என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா ஆஸ்திரேலியாவில் குழந்தை பெற்றால், அவரது சந்ததியை ஆஸ்திரேலியராக கருத முடியும் என நகைச்சுவையாக ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு அடுத்த வருடம் ஜனவரில் குழந்தை பிறக்க இருக்கிறது. இதனால் நவம்பர் 17-ந்தேதி அடிலெய்டில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இந்தியா திரும்புகிறார். இதனால் கடைசி மூன்று டெஸ்ட் போட்டியில் விராட் கோலி கலந்து கொள்ளமாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    விராட் கோலி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் ஆலன் பார்டர் ‘‘விராட் கோலி ஆஸ்திரேலியாவில் குழந்தை பிறக்க வேண்டும் என நினைத்திருப்பார் என நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படிஎன்றால், நாங்கள் அவரது சந்ததியை ஆஸ்திரேலியர்கள் எனக் கருத முடியும்’’ என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.

    மேலும், ‘‘விராட் கோலி ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடுவார் என்பது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமான ஒன்று. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என நினைக்கிறேன். தற்போதை நிலையில் அவர் ஈடுசெய்ய முடியாது பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன். ஆஸ்திரேலியா 2-1 என தொடரை கைப்பற்றனும்.’’ என்றார்.
    ரோகித் சர்மா ஒயிட்-பால் கிரிக்கெட்டில் விளையாடாதது ஆஸ்திரேலியாவுக்கு உதவிகரமாக இருக்கும் என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் ரோகித் சர்மா காயம் காரணமாக இடம்பெறவில்லை. இந்திய ஒயிட்-பால் அணியின் துணைக்கேப்டனாக இருந்த ரோகித் சர்மா இல்லாததால் கேஎல் ராகுல் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் ரோகித் சர்மா இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு நேர்மறையான விஷயமாக இருக்கும் என்று அதரிடி பேட்டிஸ்மேன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறுகையில் ‘‘ரோகித் சர்மா மிகவும் சிறந்த பேட்ஸ்மேன். தொடர்ச்சியாக தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடும் ரோகித் சர்மா, மூன்று இரட்டை சதங்கள் விளாசியுள்ளார். ஆகவே, அவர் அணியில் இல்லாமல் இருப்பது எப்போதும் மற்ற அணிகளுக்கு நேர்மறையான விசயமாகத்தான் இருக்கும்.

    ஆனால் இந்திய அணி சிறந்த பேக்-அப் வீரர்களை வைத்துள்ளது. ஏராளமானோர் அந்த இடத்திற்கு உள்ளனர். கேஎல் ராகுலை பார்த்தீர்கள் என்றால், ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் தொடக்க வீரராக இறங்கினாலும் சரி, இறங்காவிட்டாலும் சரி, அவர் சிறந்த வீரராக விளங்குவார் என்பதை உறுதியாக கூற இயலும்.

    கேஎல் ராகுல், மயங்க் அகர்வால்

    மயங்க் அகர்வால்- கேஎல் ராகுல் ஆகிய இரண்டு பேரும் சிறந்த வீரர்கள் என்பதை உறுதியாக சொல்வேன். பஞ்சாப் அணிக்கான வீரர்கள் அறையில் அவர்களுடன் நேரம் செலவழித்தது மகிழ்ச்சி. எல்லா திசையிலும் பந்துகளை விரட்டினர். அவர்களிடம் குறைவான பலவீனமே உள்ளது’’ என்றார்.
    பாகிஸ்தான் அணி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து செல்லும் நிலையில், நாங்கள் சிறந்த அணி என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தானின் மூன்று வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி முதல் பயணமாக நியூசிலாந்து செல்கிறது. இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    நியூசிலாந்து தொடர் குறித்து பாபர் அசாம் கூறுகையில் ‘‘எந்த எதிரணியையும் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆனால் எங்களையும் நியூசிலாந்து அணியையும் ஒப்பிட்டு பார்த்தால் நாங்கள் சிறப்பாக விளையாடியுள்ளோம். எங்களுக்கு எந்தவித நெருக்கடியும் கிடையாது. நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
    இந்திய அணி போட்டிக்கான வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்ட சஞ்ச் மஞ்ச்ரேக்கர் ஆஸ்திரேலியா தொடரில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
    இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் டெலிவிசன் வர்ணனையாளராக உள்ளார். இவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின்போது நேரடி வர்ணனையின்போது இந்திய அணி வீரர்களை குறைத்து பேசினார். குறிப்பாக ரவீந்திர ஜடேஜாவை மட்டம் தட்டி பேசினார். ஜடேஜா நேரடியாக பதிலடி கொடுத்ததுடன் பிசிசிஐ-யில் புகார் செய்தார்.

    இதனால் இந்திய அணி விளையாடும் போட்டிக்கான வர்ணனை குழுவில் இருந்து நீக்கப்பட்டார். தனது தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான போட்டியை நேரடியாக வர்ணனை செய்யும் குழுவில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இடம் பிடித்துள்ளார்.

    ஆங்கிலம் மற்றும் இந்தியில் அஜித் அகர்கர், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஹர்ஷா போக்லோ, முரளி கார்த்திக், அஜய் ஜடேஜா ஆகியோர் வர்ணனை செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியில் சேவாக், முகமது கைஃப், விஜய் தாஹியா, விவேக் ரஸ்தான், ஜாகீர் கான் ஆகியோரும் ஆங்கிலத்தில் மெக்ராத், நிக் நைட்டும் வர்ணனை செய்கிறார்கள்.

    இந்திய அணி நவம்பர் 27-ந்தேதி முதல் டிசம்பர் 2-ந்தேதி வரை ஒருநாள் போட்டியிலும், டிசம்பர் 4-ந்தேதியில் இருந்து டிசம்பர் 8-ந்தேதி வரை டி20 போட்டியிலும், டிசம்பர் 17-ல் இருந்து ஜனவரி 19-ந்தேதி வரை டெஸ்ட் போட்டியிலும் விளையாடி இருக்கிறது.
    ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரபேல் நடால் அரை இறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.

    லண்டன்:

    டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று லண்டனில் நடந்து வருகிறது. 8 வீரர்களும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒரு பிரிவில் டோமினிக்தீம் (ஆஸ்திரியா), மற்றொரு பிரிவில் மெத்வதேவ் (ரஷியா) ஆகியோர் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டனர். ஸ்வாட்மென் (அர்ஜென்டினா), ஆந்த்ரே ரூப்லேவ் (ரஷியா) ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    இன்று நடந்த ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்)-சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் மோதினர். இதில் ரபேல் நடால் 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு தகுதிபெற்றார். ரபேல் நடால் அரை இறுதியில் மெத்வதேவுடன் நாளை மோதுகிறார். இன்று நடக்கும் ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரர் ஜோகோவிச் (செர்பியா)-அலெக்சாண்டர் ஸ்வரேவ் ஜெர்மனி) மோதுகிறார்கள். இதில் வெற்றிபெறுபவர் அரை இறுதிக்கு தகுதி பெறுவார்.

    கணக்கீட்டு முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா 2-வது இடம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித்தொடரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தி வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் வெற்றி, டிராவுக்கு ஏற்ப புள்ளிகள் வழங்கப்பட்டது. இதில் இந்திய அணி 4 தொடரில் பங்கேற்று 7 வெற்றி, 2 தோல்வி பெற்று 360 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்தது. ஆஸ்திரேலியா 7 வெற்றி, 2 தோல்வி, ஒரு டிராவுடன் 296 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருந்தது.

    இந்தநிலையில் புள்ளிகள் பட்டியலில் கணக்கீட்டு முறையை ஐ.சி.சி. மாற்றியுள்ளது. சதவீத அடிப்படையில் அணிகளை வரிசைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இந்திய அணி 75 சதவீதத்துடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. முதல் இடத்தை ஆஸ்திரேலியா 82.22 சதவீதத்துடன் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. 3-வது இடத்தில் இங்கிலாந்தும் (60.83 சதவீதம்), 4-வது இடத்தில் நியூசிலாந்து (50 சதவிதம்) உள்ளன. அனில்கும்ப்ளே தலைமையிலான ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி பரிந்துரையை ஏற்று உலக டெஸ்ட் சாம்பியன் புள்ளிகள் பட்டியலில் கணக்கீட்டில் மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

    ரோகித் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடல்தகுதியை நிரூபிப்பதற்கான பயிற்சியை நேற்று தொடங்கினார்.
    பெங்களூரு:

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டியின் போது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். இதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இதற்கிடையே ஐ.பி.எல்.-ல் மும்பை அணிக்காக கடைசி இரு ஆட்டங்களில் ஆடிய ரோகித் சர்மா தான் நல்ல நிலையில் இருப்பதாக கூறினார். ஆனால் அவர் 70 சதவீதம் மட்டுமே உடல்தகுதியுடன் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி கூறினார். இதனால் அவரது காயத்தன்மை விவகாரம் சர்ச்சையானது. பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

    இந்த நிலையில் ரோகித் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடல்தகுதியை நிரூபிப்பதற்கான பயிற்சியை நேற்று தொடங்கினார். முழு உடல்தகுதியை எட்டியதும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவார். அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறையை பின்பற்ற வேண்டி இருப்பதால் வெகுவிரைவில் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு கிளம்புவார். இதே போல் காயமடைந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த ஷர்மாவும் தேசிய அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
    இங்கிலாந்து தொடருக்கான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த வீரர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்
    கேப்டவுன்:

    மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 27-ந்தேதி கேப்டவுனில் நடக்கிறது. இங்கிலாந்து வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

    இந்த நிலையில் இந்த போட்டிக்கு தயாராகும் தென்ஆப்பிரிக்க வீரர்கள் மற்றும் பயிற்சி உதவியாளர்கள் கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் இணைவதற்கு முன்பாக கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். கிட்டத்தட்ட 50 சோதனை எடுக்கப்பட்டது. இதில் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அவரும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் இரு வீரர்களும் உடனடியாக கேப்டவுனில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆனால் 3 வீரர்களுக்கும் எந்த அறிகுறியும் தென்படவில்லை. இருப்பினும் அவர்களை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதனால் அவர்கள் தொடக்க ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

    இப்போதைக்கு அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் அழைக்கப்படவில்லை. ஆனால் தென்ஆப்பிரிக்க அணி வீரர்களுக்குள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதற்கு வசதியாக இரண்டு வீரர்கள் சேர்க்கப்படுவதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மார்ச் மாதத்துக்கு பிறகு முதல்முறையாக சர்வதேச போட்டிகளில் அடியெடுத்து வைக்கும் தென்ஆப்பிரிக்க வீரர்கள் இங்கிலாந்து தொடரின் போது கருப்பின வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக களத்தில் முழங்காலிடும் பிரசாரத்தை மேற்கொள்ளமாட்டார்கள் என்று தென்ஆப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே 3டி வகை கிரிக்கெட்டின் போது தென்ஆப்பிரிக்க வீரர்கள் மைதானத்தில் முட்டிப்போட்டு ‘கருப்பின மக்களின் வாழ்க்கை முக்கியம்’ இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்ததை சுட்டிகாட்டிய பவுச்சர், அனேகமாக கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாட வாய்ப்புஇருப்பதாக கூறினார்.
    கோலி இல்லாததால் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியாக இருக்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் கூறியுள்ளார்.
    சிட்னி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்டில் விராட் கோலி விளையாடாதது (குழந்தை பிறப்புக்காக தாயகம் திரும்புகிறார்), அவரது பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் வகையில் இந்தியாவுக்கு நிச்சயம் இழப்பாகும். அவர் இல்லாவிட்டால் அணியில் உள்ள மற்ற பேட்ஸ்மேன்கள் சற்றே நெருக்கடியாக உணர்வார்கள். கோலிக்கு பதிலாக ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று நினைக்கிறேன். இது அவருக்கு கூடுதல் நெருக்கடியாகும். அது மட்டுமின்றி முக்கியத்துவம் வாய்ந்த 4-வது பேட்டிங் வரிசைக்கு பொருத்தமான வீரரை அவர்கள் (இந்தியா) கண்டுபிடித்தாக வேண்டும்.

    கடைசி 3 டெஸ்டில் மட்டுமல்ல, முதலாவது டெஸ்டில் கூட பேட்டிங் வரிசையில் யார்-யார் இடம் பெறுவார்கள் என்பதில் இந்திய அணி நிர்வாகம் தெளிவான மனநிலையில் இல்லை என்றே தோன்றுகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கப்போவது யார்? விராட் கோலி சென்று விட்டால் அந்த இடத்தில் களம் காணுவது யார்? இதே போல் வேகப்பந்து வீச்சாளர்களில் அனுபவம் வாய்ந்த பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், இளம் வீரர்கள் நவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? ஒரே சுழற்பந்து வீச்சாளர் இடத்திற்கு யார் சேர்க்கப்படுவார்? இப்படி நிறைய கேள்விகள் எழுகிறது.

    ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் டேவிட் வார்னருடன், ஜோ பர்ன்சை தொடக்க வீரராக (புதுமுக பேட்ஸ்மேன் புகோவ்ஸ்கியை தொடக்க வீரராக ஆட வைக்க பரிசீலனை செய்யப்படுகிறது) இறக்க வேண்டும். சமீபத்தில் நடந்த சில உள்ளூர் போட்டிகளில் அவர் சரியாக ஆடாதது பற்றி மட்டுமே பேசுகிறார்கள். ஆனால் கடந்த சீசனில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் அவர் சிறப்பாக விளையாடியதை மறந்து விடக்கூடாது.

    இவ்வாறு பாண்டிங் கூறினார்.
    11 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கோவாவில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவை சேர்ந்த ஏ.டி.கே.மோகன் பகான்- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.
    கோவா:

    இந்திய வீரர்களுடன் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் இணைந்து பங்கேற்கும் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய கால்பந்து திருவிழாவான இதில் முதல் 3 ஆண்டுகளில் 8 அணிகளும், அதன் பிறகு 10 அணிகளும் கலந்து கொண்டன. முதலாவது சீசனில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2015-ம் ஆண்டில் சென்னையின் எப்.சி. அணியும், 2016-ம் ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தாவும், 2017-ம் ஆண்டில் சென்னையின் எப்.சி.யும், 2018-ம் ஆண்டில் பெங்களூரு எப்.சி.யும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. கடந்த சீசனில் நடந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி 3-வது முறையாக பட்டத்தை சொந்தமாக்கியது.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான (2020-21) 7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மார்ச் மாதம் வரை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான போட்டிகள் அனைத்தும் ஒரே மாநிலத்தில் அதாவது கோவாவில் ரசிகர்கள் இன்றி அரங்கேறுகிறது. அங்குள்ள பதோர்டா ஜவகர்லால் நேரு ஸ்டேடியம், பாம்போலிம் ஜி.எம்.சி. தடகள ஸ்டேடியம், வாஸ்கோ திலக் ஸ்டேடியம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி போட்டி நடைபெறுகிறது.

    இந்த சீசனுக்கான போட்டியில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா, சென்னையின் எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ், நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), மும்பை சிட்டி, எப்.சி.கோவா, பெங்களூரு எப்.சி., ஒடிசா எப்.சி., ஐதராபாத் எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. ஆகியவற்றுடன் 11-வது அணியாக மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஈஸ்ட் பெங்கால் அணி புதிதாக இணைந்து இருக்கிறது. அத்துடன் அட்லெடிகோ டி கொல்கத்தாவுடன், அங்குள்ள நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த கால்பந்து கிளப்பான மோகன் பகான் கைகோர்த்து இருக்கிறது. இதனால் இனிமேல் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, ஏ.டி.கே. மோகன் பகான் என்று அழைக்கப்படும். இதன் மூலம் மேற்கு வங்காள கால்பந்து களத்தில் மிகப்பெரிய எதிரிகளாக திகழ்ந்த இரு அணிகள் இந்த முறை கோதாவில் குதிக்கின்றன.

    இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டி தொடருக்காக ஒவ்வொரு அணிகளும், புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து இருப்பதுடன், கடந்த மாதமே கோவா சென்று கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்துக்கு மத்தியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    கொரோனா பரவல் தொடங்கிய 8 மாதத்துக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் முதலாவது பெரிய போட்டி இதுவாகும். இந்த தொடரில் மொத்தம் 115 ஆட்டங்கள் இடம் பெறுகிறது. இது கடந்த ஆண்டை விட 20 ஆட்டங்கள் அதிகமாகும். ஜனவரி 11-ந் தேதி வரையிலான லீக் ஆட்ட அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாம்போலிம்மில் உள்ள ஜி.எம்.சி. தடகள ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஏ.டி.கே. மோகன் பகான் அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொள்கிறது. 3 முறை சாம்பியனான ஏ.டி.கே. மோகன் பகான் அணி ராய் கிருஷ்ணா தலைமையில் களம் காணுகிறது. ராய் கிருஷ்ணா கடந்த சீசனில் 15 கோல்கள் அடித்து அசத்தி இருந்தார். ஸ்பெயினை சேர்ந்த எடு கார்சியா, தமிழகத்தை சேர்ந்த மைக்கேல் சூசைராஜ் உள்ளிட்ட சிறந்த வீரர்களும் அந்த அணியில் அங்கம் வகிக்கிறார்கள். இரு கிளப்களும் இணைந்ததன் மூலம் அந்த அணி மேலும் வலுப்பெற்று இருக்கிறது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஹபாஸ் (ஸ்பெயின்) பணியாற்றுகிறார். அணியை வழிநடத்துவதில் திறமைசாலியான அவர் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி முதலாவது மற்றும் கடந்த சீசனில் கோப்பையை வென்ற போதும் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இரண்டு முறை 2-வது இடம் பிடித்து இருக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி சீரற்ற ஆட்ட தன்மை கொண்டதாகும். ஒன்று லீக் சுற்றுடன் நடையை கட்டும் அல்லது இறுதிப்போட்டி வரை வீறு நடைபோடும். கடந்த சீசனில் ஐ லீக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கிபு விகுனா (ஸ்பெயின்) கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்று இருக்கிறார். இதனால் இந்த போட்டியின் முடிவு இரு முன்னணி பயிற்சியாளர்களுக்கு இடையிலான பலப்பரீட்சையாகவும் பார்க்கப்படுகிறது.

    தொடக்க லீக் ஆட்டத்தில் கேரளா-கொல்கத்தா அணிகள் இதுவரை 3 முறை மோதி இருக்கின்றன. அதில் ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. கடைசி 2 சீசனிலும் கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி வாகை சூடி இருக்கிறது. அந்த மோசமான நிலையை கொல்கத்தா அணி மாற்றுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    சென்னையின் எப்.சி. அணி தனது முதலாவது லீக்கில் வருகிற 24-ந்தேதி ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை (இரவு 7.30 மணி) சந்திக்கிறது.
    ஆஸ்திரேலியா தொடரில் இடம் பிடிக்கும் நோக்கத்துடன் இஷாந்த் சர்மா, தேசிய கிரிக்கெட் அகாடமியில் முழு வேகத்துடன் பந்து வீசி வருகிறார்.
    இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். காயம் காரணமாக தொடக்கத்தில் விளையாடாமல் இருந்தார். அதன்பின் ஒரேயொரு போட்டியில் விளையாடினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இடது பக்கம் இடுப்புப் பகுதியில் தசைநார் கிழிந்தது.

    இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.

    தொடருக்கு இன்னும் ஒருமாதம் இருப்பதால் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயம் குணமடைவதற்கான சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் ராகுல் டிராவிட், பிசியோ ஆஷிஷ் கவுசிக் ஆகியோர் மேற்பார்வையில் பந்து வீசி பயிற்சி மேற்கொண்டார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார். விரைவில் ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
    கொல்கத்தாவில் நடைபெற்ற காளி பூஜையில் கலந்து கொண்ட ஷாகிப் அல் ஹசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
    வங்காள தேச அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். சூதாட்டம் தொடர்பாக அவரை அணுகியதை மறைத்ததால் ஓராண்டு தடைபெற்றார். தற்போது அந்த தடை முடிந்ததால் வங்காளதேச அணிக்கு திரும்ப பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இவர் கொல்கத்தாவில் நடைபெற்ற காளி பூஜையில் கலந்து கொண்டார். அதன்பின் பேஸ்புக் லைவ் விடியோ மூலம் முஸ்லீம் உணர்வை புண்படுத்தியதாக மோசின் தலுக்தெர் என்பவர் ஷாகிப் அல் ஹசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். ஷாகிப் அல் ஹசனை துண்டாக வெட்ட வேண்டும் என அந்த நபர் கோபத்தில் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் பயிற்சி மேற்கொள்ளும் அவருக்கு வங்காள தேசம் கிரிக்கெட் சார்பில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.

    காளி பூஜைக்கு முன்னதாக நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இது முஸ்லீம்களின் உணர்வை புண்படுத்துவதாக இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
    ×