என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சரியான நேரம் வரும்போது பந்து வீசுவேன், அதேவேளையில் மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம் என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. கடந்த ஆண்டு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

    அதன்பின் ஐபிஎல் தொடரில்தான் போட்டி கிரிக்கெட்டில் விளையாடினார். ஆனால் பந்து வீசவில்லை. பேட்டிங் மட்டுமே செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளார். இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். பந்து வீசவில்லை. பேட்டிங் மட்டும் செய்தார். சிறப்பாக பேட்டிங் செய்து 90 ரன்கள் அடித்தார். இருந்தாலும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

    போட்டி முடிந்த பின்னர் பேட்டி அளித்தார். அப்போது ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    நான் எனது பந்து வீச்சில் கவனம் செலுத்தி வருகிறேன். சரியான நேரம் வரும்போது பந்து வீசுவேன். எனது பந்து வீச்சில் 100 சதவீத திறனை கொண்டு வர விரும்புகிறேன். சர்வதேச அளவிற்கு தேவையான வேகத்தில் பந்து வீச விரும்புகிறேன்.

    நாம் நீண்ட கால திட்டத்தை யோசித்து கொண்டிருக்கிறோம். டி20 உலககோப்பை, மற்ற முக்கியமான தொடர்களை பற்றி யோசிக்கும்போது, என்னுடைய பந்து வீச்சு கூட முக்கியத்துவம் பெறுவதாக இருக்கலாம்.

    இந்தியாவுக்காக விளையாடும் ஆல்-ரவுண்டர் யாராவது ஒருவரை கண்டுபிடிக்க வேண்டும். அவர்களை வளர்த்து விளையாட வைக்க வேண்டிய வழிகளைத் தேட வேண்டும். ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடும்போது கஷ்டமானது. யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், அவரது இடத்தை நிரப்புவதற்கு தயாராக இருக்க வேண்டும்’’ என்றார்.
    கபில்தேவ் தேர்வு செய்துள்ள எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் ராகுல் டிராவிட் இடம் பிடித்துள்ளார்.
    இந்தியாவுக்கு முதன்முறையாக 1983-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று கொடுத்து சாதனைப் படைத்தவர் கபில்தேவ். மேலும் இந்தியாவின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர்.

    தற்போது வரை கபில்தேவ் விளையாடிய அளவிற்கு சிறந்த ஆல்-ரவுண்டரை இந்தியா இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

    இந்த நிலையில் எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியை தேர்வு செய்துள்ளார். அதில் ராகுல் டிராவிட்டுக்கு இடம் கொடுத்துள்ளார்.

    கபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி:-

    1. சச்சின் தெண்டுல்கர், 2. விரேந்திர சேவாக், 3. விராட் கோலி, 4. ராகுல் டிராவிட், 5. யுவராஜ் சிங், 6. எம்எஸ் டோனி, 7. ஜவஹல் ஸ்ரீநாத், 8. ஜாகீர் கான், 9. அனில் கும்ப்ளே, 10. ஹர்பஜன் சிங், 11. பும்ரா.

    இதில் யுவராஜ் சிங், சேவாக், சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் பகுதி நேர பந்து வீச்சாளர்கள் ஆவார்கள். இந்திய டெஸ்ட் அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட்டுக்கும் இடம் கொடுத்துள்ளார்.

    டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்களில் ராகுல் டிராவிட்டும் ஒருவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
    இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களை மட்டுமே வைத்து விளையாடியதால் ஏராளமான ரன்களை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி்யை தழுவியது. இந்தியா முகமது ஷமி, பும்ரா, சைனி, சாஹல், ஜடேஜா ஆகிய ஐந்து பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே விளையாடியது.

    ஒரு பவுலருக்கு பந்து வீச்சு எடுபடவில்லை என்றால், தொடர்ந்து அவரே பந்து வீச வேண்டிய நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இன்றைய நிலைமையும் இதுதான்.

    முகமது சமி மட்டுமே 60 ரன்களுக்கு கீழ் விட்டுக்கொடுத்தார். பும்ரா (73), சைனி (83), சாஹல் (89), ஜடேஜா (63) அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தனர்.

    பேட்டிங்கில் விராட் கோலி (21), ஷ்ரேயாஸ் அய்யர் (2), கேஎல் ராகுல் (12) ஏமாற்றம் அளித்தனர். காயத்தில் இருந்து மீண்டுள்ள ஹர்திக் பாணட்யா இன்னும் பந்து வீசவில்லை. இது இந்திய அணிக்கு பாதிப்பாக உள்ளது.

    இந்நிலையில் இன்றைய போட்டி குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘போட்டிக்கு தயாராக போதுமான நேரங்கள் எங்களுக்கு கிடைத்தது. ஒரு அணியாக சிறப்பாக செயல்பட முடியாத நிலையில், எந்தவொரு காரணத்தையும் சொல்லி தப்பிய நினைக்கவில்லை.

    நாங்கள் அதிக அளவில் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய பின்னர், களம் இறங்கிய முதல் 50 ஓவர் கிரிக்கெட் போட்டி இதுவாகும். இருந்தாலும் நாங்கள் அதிகமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளோம்.

    உடல் அசைவு (body language ) 25-26 ஓவருக்குப்பின் ஏமாற்றம் அளித்தது. பீல்டிங்கில் கோட்டை விட்டால், தரனமான அணி உங்களுக்கு காயத்தை ஏற்படுத்தும்.

    சில பார்ட்-டைம் பந்து வீச்சாளர்களிடம் சில ஓவர்களை பெறும் வகையில் நாங்கள் வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

    துரதிருஷ்டவசமாக ஹர்திக் பாண்ட்யாவால் தற்போது வரை பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது நாங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இந்த பகுதியை நாங்கள் கவனிக்க வேண்டும். எந்தவொரு அணியின் பேலன்ஸ்-க்கும் இது முக்கிய பகுதியாக அமையும். ஆஸ்திரேலிய அணிக்கு மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ் இதை செய்கிறார்கள். எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுக்குள் வைத்திருக்க முக்கியமானது விக்கெட்டை வீழ்த்துவது. அதை நாங்கள் செய்யவில்லை.’’ என்றார்.
    இந்தியாவுக்கு எதிராக 114 ரன்கள் விளாசிய ஆரோன் பிஞ்ச், அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கில்கிறிஸ்ட்-ஐ பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 374 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரும், ஆஸ்திரேலியாவின் கேப்டனுமான ஆரோன் பிஞ்ச் 114 ரன்கள் விளாசினார். இது அவருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 17-வது சதம் ஆகும்.

    இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் கில்கிறிஸ்ட்-ஐ பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    ரிக்கி பாண்டிங் 29 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். வார்னர், மார்க் வாக் ஆகியோர் தலா 18 சதங்களுடன் 2-வது இடத்தில் உள்ளனர். கில்கிறிஸ்ட் 16 சதங்களுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
    சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா தோல்வியை சந்தித்தது.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஆரோன் பிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் சதத்தால் 374 ரன்கள் குவித்தது.

    பின்னர் 375 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    முதல் இரண்டு மூன்று ஓவர்களில் இந்தியாவுக்கு ஜெட் வேகத்தில் ஸ்கோர் உயர்ந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்தியாவின் ஸ்கோர் 5.2 ஓவரில் 53 ரன்கள் இருக்கும்போது மயங்க் அகர்வால் 18 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். ஹசில்வுட் வீசிய ஆட்டத்தின் 10-வது ஓவரில் விராட் கோலி 21 ரன்னில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    பவர் பிளேயில் இந்தியா 80 ரன்கள் அடித்தாலும் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது, மூன்று விக்கெட்டுகளையும் ஹசில்வுட் சாய்த்து ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தார்.

    கேஎல் ராகுல் 12 ரன்னில் வெளியேற இந்தியா 101 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு தவான் உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். ஒரு பக்கம் தவான் நிதானமாக விளையாட மறுபக்கம் ஹர்திக் பாண்ட்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் போட்டியில் சுவராஸ்யம் கூடியது.

    தவானும், ஹர்திக் பாண்ட்யாவும் அரைசதம் அடித்து முன்னேறி சென்று கொண்டிருந்தனர். இந்திய அணி 34.3 ஓவரில் 229 ரன்கள் எடுத்திருக்கும்போது தவான் 86 பந்தில் 74 ரன்கள் எடுத்து ஆடம் ஜம்பா பந்தில் வெளியேறினார். இந்த ஜோடி 128 ரன்கள் குவித்தது.

    தவான் ஆட்டமிழந்ததும் இந்திய ரசிகர்கள் வெற்றிக் கனவு தகர்ந்தது. அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 76 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 90 ரன்கள் அடித்து வெளியேறினார்.

    ஜடேஜா 25 ரன்களும், நவ்தீப் சைனி 29 ரன்களும் அடிக்க இந்திய அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

    இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது போட்டி 29-ந்தேதி (நாளைமறுநாள்) நடக்கிறது.
    ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதியின் அடிப்படையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது நியூசிலாந்து.
    நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களம் இறங்கியது. மழைக்காரணமாக ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடக்க வீரர் பிளெட்சர் அதிரடியாக விளையாடி 14 பந்தில் 34 ரன்கள் விளாசினார். அதன்பின் வந்த ஹெட்மையர் (0), பூரன் (1), பொவோல் (0) சொற்ப ரன்களில் வெளியேறினார்.

    அடுத்த வந்த பொல்லார்ட் ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 4 பவுண்டரி, 8 சிக்சருடன் 75 ரன்கள் விளாச வெஸ்ட் இண்டீஸ் 16 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. பின்னர் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. மார்ட்டின் கப்தில் 5 ரன்னிலும், ஷெய்பெர்ட் 17 ரன்னிலும் வெளியேறினர். அதன்பின் வந்த கான்வே 29 பந்தில் 41 ரன்கள் விளாசினார்.

    கான்வே ஆட்டமிழக்கும்போது நியூசிலாந்து 12.2 ஓவரில் 140 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 22 பந்தில் 41 ரன்கள் தேவைப்பட்டது. நீஷம், சான்ட்னெர் அதிரடியாக விளையாடினர். 15.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதியின்படி நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது இரண்டு ரசிகர்கள் பதாதைகளுடன் மைதானத்தில் வந்து போட்டியை சற்று நேரம் நிறுத்தினர்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    6 ஓவர்கள் முடிந்த நிலையில் திடீரென இரண்டு ரசிகர்கள் மைதானத்திற்குள் பதாகையுடன் நுழைந்தனர். அவர்கள் பதாகையை தூக்கிப் பிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு வீரர்கள் ஓடி வந்து அவர்கள் இருவரையும் மைதானத்தில் இருந்து வெளியேற்றினர். சுமார் 30 வினாடிகள் போட்டி பாதிக்கப்பட்டது. அதன்பின் போட்டி தொடர்ந்து நடைபெற்றது.

    இருவரும் கையில் ‘No $1B Adani Loan’  என்ற பதாகையுடன் மைதானத்திற்குள் நுழைந்தனர். அதானி குழுமம் சுரங்கத் தொழிலுக்கு குயின்ஸ்லாந்தில் அனுமதி பெற்றது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின்போது சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

    அதானிக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகை

    இதனால் அதானியை எதிர்த்து Stop Adani group சமீபத்தில் மீடியாவை சந்தித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ஒரு பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் அதானிக்கு கடன் வழங்க ஒப்புதல் வழங்க இருப்பதாக செய்திகள் வெளியானது. அவருக்கு கடன் வழங்கக் கூடாது என குரல் கொடுத்தது.

    தற்போது அந்தக்குழுவை சேர்ந்தவர்கள் மைதானத்திற்குள் நுழைந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன. மேலும், அணிந்திருந்த டி-சர்ட்டில் ஸ்டாப் அதானி, ஸ்டாப் கோல், ஸ்டாப் அதான், டேக் ஆக்சன் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
    இந்தியாவுக்கு எதிராக 62 பந்தில் சதம் அடித்து அதிவேகமாக சதம் அடித்த 3-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றார் ஸ்டீவ் ஸ்மித்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்தது.

    ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்புக்கு ஸ்டீவ் ஸ்மித்தின் சதமும் முக்கிய காரணமாகும். ஸ்மித் 62 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்தார். இதற்கு முன் 2015-ல் மேக்ஸ்வெல் 51 பந்தில் இலங்கைக்கு எதிராக சதம் அடித்தார். இதுதான் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனின் அதிவேக சதமாக உள்ளது. ஜேம்ஸ் பால்க்னர் 2013-ல் இந்தியாவுக்கு எதிராக 57 பந்தில் சதம் அடித்தார். இது 2-வது அதிவேக சதமாக உள்ளது. தற்போது ஸ்மித் 62 பந்தில் சதம் அடித்து 3-வது இடத்தில் உள்ளார்.

    இந்த போட்டியில் ஸ்மித் 66 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 105 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
    சிட்னியில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 375 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழக்காமல் சீரான வகையில் ரன்கள் எடுத்து வந்தது.

    பவர்பிளே-யான முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்தது. ஆரோன் பிஞ்ச் 69 பந்திலும், டேவிட் வார்னர் 54 பந்திலும் அரைசதம் அடித்தனர். அணியின் ஸ்கோர் 27.5 ஓவரில் 156 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது.

    டேவிட் வார்னர் 76 பந்தில் 69 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டீவ் ஸ்மித் களம் இறங்கினார். இவர் தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    ஸ்டீவ் ஸ்மித் 36 பந்தில் 8 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார். ஆஸ்திரேலியா 39 ஓவரில் 250 ரன்னைத் தொட்டது. ஆரோன் பிஞ்ச் 117 பந்தில் சத்ம அடித்தார். தொடர்ந்து விளையாடிய ஆரோன் பிஞ்ச் 124 பந்தில் 114 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது ஆஸ்திரேலியா 40 ஓவரில் 264 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் முதல் பந்திலேயே வெளியேறினார். ஆனால் மேக்ஸ்வெல் 19 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 45 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தார். மேக்ஸ்வெல் களத்தில் நிற்கும்போது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 400 ரன்னைத் தாண்டும் நிலையில் இருந்தது. அவர் அவுட்டானதும் ஸ்கோர் உயரும் வேகம் சற்று குறைந்தது.

    ஸ்மித் சிறப்பாக விளையாடி 62 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் கடைசி ஓவரில் 105 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் 66 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 105 ரன்கள் அடித்தார்.

    ஆரோன் பிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித் சதத்தால் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்துள்ளது. முகமது சமி 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், பும்ரா 73 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும், சைனி 83 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும், சாஹல் 89 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 375 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்ய இருக்கிறது.
    கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினர்.

    பியூனஸ்அயர்ஸ்:

    அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த கால்பந்து சகாப்தம் டிகோ மாரடோனா. உலகம் முழுவதும் தனது சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பெற்றவர்.

    60 வயதான மரடோனா கடந்த 2 வாரத்திற்கு முன்பு மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவுக்கு ஆபரே‌ஷன் செய்து கொண்டார். நேற்று முன்தினம் அவர் தனது வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

    அவரது மறைவு செய்தி கேட்டு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    அர்ஜெண்டினாவின் அடையாளமாக அறியப்பட்ட மரடோனாவின் மறைவை யொட்டி அந்நாட்டில் 3 நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் அறிவித்திருந்தார். அதன்படி நேற்றில் இருந்து, நாளை வரை துக்கம் கடைப்பிடிக்கப்படும்.

    மரடோனாவின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி அந்நாட்டு அதிபர் மாளிகையின் அலுவலக வளாகத்தில் பிரதான அறையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சவப்பெட்டி மீது அர்ஜெண்டினா நாட்டு தேசிய கொடி போர்த்தப்பட்டு இருந்தது. அதோடு அவர் அணிந்த 10-ம் நம்பர் எண் பொறித்த ஜெர்சியும் வைக்கப்பட்டு இருந்தது.

    அர்ஜெண்டினா அதிபர் அல்பர்ட்டோ பெர்னான்டஸ், 1986-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

    பின்னர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து மரடோனாவின் உடலுக்கு கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினர். நீண்ட வரிசையில் காத்திருந்து ரசிகர்கள் தங்களது வாழ்நாள் நாயகனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    ஒரு கட்டத்துக்கு பிறகு மக்கள் அதிக அளவில் வரத் தொடங்கியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டத்தினரை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

    இதேபோல உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களிலும், மரடோனாவின் படத்துக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் தெருக்களில் மரடோனாவுக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு விட்டனர்.

    மரடோனாவின் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் முன்னாள், இந்நாள் விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள ரோகித் சர்மாவின் உடல் தகுதி குறித்து டிசம்பர் 11-ந் தேதி மீண்டும் ஆய்வு செய்யப்படுகிறது.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    இருவரும் காயத்தால், உடல் தகுதி பெறவில்லை. இதனால் அவர்கள் இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லவில்லை.

    இஷாந்த் சர்மாவுக்கு வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஐ.பி.எல். போட்டியின் தொடக்கத்திலேயே விலகினார். ரோகித் சர்மாவுக்கு இடது தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐ.பி.எல்.லில் சில ஆட்டங்கள் விளையாடவில்லை. ஆனால் இறுதிப்போட்டியில் விளையாடி கோப்பையை வென்று கொடுத்தார்.

    இருவரது உடல் தகுதியும், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் கண்காணிக்கப்பட்டது. முழுமையாக உடல் தகுதி பெறாததால், முதல் 2 டெஸ்டில் இருவரும் ஆடமாட்டார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து இஷாந்த் சர்மா முற்றிலும் விலகி உள்ளார். அவர் உடல் தகுதி மற்றும் தனிமை காலத்தை பெறுவதற்கான வாய்ப்பு இல்லாததால், டெஸ்ட் தொடர் முழுவதும் விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கடடுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    ரோகித் சர்மாவின் உடல் தகுதி குறித்து டிசம்பர் 11-ந் தேதி மீண்டும் ஆய்வு செய்யப்படுகிறது. உடல் தகுதி பெறாவிட்டால் அவர் ஆஸ்திரேலியா செல்லமாட்டார்.

    சிட்னியில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி பந்து வீசுகிறது.
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில், ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது.

    இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான சிட்னியில் இன்று தொடங்கியது.

    கொரோனா தொற்று பரவலால் இந்திய அணியின் சில தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டன. மார்ச் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடிய பிறகு இந்திய அணி களம் காணும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். இதனால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. அதுவும் ஸ்டேடியத்தில் கணிசமான அளவுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட இருப்பதால் வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்கும்.

    இந்திய அணியில் காயத்தால் ரோகித் சர்மா இடம் பெறாதது பின்னடைவாகும். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்று தெரிகிறது. கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இந்தியாவின் பேட்டிங்குக்கு வலு சேர்க்கிறார்கள். அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்ட இவர்கள் நிலைத்து நின்று விளையாட வேண்டியது அவசியமாகும்.

    ஆக்ரோஷமாக மட்டையை சுழட்டும் விராட் கோலி சாதனையின் விளிம்பில் நிற்கிறார். இந்த தொடருக்குள் அவர் 133 ரன்கள் எடுத்தால் 12 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சிறப்பை பெறுவார். பந்து வீச்சில் பும்ரா, ஷமி, ஜடேஜா, சாஹல் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக தென்படுகிறது. ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், கேப்டன் ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல் பேட்டிங்கில் மிரட்டக்கூடியவர்கள். உள்ளூர் சூழல் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான அம்சமாகும்.அந்த அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், ‘இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா மிகச்சிறந்த வீரர். எங்களுக்கு எதிராக நிறைய ரன்கள் குவித்து இருக்கிறார். அவரின் காயம் துரதிர்ஷ்டவசமானது. அவருக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வால் இருப்பார் என்று கருதுகிறேன். அகர்வால் சிறப்பாக விளையாடி வருகிறார்’ என்றார். தங்கள் அணி சரியான கலவையில் அமைந்திருப்பதாக கூறிய பிஞ்ச், மைதானத்திற்கு ரசிகர்கள் வருகை தர இருப்பது வீரர்களை உற்சாகப்படுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்திய அணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ஆஸ்திரேலிய வீரர்கள் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

    சிட்னி மைதானம் பெரும்பாலும் பேட்டிங்குக்கு உகந்த வகையில் இருக்கும். சுழற்பந்து வீச்சும் ஓரளவு எடுபடும். கடைசியாக இங்கு நடந்த 7 ஒரு நாள் போட்டிகளில் 6-ல் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த காலக்கட்டத்தில் முதலில் பேட் செய்த அணிகளின் சராசரி ஸ்கோர் 312 ரன்.

    இந்திய அணி இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 17 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. வானிலையை பொறுத்தவரை நன்கு வெயில் அடிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் சிட்னியில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி பந்து வீசுகிறது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    ×