என் மலர்
விளையாட்டு
புதுடெல்லி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இருவரும் காயத்தால், உடல் தகுதி பெறவில்லை. இதனால் அவர்கள் இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லவில்லை.
இஷாந்த் சர்மாவுக்கு வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஐ.பி.எல். போட்டியின் தொடக்கத்திலேயே விலகினார். ரோகித் சர்மாவுக்கு இடது தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐ.பி.எல்.லில் சில ஆட்டங்கள் விளையாடவில்லை. ஆனால் இறுதிப்போட்டியில் விளையாடி கோப்பையை வென்று கொடுத்தார்.
இருவரது உடல் தகுதியும், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் கண்காணிக்கப்பட்டது. முழுமையாக உடல் தகுதி பெறாததால், முதல் 2 டெஸ்டில் இருவரும் ஆடமாட்டார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து இஷாந்த் சர்மா முற்றிலும் விலகி உள்ளார். அவர் உடல் தகுதி மற்றும் தனிமை காலத்தை பெறுவதற்கான வாய்ப்பு இல்லாததால், டெஸ்ட் தொடர் முழுவதும் விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கடடுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
ரோகித் சர்மாவின் உடல் தகுதி குறித்து டிசம்பர் 11-ந் தேதி மீண்டும் ஆய்வு செய்யப்படுகிறது. உடல் தகுதி பெறாவிட்டால் அவர் ஆஸ்திரேலியா செல்லமாட்டார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில், ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான சிட்னியில் இன்று தொடங்கியது.
கொரோனா தொற்று பரவலால் இந்திய அணியின் சில தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டன. மார்ச் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடிய பிறகு இந்திய அணி களம் காணும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். இதனால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. அதுவும் ஸ்டேடியத்தில் கணிசமான அளவுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட இருப்பதால் வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்கும்.
இந்திய அணியில் காயத்தால் ரோகித் சர்மா இடம் பெறாதது பின்னடைவாகும். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்று தெரிகிறது. கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இந்தியாவின் பேட்டிங்குக்கு வலு சேர்க்கிறார்கள். அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்ட இவர்கள் நிலைத்து நின்று விளையாட வேண்டியது அவசியமாகும்.
ஆக்ரோஷமாக மட்டையை சுழட்டும் விராட் கோலி சாதனையின் விளிம்பில் நிற்கிறார். இந்த தொடருக்குள் அவர் 133 ரன்கள் எடுத்தால் 12 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சிறப்பை பெறுவார். பந்து வீச்சில் பும்ரா, ஷமி, ஜடேஜா, சாஹல் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக தென்படுகிறது. ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், கேப்டன் ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல் பேட்டிங்கில் மிரட்டக்கூடியவர்கள். உள்ளூர் சூழல் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான அம்சமாகும்.அந்த அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், ‘இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா மிகச்சிறந்த வீரர். எங்களுக்கு எதிராக நிறைய ரன்கள் குவித்து இருக்கிறார். அவரின் காயம் துரதிர்ஷ்டவசமானது. அவருக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வால் இருப்பார் என்று கருதுகிறேன். அகர்வால் சிறப்பாக விளையாடி வருகிறார்’ என்றார். தங்கள் அணி சரியான கலவையில் அமைந்திருப்பதாக கூறிய பிஞ்ச், மைதானத்திற்கு ரசிகர்கள் வருகை தர இருப்பது வீரர்களை உற்சாகப்படுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்திய அணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ஆஸ்திரேலிய வீரர்கள் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
சிட்னி மைதானம் பெரும்பாலும் பேட்டிங்குக்கு உகந்த வகையில் இருக்கும். சுழற்பந்து வீச்சும் ஓரளவு எடுபடும். கடைசியாக இங்கு நடந்த 7 ஒரு நாள் போட்டிகளில் 6-ல் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த காலக்கட்டத்தில் முதலில் பேட் செய்த அணிகளின் சராசரி ஸ்கோர் 312 ரன்.
இந்திய அணி இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 17 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. வானிலையை பொறுத்தவரை நன்கு வெயில் அடிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சிட்னியில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி பந்து வீசுகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
கால்பந்து அரங்கின் சகாப்தமாக திகழ்ந்த அர்ஜென்டினா அணியின் முன்னாள் கேப்டன் டியாகோ மரடோனா நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவுக்கு ஆபரேஷன் செய்து வீடு திரும்பிய 2 வாரத்திற்குள் அவரது இல்லத்தில் வைத்து உயிர் பிரிந்தது.
அர்ஜென்டினாவின் அடையாளமாக அறியப்பட்ட மரடோனாவின் மறைவையொட்டி அந்த நாட்டில் மூன்று நாட்கள் தேசிய துக்கதினம் அனுசரிக்கப்படுகிறது. தலைநகர் பியூனஸ் அயர்சில் உள்ள அதிபர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். சவப்பெட்டியை சுற்றி அர்ஜென்டினா தேசிய கொடியும், அவர் அணிந்த எண்10 பொறிக்கப்பட்ட சீருடையும் போர்த்தப்பட்டிருந்தது.
60 வயதான மரடோனாவுக்கு அர்ஜென்டினா மட்டும் இன்றி உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு. தனது நளினமான ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்த மரடோனா 1986-ம் ஆண்டு உலக கோப்பையை அர்ஜென்டினாவுக்கு வென்றுத் தந்தார். அந்த உலக கோப்பை தொடரில் 5 கோல்கள் அடித்தும், 5 கோல்கள் அடிக்க உதவி புரிந்தும் அந்த உலக கோப்பையின் சிறந்த வீரருக்குரிய தங்கப்பந்து விருதை பெற்றார்.
இந்த உலக கோப்பை போட்டியின் கால்இறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த இரண்டு கோல்களில் ஒன்று சர்ச்சைக்குள்ளானது. தலையால் முட்டி துள்ளி அடிக்க முயன்ற போது பந்தை கையால் வலைக்குள் தள்ளிவிட்டார். இதை கவனிக்காத நடுவர் கோல் என்று அறிவித்தார். ஆட்டம் முடிந்ததும் இது பற்றி பேசிய மரடோனா, ‘அந்த நேரத்தில் எனக்கு எதுவும் தெரியவில்லை. பந்தை அடித்தது கடவுளின் கையாக இருக்கும்’ என்று கூறினார். அது முதல் அந்த கோல் ‘கடவுளின் கை கோல்’ என்று வர்ணிக்கப்பட்டது. நூற்றாண்டின் சிறந்த கோலாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஓய்வுக்கு பிறகு அர்ஜென்டினா அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட போதிலும் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் விலகினார். நிறைய கிளப்புகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் உண்டு. மரடோனாவின் திடீர் மரணம் விளையாட்டு நட்சத்திரங்களையும், பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில், ‘மரடோனா கால்பந்து விளையாட்டின் ஒரு மேதை. தனது விளையாட்டு வாழ்க்கை முழுவதும், களத்தில் மறக்க முடியாத சில மகிழ்ச்சியான தருணங்களை நமக்கு வழங்கினார். அவரது திடீர் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்’ என்று கூறியுள்ளார். மரடோனாவுக்கு அதிகமான ரசிகர்களை கொண்ட கேரள மாநிலம் அவரது மறைவுக்காக இரு நாள் அரசுமுறை துக்கத்தை அறிவித்துள்ளது. 2012-ம் ஆண்டில் மரடோனா 2 நாள் பயணமாக கேரளாவுக்கு வருகை தந்து ரசிகர்களை குதூகலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
சில முன்னணி விளையாட்டு பிரபலங்களின் இரங்கல் செய்தி வருமாறு:-
உலக புகழ்பெற்ற பிரேசில் முன்னாள் வீரர் 80 வயதான பீலே: இது சோகமான செய்தி. நான் சிறந்த நண்பனையும், கால்பந்து உலகம் ஒரு ஜாம்பவானையும் இழந்துள்ளது. ஒரு நாள் நானும், அவரும் விண்ணுலகில் ஒன்றாக இணைந்து விளையாடுவோம் என்று நம்புகிறேன்.
அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி: அர்ஜென்டினா மக்களுக்கும், கால்பந்து உலகுக்கும் இது சோகமான நாள். அவர் நம்மை விட்டு சென்று விட்டார். ஆனாலும் அவர் எங்களை விட்டு செல்லமாட்டார். ஏனெனில், மரடோனாவுக்கு என்றென்றும் முடிவே கிடையாது. அவருடன் செலவிட்ட அழகான தருணங்கள் என்றும் நினைவில் நிலைத்து நிற்கும்.
போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ: இன்று எனது சிறந்த நண்பருக்கும், இந்த உலகம் கால்பந்து மேதைக்கும் விடைகொடுத்துள்ளது. கால்பந்து விளையாட்டின் தலைச்சிறந்த வீரர்களில் ஒருவர். கால்பந்து உலகின் நிகரில்லா வித்தகர். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர்: கால்பந்தும், உலகில் உள்ள அத்தனை விளையாட்டுகளும் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரை இழந்து விட்டது.
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி: எனது ஹீரோ இப்போது இல்லை. நான் உங்களுக்காகத்தான் கால்பந்து விளையாட்டை பார்த்தேன்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி: உண்மையான மேதை. கால்பந்து விளையாடிய விதத்தை மாற்றிக்காட்டியவர்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
மூன்று 20 ஓவர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் நியூசிலாந்துக்கு சென்றுள்ளனர். புறப்படுவதற்கு முன்பாக பாகிஸ்தானில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் எந்த வீரருக்கும் பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நியூசிலாந்துக்கு சென்றதும் நடத்தப்பட்ட பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனியாக வேறு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. இதில் வீரர்கள் எத்தனை பேர், பயிற்சி உதவியாளர் எத்தனை பேர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) முதலாவது தனிப்பட்ட தலைவராக இருந்த இந்தியாவை சேர்ந்த ஷசாங் மனோகரனின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து அவர் கடந்த ஜூன் மாதம் அந்த பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து இடைக்கால தலைவராக இம்ரான் கவாஜா இருந்து வந்தார்.
ஐ.சி.சி. புதிய தலைவர் தேர்தல் குறித்து பலமுறை ஆலோசனை நடத்தப்பட்டாலும் ஒருமித்த முடிவு எடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடந்த அக்டோபர் 18-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் கிரிக்கெட் சங்க தலைவரும், இடைக்கால தலைவராக இருந்த இம்ரான் கவாஜா, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனர் கிரேக் பார்கிளே ஆகியோர் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர்.
ஐ.சி.சி.யின் 16 உறுப்பினர்கள் (டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 12 நாடுகள், 3 அசோசியேட் உறுப்பு நாடுகள், தனிப்பட்ட ஒரு பெண் இயக்குனர்) வாக்களிக்க உரிமை படைத்தவர்கள். அதில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெறுபவர் தான் புதிய தலைவராக தேர்வாக முடியும். மின்னணு முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் சுற்றில் கிரேக் பார்கிளே 10 வாக்குகளும், இம்ரான் கவாஜா 6 வாக்குகளும் பெற்றனர்.
தனிப்பெரும் மெஜாரிட்டி கிடைக்காததால் நடத்தப்பட்ட 2-வது சுற்று வாக்கெடுப்பில் கிரேக் பார்கிளே 11 வாக்குகளையும், இம்ரான் கவாஜா 5 வாக்குகளையும் தன்வசப்படுத்தினார்கள்.
இதையடுத்து ஐ.சி.சி.யின் புதிய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த வக்கீலான கிரேக் பார்கிளே தேர்வானார். அவர் 2012-ம் ஆண்டு முதல் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராக உள்ளார். கிரேக் பார்கிளேவுக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் ஆதரவாக இருந்தன. 2-வது சுற்றில் தென்ஆப்பிரிக்கா அளித்த வாக்கு அவரது வெற்றியை உறுதி செய்தது. இம்ரான் கவாஜாவுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு கரம் நீட்டின.
புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கிரேக் பார்கிளே கூறியதாவது:-
ஐ.சி.சி.யின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை கவுரவமாக கருதுகிறேன். எனக்கு ஆதரவு அளித்த சக டைரக்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த நெருக்கடியான கொரோனா காலத்தில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து வலுவான வளர்ச்சியை நோக்கி கிரிக்கெட் ஆட்டத்தை கொண்டு செல்ல முடியும் என்று நம்புகிறேன். எனது பதவியை ஒரு பாதுகாவலராக கருதி 104 ஐ.சி.சி. உறுப்பு நாடுகளின் சார்பில் ஆட்டத்துக்கு நிலையான எதிர்காலத்தை ஏற்படுத்த கடினமாக உழைப்பேன்.
2020-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த ஆண்கள் 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 2021-ம் ஆண்டில் நியூசிலாந்தில் நடக்க இருந்த பெண்கள் ஒருநாள் உலக கோப்பை போட்டி ஆகியவை 2022-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் 2023-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற வேண்டிய ஒருநாள் உலக கோப்பை போட்டி சில மாதங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த போட்டிகளை எல்லாம் டெலிவிஷன் ஒளிபரப்பு நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்த காலத்துக்குள் நடத்தப்பட வேண்டும். இதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இல்லையெனில் ஒளிபரப்பு நிறுவனங்கள் நமக்கு அபராதம் விதிக்கக்கூடும். இதன் மூலம் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும். இந்த போட்டிகள் மூலம் கிடைக்கும் வருவாயை தான் உறுப்பு நாடுகளின் திட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். அதனை தான் பல நாடுகள் அதிகம் நம்பி இருக்கின்றன.
உலக போட்டிகளை விட இரு நாடுகளுக்கு இடையிலான போட்டி தொடருக்கு தான் நான் ஆதரவானவன் என்று கூறுவது தவறானதாகும். இருநாடுகள் இடையிலான போட்டி தொடர் என்பது எல்லா நாட்டு கிரிக்கெட்டுக்கும் உயிரோட்டம் போன்றதாகும். தொடர்ந்து நடைபெறும் இரு நாடுகள் இடையிலான போட்டி தொடர் கிரிக்கெட் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவதாகும். அதற்காக உலக போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்று அர்த்தம் கிடையாது. உலக கோப்பை போட்டிகள் அனைத்தும் அருமையானது. அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. இரு நாட்டு தொடர்களும், உலக போட்டியும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட வேண்டியது அவசியமானதாகும். ஒன்று, மற்றொன்றை தனிமைப்படுத்தக்கூடாது. அதிக அளவில் போட்டிகள் நடந்தால் அது வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆண்டு முழுவதும் வீரர்களால் சிறப்பாக செயல்பட முடியாது. வீரர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். மூன்று பெரிய நாடுகளுக்கு (இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து) கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் திட்டத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது. எல்லா உறுப்பினர்களும் முக்கியமானவர்கள். எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான மரடோனா 1977முதல் 1994-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சர்வதேச கால்பந்து அரங்கில் கலக்கியவர். தனது வேகம் மற்றும் விவேகம் நிறைந்த நளினமான ஆட்டத்தால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட கால்பந்து கதாநாயகனாக ஜொலித்தார்.
1986-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டனாக இருந்த மரடோனா உலக கால்பந்து அரங்கில் பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு நிகராக பார்க்கப்பட்டவர். 4 உலக கோப்பை போட்டியில் (1982, 1986, 1990, 1994) பங்கேற்றவரான அவர் அர்ஜென்டினா அணிக்காக 91 சர்வதேச போட்டிகளில் விளையாடி 34 கோல்கள் அடித்துள்ளார். பார்சிலோனா, நபோலி, செவில்லா உள்ளிட்ட கிளப் அணிகளுக்காக களம் கண்டு இருக்கும் அவர் மொத்தம் 491 கிளப் போட்டிகளில் ஆடி 259 கோல்கள் அடித்து இருக்கிறார்.
10-ம் நம்பர் சீருடைக்கு தனி மரியாதை சேர்த்த அவர் ஓய்வுக்கு பிறகு அர்ஜென்டினா உள்பட பல்வேறு அணிகளின் பயிற்சியாளராக பணியாற்றினார். அத்துடன் போதை பழக்கத்துக்கு அடிமையாகி உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சையும் பெற்றார். இந்த நிலையில் 60 வயதான மரடோனா கடந்த 2-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக பியூனஸ் அயர்சில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்ததை அடுத்து அவசரமாக ஆபரேஷன் செய்யப்பட்டு ரத்த உறைவு அகற்றப்பட்டது. ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் மரடோனாவுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது திடீர் மறைவு கால்பந்து ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவையொட்டி அர்ஜென்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் உள்பட பலரும் மரடோனா மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இடையே 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இதை நடத்தி முடித்தது.
இந்த தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்ததில் பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலியின் பணி அளப்பரியது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அவர் ஐ.பி.எல். தொடரை கடும் போராட்டத்துக்கு பிறகு நடத்தி முடித்தார்.
இந்தநிலையில் ஜூம் செயலி வழியாக கங்குலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 4½ மாதத்தில் நான் 22 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளேன். இதில் ஒரு முறைகூட எனக்கு பாதிப்பு இருப்பதற்கான முடிவு வரவில்லை. என்னை சுற்றி வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இருந்ததால் தான் நான் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல். போட்டி தொடரை வெற்றிகரமாக பி.சி.சி.ஐ. குழு நடத்தியது பெருமையாக உள்ளது. 14-வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் நிச்சயமாக நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் நாங்கள் 400 பேர் உயிர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தோம். எல்லோரும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக 2½ மாத காலத்தில் 30 முதல் 40 ஆயிரம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணியின் தனிமை படுத்துதல் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அனைத்து வீரர்களும் உடல்தகுதியுடன் இருக்கிறார்கள்.
உள்ளூர் கிரிக்கெட் சீசன் விரைவில் தொடங்க உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை குறித்து பலர் பேசி வருகிறார்கள். மும்பை, டெல்லியில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கேள்விபட்டேன். எனவே கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு கங்குலி கூறினார்.






