என் மலர்
விளையாட்டு
சென்னை:
இந்தியாவின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீரர்களில் ஒருவர் ஜி.சத்யன். தமிழகத்தை சேர்ந்த அவர் இந்திய அளவில் தரவரிசையில் 32-வது இடத்தில் உள்ளார்.
இந்த நிலையில் ஜப்பானில் உள்ள ஒகியாமாவில் நடைபெறும் லீக் போட்டியில் சென்னையை சேர்ந்த சத்யன் பங்கேற்கிறார். இதற்காக வருகிற 23-ந் தேதி ஜப்பான் புறப்பட்டு செல்கிறார்.
சத்யன் தனது கிளப்புக்காக 8 ஆட்டங்களில் விளையாடுகிறார். முதல் போட்டி டிசம்பர் 10-ந் தேதி நடக்கிறது. டிசம்பர் 30-ந் தேதி அவர் நாடு திரும்புகிறார்.
இதுகுறித்து சத்யன் கூறும்போது, ‘நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்த போட்டியில் ஜப்பான், கொரியாவை சேர்ந்த முன்னணி டேபிள் டென்னிஸ் வீரர்கள் பங்கேற்பார்கள். என்னால் சில வீரர்களை தோற்கடித்து அதிர்ச்சி அளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.
சத்யன் சமீபத்தில் நடந்த போலாந்து லீக் போட்டியில் 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தார்.
லண்டன், நவ. 19-
‘டாப் 8’ வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று லண்டனில் நடைபெற்று வருகிறது.
8 வீரர்களும், 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒரு பிரிவில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா), டேனில் மெட்வதேவ் (ரஷியா), அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), டியாகோ சுவார்ட்ஸ்மேன் (அர்ஜெண்டினா) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மற்றொரு பிரிவில் 2-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்), டொமினிக் தீம் (ஆஸ்திரியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), ரூப்லேவ் (ரஷியா) ஆகியோர் உள்ளனர்.
2 பிரிவிலும், முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரை இறுதிக்கு தகுதி பெறுவார்கள்.
நேற்று நடந்த ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச் அதிர்ச்சிகரமாக தோற்றார். மெட்வதேவ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அவரை வீழ்த்தினார்.
மெட்வதேவ் பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் அவர் அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கடைசி ஆட்டத்தில் டியாகோவுடன் மோதுகிறார்.
ஜோகோவிச் முதல் தோல்வியை சந்தித்தார். அவர் கடைசி ஆட்டத்தில் சுவரேவுடன் மோதுகிறார். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே ஜோகோவிச் அரை இறுதிக்கு தகுதி பெற முடியும்.
டொமினிக் தீம் 2 ஆட்டங்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறிவிட்டார். நடால், சிட்சிபாஸ் ஆகியோர் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ளனர்.
இன்று நள்ளிரவில் நடைபெறும் ஆட்டத்தில் இருவரும் மோதுகிறார்கள். இதில் வெற்றி பெறுபவர் அரை இறுதிக்கு தகுதி பெறுவர்.
டியாகோ சுவார்ட்ஸ்மேன், ரூபலேவ் ஆகியோர் 2 ஆட்டங்களில் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்துவிட்டனர்.
சிட்னி:
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 2-ந் தேதியுடன் ஒருநாள் தொடர் முடிகிறது. 20 ஓவர் போட்டிகள் டிசம்பர் 4-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்கிறது.
டெஸ்ட் தொடர் வருகிற டிசம்பர் 17-ந் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. ஜனவரி 19-ந் தேதியுடன் டெஸ்ட் போட்டி முடிகிறது.
ஆஸ்திரேலிய பயணத்தில் டெஸ்ட் தொடருக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வேகப்பந்து வீரர்கள் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் அணிக்கு முக்கியமானவர்கள்.
இதனால் இந்த இருவரையும் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் சுழற்சி முறையில் களம் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருவரையும் சுழற்சி முறையில் பயன்படுத்தினால்தான் டெஸ்டில் கவனம் செலுத்த முடியும் என்று அணி நிர்வாகம் கருதுகிறது.
இதன் காரணமாக 20 ஓவர் போட்டிக்கான 11 கொண்ட அணியில் தீபக் சாகர், டி.நடராஜன், நவ்தீப் சைனி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.
6 அணிகள் பங்கேற்ற 5-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இமாத் வாசிம் தலைமையிலான கராச்சி கிங்சும், சோகைல் அக்தர் தலைமையிலான லாகூர் குலாண்டர்சும் கராச்சி நகரில் நேற்று முன்தினம் இரவு மோதின. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த லாகூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 134 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் தமிம் இக்பால் (35 ரன்), பஹார் ஜமான் (27 ரன்) ஓரளவு நல்ல தொடக்கம் தந்த போதிலும் மிடில் வரிசை வீரர்களின் மந்தமான பேட்டிங்கால் ரன்வேகம் சோடைபோனது.
அடுத்து களம் இறங்கிய கராச்சி கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது. வெற்றிக்கு வித்திட்ட பாபர் அசாம் 63 ரன்களுடன் (49 பந்து, 7 பவுண்டரி) கடைசி வரை களத்தில் இருந்தார். வாகை சூடிய கராச்சி அணிக்கு ரூ.3¾ கோடியும், முதல் முறையாக லீக் சுற்றை தாண்டி 2-வது இடத்தை பிடித்த லாகூர் அணிக்கு ரூ.1½ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பாபர் அசாம் (12 ஆட்டத்தில் 5 அரைசதத்துடன் 473 ரன்) தட்டிச் சென்றார்.
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் வருகிற 2022-ம் ஆண்டில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. 4 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டியில் முதல்முறையாக பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இடம் பெறுகிறது. ஏற்கனவே 1998-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மட்டும் அரங்கேறியது. ஆனால் அதன் பிறகு நடந்த போட்டிகளில் கிரிக்கெட் நீக்கப்பட்டது. 2022-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டில் அறிமுகமாகும் பெண்கள் 20 ஓவர் போட்டிக்கான தகுதி சுற்று குறித்த விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.), காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனமும் இணைந்து நேற்று வெளியிட்டன.
இதன்படி 8 அணிகள் பங்கேற்கும் காமவெல்த் விளையாட்டு கிரிக்கெட் போட்டிக்கு, போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் அடுத்த ஆண்டு (2021) ஏப்ரல் 1-ந் தேதியில் 20 ஓவர் போட்டி தரவரிசையில் முன்னணியில் இருக்கும் மற்ற 6 அணிகள் நேரடியாக தகுதி பெறும். இந்த போட்டி எட்ஜ்பஸ்டனில் நடைபெறும். எஞ்சிய ஒரு அணி எது? என்பதை நிர்ணயிப்பதற்கான தகுதி சுற்று போட்டி குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், 2022-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதிக்கு முன்னதாக தகுதி சுற்று போட்டி நடத்தப்படும் என்றும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெண்கள் கிரிக்கெட் அங்கம் வகிக்க இருப்பது குறித்து இந்திய பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கருத்து தெரிவிக்கையில், ‘காமன்வெல்த் விளையாட்டில் கிரிக்கெட் ஆட்டம் சேர்க்கப்பட்டு இருப்பது எல்லா வீராங்கனைகளுக்கு மட்டுமின்றி கிரிக்கெட்டுக்கும் மிகப்பெரிய விஷயமாகும். காமன்வெல்த் போட்டியில் நானும் பங்கேற்பேன் என்று நம்புகிறேன். தரமான மற்றும் சுவாரஸ்யம் நிறைந்த ஆட்டம் மூலம் இந்த போட்டி மிகவும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்’ என்றார்.
கொரோனா அச்சத்தால் இந்த ஆண்டில் இங்கிலாந்தில் சில சர்வதேச தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டன. உள்ளூர் போட்டிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ரசிகர்களை அனுமதிக்க முடியவில்லை. இதனால் ரூ.900 கோடிக்கு மேல் இழப்பீட்டை சந்தித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதை அடுத்த சீசனில் ஈடுகட்ட தீவிரம் காட்டி வருகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் அணி அடுத்த ஆண்டில் (2021) உள்நாட்டில் விளையாடும் போட்டிக்கான அட்டவணையை நேற்று வெளியிட்டது. இதன்படி அடுத்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்தியா- இங்கிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் ஆகஸ்டு 4-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. லண்டன் லார்ட்ஸ், லீட்ஸ், ஓவல், மான்செஸ்டர் ஆகிய இடங்களில் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்திய அணி கடைசியாக இங்கிலாந்துக்கு 2018-ம் சென்று விளையாடிய போது டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது நினைவு கூரத்தக்கது. முன்னதாக இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்திய மண்ணில் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஜூன் மாதத்துக்குள் முடித்து விட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. ஒருவேளை கால நீட்டிப்பு செய்யப்பட்டால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூடுதலாக ஒரு டெஸ்ட் தொடரை (இலங்கைக்கு எதிராக) நடத்த உத்தேசித்துள்ளது.
ஜூன் மாதம் இலங்கை அணி இங்கிலாந்தில் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. அதன் பிறகு ஜூலை மாதம் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு பயணித்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த போட்டிகளை நேரில் பார்க்க ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு சென்று 2 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா அபாயத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் அணி கடந்த ஆகஸ்டு மாதம் இங்கிலாந்துக்கு சென்று டெஸ்ட் தொடரில் ஆடியதற்கு பிரதிபலனாக 16 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணி அங்கு செல்ல சம்மதித்துள்ளது.
அக்டோபர் 14, 15-ந்தேதிகளில் கராச்சியில் இவ்விரு 20 ஓவர் போட்டிகளிலும் விளையாடிவிட்டு அங்கிருந்து 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்காக இந்தியாவுக்கு இங்கிலாந்து அணியினர் புறப்படுவார்கள்.
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் 2022-ம் ஆண்டில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடக்கிறது. இதற்கான தென்அமெரிக்க கண்டத்துக்குரிய அணிகளுக்கான தகுதி சுற்று போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். 5-வது இடம் பிடிக்கும் அணி ‘பிளே-ஆப்’ சுற்று மூலம் வாய்ப்பை பெற முடியும்.
இந்த நிலையில் உருகுவே தலைநகர் மோன்ட் வீடியோவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் 5 முறை சாம்பியனான பிரேசில் அணி, 2 தடவை சாம்பியனான உருகுவேயை எதிர்கொண்டது. காயம் காரணமாக பிரேசில் அணியில் நட்சத்திர வீரர் நெய்மார் இடம் பெறவில்லை. இதேபோல் கொரோனா பாதிப்பால் உருகுவே அணியின் முன்னணி வீரர் லூயில் சுவாரஸ் ஆடவில்லை.
தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தாலும், ஆரம்பத்தில் கிடைத்த சில வாய்ப்புகளை இரண்டு அணியினரும் வீணடித்தனர். 33-வது நிமிடத்தில் பிரேசில் அணி முதல் கோல் அடித்தது. அந்த அணியின் கேப்ரியல் சீசஸ் கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் அர்துர் ஹென்ரிக் கோலுக்குள் திணித்தார். 45-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
71-வது நிமிடத்தில் முரட்டு ஆட்டம் காரணமாக உருகுவே வீரர் எடிசன் கவானி நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. தடுப்பு ஆட்டத்தில் சற்று தடுமாறிய உருகுவே அணியால் கடைசி வரை பதில் கோல் எதுவும் திருப்ப முடியவில்லை. இதனால் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது. 4-வது ஆட்டத்தில் ஆடிய பிரேசில் அணி தொடர்ந்து 4 வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. உருகுவே அணி 2-வது தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியின் மூலம் பிரேசில் அணிக்கு எதிரான கடைசி 11 ஆட்டங்களில் உருகுவே வெற்றி பெற்றதில்லை என்ற சோகம் தொடருகிறது. அடுத்து பிரேசில் அணி மார்ச் மாதம் நடைபெறும் ஆட்டத்தில் கொலம்பியாவை சந்திக்கிறது.
மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி, பெருவை அதன் சொந்த மண்ணில் சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் பெருவை சாய்த்தது. 2004-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு அர்ஜென்டினா அணி, பெருவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும். அர்ஜென்டினா அணி தரப்பில் நிகோலஸ் கோன்ஜாலிஸ் 17-வது நிமிடத்திலும், லதாரோ மார்டினஸ் 28-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 4-வது ஆட்டத்தில் ஆடிய அர்ஜென்டினா அணி 3 வெற்றி, ஒரு டிராவுடன் 10 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. பெரு அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.
இதே போல் ஈகுவடார் அணி தங்களை எதிர்த்த கொலம்பியாவை 6-1 என்ற கோல் கணக்கில் பந்தாடி 3-வது வெற்றியை பதிவு செய்தது. வெனிசுலா அணி 2-1 என்ற கோல் கணக்கில் சிலிக்கு அதிர்ச்சி அளித்து முதல் வெற்றியை தனதாக்கியது. பராகுவே-பொலிவியா அணிகள் இடையிலான இன்னொரு லீக் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் (சமனில்) முடிந்தது.
சிட்னி:
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 27-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த தொடரில் இருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் கானேரிச்சர்ட்சன் விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக 33 வயதான ஆண்ட்ரூடை ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 7 ஒருநாள் போட்டி மற்றும் 26 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
மெல்பர்ன்:
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
ஒருநாள் தொடர் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. டிசம்பர் 2-ந்தேதியுடன் ஒரு நாள் போட்டி முடிகிறது. 20 ஓவர் தொடர் டிசம்பர் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடக்கிறது.
அதைத்தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 17-ந் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவாக நடக்கிறது. இந்திய அணி கேப்டன் வீராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுவார். எஞ்சிய 3 டெஸ்டில் ஆட மாட்டார். அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு குழந்தை பிறப்பதால் முதல் டெஸ்ட் முடிந்தபிறகு நாடு திரும்புவார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வீராட் கோலி 3 டெஸ்டில் விளையாடாதது இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்நாட்டு முன்னாள் வேகப்பந்து வீரர் மெக்ராத் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
வீராட்கோலி ஒரு திறமை வாய்ந்த வீரர். அவர் 4 டெஸ்டில் 3 போட்டியில் ஆடாதது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.
கோலி 2 வீரர்களுக்கு மதிப்பானவர். ஒன்று பேட்ஸ்மென் மற்றொன்று கேப்டன். அவர் ஆடுகளத்தில் மிகுந்த ஆக்ரோசத்துடன் செயல்படக்கூடியவர்.
இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்த விரும்பும். வார்னர், சுமித் ஆகியோர் அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலத்தை அளிக்கும்.
முதல் டெஸ்ட் போட்டியே சுவாரசியமானது. ஏனென்றால் பகல்-இரவாக நடக்கிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் இதுவரை பகல்-இரவு டெஸ்டில் விளையாடியது கிடையாது. சூரியன் மறைந்த பிறகு இரவு நேரத்தில் வேகப்பந்து வீரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
வீராட்கோலி இல்லா விட்டாலும் இந்திய அணி பேட்டிங் வரிசை பலமாக இருக்கிறது. புஜாரா, ரகானே, போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனாலும் வீராட் கோலி அளவுக்கு பலம் வாய்ந்து இருக்க முடியாது.ஆஸ்திரேலியாவில் அவரது சிறப்பான ஆட்டத்தை யாரும் மறந்து இருக்க மாட்டார்கள்.
இவ்வாறு மெக்ராத் கூறியுள்ளார்.






