என் மலர்
விளையாட்டு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்ந்தெடுத்து கவுரவிக்க உள்ளது. இதன்படி கடந்த 10 ஆண்டுகளில் அசத்திய வீரர்களின் இறுதிக்கட்ட விருது பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5 பிரிவுகளில் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார். அதாவது கடந்த 10 ஆண்டுகளில் உலகின் தலைச்சிறந்த வீரர் விருது, சிறந்த ஒரு நாள் போட்டி வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், உத்வேகம் அளிக்கக்கூடிய வீரர் விருது, சிறந்த 20 ஓவர் போட்டி வீரர் விருது ஆகிய பிரிவுகளில் அவர் இடம் பிடித்துள்ளார்.
10 ஆண்டின் தலைசிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் கோலியுடன், இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், ஜோ ரூட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா), டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), சங்கக்கரா (இலங்கை) ஆகியோரும் உள்ளனர்.
சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் பட்டியலில் கோலி, ரோகித் சர்மா, டோனி (3 பேரும் இந்தியா), மலிங்கா (இலங்கை), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), சங்கக்கரா (இலங்கை), சிறந்த டெஸ்ட் வீரர் பட்டியலில் கோலி (இந்தியா), வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா), ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து), ஹெராத் (இலங்கை), யாசிர் ஷா (பாகிஸ்தான்), சிறந்த 20 ஓவர் போட்டி வீரர் விருது பந்தயத்தில் ரஷித்கான் (ஆப்கானிஸ்தான்), கோலி (இந்தியா), இம்ரான் தாஹிர் (தென்ஆப்பிரிக்கா), ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா), மலிங்கா (இலங்கை), கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), ரோகித் சர்மா (இந்தியா) ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள்.
உத்வேகமிக்க வீரருக்கான விருது பிரிவில் கோலியுடன், டோனி, மிஸ்பா உல்-ஹக் (பாகிஸ்தான்) உள்பட 9 பேர் மல்லுகட்டுகிறார்கள்.
இதே போல் கடந்த 10 ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்தியாவின் மிதாலிராஜ் உள்பட 6 பேரும், சிறந்த ஒரு நாள் போட்டி வீராங்கனை விருதுக்கு இந்தியாவின் மிதாலிராஜ், கோஸ்வாமி உள்பட 6 பேரும் போட்டியிடுகிறார்கள்.
32 வயதான விராட் கோலி நிறைய சாதனைகள் படைத்துள்ளார். மூன்று வடிவிலான போட்டியிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரி வைத்துள்ள கோலி ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் விளாசியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளை கணக்கிட்டால் டெஸ்டில் 7 ஆயிரத்திற்கு அதிகமாகவும், ஒரு நாள் போட்டியில் 11 ஆயிரத்திற்கு அதிகமாகவும், 20 ஓவர் போட்டிகளில் 2,500 ரன்களுக்கு மேலாகவும் குவித்து வியக்க வைத்துள்ளார். இதில் வாக்குப்பதிவு அடிப்படையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட இருப்பதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு வருகை தந்து 5 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டு இருந்தது. அந்த போட்டி அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. “5 டெஸ்டுக்கு பதிலாக 4 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படும். அதற்கு பதிலாக 20 ஓவர் கிரிக்கெட்டில் கூடுதலாக 2 ஆட்டங்கள் (மொத்தம் ஐந்து 20 ஓவர் போட்டி) சேர்த்துக்கொள்ளப்படுகிறது. மூன்று ஒரு நாள் போட்டியில் மாற்றம் இல்லை. இந்த தொடரை பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
இது இரு நாட்டு தொடர் என்பதால் கொரோனா தடுப்பு உயிர்பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது எளிது என்று கூறிய கங்குலி கடந்த 4½ மாதங்களில் மட்டும் ஐ.பி.எல்., கிரிக்கெட் நிர்வாகம் உள்ளிட்ட பணிகளின் போது மொத்தம் 22 முறை தன்னை கொரோனா பரிசோதனைக்குட்படுத்தி கொண்டதாகவும், ஒரு முறை கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டதில்லை என்றும் குறிப்பிட்டார். அடுத்த ஐ.பி.எல். போட்டிக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ளன. 14-வது ஐ.பி.எல். போட்டியை இந்தியாவில் நடத்தவே அதிகமான முயற்சிகளை மேற்கொள்வோம் என்றும் பேட்டியின் போது கங்குலி கூறினார்.
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 11 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங் களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இதில் நேற்று இரவு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை சந்தித்தது. முதல் நிமிடத்திலேயே சென்னை அணி கோல் கணக்கை தொடங்கி அட்டகாசப்படுத்தியது. அந்த அணி வீரர் இஸ்மா கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் அனிருத் தபா அருமையாக அடித்து கோலாக் கினார். ஐ.எஸ்.எல். வரலாற்றில் சென்னை அணியின் அதிவேக கோல் இதுவாகும்.
25-வது நிமிடத்தில் கோல் எல்லைக்குள் வைத்து சென்னை அணி வீரர் சாங்டேவை, ஜாம்ஷெட்பூர் வீரர் ஐசக் தள்ளிவிட்டார். இதனால் சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி சென்னை அணி வீரர் இஸ்மா பந்தை கோல் வளையத்துக்குள் திணித்தார். இதனால் சென்னை அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதைத் தொடர்ந்து பதில் கோல் திருப்ப ஜாம்ஷெட்பூர் அணி தாக்குதல் ஆட்டத்தில் தீவிரம் காட்டியது. 37-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் ஜாக்கி சந்த் சிங் தூக்கி அடித்த பந்தை சக வீரர் வல்ஸ்கிஸ் தலையால் முட்டி அபாரமாக கோலுக்குள் அனுப்பினார். பிற்பாதியில் கோல் அடிக்க இரு அணி வீரர்களும் வரிந்துகட்டி நின்ற போதிலும் பல வாய்ப்புகள் மயிரிழையில் நழுவி போயின. முடிவில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது.
இன்று (புதன்கிழமை) நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
சிட்னி:
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 4 டெஸ்டில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. ஒருநாள் தொடர் வருகிற 27-ந்தேதியும், 20 ஓவர் தொடர் டிசம்பர் 4-ந்தேதியும், டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-ந்தேதியும் தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா இடம் பெற்றுள்ளனர். காயத்தில் இருந்து குணம் அடைந்த அவர்கள் இன்னும் ஆஸ்திரேலியா செல்லவில்லை.
அவர்கள் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் ஆஸ்திரேலியா வருவார்கள் என்று அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவும், இஷாந்த் சர்மாவும் ஆடுவது சந்தேகமே. அவர்கள் முழு உடல் தகுதி பெறாததால் விளையாடு வதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.
இதன்காரணமாக அணி நிர்வாகம் டெஸ்டுக்கு மாற்று பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஷ் அய்யரை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ஸ்ரேயாஷ் அய்யர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியில் இடம்பெற்றுள்ளார். இந்த போட்டிகள் முடிந்த பிறகு அவர் மற்ற வீரர்களுடன் நாடு திரும்புவார்.
தற்போது ஸ்ரேயாஷ் அய்யர் டெஸ்ட் தொடரில் மாற்று பேட்ஸ்மேனாக தேர்வு செய்வதால் அவர் ஆஸ்திரேலியாவிலேயே தொடர்ந்து இருப்பார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு இந்திய அணி கேப்டன் விராட் கோலி நாடு திரும்புகிறார். அவரது மனைவி அனுஷ்காவுக்கு குழந்தை பிறப்பதால் அவர் எஞ்சிய 3 டெஸ்டில் ஆடவில்லை. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
விராட்கோலி இல்லாத நிலையில் ரோகித்சர்மாவும் டெஸ்ட் தொடருக்கு முழு உடல் தகுதி பெறுவாரா? என்ற கேள்விக்குறி இருக்கிறது. இதனால் ஸ்ரேயாஷ் அய்யர் டெஸ்டில் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது.
இந்தியாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் 2020 ஐபிஎல் தொடர் கடும் சிக்கல்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளுக்கும் இடையே ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்றன.
இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமல் வெளியிட்டு உள்ள தகவல்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ .4,000 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை “கடந்த ஆண்டை விட சுமார் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. 60 போட்டிகளில் 1800 தனி நபர்கள் உள்பட 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது என தெரியவந்து உள்ளது
அருண் துமல் கூறும்போது கடந்த ஐபிஎல் உடன் ஒப்பிடும்போது வாரியம் கிட்டத்தட்ட 35 சதவீத செலவை குறைக்க முடிந்தது. நாங்கள் ரூ.4,000 கோடி சம்பாதித்தோம். எங்கள் தொலைக்காட்சி பார்வையாளர்கள் சுமார் 25 சதவீதம் உயர்ந்து உள்ளனர் என கூறினார்.
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் உள்ள 3 இடங்களில் ரசிகர்கள் அனுமதியின்றி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 11 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இதில் வாஸ்கோவில் உள்ள திலக் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் ரபெல் கிரிவெல்லாரோ தலைமையிலான சென்னையின் எப்.சி. அணி, பீட்டர் ஹார்ட்லி தலைமையிலான ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணியை சந்திக்கிறது.
2 முறை சாம்பியனும், கடந்த சீசனில் 2-வது இடத்தை பிடித்ததுமான சென்னை அணியில் அனிருத் தபா, எலி சபியா உள்ளிட்ட சிறந்த வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். புதிதாக வெளிநாட்டு வீரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அந்த அணியின் செயல்பாடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணியின் புதிய பயிற்சியாளராக சபா லாஸ்லோ (ஹங்கேரி) உள்ளார்.
கடந்த சீசனில் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்து சரிவில் இருந்து மீண்டு வர வழிகாட்டிய ஓவென் கோய்லே இந்த முறை ஜாம்ஷெட்பூர் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். இதேபோல் கடந்த சீசனில் சென்னை அணிக்காக அதிக கோல் அடித்த வல்ஸ்கிஸ்சும் அந்த அணியில் இணைந்துள்ளார். கடந்த காலங்களில் அரைஇறுதியை ஒரு முறையும் எட்டாத அந்த அணி தற்போது புதிய வீரர்கள் வருகையால் எழுச்சி காணும் என்று நம்பப்படுகிறது.
சென்னை-ஜாம்ஷெட்பூர் அணிகள் இதுவரை 6 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் சென்னை அணி 2 முறையும், ஜாம்ஷெட்பூர் ஒரு முறையும் வென்று இருக்கின்றன. 3 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. வெற்றி கணக்குடன் போட்டியை தொடங்க இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இதற்கிடையில் நேற்று இரவு நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கியது. இதில் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்த ஐதராபாத் அணிக்கு 35-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணி வீரர் அரிடேன் ஜீசஸ் கோலாக மாற்றினார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 4 அரைசதங்களுடன் 480 ரன்கள் குவித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதன் மூலம் அவருக்கு ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டது மனதளவில் வேதனையை ஏற்படுத்தியது என்று அவரே வருத்தம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நிகழ்ச்சியில் பேசுகையில், ‘சூர்யகுமார் யாதவ் தரமான வீரர். ரன் குவிப்பதை வைத்து வீரர்களை நான் பார்க்க மாட் டேன். அவர்களது ஆட்ட நுணுக்கம், நெருக்கடியான தருணத்தை கையாளும் விதம், எந்த நிலையில் விளையாடுகிறார் என்பதை வைத்து தான் பார்ப்பேன். சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அருமையான ஆட்டத்தை அளித்தார். ரோகித் சர்மா, குயின்டான் டி காக்குக்கு அடுத்தபடியாக அவர் நெருக்கடியான நிலையில் களம் இறங்குகிறார். தொடக்க ஆட்டக்காரர்களை தவிர்த்து விட்டு பார்த்தால் எந்தவொரு அணியிலும் 3-வது வீரராக களம் இறங்குபவர் தான் சிறந்த வீரராக வும், அதிக நம்பிக்கைக்குரிய வீரராகவும் இருப்பார். என்னை பொறுத்தமட்டில் அவர் மும்பை அணிக்கு அது போன்ற சிறந்த வீரராக தான் இருந்து இருக்கிறார். ஆஸ்திரேலிய தொடருக் கான இந்திய அணியை பார்க்கையில் அவர் அதில் இடம் பெற்று இருக்க வேண்டும். அவர் ஏன் தேர்வாகவில்லை என்பது எனக்கு தெரியவில்லை’ என்று தெரிவித்தார்.






