என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜோ பேர்ன்ஸ் தொடக்க வீரராக களம் இறங்கினால் மகிழ்ச்சியாக இருக்கும் என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 17-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார். அவருடன் ஜோ பேர்ன்ஸ் மற்றொரு தொடக்க வீரராக களம் இறங்கினார்.

    ஆனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இளம் வீரரான வில் புக்கோவ்ஸ்கி களம் இறங்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்நிலையில் ஜோ பேர்ன்ஸ் தொடக்க வீரராக களம் இறங்கினால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுகுறித்து டேவிட் வார்னர் கூறுகையில் ‘‘நானும் ஜோ பேர்ன்ஸும் கடந்த சில ஆண்டுகளாக தொடக்க வீரர்களாக களம் இறங்கி சிறப்பாக விளையாடியதாக நினைக்கிறேன். ஜோ பேர்ன்ஸ் நீண்ட காலத்திற்கான வீரர் என்பது எனக்குத் தெரியும். ஆடுகளத்தில் இறங்கிவிட்டால், ஒருவருக்கொருவர் ஆட்டமும் சிறப்பாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், இடத்திற்கு யார் சரியான நபராக இருப்பார்கள் என்பதை தேர்வாளர்கள் முடிவு செய்வார்கள்’’ என்றார்.
    இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வது விராட் கோலிக்கு கூடுதல் பெருமையை சேர்க்கும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி வெளிநாட்டு மண்ணில் வெற்றிகளை அதிக அளவில் ருசித்துள்ளார். ஆஸ்திரேலியா மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    ஆனால் ஐசிசி நடத்தும் உலக கோப்பையை மட்டும் இன்னும் வெல்லவில்லை. 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து கோப்பையை முகரும் வாய்ப்பை இழந்தது.

    கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது. பேட்ஸ்மேனாக உலகளவில் சிறந்த வீரராக இருக்கும் விராட் கோலிக்கு கேப்டனாக உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற ஏக்கம் மட்டுமே உள்ளது.

    அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையை வென்றால் விராட் கோலிக்கு அது கூடுதல் பெருமை அளிக்கும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘எந்தவொரு கேப்டனும் இந்த சாதனையை எட்ட விரும்புவார்கள். அடுத்த வருடம் நடைபெறும் டி20 உலக கோப்பையை வென்றால் சிறப்பானதாக இருக்கும். இது விராட் கோலியை மிகப்பெரியதாக உருவாக்காது. அவர் ஏற்கனவே மிகப்பெரிய வீரர். ஆனால், உலகக்கோப்பை வென்ற கேப்டன் என்பது அவருடைய பெருமைக்கு கூடுதல் பெருமை சேர்ப்பதாக இருக்கும்’’ என்றார்.
    ஐஎஸ்எல் கால்பந்தில் சென்னை எப்.சி. தொடக்க ஆட்டத்தில் நாளை ஜெம்ஷெ்ட்பூர் அணியை எதிர்கொள்கிறது. வெற்றியோடு கணக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி 2014-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 6 போட்டித் தொடர்  நடைபெற்றுள்ளது. அட்லெடிகோ கொல்கத்தா அணி அதிகபட்சமாக 3 முறை (2014, 2016, 2019-20)  ஐ.எஸ்.எல். கோப்பையை வென்றுள்ளது. சென்னையின் எப்.சி 2 தடவையும் (2015, 2017-18), பெங்களூர் அணி (2018-19) ஒரு முறையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

    2020-21--ம் ஆண்டுக்கான 7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கோவாவில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரசிகர்கள் இல்லாமல் அங்குள்ள 3 மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படுகிறது.

    இதில் பங்கேற்கும் 11 அணிகளும் ‘ரவுண்ட் ராபின்’ முறையில் 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.

    தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அட்லெடிகொ கொல்கத்தா மோகன் பகான், 1-0 என்ற கணக்கில் கேரளா பிளாஸ்டர்சையும், 2-வது ஆட்டத்தில் கவுகாத்தி அணி 1-0 என்ற கணக்கில் மும்பையையும் தோற்கடித்தன.
    கோவா- பெங்களூர் அணிகள் மோதிய 3-வது ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 4-வது ஆட்டத்தில் ஒடிசா- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணியை நாளை இரவு 7.30 மணிக்கு எதிர் கொள்கிறது. 

    சென்னையின் எப்.சி. வெற்றியுடன் தனது கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை அணி கடந்த முறை இறுதி ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோற்று கோப்பையை இழந்தது. கடந்த முறையை போலவே தற்போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆர்வத்தில் சென்னை அணி இருக்கிறது.
    ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காததது ஏமாற்றமே என மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 4 டெஸ்டில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. ஒருநாள் தொடர் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் ஐ.பி.எல். போட்டியில் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    உள்நாட்டு போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இது தொடர்பாக முன்னாள் வீரர்கள் சிலர் தேர்வுக்குழுவை விமர்சித்து இருந்தனர்.

    இந்தநிலையில் ஆஸ்திரேலிய தொடரில் இடம் கிடைக்காதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று சூர்யகுமார் யாதவ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஆஸ்திரேலிய தொடருக்கான அணி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து என்னால் நிலையாக இருக்க இயலவில்லை. முடிந்த வரை என்னை அந்த எண்ணத்தில் இருந்து விலக்கி வைத்துக் கொள்ள முயற்சித்தேன். அதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டேன். ஆனாலும் அதுகுறித்த எண்ண ஓட்டத்தை தவிர்க்க முடியவில்லை.

    எனது ஏமாற்றத்தை ரோகித் சர்மாவிடம் வெளிப்படையாக வெளிப்படுத்தினேன். அதற்கு அவர், தற்போதைய நிலையில் நீ சிறப்பாக செயல்பட்டு வருகிறாய். இந்திய அணிக்கு தேர்வாகாதது குறித்து யோசிக்காமல் ஐ.பி.எல். போட்டியில் தற்போது எவ்வாறு சிறப்பாக ஆடி வருகிறாயோ அதைத்தொடர்ந்து அப்படியே கடைபிடி. உனக்கான நேரம் வரும்போது வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

    அவரது வார்த்தைகள் எனக்கு ஆறுதலாக இருந்தது. எனக்கான வாய்ப்புக்காக என்னை இன்னும் சிறப்பாக தயார்படுத்திக்கொள்ள தொடங்கி உள்ளேன்.

    இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.
    இந்திய தடகள அணியின் திறன் இயக்குனர் ஜெர்மனியைச் சேர்ந்த வோல்கர் ஹெர்மான் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய தடகள அணியின் உயர்செயல்பாட்டு திறன் இயக்குனராக ஜெர்மனியைச் சேர்ந்த வோல்கர் ஹெர்மான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். தள்ளிவைக்கப்பட்ட 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரை இயக்குனராக நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. பிறகு 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் வரை அவரது ஒப்பந்தத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் நீட்டித்தது.

    இந்த நிலையில் இந்த பொறுப்பில் இருந்து ஹெர்மான் விலகியுள்ளார். அவசரமாக தாயகம் திரும்பிய அவர் அதன் பிறகு பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதற்கு அவர் குறிப்பிடத்தக்க காரணம் எதையும் சொல்லவில்லை என்று இந்திய தடகள சம்மேளன வட்டாரங்கள் தெரிவித்தன.
    உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டொமினிக் தீமை வீழ்த்தி டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
    லண்டன்:

    டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று லண்டனில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் டொமினிக் தீம் (ஆஸ்திரியா), மெத்வதேவ் (ரஷியா) ஆகியோர் மோதினர்.

    தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக ஆடினர். முதல் செட்டை டொமினிக் தீம் 6-4 என வென்றார்.

    ஆனாலும் இரண்டாவது செட்டில் மெத்வதேவ் அதிரடியாக ஆடினார். டை பிரேக்கர் வரை சென்ற இரண்டாவது செட்டை மெத்வதேவ் 7-6 என தன்வசப்படுத்தினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-4 என கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், டேனில் மெத்வதேவ் 4-6, 7-6(2), 6-4 என்ற செட் கணக்கில் உலகின் நம்பர் 3 வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். இந்த வெற்றியைப் பெற மெத்வதேவுக்கு 2 மணி 43 நிமிடங்கள் தேவைப்பட்டது. 

    சிறப்பாக ஆடி சாம்பியன் பட்டம் வென்ற மெத்வதேவ் உலகின் முதல் 3 நிலை வீரர்களை இந்த தொடரில் தோற்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலி பாதியில் தாயகம் திரும்பும் போது அது வெற்றிடத்தை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கூறியுள்ளார்.
    சிட்னி:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் அடுத்த மாதம் 17-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் இணையதளம் ஒன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

    இந்த கோடை கால தொடரின் குழப்பமான சூழல், கொரோனா தொற்று பரவலால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அட்டவணையில் ஏற்படுத்திய தாக்கம் போன்றவை டெஸ்ட் தொடரை இந்திய அணி மீண்டும் கைப்பற்றுவதற்கு அனுகூலமாக கூட அமையலாம். 14 நாட்கள் தனிமைப்படுத்துதலின் போது பயிற்சியில் ஈடுபட இந்திய வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தங்களை பழக்கப்படுத்திக்கொள்ள இந்திய வீரர்களுக்கு இது கூடுதல் காலஅவகாசத்தை வழங்கியுள்ளது.

    அதாவது ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் எந்த அளவில் (லென்த்) துல்லியமாக பந்து வீசினால் நன்றாக இருக்கும் என்பதை அறிந்து, அதற்கு ஏற்ப இந்திய பவுலர்கள் ஆயத்தமாவதற்கும், வழக்கத்துக்கு மாறான பவுன்சர் பந்துகளை இந்திய பேட்ஸ்மேன்கள் திறம்பட சமாளிக்க பழகிக்கொள்ளவும் இந்த கூடுதல் பயிற்சி நாட்கள் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் பவுன்சர் பந்துகளில் தாக்குப்பிடிப்பது மட்டும் போதாது. அத்தகைய பந்துகளில் ரன்களும் குவிக்க வேண்டும். இல்லாவிட்டால் பவுன்சர் பந்துகளில் தடுமாற வேண்டியது தான்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் முடிந்ததும் இந்திய கேப்டன் விராட் கோலி குழந்தை பிறப்புக்காக தாயகம் திரும்பும் போது வீரர்களின் தேர்வில் இந்திய அணி நிர்வாகம் தர்மசங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். கோலி இல்லாத போது இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கும். அதே சமயம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி திறமையான இந்திய இளம் பேட்ஸ்மேன்கள் தங்களது முத்திரையை பதிக்க இது அருமையான வாய்ப்பாகும்.

    இந்த தொடர் ஏற்கனவே பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கி இருக்கிறது. இதில் இப்போது கூடுதலாக வீரர்கள் தேர்வு முக்கிய பங்காற்றப்போகிறது. யார் துணிச்சலான தேர்வாளர்கள் என்பது, அணியில் சரியான வீரர்களை தேர்வு செய்த பிறகு தான் தெரியும்.

    ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக டேவிட் வார்னருடன் ஜோ பர்ன்சை இறக்குவதை விட புதுமுக வீரர் வில் புகோவ்ஸ்கிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கடந்த சீசனில் ஜோ பர்ன்ஸ் 2 அரைசதம் உள்பட 256 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் சராசரி 32 ஆக உள்ளது. இது ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனின் சராசரிக்கு மிகவும் குறைவாகும்.

    ஆனால் புகோவ்ஸ்கி உள்ளூர் போட்டியான ஷெப்பீல்டு கோப்பைக்கான முதல்தர கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் நொறுக்கியுள்ளார். இதில் சமீபத்தில் அடுத்தடுத்து இரண்டு இரட்டை சதங்கள் அடித்து சாதனை படைத்ததும் அடங்கும். சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு போதுமான திறமையை நிரூபித்து காட்டியுள்ளார். அவருக்கு வாய்ப்பு வழங்குவதற்கு இதுவே சரியான நேரமாகும்.

    இவ்வாறு இயான் சேப்பல் கூறியுள்ளார்.
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா - பெங்களூரு இடையேயான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது.
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. இதல் பங்கேற்றுள்ள 11 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    இந்த நிலையில் நேற்றிரவு அரங்கேறிய 3-வது லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான எப்.சி.கோவா, முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.யை எதிர்கொண்டது. இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டியதால் ஆட்டம் விறுவிறுப்பாக நகர்ந்தது. இருப்பினும் கோல் அதிர்ஷ்டம் முதலில் பெங்களூரு அணிக்கே கிட்டியது.

    27-வது நிமிடத்தில் கிளைடான் சில்வா தலையால் முட்டி கோல் அடித்தார். 57-வது நிமிடத்தில் மற்றொரு பெங்களூரு வீரர் ஜூவானன் பந்தை வலைக்குள் தள்ளினார். 2-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி முன்னிலை கண்டதால் எளிதில் வெற்றி பெற்று விடும் என்றே நினைக்கத் தோன்றியது. ஆனால் அதன் பிறகு வேகத்தை தீவிரப்படுத்திய கோவா அணி 66 மற்றும் 69-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் போட்டு அசத்தியது. இரண்டு கோல்களையும் இகோர் அங்குலோ அடித்தார். தொடர்ந்து வெற்றிக்குரிய கோல் அடிக்க இரு அணி வீரர்கள் எடுத்த முயற்சிக்கு பலன் இல்லை. முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது. இந்த சீசனில் ‘டிரா’ ஆன முதல் ஆட்டம் இதுவாகும். இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் ஒடிசா-ஐதராபாத அணிகள் மோதுகின்றன.
    ஆஸ்திரேலியா ஆடுகளத்திற்கு தேவையான 140 கி.மீட்டர் வேகத்தில் எங்களால் பந்து வீச முடியும் என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி 14 ஆட்டங்களில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதே பார்மில் ஆஸ்திரேலியாவுக்கு பறந்துள்ள அவர், அயல்நாட்டு மண்ணிலும் சிறப்பாக பந்து வீசி பெஸ்ட் பேட்ஸ்மேனின் விக்கெட்டை வீழ்த்தும் வல்லமையும், உறுதியும் கொண்டவர்கள் இந்திய பவுலர்கள் என தெரிவித்துள்ளார்.

    கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தபோது 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. பும்ரா, ஷமி மற்றும் இஷாந்த் சர்மாவின் வேகப்பந்து வீச்சு கூட்டணியும் அதற்கு முக்கிய காரணம்.

    இந்நிலையில் அயல்நாட்டு மண்ணிலும் சிறப்பாக பந்து வீசும் வல்லமை இந்திய பவுலர்களிடம் உள்ளது என முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முகமது ஷமி கூறுகையில் ‘‘எந்தவித ஈகோவும் பார்க்காமல் நாங்கள் எல்லோரும் ஒரே இலக்கை அடைவதற்காக விளையாடுவதுதான் இந்த வெற்றிக்கு காரணம். எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டிதான் இருக்கும். பவுலிங்கில் பார்ட்னர்ஷிப் போட்டு நாங்கள் விக்கெட்டுகளை வேட்டையாடுவோம்.

    மணிக்கு 140 கி.மீ. மேல் எங்களால் பந்து வீச முடியும். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அதுதான் வேண்டும். சவால்கள் எங்களுக்கு பிடிக்கும். அதனை எதிர்கொள்ள எங்களிடம் அனுபவமும் உள்ளது. எங்களது ரிசர்வ் பவுலர்கள் கூட அதே வேகத்தில் பந்து வீச கூடியவர்கள்.

    அதேபோல சுழற்பந்திலும் வெரைட்டியான ஆப்ஷன்கள் உள்ளன. இந்திய அணியில் உள்ள உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுக்கு தான் நாங்கள் வலைப்பயிற்சியில் பந்து வீசுவோம். இதனால் உலக தரமான பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவரை அவுட் செய்ய ஒரு நல்ல பந்து போதும் என்பது எங்களது நம்பிக்கை’’ என்றார்.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
    கொரோனா டெஸ்டில் நெகட்டிவ் முடிவு வந்த போதிலும், நியூசிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணியில் பஹர் ஜமான் விலகியுள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து செல்ல இருக்கிறது. அடுத்த மாதம் 18-ந்தேதி கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. அதற்கு முன் 10-ந்தேதி நான்கு நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

    14 நாட்கள் கோரன்டைன் காலம் என்பதால் முன்னதாகவே பாகிஸ்தான் அணி புறப்பட்டுச் செல்கிறது. இதற்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஹோட்டலில் உள்ள பாகிஸ்தான் அணி தொடக்க வீரர் பஹர் ஜமான் காய்ச்சல் இருப்பதாலும், பாகிஸ்தான் அணி புறப்படுவதற்குள் காய்ச்சல் குணமடைய வாய்ப்பில்லை என்பதாலும் நியூசிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்த போதிலும், காய்ச்சல் இருப்பதால் விலகியுள்ளார். தற்போது ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்க ஷுப்மான் கில்- மயங்க் அகர்வால் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    கர்நாடகத்தைச் சேர்ந்த மயங்க் அகர்வால் டெஸ்ட் அணியின் தொடக்க வீரராகவே கருதப்பட்டார். ஆனால் ஐபிஎல் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

    ரோகித் சர்மா காயத்தால் ஒயிட் பால் கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார். இதனால் தவான் உடன் தொடக்க வீரராக களம் இறங்குவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    மயங்க் அகர்வால், ஷுப்மான் கில் ஆகியோர் உள்ளனர். இருவரும் அறிமுகமான சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. என்றாலும் ஐபிஎல் தொடரில் ஷுப்மான் கில் 440 ரன்களும், மயங்க் அகர்வால் 418 ரன்களும் விளாசி திறமையை நிரூபித்துள்ளனர். இதனால் யாரை தொடக்க வீரராக களம் இறக்குவது என்பதில் அணி நிர்வாகத்திற்கு சற்று நெருக்கடி உருவாகியுள்ளது.

    இருந்தாலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி டுவிட்டர் பக்கத்தில் ஷுப்மான் கில் உடன் உரையாடும் படத்தை வெளியிட்டு ‘‘சிறந்த போட்டி குறித்த சிறந்த உரையாடலை எதுவும் வெல்ல இயலா’’ எனத் தெரிவித்துள்ளார். இதனால் ஷுப்மான் கில் முன்னிலையில் இருப்பதாக கருதப்படுகிறது.

    இந்திய அணி கடைசியாக நியூசிலாந்துக்கு எதிராக விளையாடியது. இதில் இந்தியா 0-3 எனத் தொடரை இழந்தது.
    ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா இன்னும் ஐந்து நாட்களுக்குள் ஆஸ்திரேலியா புறப்படவில்லை எனில், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம் என ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. ஆஸ்திரேலியா செல்லும் வெளிநாட்டினர் 14 நாட்கள் கோரன்டைன் நடைமுறையை கடைபிடிக்க வேண்டும். அதன்படி இந்திய அணி வீரர்கள் கோரன்டைனில் இருந்து கொண்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா ஆகியோர் காயத்தில் ஆஸ்திரேலியா செல்லவில்லை. ஆனால் இருவரும் டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளார்.

    உடல்தகுதி பயிற்சியை இருவரும் தொடங்கியுள்ளனர். உடற்தகுதி பெற்றுவிட்டால் உடனடியாக ஆஸ்திரேலியா புறப்பட்டுவிடுவார்கள்.

    ஆனால், இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குள் இருவரும் ஆஸ்திரேலியா புறப்படவில்லை எனில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம் என ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரவிசாஸ்திரி கூறுகையில் ‘‘பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர்கள் இருவரும் சில பரிசோதனைகளுக்காக சென்றுள்ளனர். அவர்களுக்கு எவ்வளவு நாட்கள் இடைவெளி தேவை என்பதை முடிவு செய்ய வேண்டும்.

    ரோகித் சர்மா அதிக நாட்கள் எடுத்துக் கொண்டால், அதன் கடினமானதாகிவிடும். ஏனென்றால், கோரன்டைன் இருப்பதால் அவர்கள் டெஸ்ட் போட்டிகள் தொடங்கும்போது வந்தால் அது உண்மையிலேயே கஷ்டமாகிவிடும்’’ என்றார்.
    ×