என் மலர்
விளையாட்டு
புதுடெல்லி:
தமிழகத்தை சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் டி. நடராஜன். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அவர் 2017 ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணியில் அறிமுகமானார்.
2018-ம் ஆண்டில் இருந்து நடராஜன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 13-வது ஐ.பி.எல். போட்டியில் அவரது பந்துவீச்சு அபாரமாக இருந்தது. யார்க்கர் பந்துகளை வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
சேலத்தை சேர்ந்த 29 வயதான நடராஜன் இந்த ஐ.பி.எல். போட்டியில் 16 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 71 யார்க்கர் பந்துகளை இந்த தொடரில் வீசினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நடராஜனின் பந்துவீச்சை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிரபல வேகப்பந்து வீரருமான கபில்தேவ் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டியில் என்னுடைய கதாநாயகன் நடராஜன்தான். இந்த இளம் வீரருக்கு பயமே இல்லை. தொடர்ந்து ஏராளமான யார்க்கர்களை வீசினார். யார்க்கர்தான் சிறந்த பந்து. இன்று மட்டுமல்ல கடந்த 100 ஆண்டுகளாகவே அது சிறந்த பந்தாகும். யார்க்கர் வீசுவதற்கான அடிப்படைகளை சரியாக அவர் பின்பற்றினார்.
ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய பந்து வீச்சாளர்கள் வேகமாக பந்து வீசுவதை விடவும், சுவிங்தான் முக்கியம் என்பதை அறிந்துள்ளார்கள்.
மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் வீசிய சந்தீப் சர்மா பந்தை நன்கு சுவிங் செய்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை உருவாக்கினார். எனவே வேகமல்ல சுவிங்தான் முக்கியம் என்பதை பந்து வீச்சாளர்கள் அறிய வேண்டும்.
வீராட் கோலி தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டோடு நாடு திரும்புகிறார். முன்பெல்லாம் எங்களால் இப்படி போய்விட்டு வர முடியாது.
கவாஸ்கர் தன்னுடைய மகனை பல மாதங்களாக பார்க்கவில்லை. அது வேறு சூழல். இப்போது நிலைமை மாறிவிட்டது. கோலி தன்னுடைய அப்பா இறந்தபோது மறுநாளே ஆட வந்து விட்டார்.
தற்போது அவர் தன்னுடைய குழந்தை பிறப்புக்காக லீவு எடுக்கிறார். நல்லதுதான். அவருக்கு கிரிக்கெட்டில் உள்ள ஆர்வத்தை விட, குழந்தையை ஏந்தும் ஆர்வம்தான் அதிகம் இருக்கிறது என்பதை உணர்கிறேன். மதிக்கிறேன்.
இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.
லண்டன்;
உலகின் டாப்-8 வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. டென்னிஸ் இறுதிச்சுற்று லண்டனில் நடைபெற்று வருகிறது.
இதன் அரை இறுதி ஆட்டத்தில் உலகின் 2-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார். ரஷியாவை சேர்ந்த டேனில் மெட்வதேவ் 3-6, 7-6, (7-4), 6-3 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
மெட்வதேவ் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் முன்னேறி இருக்கிறார்.
மற்றொரு அரை இறுதியில் டொமினிக் தீம் (ஆஸ்திரியா) 7-5, 6-7 (10-12), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு 5 முறை சாம்பியனும், முதல் நிலை வீரருமான ஜோகோவிச்சை (செர்பியா) தோற்கடித்தார்.
இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் டொமினிக் தீம்- மெட்வதேவ் மோதுகிறார்கள். இருவருமே முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ள னர். இதனால் முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல இருவரும் ஆர்வத்தில் உள்ளனர்.
மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 27-ந் தேதி கேப்டவுனில் நடக்கிறது. இந்த போட்டி தொடருக்காக தயாராகி வரும் தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என 50 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து அவரும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இருவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் தென்ஆப்பிரிக்க அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவரது பெயர் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் நேற்று நடக்க இருந்த தென்ஆப்பிரிக்க அணியினருக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இங்கிலாந்து வீரர்களுக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட பரிசோதனையில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதால் அவர்கள் நேற்று தனியாக பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
இந்த சீசனில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி மொத்தம் 20 விக்கெட்டுகளை கைப்பற்றினேன். ஐ.பி.எல்.-ல் நான் விளையாடிய விதம் எனக்கு நிறைய நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசியதன் மூலம் கிடைத்த சாதகமான அம்சம் என்னவென்றால், இப்போது ஆஸ்திரேலிய தொடருக்கு எந்தவித நெருக்கடியும் இன்றி தயாராக முடியும். என் மீது எந்த சுமையும் இல்லை. தற்போது நல்ல நம்பிக்கையுடன் சரியான நிலையில் இருக்கிறேன்.
இந்த நீண்ட ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதலில் வெள்ளை நிற பந்திலும், அதன் பிறகு இளஞ்சிவப்பு பந்து, சிவப்பு பந்துகளில் விளையாடுகிறோம். இதில் எனது கவனம் சிவப்பு பந்தில் (டெஸ்ட் கிரிக்கெட்) தான் உள்ளது. அதற்காக தீவிர பயிற்சி எடுக்கிறேன். களத்தில் நீங்கள் சரியான அளவில் விரும்பிய இடத்தில் பந்தை பிட்ச் செய்து வீசத் தொடங்கி விட்டால் அதன் பிறகு எந்த வடிவிலான கிரிக்கெட்டிலும் சாதிக்க முடியும்.
அணியில் இடம் பெற்றுள்ள எங்களது வேகப்பந்து வீச்சாளர்களால் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீச முடியும். ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களில் இத்தகைய வேகம் தேவை. எங்களது மாற்று வேகப்பந்து வீச்சாளர்கள் கூட இவ்வளவு வேகத்தில் வீசக்கூடியவர்கள் தான்.
மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு சூப்பர் ஓவரில் 5 ரன்னுக்குள் அதிரடி பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோரை எனது பந்து வீச்சில் முடக்கியது இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் திருப்தி அளித்த இன்னிங்சாகும்.
இவ்வாறு ஷமி கூறினார்.






