search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பந்தை தட்டிப்பறிக்கும் முயற்சியில் பிரேசில் வீரர்
    X
    உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பந்தை தட்டிப்பறிக்கும் முயற்சியில் பிரேசில் வீரர்

    உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று : பிரேசில், அர்ஜென்டினா அணிகள் வெற்றி

    உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டங்களில் பிரேசில், அர்ஜென்டினா அணிகள் வெற்றி பெற்றன.
    மோன்ட் வீடியோ:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் 2022-ம் ஆண்டில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடக்கிறது. இதற்கான தென்அமெரிக்க கண்டத்துக்குரிய அணிகளுக்கான தகுதி சுற்று போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். 5-வது இடம் பிடிக்கும் அணி ‘பிளே-ஆப்’ சுற்று மூலம் வாய்ப்பை பெற முடியும்.

    இந்த நிலையில் உருகுவே தலைநகர் மோன்ட் வீடியோவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் 5 முறை சாம்பியனான பிரேசில் அணி, 2 தடவை சாம்பியனான உருகுவேயை எதிர்கொண்டது. காயம் காரணமாக பிரேசில் அணியில் நட்சத்திர வீரர் நெய்மார் இடம் பெறவில்லை. இதேபோல் கொரோனா பாதிப்பால் உருகுவே அணியின் முன்னணி வீரர் லூயில் சுவாரஸ் ஆடவில்லை.

    தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தாலும், ஆரம்பத்தில் கிடைத்த சில வாய்ப்புகளை இரண்டு அணியினரும் வீணடித்தனர். 33-வது நிமிடத்தில் பிரேசில் அணி முதல் கோல் அடித்தது. அந்த அணியின் கேப்ரியல் சீசஸ் கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் அர்துர் ஹென்ரிக் கோலுக்குள் திணித்தார். 45-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

    71-வது நிமிடத்தில் முரட்டு ஆட்டம் காரணமாக உருகுவே வீரர் எடிசன் கவானி நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. தடுப்பு ஆட்டத்தில் சற்று தடுமாறிய உருகுவே அணியால் கடைசி வரை பதில் கோல் எதுவும் திருப்ப முடியவில்லை. இதனால் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது. 4-வது ஆட்டத்தில் ஆடிய பிரேசில் அணி தொடர்ந்து 4 வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. உருகுவே அணி 2-வது தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியின் மூலம் பிரேசில் அணிக்கு எதிரான கடைசி 11 ஆட்டங்களில் உருகுவே வெற்றி பெற்றதில்லை என்ற சோகம் தொடருகிறது. அடுத்து பிரேசில் அணி மார்ச் மாதம் நடைபெறும் ஆட்டத்தில் கொலம்பியாவை சந்திக்கிறது.

    மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி, பெருவை அதன் சொந்த மண்ணில் சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் பெருவை சாய்த்தது. 2004-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு அர்ஜென்டினா அணி, பெருவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும். அர்ஜென்டினா அணி தரப்பில் நிகோலஸ் கோன்ஜாலிஸ் 17-வது நிமிடத்திலும், லதாரோ மார்டினஸ் 28-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 4-வது ஆட்டத்தில் ஆடிய அர்ஜென்டினா அணி 3 வெற்றி, ஒரு டிராவுடன் 10 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. பெரு அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.

    இதே போல் ஈகுவடார் அணி தங்களை எதிர்த்த கொலம்பியாவை 6-1 என்ற கோல் கணக்கில் பந்தாடி 3-வது வெற்றியை பதிவு செய்தது. வெனிசுலா அணி 2-1 என்ற கோல் கணக்கில் சிலிக்கு அதிர்ச்சி அளித்து முதல் வெற்றியை தனதாக்கியது. பராகுவே-பொலிவியா அணிகள் இடையிலான இன்னொரு லீக் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் (சமனில்) முடிந்தது.
    Next Story
    ×