என் மலர்tooltip icon

    விளையாட்டு

    2011 உலகக்கோப்பையை வென்ற இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருந்த முனாப் பட்டேல் லங்கா பிரிமீயர் லீக்கில் விளையாடுகிறார்.
    இலங்கை கிரிக்கெட் வாரியம் லங்கா பிரிமீயர் லீக் என்ற பெயரில் டி20 லீக்கை அறிமுகம்படுத்தியது. இந்தத் தொடர் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இதில் ஐந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஐந்து அணிகளில் கண்டி டஸ்கர் அணியும் ஒன்று. அந்த அணி இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான முனாப் பட்டேலை ஒப்பந்தம் செய்துள்ளது. முனாப் பட்டேல் இந்திய அணிக்காக 13 டெஸ்ட், 70 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    ஏற்கனவே இர்பான் பதானை கண்டி டஸ்கர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது 2-வது வீரராக முனாப் பட்டேலை ஒப்பந்தம் செய்துள்ளது.

    அதேவேளையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது தொடரில் இருந்து விலகியுள்ளார். சர்பராஸ் அகமது காலே கிளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். நியூசிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சர்பராஸ் அகமது இடம் பிடித்துள்ளார். அதனால் லங்கா பிரிமீயர் லீக்கில் இருந்து விலகியுள்ளார்.

    சொந்த வேலைக்காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து மலிங்காக விலகினார். இந்தத் தொடரிலும் விளையாட வாய்ப்பில்லை எனக் தெரிகிறது.
    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள்தொடர் வருகிற 27ந்தேதி சிட்டினியில் தொடங்குகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் கானேரிச்சர்ட்சன் விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக ஆண்ட்ரூடை சேர்க்கப்பட்டுள்ளார்.

    சிட்னி:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 27-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த தொடரில் இருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் கானேரிச்சர்ட்சன் விலகியுள்ளார்.

    அவருக்கு பதிலாக 33 வயதான ஆண்ட்ரூடை ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 7 ஒருநாள் போட்டி மற்றும் 26 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    வீராட் கோலி 3 டெஸ்டில் விளையாடாதது இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்நாட்டு முன்னாள் வேகப்பந்து வீரர் மெக்ராத் கூறியுள்ளார்.

    மெல்பர்ன்:

    இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

    ஒருநாள் தொடர் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. டிசம்பர் 2-ந்தேதியுடன் ஒரு நாள் போட்டி முடிகிறது. 20 ஓவர் தொடர் டிசம்பர் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 17-ந் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவாக நடக்கிறது. இந்திய அணி கேப்டன் வீராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுவார். எஞ்சிய 3 டெஸ்டில் ஆட மாட்டார். அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு குழந்தை பிறப்பதால் முதல் டெஸ்ட் முடிந்தபிறகு நாடு திரும்புவார்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வீராட் கோலி 3 டெஸ்டில் விளையாடாதது இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்நாட்டு முன்னாள் வேகப்பந்து வீரர் மெக்ராத் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    வீராட்கோலி ஒரு திறமை வாய்ந்த வீரர். அவர் 4 டெஸ்டில் 3 போட்டியில் ஆடாதது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.

    கோலி 2 வீரர்களுக்கு மதிப்பானவர். ஒன்று பேட்ஸ்மென் மற்றொன்று கேப்டன். அவர் ஆடுகளத்தில் மிகுந்த ஆக்ரோசத்துடன் செயல்படக்கூடியவர்.

    இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்த விரும்பும். வார்னர், சுமித் ஆகியோர் அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலத்தை அளிக்கும்.

    முதல் டெஸ்ட் போட்டியே சுவாரசியமானது. ஏனென்றால் பகல்-இரவாக நடக்கிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் இதுவரை பகல்-இரவு டெஸ்டில் விளையாடியது கிடையாது. சூரியன் மறைந்த பிறகு இரவு நேரத்தில் வேகப்பந்து வீரர்களுக்கு சாதகமாக இருக்கும்.

    வீராட்கோலி இல்லா விட்டாலும் இந்திய அணி பேட்டிங் வரிசை பலமாக இருக்கிறது. புஜாரா, ரகானே, போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனாலும் வீராட் கோலி அளவுக்கு பலம் வாய்ந்து இருக்க முடியாது.ஆஸ்திரேலியாவில் அவரது சிறப்பான ஆட்டத்தை யாரும் மறந்து இருக்க மாட்டார்கள்.

    இவ்வாறு மெக்ராத் கூறியுள்ளார்.

    இங்கிலாந்து அணியின், பாகிஸ்தான் தொடரை அடுத்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வரை தள்ளிவைப்பது என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு (2021) ஜனவரி கடைசி வாரத்தில் பாகிஸ்தான் சென்று மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது. இங்கிலாந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டித் தொடரில் விளையாட இருக்கிறது. இதனால் அந்த தருணத்தில் பாகிஸ்தானுக்கு இரண்டாம் தர அணியை தான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் அனுப்ப முடியும்.

    15 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பாகிஸ்தானில் பயணம் மேற்கொள்ள இருக்கும் இங்கிலாந்து அணியில் முன்னணி வீரர்கள் இடம் பெற வேண்டும் என்று இரு நாடுகளும் விரும்புகிறது. நட்சத்திர வீரர்கள் இடம் பெறாவிட்டால் அந்த போட்டி தொடரை ஒளிபரப்புவதன் மூலம் போதிய வருவாய் ஈட்ட முடியாது. இதனால் இங்கிலாந்து அணியின், பாகிஸ்தான் தொடரை அடுத்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வரை தள்ளிவைப்பது என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
    ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சன், வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் ஆகியோர் டெஸ்ட் தொடருக்கு புத்துணர்ச்சியுடன் தயாராகும் பொருட்டு 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
    ஆக்லாந்து:

    நியூசிலாந்து சென்று இருக்கும் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணியுடன் மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. நியூசிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 27-ந் தேதி ஆக்லாந்தில் நடக்கிறது. 2-வது, 3-வது 20 ஓவர் போட்டி மவுன்ட் மாங்கானுவில் முறையே வருகிற 29 மற்றும் 30-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் ஹாமில்டனில் டிசம்பர் 3-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் டிசம்பர் 11-ந் தேதியும் தொடங்குகிறது.

    வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான போட்டி தொடருக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சன், வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் ஆகியோர் டெஸ்ட் தொடருக்கு புத்துணர்ச்சியுடன் தயாராகும் பொருட்டு 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் பிறந்து நியூசிலாந்தில் குடியேறியவரான தேவோன் கான்வே அறிமுக வீரராக நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளார். உள்ளூர் போட்டியில் அசத்தியன் மூலம் அவர் தேசிய அணிக்கு தேர்வாகி இருக்கிறார். இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் முதல்முறையாக 20 ஓவர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 20 ஓவர் போட்டியில் வில்லியம்சன் விளையாடாததால் டிம் சவுதி கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வில்லியம்சன் தலைமையிலான டெஸ்ட் அணியில் பெரும்பாலான வீரர்கள் மாற்றமின்றி தொடருகின்றனர்.
    பிரபல கால்பந்து வீரர் லூயிஸ் சுவாரசுக்கு (உருகுவே) நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
    மோன்ட்வீடியோ:

    பிரபல கால்பந்து வீரர் லூயிஸ் சுவாரசுக்கு (உருகுவே) நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் உலக கோப்பை தகுதி சுற்றில் பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட முடியாது. அத்துடன் தனது கிளப்பான அட்லெடிகோ மாட்ரிட் அணிக்குரிய அடுத்த லீக்கிலும் பங்கேற்கமாட்டார். 32 வயதான சுவாரஸ் உருகுவே அணிக்காக அதிக கோல்கள் (116 ஆட்டத்தில் 63 கோல்) என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னணி வீரர் நடாலை வீழ்த்தி ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் 2-வது வெற்றியை பெற்றார்.
    லண்டன்:

    உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிலண்டனில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 வீரர்களும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோதி வருகிறார்கள். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

    இதில் 2-வது நாளில் நடந்த ஒற்றையர் லீக் ஆட்டம் ஒன்றில் (டோக்கியோ 1970 பிரிவு) தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், 7-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) எதிர்கொண்டார்.

    1 மணி 29 நிமிடம் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மெட்விடேவ் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தார். கடந்த ஆண்டு இந்த போட்டி தொடரில் அவர் 3 லீக் ஆட்டங்களிலும் தோல்வி கண்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் 4-வது முறையாக கவுரவமிக்க இந்த தொடரில் பங்கேற்றுள்ள முன்னாள் சாம்பியனான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தொடக்க லீக் ஆட்டத்தில் தோல்வியை சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

    தோல்விக்கு பிறகு அலெக்சாண்டர் ஸ்வெரேவ் கூறுகையில், ‘இந்த சீசன் மீண்டும் தொடங்கிய பிறகு எனது மோசமான ஆட்டம் இதுவாகும். டேனில் மெட்விடேவுக்கு எல்லா பாராட்டும் சாரும். அவர் சிறப்பாக செயல்பட்டார். அவருடைய ‘அன்டர் ஆம் செர்வ்’ ( பந்தை மேல் நோக்கி தூக்கி போடாமல் சாதாரண நிலையில் செய்யும் செர்வ்) நல்ல பலனை கொடுத்தது எனலாம். தொடக்கத்தில் சற்று பதற்றமாக செயல்பட்ட அவர் தனது ஆட்ட நிலையை சரியாக உயர்த்தினார்’ என்றார்.

    நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் (லண்டன் 2020 பிரிவு) 3-ம் நிலை வீரர் டொமினிக் திம் (ஆஸ்திரியா) 7-6 (9-7), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் போராடி 2-ம் நிலை வீரர் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ரபெல் நடாலுக்கு (ஸ்பெயின்) அதிர்ச்சி அளித்தார். இந்த ஆட்டம் 2 மணி 25 நிமிடங்கள் நீடித்தது. 2-வது வெற்றியை ருசித்த டொமினிக் திம் அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளார். 2-வது ஆட்டத்தில் ஆடிய நடாலுக்கு இது முதலாவது தோல்வியாகும்.

    இன்று (புதன்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி)-டியாகோ ஸ்வாட்ஸ்மேன் (அர்ஜென்டினா), ஜோ கோவிச் (செர்பியா)-டேனில் மெட்விடேவ் (ரஷியா) ஆகியோர் மோதுகிறார்கள்.
    நீங்கள் (தெண்டுல்கர்) விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்று இருக்கலாம். ஆனால் எங்களது இதயத்தில் இருந்து ஒரு போதும் ஓய்வுபெறமாட்டீர்கள் என யுவராஜ்சிங் கூறியுள்ளார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் 47 வயதான சச்சின் தெண்டுல்கர் 2013-ம் ஆண்டு நவம்பர் 16-ந்தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றார். மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தனது 200-வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக களம் இறங்கிய தெண்டுல்கர் 74 ரன்கள் எடுத்து, வெற்றியோடு விடைபெற்றார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை இப்போது நினைவு கூர்ந்துள்ள தெண்டுல்கர், ‘ஓய்வு பெற்ற அன்றைய தினம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியமும், என் அன்பு நண்பர்கள் பிரையன் லாராவும், கிறிஸ் கெய்லும் அழகான இரும்பு டிரம் ஒன்றை பரிசாக வழங்கினர். அவர்களின் அன்புக்கும், என் மீது வைத்துள்ள மரியாதைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

    இந்திய முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ்சிங் தனது டுவிட்டர் பதிவில், ‘சிறப்பு வாய்ந்த அந்த நாளை எப்போதும் மறக்கமாட்டேன். நீங்கள் (தெண்டுல்கர்) விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்று இருக்கலாம். ஆனால் எங்களது இதயத்தில் இருந்து ஒரு போதும் ஓய்வுபெறமாட்டீர்கள். எல்லா காலத்திலும் சிறந்த வீரர் நீங்கள் தான்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா ஏலத்தில் டோனியை தக்க வைத்து கொள்ள கூடாது என இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன்முறையாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    கடந்த 2010, 2011 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் 3 முறை பட்டம் பெற்ற சென்னை அணி இந்த ஐ.பி.எல். தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருந்தது.  அணியில் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் இந்த சீசனில் விளையாடவில்லை.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும்பொழுது, அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளுக்கான சீசனில் மெகா ஏலம் நடைபெறும் பட்சத்தில் சென்னை அணி டோனியை தக்க வைத்து கொள்ள கூடாது என கூறியுள்ளார்.  இதற்கு அவர் விளக்கமும் கொடுத்துள்ளார்.

    தொடர்ந்து இதுபற்றி சோப்ரா கூறும்பொழுது, டோனியை அணி தக்க வைத்து கொண்டால் ரூ.15 கோடி இழப்பு ஏற்படும்.  அதற்கு பதிலாக டோனியை பொது ஏலத்தில் விடுவித்து, பின்னர் போட்டிக்கான உரிமை கார்டு வழியே அவரை வாங்கி கொள்ளலாம்.  இதனால், அணி பணம் சேமிக்க முடியும்.  நல்லதொரு அணியையும் உருவாக்க முடியும் என தெரிவித்து உள்ளார்.

    மெகா ஏலத்தில் 3 ஆண்டுகள் டோனியை வைத்திருந்த அணியாக நீங்கள் இருப்பீர்கள். ஆனால் டோனி உங்களுடன் 3 ஆண்டுகளாக அடுத்து இருப்பாரா? டோனியை வைத்திருக்க வேண்டாம் என நான் கூறவில்லை.  அவர் அடுத்த ஐ.பி.எல். போட்டியை விளையாடுவார்.  ஆனால், தக்க வைத்த வீரராக டோனி இருக்கும் பட்சத்தில் நீங்கள் ரூ.15 கோடியை அளிக்க வேண்டி வரும்.

    3 ஆண்டுகளுக்கு உங்களுடன் டோனி இருக்கவில்லை எனில் மற்றும் 2021 சீசனில் அவர் விளையாடுகிறார் எனில், 2022 சீசனுக்கான ரூ.15 கோடி உங்களுக்கு திரும்ப கிடைக்கும். ஆனால் அந்த ரூ.15 கோடி மதிப்பிலான வீரரை நீங்கள் எப்படி தேடி கண்டுபிடிப்பீர்கள்?

    அதற்கு மெகா ஏலம் உதவும். அந்த பணம் உங்களுடன் இருக்கும் பட்சத்தில், ஒரு பெரிய அணியை நீங்கள் உருவாக்க முடியும்.  சரியான வீரர்களையும் எடுக்க முடியும். டோனியை மெகா ஏலத்தில் விடுவித்து மீண்டும் எடுக்கும்பொழுது அது அணிக்கு பலனளிக்கும் என தெரிவித்துள்ளார்.

    அடிலெய்டு கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிதாக ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் டெஸ்ட் போட்டிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பான முறையில் விளையாட இருக்கிறார்கள்.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் அடுத்த மாதம் 17-ந்தேதி தொடங்குகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

    தற்போது கொரோனா தாக்கம் சற்று குறையத் தொடங்கியதால் மைதானத்திற்குள் ரசிகர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

    அடிலெய்டு மைதானம் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ளது. இன்று தெற்கு ஆஸ்திரேலியாவில் ஐந்து பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனால் தெற்கு ஆஸ்திரேலியா நிர்வாகம் எல்லையை கட்டுப்படுத்தியுள்ளது.

    தெற்கு ஆஸ்திரேலியா பகுதியில்தான் அடிலெய்டு உள்ளது. இதனால் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அடிலெய்டு டெஸ்ட் போட்டியை பொறுத்த வரைக்கும் தற்போதுள்ள நிலையே தொடரும். சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

    மேலும், வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா, டாஸ்மானியா, குயின்ஸ்லாந்தில் உள்ள இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய வீரர்கள் இன்று சிட்னி புறப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.

    உள்ளூர் கிரிக்கெட் போட்டியான மார்ஷ் ஷெஃப்பீல்டு ஷீல்டு தொடரின் கடைசி சுற்று போட்டி தெற்கு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்தது, அந்த வீரர்கள் தெற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறுகிறார்கள். இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு இந்த முடிவை எடுத்துள்ளது.

    டாஸ்மானியா நிர்வாகமும் எல்லைத் தொடர்பாக கட்டுப்பாடு விதித்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்றால் சுமார் ஐந்து மாதமாக ஓய்வில் இருந்த இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து ஒரு வருடம் ஓய்வில்லாமல் விளையாட இருக்கின்றனர்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து கிரிக்கெட் விளையாடவில்லை. சுமார் ஆறு மாதம் கழித்து செப்டம்பர் 19-ந்தேதி ஐபிஎல் தொடர் தொடங்கியபோதுதான் முதன்முறையாக போட்டி கிரிக்கெட்டில் களம் இறங்கினர்.

    ஆறு மாதங்களில் நடைபெற இருந்த பெரும்பாலான கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டன. இந்தத் தொடர்கள் அடுத்த வருடம் தொடக்கத்தில் இருந்து நடைபெற உள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி அடுத்த வருடம் முழுவதும் தொடர்ந்து கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது.

    தற்போது இந்தியா மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தத் தொடர்கள் ஜனவரியில் முடிவடைகிறது. அதன்பின் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து தலா நான்கு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    ஏப்ரல்-மே-ஜூன் மாதத்தில் ஐபிஎல் தொடர்  நடக்கிறது. அதன்பின் ஜூன் மாதம் இந்தியா இலங்கை சென்று 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    ஜூன் - ஜூலையில் ஆசிய கோப்பை டி20 தொடர் நடக்கிறது. இதில் இந்தியா 6 போட்டிகளில் விளையாடும்.

    ஜூலை மாதம் இந்தியா ஜிம்பாப்வே சென்று 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது.

    ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் இந்தியா இங்கிலாந்து சென்று ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. 

    அக்டோபர் மாதம் தென்ஆப்பிரிக்கா இந்தியா வந்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    அக்டோபர்- நவம்பரில் ஐசிசி டி20 உலக கோப்பை இந்தியாவில் நடக்கிறது. குறைந்தபட்சம் 6 போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது.

    நவம்பர் - டிசம்பரில் நியூசிலாந்து இந்தியாவில் வந்து 2 டெஸ்ட், 3 டி20 போட்டியில் விளையாடுகிறது. 

    டிம்சபர் மாதம் இந்தியா தென்ஆப்பிரிக்கா சென்று 3 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
    டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணிகளை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்து ஐ.சி.சி. புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.

    மொத்தம் உள்ள 9 அணிகள் உள்ளூர், வெளிநாடு அடிப்படையில் குறைந்தது 6 தொடர்களில் பங்கேற்க வேண்டும்.

    இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும்.

    இதுவரை நடந்த போட்டியின் அடிப்படையில் இந்தியா 360 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா 296 புள்ளிகளுடனும், இங்கிலாந்து 292 புள்ளிகளுடனும், நியூசிலாந்து 180 புள்ளிகளுடனும், பாகிஸ்தான் 166 புள்ளிகளுடனும் அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளன.

    கொரோனா வைரஸ் திடீரென ஏற்பட்டதால் பல்வேறு தொடர்கள் ரத்து செய்யப்பட்டன. டெஸ்ட் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறவில்லை.

    இதனால் இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணிகளை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்து ஐ.சி.சி. புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி புள்ளிகளின் சதவீத அடிப்படையில் இறுதிப் போட்டிக்கான அணிகளை தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சதவீத அடிப்படையில் ஆஸ்திரேலியா 82.2 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 75 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து 60.83 சதவீதத்துடன் 3-வது இடத்தில் உள்ளனர்.

    இந்த புதிய முறையால் இந்திய அணி எஞ்சிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து தொடர்களில் வெற்றிபெற வேண்டும். அப்படி வெற்றிபெற்றால் தான் முதல் 2 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழையமுடியும்.

    ×