என் மலர்
விளையாட்டு

ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு
- இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
- ‘ஏ’ பிரிவில் இந்தியா, சீனா, ஜப்பான், கஜகஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன.
புதுடெல்லி:
12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் வருகிற 29-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, சீனா, ஜப்பான், கஜகஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, மலேசியா, வங்காளதேசம், சீனதைபே அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவுடன் மோதுகிறது.
இந்த போட்டியில் மகுடம் சூடும் அணி அடுத்த ஆண்டு நெதர்லாந்து, பெல்ஜியத்தில் நடக்கும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணி இந்தியா வர மறுத்து விட்டது.
இந்த நிலையில் ஆசிய போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங் தொடருகிறார். நடுகள வீரர் ரஜிந்தர்சிங், முன்கள வீரர்கள் ஷில்லானந்த் லக்ரா, தில்பிரீத் சிங் இடத்தை தக்க வைத்துள்ளனர்.
அணியின் தலைமை பயிற்சியாளர் கிரேக் புல்டான் கூறுகையில், 'ஆசிய கோப்பை தொடர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான தகுதி சுற்று என்பதால் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பொறுமை, சரிவில் இருந்து மீளும் மனவலிமை, களத்தில் எப்படி திறமையை வெளிப்படுத்துவது என்பதை அறிந்த வீரர்கள் தான் தேவை. அப்படிப்பட்ட வீரர்களைத் தான் அணிக்கு எடுத்துள்ளோம். சரியான கலவையில் தரமான அணியாக அமைந்திருப்பது திருப்தி அளிக்கிறது. தற்காப்பு, நடுகளம், தாக்குதல் ேபான்ற ஒவ்வொரு வரிசைக்கும் எங்களிடம் தலைவர்கள் உள்ளனர். இந்த கூட்டு வலிமை தான் என்னை உற்சாகப்படுத்துகிறது. இந்த அணி ஒருங்கிணைந்து விளையாடும் விதம் எங்களது வலுவான சொத்தாக இருக்கும்' என்றார்.
ஆசிய ேபாட்டிக்கான இந்திய அணி வருமாறு:-
கோல் கீப்பர்கள்: கிருஷ்ணன் பதாக், சுராஜ் கர்கெரே,
தற்காப்பு ஆட்டக்காரர்கள்: சுமித், ஜர்மன்பிரீத் சிங், சஞ்சய், ஹர்மன்பிரீத் சிங், அமித் ரோகிதாஸ், ஜூக்ராஜ் சிங்.
நடுகள வீரர்கள்: ரஜிந்தர் சிங், ராஜ்குமார் பால், ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத்.
முன்கள வீரர்கள்: மன்தீப் சிங், ஷில்லானந்த் லக்ரா, அபிஷேக், சுக்ஜீத் சிங், தில்பிரீத் சிங்.
மாற்று வீரர்கள்: நிலம் சஞ்ஜீப் செஸ், செல்வம் கார்த்தி.






