என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய சீனியர் தடகள போட்டி"

    • முதல் நாளில் தமிழ்நாட்டுக்கு 4 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் ஆக மொத்தம் 7 பதக்கம் கிடைத்தது.
    • பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தனலட்சுமி 11.36 வினாடியில் கடந்து தங்கம் வென்றார்.

    சென்னை:

    தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 64-வது மாநிலங்கள் இடையேயான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 700 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    தொடக்க நாளில் தமிழக வீரர்-வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினார்கள். முதல் நாளில் தமிழ்நாட்டுக்கு 4 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் ஆக மொத்தம் 7 பதக்கம் கிடைத்தது.

    ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் எஸ். தமிழரசு புதிய போட்டி சாதனையுடன் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 10.22 வினாடியில் கடந்தார். இதற்கு முன்பு பஞ்சாப் வீரர் குரீந்தர்வீர் சிங் 2021-ம் ஆண்டு 10.27 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.

    23 வயதான தமிழரசின் சிறந்த நிலை இதுவாகும். இதற்கு முன்பு இந்த ஆண்டு கொச்சியில் நடந்த பெடரேஷன் கோப்பை போட்டியில் 10.42 வினாடியில் கடந்ததே சிறந்ததாக இருந்தது. மற்றொரு தமிழக வீரர் ராகுல் குமார் 10.40 வினாடியில் கடந்து வெண்கல பதக்கம் பெற்றார். கர்நாடகாவுக்கு வெள்ளி கிடைத்தது.

    பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தனலட்சுமி 11.36 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். மற்றொரு தமிழக வீராங்கனை அபிநயா 11.58 வினாடியில் கடந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

    ஆண்களுக்கான போல்வால்ட் பந்தயத்தில் தமிழக வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். ரீகன், கவுதம் ஆகிய இருவரும் 5.20 மீட்டர் உயரம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் கூட்டாக தங்கத்தை வென்றனர். இதற்கு முன்பு கடந்த 2023-ம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த எஸ்.சிவா 5.11 மீட் டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. இதை ரீகனும், கவுதமும் முறியடித்தனர்.

    மற்றொரு தமிழக வீரர் கமல் லோகநாதன் 5 மீட்டர் உயரம் தாண்டி வெண்கல பதக்கம் பெற்றார். போல் வால்டில் 3 பதக்கமும் தமிழகத்துக்கே கிடைத்தது.

    ஆண்களுக்கான டெகத்லானில் 5 போட்டி முடிவில் (100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், 400 மீட்டர்) தமிழக வீரர் மனோஜ் குமார் 3721 புள்ளியுடன் முன்னிலையில் உள்ளார். மற்ற தமிழக வீரர்களான ஜான்பால் 3664 புள்ளியுடன் 2-வது இடத்திலும், ஸ்டாலன் ஜோஸ் 3611 புள்ளியுடன் 4-வது இடத்திலும் உள்ளார். டெகத்லானில் இன்னும் 5 போட்டிகள் இருக்கிறது.

    பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இமாசலபிரதேச வீராங்கனை சீமா 15 நிமிடம் 46.92 வினாடியில் கடந்து புதிய போட்டி சாதனையோடு தங்கம் வென்றார்.

    பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, தமிழ்நாடு தடகள சங்க சேர்மன் டபிள்யு.ஐ. தேவாரம், தலைவர் டி.கே. ராஜேந்திரன், பொதுச் செயலாளர் சி.லதா, சென்னை மாநகராட்சி துணை மேயர் எம்.மகேஷ், தி.மு.க. விளையாட்டு பிரிவு செயலாளர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    2-வது நாள் போட்டிகள் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது. டெகத்லான் போட்டிகளுக்கான 110 மீட்டர் தடை தாண்டுதல், வட்டு எறிதல், போல்வால்ட் ஆகியவை நடைபெற்றது.

    • 5 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் நாடு முழுவதும் இருந்து 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
    • இன்று காலை 10 ஆயிரம் மீட்டர் ஓட்டபந்தயம் நடைபெற்றது.

    சென்னை:

    தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 64-வது தேசிய சீனியர் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது.

    24-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் நாடு முழுவதும் இருந்து 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். டோக்கியோவில் அடுத்த மாதம் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான இறுதி தேர்வு என்பதால் இந்தப் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை 10 ஆயிரம் மீட்டர் ஓட்டபந்தயம் நடைபெற்றது. இதில் உத்தரபிரதேச வீரர் அபிஷேக் முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 30 நிமிடம் 56.54 வினாடியில் கடந்தார்.

    கர்நாடகாவை சேர்ந்த சிவாஜி பர்சு மடப்பகோதரா 30 நிமிடம் 57.69 வினாடியில் கடந்து 2-வது இடத்தையும், மற்றொரு உத்தரபிரதேச வீரர் ஷிவம் 30 நிமிடம் 59.14 வினாடியில் கடந்து 3-வது இடத்தையும் பிடித்தனர். அதைத் தொடர்ந்து தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.

    இன்று மாலை ஆண்களுக்கான போல் வால்ட், பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதல் (4 கிலோ), டிரிபிள் ஜம்ப், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது.

    அதோடு பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டமும் (இரவு 7.25), ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டமும் (இரவு 7.35) நடக்கிறது. மொத்தம் 6 பதக்கத்துக்கான போட்டிகள் மாலை முதல் இரவு வரை நடக்கிறது.

    • தேசிய சீனியர் தடகள போட்டி ஓடிசா மாநிலம் புவனேஷ்வரில் நேற்று தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • தமிழகத்தில் இருந்து 37 வீரர்களும், 23 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 60 பேர் பங்கேற்றுள்ளதாக தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    62-வது தேசிய சீனியர் தடகள போட்டி ஓடிசா மாநிலம் புவனேஷ்வரில் நேற்று தொடங்கியது. 19-ந் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் இருந்து 37 வீரர்களும், 23 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 60 பேர் பங்கேற்றுள்ளதாக தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.

    சிவக்குமார், இலக்கிய தாசன், சாய் சித்தார்த், தமிழரசன், விஷால், ஆரோக்கியராஜீவ், பிரதீப் , ஜெஸ்வின் ஆல்டிரின், பிரவீன் சித்ரவேல், முகமது சலாகுதீன் போன்ற முன்னனி வீரர்களும், அர்ச்சனா, கிரிதரணி, சுபா, வித்யா, நித்யா, திவ்யா, ரோசி, ஹேமமாலினி, தீபிகா போன்ற முன்னணி வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.

    • முதல் 2 நாள் போட்டி முடிவில் தமிழக அணி 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 9 பதக்கம் பெற்று இருந்தது.
    • ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் தமிழக வீரர் சுரேந்தர் 14.18 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

    சென்னை:

    தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் எஸ்.என்.ஜே. நிறுவனம் ஆதரவுடன் 61-வது மாநிலங்கள் இடையேயான தேசிய சீனியர் தடகள போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    முதல் 2 நாள் போட்டி முடிவில் தமிழக அணி 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 9 பதக்கம் பெற்று இருந்தது.

    3-வது நாளான நேற்று தமிழகத்துக்கு மேலும் 2 தங்கம் கிடைத்தது. பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை சி. கனிமொழி தங்கப்பதக்கம் பெற்றார். அவர் பந்தய தூரத்தை 13.62 வினாடியில் கடந்தார். இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு தமிழக வீராங்கனை பி.எம்.தபிதா 14.09 வினாடியில் கடந்து வெண்கல பதக்கம் பெற்றார்.

    ஆண்களுக்கான 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழரசு, இலக்கியதாசன், விக்னேஷ், சிவக்குமார் ஆகியோர் அடங்கிய தமிழக அணி தங்கம் வென்றது.

    பந்தய தூரத்தை தமிழக வீரர்கள் 39.88 வினாடியில் கடந்தனர். இதன் மூலம் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழக அணி புதிய சாதனை படைத்தது. இதற்கு முன்பு 2018-ம்ஆண்டு கவுகாத்தியில் நடந்த போட்டியில் தமிழக அணி 40.22 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. 4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக வீரர்கள் தங்களது சாதனையை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

    ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் தமிழக வீரர் சுரேந்தர் 14.18 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். இதே போல உயரம் தாண்டுதலில் பாரதி விஸ்வநாதன் 2.18 மீட்டர் தாண்டி வெண்கல பதக்கம் பெற்றார்.

    நேற்றைய போட்டியில் தமிழகத்துக்கு 2 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் ஆக மொத்தம் 5 பதக்கம் கிடைத்தது.

    ×