிமை தான் என்னை உற்சாகப்படுத்துகிறது. இந்த அணி ஒருங்கிணைந்து விளையாடும் விதம் எங்களது வலுவான சொத்தாக இருக்கும்' என்றார்.

    ஆசிய ேபாட்டிக்கான இந்திய அணி வருமாறு:-

    கோல் கீப்பர்கள்: கிருஷ்ணன் பதாக், சுராஜ் கர்கெரே,

    தற்காப்பு ஆட்டக்காரர்கள்: சுமித், ஜர்மன்பிரீத் சிங், சஞ்சய், ஹர்மன்பிரீத் சிங், அமித் ரோகிதாஸ், ஜூக்ராஜ் சிங்.

    நடுகள வீரர்கள்: ரஜிந்தர் சிங், ராஜ்குமார் பால், ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத்.

    முன்கள வீரர்கள்: மன்தீப் சிங், ஷில்லானந்த் லக்ரா, அபிஷேக், சுக்ஜீத் சிங், தில்பிரீத் சிங்.

    மாற்று வீரர்கள்: நிலம் சஞ்ஜீப் செஸ், செல்வம் கார்த்தி.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடந்த காலிறுதியில் இகா ஸ்வியாடெக், காஸ்பர் ரூட் ஜோடி வெற்றி பெற்றது.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.

    கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக்-நார்வேயின் காஸ்பர் ரூட் ஜோடி, அமெரிக்காவின் கேட்டி மெக்னல்லி-இத்தாலியின் லாரன்சோ முசெட்டி ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இகா ஸ்வியாடெக்-காஸ்பர் ரூட் ஜோடி 4-1, 4-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    இந்த ஜோடி நாளை நடைபெறும் அரையிறுதியில் ஜாக் டிராபர்-ஜெசிகா பெகுலா ஜோடியை எதிர்கொள்கிறது.

    ×