search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கால்பந்து ஜாம்பவான் மரடோனா உடலுக்கு ஒருவர் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்திய காட்சி
    X
    கால்பந்து ஜாம்பவான் மரடோனா உடலுக்கு ஒருவர் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்திய காட்சி

    கால்பந்து ஜாம்பவான் மரடோனா உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

    கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினர்.

    பியூனஸ்அயர்ஸ்:

    அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த கால்பந்து சகாப்தம் டிகோ மாரடோனா. உலகம் முழுவதும் தனது சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பெற்றவர்.

    60 வயதான மரடோனா கடந்த 2 வாரத்திற்கு முன்பு மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவுக்கு ஆபரே‌ஷன் செய்து கொண்டார். நேற்று முன்தினம் அவர் தனது வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

    அவரது மறைவு செய்தி கேட்டு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    அர்ஜெண்டினாவின் அடையாளமாக அறியப்பட்ட மரடோனாவின் மறைவை யொட்டி அந்நாட்டில் 3 நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் அறிவித்திருந்தார். அதன்படி நேற்றில் இருந்து, நாளை வரை துக்கம் கடைப்பிடிக்கப்படும்.

    மரடோனாவின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி அந்நாட்டு அதிபர் மாளிகையின் அலுவலக வளாகத்தில் பிரதான அறையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சவப்பெட்டி மீது அர்ஜெண்டினா நாட்டு தேசிய கொடி போர்த்தப்பட்டு இருந்தது. அதோடு அவர் அணிந்த 10-ம் நம்பர் எண் பொறித்த ஜெர்சியும் வைக்கப்பட்டு இருந்தது.

    அர்ஜெண்டினா அதிபர் அல்பர்ட்டோ பெர்னான்டஸ், 1986-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

    பின்னர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து மரடோனாவின் உடலுக்கு கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினர். நீண்ட வரிசையில் காத்திருந்து ரசிகர்கள் தங்களது வாழ்நாள் நாயகனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    ஒரு கட்டத்துக்கு பிறகு மக்கள் அதிக அளவில் வரத் தொடங்கியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டத்தினரை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

    இதேபோல உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களிலும், மரடோனாவின் படத்துக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் தெருக்களில் மரடோனாவுக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு விட்டனர்.

    மரடோனாவின் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் முன்னாள், இந்நாள் விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×