search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    1986-ம் ஆண்டு வென்ற உலக கோப்பையுடன் மரடோனா.
    X
    1986-ம் ஆண்டு வென்ற உலக கோப்பையுடன் மரடோனா.

    கால்பந்து ஜாம்பவான் மரடோனா மரணம் - அர்ஜென்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு

    கால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவையொட்டி அர்ஜென்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
    பியூனஸ் அயர்ஸ்:

    அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான மரடோனா 1977முதல் 1994-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சர்வதேச கால்பந்து அரங்கில் கலக்கியவர். தனது வேகம் மற்றும் விவேகம் நிறைந்த நளினமான ஆட்டத்தால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட கால்பந்து கதாநாயகனாக ஜொலித்தார்.

    1986-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டனாக இருந்த மரடோனா உலக கால்பந்து அரங்கில் பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு நிகராக பார்க்கப்பட்டவர். 4 உலக கோப்பை போட்டியில் (1982, 1986, 1990, 1994) பங்கேற்றவரான அவர் அர்ஜென்டினா அணிக்காக 91 சர்வதேச போட்டிகளில் விளையாடி 34 கோல்கள் அடித்துள்ளார். பார்சிலோனா, நபோலி, செவில்லா உள்ளிட்ட கிளப் அணிகளுக்காக களம் கண்டு இருக்கும் அவர் மொத்தம் 491 கிளப் போட்டிகளில் ஆடி 259 கோல்கள் அடித்து இருக்கிறார்.

    10-ம் நம்பர் சீருடைக்கு தனி மரியாதை சேர்த்த அவர் ஓய்வுக்கு பிறகு அர்ஜென்டினா உள்பட பல்வேறு அணிகளின் பயிற்சியாளராக பணியாற்றினார். அத்துடன் போதை பழக்கத்துக்கு அடிமையாகி உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சையும் பெற்றார். இந்த நிலையில் 60 வயதான மரடோனா கடந்த 2-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக பியூனஸ் அயர்சில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்ததை அடுத்து அவசரமாக ஆபரேஷன் செய்யப்பட்டு ரத்த உறைவு அகற்றப்பட்டது. ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் மரடோனாவுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது திடீர் மறைவு கால்பந்து ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவையொட்டி அர்ஜென்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் உள்பட பலரும் மரடோனா மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×