என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • எதிர்காலத்தில் கருத்தில் கொண்டு சுப்மன் கில்லை வளர்க்க வேண்டும் என கம்பீர் வலியுறுத்தியதாக தகவல்.
    • சுப்மன் கில்லை தவிர்த்து மற்ற வீரர்களை கண்டுபிடிக்க முடியாததால், தேர்வுக்குழு இந்த முடிவுக்கு வந்துள்ளது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய டி20 அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

    அதிரடியாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால், ஐபிஎல் தொடரில் அசத்திய ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே சுப்மன் கில்லும் அணியில் இடம் பெறலாம். மாற்று தொடக்க வீரர் இடத்திற்கு ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

    ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுப்மன் கில் அணியில் இடம் பிடித்ததுடன், துணைக் கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அக்சர் பட்டேல் துணைக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற நிலையில், சுப்மன் கில்லிடம் சென்றுள்ளது.

    அணியில் இடம் கிடைக்குமா? என்ற எதிர்பார்த்த நிலையில் துணைக் கேப்டன் பதவி எப்படி சென்றது என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கவுதம் கம்பீர்தான் சுப்மன் கில்லுக்கு துணைக் கேப்டன் பதவி வழங்க வேண்டும் என வற்புறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முதலில் அக்சர் பட்டேலைத்தான் துணைக் கேப்டனாக நியமிக்க அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. சுப்மன் கில் பெயர் அவர்கள் மனதில் இல்லையாம்.

    ஆன்லைன் மூலம் கவுதம் கம்பீர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அப்போது சுப்மன் கில்லுக்கு அடுத்த மாதம் வந்தால் 26 வயது நிறைவடைகிறது. இந்தியாவின் எதிர்காலத்திற்கு யாராவது ஒருவரை வளர்ப்பது அவசியம். அதற்கு கில் தகுந்த நபராக இருப்பார். அவரால் நீண்ட காலத்திற்கு விளையாட முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றுள்ளது. சுப்மன் கில்லை தவிர்த்து சரியான நபரை தேர்வுக்குழுவால் கண்டுபிடிக்க முடியவில்லை. சூர்யகுமாரிடம் இருந்து கேப்டன் பதவியை பெறுவதற்கு தயாராக இது சரியான நேரம் என்று தேர்வுக்குழு கருதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால்தான் சுப்மன் கில்லுக்கு துணைக் கேப்டன் பதவி சென்றுள்ளது. சுப்மன் கில் கடந்த வருடம் ஜூலை மாதத்திற்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் விளையாடியது கிடையாது. ஒருநாள் போட்டி அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார். டெஸ்ட் அணியில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • வினோத் காம்ப்ளி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
    • உடல்நிலை சீராகி வந்தாலும் அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது.

    மும்பை:

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான வினோத் காம்ப்ளி (53), உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

    சிறுநீர் தொற்று காரணமாக டிசம்பர் 2024-ல் தானே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின், அவர் வீட்டிற்குத் திரும்பியிருந்தாலும், அவரது குணமடைதல் மெதுவாகவும் கடினமாகவும் உள்ளது. உடல்நிலை சீராகி வந்தாலும் அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அவரது இளைய சகோதரர் வீரேந்திர காம்ப்ளி தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

    வினோத் காம்ப்ளி கடுமையான போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறார். ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அவருக்காக பிரார்த்தனை செய்யவேண்டும்.

    அவருக்கு பேசுவதில் சிரமம் உள்ளது. அவர் குணமடைய நேரம் எடுக்கும். ஆனால் அவர் ஒரு சாம்பியன், அவர் திரும்பி வருவார். அவர் நடக்கவும் ஓடவும் தொடங்குவார். அவர்மீது எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது. நீங்கள் அவரை மீண்டும் மைதானத்தில் பார்க்க முடியும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

    வினோத் காம்ப்ளி இந்தியாவுக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் சுப்மன் கில் கண்டிப்பாக தொடக்க வீரராக களமிறங்குவார்.
    • சஞ்சு சாம்சன் டி20 கேரியர் முடியப்போவதாக அஸ்வின் கூறியுள்ளார்.

    ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோர் கழற்றி விடப்பட்டது பல ரசிகர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியது.

    அதே போல டி20 கிரிக்கெட்டில் வேகமாக ரன்கள் குவிப்பதில் தடுமாற்றத்தைக் கொண்டுள்ள சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

    இந்நிலையில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் சுப்மன் கில் கண்டிப்பாக தொடக்க வீரராக களமிறங்குவார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதனால் தொடக்க வீரராக களமிறங்கி சதங்களை அடித்து மறுவாழ்வு பெற்ற சஞ்சு சாம்சன் டி20 கேரியர் முடியப்போவதை நினைத்தால் வருத்தமாக இருப்பதாக அஸ்வின் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    குஜராத்துக்காக நிறைய ரன்கள் அடித்துள்ள சுப்மன் கில் துணைக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் 2024 டி20 உலகக் கோப்பையில் ஜெய்ஸ்வால் 3-வது ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்தார். அப்படிப்பட்ட அவரையும் ஷ்ரேயாஸ் ஐயரையும் நீக்கியுள்ளதற்காக நான் சோகமடைந்துள்ளேன்.

    ஜெய்ஸ்வால் நல்ல ஃபார்மில் இருக்கிறார். கில் வருங்காலத்தில் ஆல் ஃபார்மட் கேப்டனாக இருக்கலாம். ஆனால் 3 ஃபார்மட்டிலும் ஒரே கேப்டன் இருக்க வேண்டிய அவசியமில்லை. கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சஞ்சு சாம்சனுடைய இடத்துக்கு ஆபத்து வந்துள்ளது என்பது சோகமான விஷயமாகும். அதனால் சஞ்சு கண்டிப்பாக விளையாடப் போவதில்லை. சுப்மன் தொடக்க வீரராக விளையாடுவார்.

    என்று கூறினார்.

    • ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் கேசவ் மகராஜ் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.
    • இலங்கையின் மகேஷ் தீக்சனா, இந்தியாவின் குல்தீப் யாதவ் ஆகியோர் 2-வது மற்றும் 3-வது இடம் பிடித்தனர்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான (வீரர்கள் தரவரிசை) பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் 1 சதம், 1 அரைசதம் விளாசிய தென் ஆப்பிரிக்கா வீரர் டெவால்ட் ப்ரேவிஸ் டி20 பேட்டிங் தரவரிசையில் 89 இடங்கள் முன்னேறி 12-வது இடம் பிடித்துள்ளார்.

    டி20 பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா முதல் இடத்திலும் திலக் வர்மா 2-வது இடத்திலும் தொடர்கின்றனர்.

    ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகராஜ் (687 புள்ளி) முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மகாராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்ற நிலையில் இந்த முன்னேற்றம் கண்டுள்ளார்.

    இலங்கையின் மகேஷ் தீக்சனா (671 புள்ளி), இந்தியாவின் குல்தீப் யாதவ் (650 புள்ளி) ஆகியோர் தலா ஒரு இடங்கள் சரிந்து 2-வது மற்றும் 3-வது இடத்திற்கு பின் தங்கினர்.

    • கடந்த சீசனில் 29 கோல்கள் அடித்துள்ளார்.
    • இந்த விருதை 3ஆவது முறையாக வென்று சாதனைப் படைத்துள்ளார்.

    இங்கிலாந்து ப்ரிமீயர் லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று லிபர்பூல். இந்த அணிக்காக எகிப்தின் தலைசிறந்த வீரரான முகமது சாலா விளையாடி வருகிறார். இவர் இந்த ஆண்டுக்கான PFA விருதை வென்றுள்ளார். இத்துடன் மூன்று முறை இந்த விருதை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

    இங்கிலீஷ் ப்ரிமீயர் லீக் கடந்த சீசனில் 29 கோல்கள் அடித்திருந்தார். 3ஆவது முறை இந்த விருதை வெல்வதன் மூலம், இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கில் தலைசிறந்த வீரர்களாக திகழ்ந்த மார்க் ஹியூக்ஸ், ஆலன் ஷியரெர், தியரி ஹென்ரி, ரொனால்டோ, காரத் பேலே, கெவின் டி ப்ரூயின் ஆகியோர் சாதனையை முறியடித்துள்ளார்.

    • தீர்ப்பு வழங்கப்படவிருந்தபோது நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன்.
    • இணையத்தில் பரவும் வதந்திகள் எனக்கு மட்டுமில்லை யாருக்குமே நடக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன்.

    இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் நடனக் கலைஞரான தனஸ்ரீ வர்மாவை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இரண்டு ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தனர். இதையடுத்து, இருவரும் விவாகரத்து கோரி மும்பை குடும்ப நீதிமன்றத்தை நாடினார்கள்.

    இவர்கள் இருவரும் ஏற்கனவே 18 மாதங்கள் பிரிந்து வாழ்ந்துவிட்டதால், நீதிமன்றம் மார்ச் மாதம் விவாகரத்து கொடுத்தது. மேலும், கிரிக்கெட் வீரர் தனஸ்ரீக்கு ரூ. 4.75 கோடி ஜீவனாம்சம் வழங்கியுள்ளார்.

    இவர்கள் இருவரும் பிரிந்த பிறகு யுஸ்வேந்திர சாஹலின் ரசிகர்கள் தனஸ்ரீ வர்மாவை இணையத்தில் கடுமையாக விமர்சனம் செய்து கேலி செய்து வந்தனர்.

    இந்நிலையில் விவாகரத்து பற்றி இத்தனை நாட்களாக பதில் எதுவும் அளிக்காமல் இருந்த தனஸ்ரீ வர்மா முதன் முறையாக மனம் திறந்து பேசி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தனிப்பட்ட வாழ்க்கை என்று நாம் சொல்வதற்கு ஒரு காரணம் உள்ளது. ஏன் என்றால், அது ரகசியமாக இருக்க வேண்டும். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒரு கை ஓசை தராது. நான் ஒரு விஷயம் பற்றி பேசவில்லை என்பதற்காக பலரும் தங்களுக்கு தெரியாத விஷயத்தை பேசுவது சரியில்லை.

    இதுபோன்று இணையத்தில் பரவும் வதந்திகள் எனக்கு மட்டுமில்லை யாருக்குமே நடக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. அதை இனி வரும் காலத்தில் தெளிவாக கூறுகிறேன். வாழ்க்கையில் ஒரு விஷயத்தை கடந்து சென்று பெரிய விஷயங்களைச் சாதிக்க விரும்பினால், அதை மீண்டும் மீண்டும் பேசத் தேவையில்லை. என் பக்க நியாயம் இருக்கிறது.

    தீர்ப்பு வழங்கப்படவிருந்தபோது நான் அங்கே நின்றபோது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. மனதளவில் நாங்கள் மிகவும் தயாராக இருந்தபோதிலும், நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். எல்லோர் முன்னிலையிலும் நான் அலற ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் நான் என்ன உணர்ந்தேன் என்பதை என்னால் வெளிப்படுத்தக்கூட முடியவில்லை. நான் அழுது கொண்டே இருந்தேன் , அலறி அழுது கொண்டே இருந்தேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது . நிச்சயமாக! அதெல்லாம் நடந்தது, அவர் (சாஹல்) முதலில் வெளியேறினார்.

    என்று தனஸ்ரீ வர்மா அந்த பேட்டியில் கூறியுள்ளார். 

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடந்த காலிறுதியில் மெத்வதேவ், ஆன்ட்ரிவா ஜோடி தோல்வி அடைந்தது.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ்-மிர்ரா ஆண்ட்ரிவா ஜோடி, பிரிட்டனின் ஜாக் டிராபர்-அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய ஜாக் டிராபர்-ஜெசிகா பெகுலா ஜோடி 4-1, 4-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    இதனால் மெத்வதேவ்-மிர்ரா ஆண்ட்ரிவா ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    • ஷ்ரேயாஸ் ஐயருக்கு அணியின் இடமில்லை என அஜித் அகர்கர் கூறுவது அபத்தமாக உள்ளது.
    • தற்போதைய பார்ம் வைத்து பார்த்தால் ஷ்ரேயஸ் கண்டிப்பாக அணியில் இருந்திருக்க வேண்டும்.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந்தேதி துபாயில் சந்திக்கிறது.

    இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டனாக சூர்யகுமார் யாதவ், துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அணியின் இடமில்லை என அஜித் அகர்கர் கூறுவது அபத்தமாக உள்ளது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஷ்ரேயஸ்-க்கு அணியில் இடமில்லை என அஜித் அகர்கர் கூறுவது அபத்தமாக உள்ளது. தற்போதைய FORM வைத்து பார்த்தால் ஷ்ரேயஸ் கண்டிப்பாக அணியில் இருந்திருக்க வேண்டும். கடந்த IPL-ல் 600 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.. பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    என ஸ்ரீகாந்த் கூறினார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், அக்சர் படேல் இந்திய அணியின் துணை கேப்டனாகச் செயல்பட்டிருந்தார்.
    • ஓராண்டுக்கும் மேலாக டி20 அணியில் இடம்பெறாத கில்லுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    ஆசிய கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டனாக சூர்யகுமார் யாதவும் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டனர். இதற்கு முன்பு, இந்த ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், அக்சர் படேல் இந்திய அணியின் துணை கேப்டனாகச் செயல்பட்டிருந்தார்.

    தற்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக டி20 அணியில் இடம்பெறாத கில்லுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப், இந்த விவகாரம் குறித்து தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

    இந்த முடிவு குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் முகமது கைப் கூறியதாவது:-

    துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அக்சர் படேலுக்கு தேர்வுக்குழு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கும் என்று நம்புகிறேன்.

    பத்திரிகையாளர் சந்திப்பைப் பார்த்து அவர் இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டிருக்கக் கூடாது. அக்சர் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே அவருக்கு விளக்கம் கொடுக்கப்பட வேண்டும்.

    என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

    2024-ல் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சுப்மன் கில் சில வாரங்களுக்கு முன்பு தான் டெஸ்டில் 750 ரன்களுக்கு மேல் குவித்தார்.
    • துணை கேப்டன் பதவி எதிர்கால கேப்டன் பதவிக்கான தெளிவான அறிகுறியாகும்.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபியில் நடக்கிறது.

    இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஐ.பி.எல். போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐய்யருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை தேர்வு செய்யாமல் நிராகரித்தனர்.

    அதேநேரத்தில் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லுக்கு 20 ஓவர் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. அக்க்ஷர் படேலின் துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. 20 ஓவர் அணியில் ஷ்ரேயாஸ் ஐய்யருக்கு வாய்ப்பு கொடுக்காததால் முன்னாள் வீரர்கள் பலர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவை விமர்சித்துள்ளனர்.

    இந்த நிலையில் 20 ஓவர் அணிக்கு சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டதை முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். அவருக்கு துணை கேப்டன் பதவி கொடுத்தது சரியே என்றும் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக கவாஸ்கர் கூறியதாவது:-

    சுப்மன் கில் சில வாரங்களுக்கு முன்பு தான் டெஸ்டில் 750 ரன்களுக்கு மேல் குவித்தார். அதுமாதிரி நல்ல நிலையில் இருக்கும் ஒரு வீரரை நீங்கள் ஒதுக்கி வைக்க முடியாது. துணை கேப்டன் பதவி வழங்குவது எதிர்காலத்தில் 20 ஓவர் அணியை வழி நடத்த முடியும் என்பதை அவருக்கு உணர்த்தும் ஒரு வழிமுறையாகும். இது மிகவும் சிறந்த தேர்வு என்று நான் நினைக்கிறேன்.

    இங்கிலாந்தில் முதல் முறையாக டெஸ்ட் அணியை வழி நடத்தி 750-க்கும் மேற்பட்ட ரன்களை சுப்மன் கில் குவித்தது பாராட்டதக்கதாகும். அவர் நெருக்கடியை எப்படி கையாண்டார் என்பதை பார்த்தோம். துணை கேப்டன் பதவி எதிர்கால கேப்டன் பதவிக்கான தெளிவான அறிகுறியாகும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    இதற்கிடையே சுப்மன் கில்லை தேர்வு செய்வது தொடர்பாக தமிழக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். எந்த அடிப்படையில் அவர் 20 ஓவரில் தேர்வு செய்யப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.

    • அணித் தேர்வை பொறுத்தவரை யாரையும் முழுமையாக திருப்திப்படுத்த முடியாது.
    • ஷாட்பிட்ச் பந்தை எதிர்கொள்வதில் உள்ள பிரச்சினையை சரி செய்தார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் அணிக்கான இந்திய அணியின் தேர்வு குறித்து இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், 'அணித் தேர்வை பொறுத்தவரை யாரையும் முழுமையாக திருப்திப்படுத்த முடியாது. ஒன்றிரண்டு பேரை வெளியேற்ற வேண்டி இருக்கும். அவர்களிடம் பேசும் போது சோகமும், ஏமாற்றமும் தெரியும். தேர்வு குழுவினர் ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஜெய்ஸ்வாலுடன் பேசி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். சுப்மன் கில் 20 ஓவர் போட்டி அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி. அதே நேரம் ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஜெய்வாலுக்காக மிகவும் வருந்துகிறேன். அவர்களை சேர்க்காதது நியாயமற்ற முடிவு.

    குறிப்பாக ஷ்ரேயாஸ் அய்யர் கடந்த ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 11 ஆண்டுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார். 'ஷாட்பிட்ச்' பந்தை எதிர்கொள்வதில் உள்ள பிரச்சினையை சரி செய்தார். ஐ.பி.எல்.-ல் ரபடா, பும்ரா போன்ற முன்னணி பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கினார். இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி வந்து சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பிரமாதமாக பேட்டிங் செய்தார். அதில் நமக்கு கோப்பையை வென்று தந்தார். சுப்மன் கில் போன்று ஷ்ரேயாஸ் அய்யரும் மிகச்சிறந்த பார்மில் இருக்கிறார். அவரை மட்டும் விட்டது ஏன், அவர் என்ன தவறு செய்தார்?' என்று அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஷ்ரேயாஸ் அய்யர் இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் 17 ஆட்டங்களில் ஆடி 6 அரைசதம் உள்பட 604 ரன்னும், சாம்பியன்ஸ் கோப்பையில் 5 ஆட்டங்களில் ஆடி 243 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

    • 5 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் நாடு முழுவதும் இருந்து 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
    • இன்று காலை 10 ஆயிரம் மீட்டர் ஓட்டபந்தயம் நடைபெற்றது.

    சென்னை:

    தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 64-வது தேசிய சீனியர் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது.

    24-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் நாடு முழுவதும் இருந்து 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். டோக்கியோவில் அடுத்த மாதம் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான இறுதி தேர்வு என்பதால் இந்தப் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை 10 ஆயிரம் மீட்டர் ஓட்டபந்தயம் நடைபெற்றது. இதில் உத்தரபிரதேச வீரர் அபிஷேக் முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 30 நிமிடம் 56.54 வினாடியில் கடந்தார்.

    கர்நாடகாவை சேர்ந்த சிவாஜி பர்சு மடப்பகோதரா 30 நிமிடம் 57.69 வினாடியில் கடந்து 2-வது இடத்தையும், மற்றொரு உத்தரபிரதேச வீரர் ஷிவம் 30 நிமிடம் 59.14 வினாடியில் கடந்து 3-வது இடத்தையும் பிடித்தனர். அதைத் தொடர்ந்து தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.

    இன்று மாலை ஆண்களுக்கான போல் வால்ட், பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதல் (4 கிலோ), டிரிபிள் ஜம்ப், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது.

    அதோடு பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டமும் (இரவு 7.25), ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டமும் (இரவு 7.35) நடக்கிறது. மொத்தம் 6 பதக்கத்துக்கான போட்டிகள் மாலை முதல் இரவு வரை நடக்கிறது.

    ×