என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசியதன் மூலம் ஆஸ்திரேலிய தொடருக்கு எந்தவித நெருக்கடியும் இன்றி தயாராக முடியும் என வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளார்
    சிட்னி:

    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    இந்த சீசனில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி மொத்தம் 20 விக்கெட்டுகளை கைப்பற்றினேன். ஐ.பி.எல்.-ல் நான் விளையாடிய விதம் எனக்கு நிறைய நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசியதன் மூலம் கிடைத்த சாதகமான அம்சம் என்னவென்றால், இப்போது ஆஸ்திரேலிய தொடருக்கு எந்தவித நெருக்கடியும் இன்றி தயாராக முடியும். என் மீது எந்த சுமையும் இல்லை. தற்போது நல்ல நம்பிக்கையுடன் சரியான நிலையில் இருக்கிறேன்.

    இந்த நீண்ட ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதலில் வெள்ளை நிற பந்திலும், அதன் பிறகு இளஞ்சிவப்பு பந்து, சிவப்பு பந்துகளில் விளையாடுகிறோம். இதில் எனது கவனம் சிவப்பு பந்தில் (டெஸ்ட் கிரிக்கெட்) தான் உள்ளது. அதற்காக தீவிர பயிற்சி எடுக்கிறேன். களத்தில் நீங்கள் சரியான அளவில் விரும்பிய இடத்தில் பந்தை பிட்ச் செய்து வீசத் தொடங்கி விட்டால் அதன் பிறகு எந்த வடிவிலான கிரிக்கெட்டிலும் சாதிக்க முடியும்.

    அணியில் இடம் பெற்றுள்ள எங்களது வேகப்பந்து வீச்சாளர்களால் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீச முடியும். ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களில் இத்தகைய வேகம் தேவை. எங்களது மாற்று வேகப்பந்து வீச்சாளர்கள் கூட இவ்வளவு வேகத்தில் வீசக்கூடியவர்கள் தான்.

    மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு சூப்பர் ஓவரில் 5 ரன்னுக்குள் அதிரடி பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோரை எனது பந்து வீச்சில் முடக்கியது இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் திருப்தி அளித்த இன்னிங்சாகும்.

    இவ்வாறு ஷமி கூறினார்.
    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பையை 1-0 என வீழ்த்தி நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வெற்றி பெற்றது.
    பனாஜி:

    7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தொடர் மார்ச் மாதம் வரை நடக்கிறது. 

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான போட்டிகள் அனைத்தும் ஒரே மாநிலத்தில் அதாவது கோவாவில் ரசிகர்கள் இன்றி அரங்கேறுகிறது. 

    திலக் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும், மும்பை சிட்டி அணியும் மோதின.

    முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 49-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் ஒரு குவேஸி அப்பியா ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், மும்பை சிட்டி அணியை 1-0 என்ற கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 
    காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பதை இந்திய வீரர் ரோகித் சர்மா ஒப்புக்கொண்டுள்ளார்.
    பெங்களூரு:

    இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஆவார். சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவரது தலைமையிலான மும்பை அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தி சாதனை படைத்தது.

    ஐ.பி.எல். தொடரின் போது ரோகித் சர்மாவுக்கு இடது பின்தொடை தசைநாரில் கிழிவு ஏற்பட்டது. இதனால் சில ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை. அந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் அவரது பெயர் இடம் பெறவில்லை. ஆனால் அடுத்த சில தினங்களில் இறுதிப்போட்டி உள்பட மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசி 3 ஆட்டங்களில் பங்கேற்று விளையாடினார். இதனால் அவரது காயத்தன்மை கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதப்பொருளாக மாறியது. தான் நன்றாக இருப்பதாக ரோகித் சர்மாவும், அவர் 70 சதவீதம் மட்டுமே உடல்தகுதியுடன் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலியும் கூறினர்.

    இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மட்டும் ரோகித் சர்மா சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஐ.பி.எல். முடிந்ததும் இந்திய வீரர்கள் துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றனர். ஆனால் ரோகித் சர்மாவுக்கு உடல்தகுதியை நிரூபிக்க அறிவுறுத்தப்பட்டதால் தாயகம் திரும்பினார்.

    சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற ரோகித் சர்மா அங்கு உடல்தகுதியை நிரூபிப்பதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் காயம் தொடர்பாக தனது நிலைப்பாடு குறித்து 33 வயதான ரோகித் சர்மா முதல்முறையாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    எனது காயம் தொடர்பாக மக்கள் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்பது பற்றி உண்மையிலேயே எனக்கு தெரியாது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்திடமும், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திடமும் எனது காயம் குறித்து தொடர்ந்து தகவல் தெரிவித்த வண்ணம் இருந்தேன். ‘இது 20 ஓவர் வடிவிலான போட்டி, அதனால் என்னால் எளிதாக சமாளிக்க முடியும்’ என்று மும்பை அணி நிர்வாகத்திடம் நம்பிக்கையுடன் கூறினேன். கடைசி லீக்கில் ஆடுகிறேன், அதில் ஏதேனும் அசவுகரியமாக உணர்ந்தால், பிளே-ஆப் சுற்றில் விளையாடமாட்டேன் என்றும் அவர்களிடம் தெரிவித்தேன். அதன் பிறகே களம் கண்டேன்.

    காயத்தில் இருந்து மீண்டு இன்னும் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். தசைநாரை வலுப்படுத்துவதற்கான பயிற்சிகளை செய்து வருகிறேன். நீண்ட வடிவிலான (டெஸ்ட்) போட்டிகளில் ஆடுவதற்கு முன்பாக தெளிவான சிந்தனையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அதற்கு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அதன் காரணமாகவே இப்போது பெங்களூரு அகாடமியில் இருக்கிறேன்.

    தொடை தசைநார் பிரச்சினையை முழுமையாக சரி செய்ய இன்னும் கொஞ்சம் உழைக்க வேண்டி உள்ளது. அதனால் தான் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு செல்லவில்லை. ஏனெனில் 11 நாட்களில் 6 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவது என்பது சிரமமாகும். அதில் பங்கேற்காததால் கிடைக்கும் 25 நாட்கள் இடைவெளியில் உடல்தகுதியை மேம்படுத்திக்கொண்டால், அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிக்கலின்றி விளையாடலாம் என்று நினைத்தேன். அதனால் குறுகிய வடிவிலான போட்டியில் விளையாடவேண்டாம் என்ற முடிவுக்கு வந்தேன். மற்றவர்கள் ஏன் இதை பற்றி குழம்பிக் கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
    உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி ஏடிபி டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு டொமினிக் தீம் தகுதிபெற்றுள்ளார்.
    லண்டன்:

    டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று லண்டனில் நடந்து வருகிறது.

    8 வீரர்களும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    ஒரு பிரிவில் டொமினிக் தீம் (ஆஸ்திரியா), மற்றொரு பிரிவில் மெத்வதேவ் (ரஷியா) ஆகியோர் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டனர்.

    மற்றொரு பிரிவில் ரபேல் நடால் (ஸ்பெயின்), நோவக் ஜோகோவிச் (செர்பியா) ஆகியோர் அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். 

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டம் ஒன்றில் ஜோகோவிச் (செர்பியா) - டொமினிக் தீம் (ஆஸ்திரியா) ஆகியோர் மோதினர்.

    முதல் செட்டில் 5-5 என சமநிலையில் இருந்தபோது, ஜோகோவிச்சிடம் இருந்து டொமினிக் தீம் போராடி 7-5 என வென்றார்.

    இதையடுத்து, டை பிரேக்கர் வரை சென்ற இரண்டாவது செட்டை ஜோகோவிச் 7-6 என தன்வசப்படுத்தினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டும் டை பிரேக்கர் வரை சென்றது. இதில் சிறப்பாக ஆடிய தீம் 7-6 என கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், இதில் டொமினிக் தீம் 7-5 6-7 (10), 7-6 (5) என்ற செட் கணக்கில் உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்தினார். 

    இந்த வெற்றி டொமினிக் தீமின் 300வது வெற்றி ஆகும். இதன்மூலம் டொமினிக் தீம் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
    ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோகோவிச் அரை இறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.
    லண்டன்:

    டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று லண்டனில் நடந்து வருகிறது. 8 வீரர்களும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒரு பிரிவில் டோமினிக் தீம் (ஆஸ்திரியா), மற்றொரு பிரிவில் மெத்வதேவ் (ரஷியா) ஆகியோர் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டனர். ஸ்வாட்மென் (அர்ஜென்டினா), ஆந்த்ரே ரூப்லேவ் (ரஷியா) ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    மற்றொரு பிரிவில் நடந்த போட்டியில் 2-ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) - சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் மோதினர். இதில் ரபேல் நடால் 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு தகுதிபெற்றார். 

    நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் நம்பர் 1 வீரர் ஜோகோவிச் (செர்பியா)-அலெக்சாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி) மோதினர். 

    இதில் 6-3, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் ஸ்வெரேவ்வை தோற்கடித்தார் ஜோகோவிச். இதன்மூலம் ஜோகோவிச் 9-வது முறையாக அரை இறுதிக்குள் நுழைந்தார்.

    இன்று (சனிக்கிழமை) நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் நடால் (ஸ்பெயின்) - மெத்வதேவ் (ரஷியா), ஜோகோவிச் (செர்பியா) - டொமினிக் தீம் (ஆஸ்திரியா) ஆகியோர் மோதுகிறார்கள்.
    இந்த ஆண்டுக்கான ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் கேரளாவை வீழ்த்தி கொல்கத்தா அணி முதல் வெற்றியை பெற்றது.
    பனாஜி:

    7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் நேற்று தொடங்கியது. இந்த தொடர் மார்ச் மாதம் வரை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான போட்டிகள் அனைத்தும் ஒரே மாநிலத்தில் அதாவது கோவாவில் ரசிகர்கள் இன்றி அரங்கேறுகிறது. 

    பாம்போலிம்மில் உள்ள ஜி.எம்.சி. தடகள ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஏ.டி.கே. மோகன் பகான் அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது. 

    முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 67வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் ராய் கிருஷ்ணா ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 1-0 என்ற கணக்கில் கொல்கத்தா அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

    கொரோனா பரவல் தொடங்கிய 8 மாதத்துக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் முதலாவது பெரிய போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. 
    லங்கா பிரிமீயர் லீக் வருகிற 26-ந்தேதி தொடங்கும் நிலையில் முக்கிய வீரர்கள் விலகியுள்ளனர். வெளிநாட்டு வீரர்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    இலங்கை கிரிக்கெட் போர்டு லங்கா பிரிமீயர் லீக்கை தொடங்க முடிவு செய்தது. கொரோனா வைரஸ் தொற்றால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இறுதியாக வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்க இருக்கிறது.

    வீரர்கள் அனைவரும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த சோஹைல் தன்வீர் மற்றும் கனடாவின் ரவீந்த்ரபால் சிங் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முக்கிய வீரர்களான மலிங்கா, கிறிஸ் கெய்ல் ஏற்கனவே விலகுவதாக தெரிவித்தனர். இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவின் டு பிளிஸ்சிஸ் இங்கிலாந்து தொடருக்கு தயாராக வேண்டியதால் விலகியுள்ளார்.

    இங்கிலாந்தை சேர்ந்த ரவி போபரா, ஒரு அணியின் பயிற்சியாளராக உள்ள முன்னாள் இங்கிலாந்து வீரர் கபிர் அலி ஆகியோரும் விலகியுள்ளனர்.

    எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை நீக்கி போட்டிகள் நடைபெறும் என இலங்கை பிரிமீயர் லீக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    நுரையீரல் தொடர்பான நோயால் அவதிப்பட்டு வந்த இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் தந்தை இன்று காலமானார்.
    இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ். இவர் இந்திய அணிக்காக ஒரேயொரு ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளது. இதற்கான இந்திய அணியில் முகமது சிராஜ் இடம் பிடித்துள்ளார்.

    இன்று முகமது சிராஜின் தந்தை கோஸ் காலமானார். நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்த கோஸ், இன்று காலமானார். முகமது சிராஜின் தந்தை ஒரு ஆட்டோ டிரைவர். மிகவும் சிரமப்பட்டு முகமது சிராஜை இந்திய அணியில் இடம்பெறும் வகையில் கஷ்டப்பட்டு வளர்த்தவர்.

    ஆஸ்திரேலியாவில் இந்திய அணி வீரர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதால் முகமது சிராஜ் உடனடியாக இந்தியா புறப்பட முடியாத நிலையில் உள்ளதாக தெரிகிறது.

    ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணி முகமது சிராஜியின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
    இந்திய கிரிக்கெட்டில் கேப்டன் பதவியை பிரித்து கொடுப்பது வழக்கத்தில் இல்லை என முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவின் மூன்று வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் விராட் கோலி கேப்டனாக இருக்கிறார். ரோகித் சர்மா ஒயிட்-பால் அணிகளுக்கு துணைக் கேப்டனாக இருக்கிறார். ஐபிஎல் தொடரில் கேப்டனாக ரோகித் சர்மா சாதனைப் படைத்து வருவதால் இந்தியாவின் டி20 அணிக்கு அவரை கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து கொண்டே இருக்கிறது.

    மேலும், விராட் கோலியின் பணிச்சுமையை குறைப்பதற்காகவும் கேப்டன் பதவி வழங்கலாம் எனத் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகையில் ‘‘நம்முடைய வழக்கத்தில் இரு கேப்டன் என்ற முறை நடைமுறைப்படுத்த முடியாது. எம்என்சி நிறுவனத்தில் இரண்டு சிஇஓ-க்கள் இருக்க முடியாது. டி20 அல்லது ஐபிஎல் பற்றி நினைக்கத் தேவையில்லை. நீங்கள் முதல்தர கிரிக்கெட்டிற்குப்பின் டெஸ்ட், ஒருநாள் போட்டியை நோக்க வேண்டும்’’ என்றார்.
    எம்எஸ் டோனி மனைவி சாக்‌ஷியின் பிறந்த விழா துபாயில் நடைபெற்ற நிலையில் சானியா மிர்சா- சோயிப் மாலிக் கலந்து கொண்டனர்.
    ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 13-வது சீசன் நடைபெற்றது. கடந்த 10-ந்தேதியோடு ஐபிஎல் தொடர் முடிவடைந்துவிட்டது. ஆனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும் ஆன எம்எஸ் டோனி குடும்பத்துடன் துபாயில் உள்ளார். இன்னும் இந்தியா திரும்பவில்லை.

    நேற்று எம்எஸ் டோனியின் மனைவி சாக்‌ஷியின் பிறந்த நாள். குடும்பத்துடன் சாக்‌ஷி பிறந்த நாளை கொண்டாடினார். இந்த பிறந்த நாள் விழாவில் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தனது கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் உடன் இணைந்து கலந்து கொண்டார்.

    சாக்‌ஷி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட படத்தை சானியா மிர்சா வெளியிட்டுள்ளார். சானியா மிர்சா உடன் அவரது சகோதரி அனம் கலந்து கொண்டார்.
    கொரோனா தொற்றுக்குப் பிறகு ஆண்களின் பொறுப்பு மாறிவிட்டது என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியபோது நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கிரிக்கெட் வீரர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.

    புத்தகங்கள் படித்தும், வீட்டு வேலைகளை செய்தும், பண்ணைத் தோட்டத்தை பராமரித்தும் நேரத்தை செலவழித்தனர். மேலும், மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதிகமான நேரத்தை செலவிட முடிந்தது.

    இந்த நிலையில் கொரோனாவிற்குப் பிறகு ஆண்களின் பொறுப்பு மாறிவிட்டதாக இரண்டு குழந்தைகளின் தந்தையான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் ‘‘ஏராளமான ஆண்கள் கொரோனா காலத்தில் தங்களுடைய முழு வாழ்க்கை ஸ்டைலையும், பொறுப்புகளையும் மாற்றிக் கொண்டனர். இதற்கு முன் இதுபோன்று ஒருபோதும் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்திருக்கமாட்டார்கள். கொரோனா தொற்றால் ஒவ்வொருவரும் அதிகமான நேரத்தை வீட்டில் செலவழித்தனர்.

    குடும்பத்துடன் சுரேஷ் ரெய்னா

    குடும்பத்துடன் குறிப்பாக குழந்தைகளுடன் நேரத்தை செலவழிப்பது, அவர்களுக்கு சாப்பாடு ஊட்டுவது உள்பட பல்வேறு பழக்கத்தில் ஈடுபட்டது, அவர்களது வேலையை சரியாக அளவிடுவது, டெலிவிசன் பார்ப்பது, வீடியோ கேம் என நேரத்தை செலவிட முடிந்தது’’  என்றார்.
    ஐசிசி-க்கும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டுக்கும் இடையில் நிதி தொடர்பான ஒப்பந்தம் முடிவுக்கு வராததால் ஐசிசி சாம்பியன்ஷிப் இறுதி போட்டி லார்ட்ஸில் நடைபெறுவது சந்தேகமாக உள்ளது.
    சர்வதேச கிரிக்கெட் வாரியம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முறையை அறிமுகப்படுத்தியது. 2019 முதல் 2021 வரை முன்னணி அணிகள் டெஸ்ட் தொடரில்களில் விளையாடும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும் என அறிவிக்கப்பட்டது.

    இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியை ஜூன் 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளது.

    தற்போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு - ஐசிசி-க்கும் இடையில் நிதி தொடர்பான ஒப்பந்தம் முடிவுக்கு வரவில்லையாம். இதனால் லார்ட்ஸ் மைதானத்தில் இருந்து இறுதிப் போட்டி வேறு இடத்திற்கு மாற வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலில் பாயின்ட் அடிப்படையில் அணிகள் தரவரிசைப் படுத்தப்பட்டது. தற்போது பெற்ற வெற்றிகள் அடிப்படையில் சதவீதம் அடிப்படையில் தரவரிசை வழங்கப்பட்டுள்ளது. இதனால் 2-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
    ×