என் மலர்
விளையாட்டு


அடிலெய்டு:
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி பகல்- இரவாக அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. லபுசேன் 103 ரன்னும், வார்னர் 95 ரன்னும், கேப்டன் ஸ்டீவ் சுமித் 93 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர்களான ராய் பர்னஸ் 4 ரன்னிலும், ஹசீப்அமீது 6 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. மலானும், கேப்டன் ஜோரூட்டும் தொடர்ந்து விளையாடினார்கள். அவர்களது ஆட்டம் சிறப்பாக இருந்தது. மலான், ஜோ ரூட் அபாரமாக ஆடி அரை சதம் அடித்துள்ளனர்.
தற்போது வரை இங்கிலாந்து அணி 39 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. ஜோ ரூட் 91 பந்துகளில் 52 ரன்னிலும் மலான் 116 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக விராட் கோலி பணியாற்றினார்.
33 வயதான அவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பு 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டி கேப்டன் பதவியும் விராட் கோலியிடம் இருந்து பறிக்கப்பட்டது.
20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். கோலி டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே கேப்டனாக நீடிப்பார்.
இந்த விவகாரம் தொடர்பாக விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையே மோதல் இருப்பதாகவும், இதனால் அணியில் பிளவு இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் விராட் கோலியின் பேட்டியைத் தொடர்ந்து அவருக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவர் கங்குலிக்கும் இடையேதான் மோதல் இருப்பது தெரியவந்தது.
கங்குலி கூறும்போது, 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகவேண்டாம் என கோலியிடம் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டேன் என்று தெரிவித்திருந்தார். இதற்கு விராட் கோலி பதில் அளிக்கும்போது, எனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு யாரும் கூறவில்லை என்றார்.
இருவரும் மாறுபட்ட கருத்தை சொன்னதால் குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் விராட் கோலியின் கேப்டன் பதவி விவகாரத்தில் கங்குலி விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் மதன்லால் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலிக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசல் சர்ச்சையல்ல. அது ஒரு கருத்தாகும். இந்த சூழ்நிலையை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
விராட் கோலியிடம் கங்குலி என்ன சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் அதைப்பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி இருப்பதால் அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.
அப்போதுதான் முழு பிரச்சினைக்கும் முடிவு ஏற்படும். தென் ஆப்பிரிக்க தொடர் முக்கியமானது. நாம் அதில் இப்போதே கவனம் செலுத்த வேண்டும்.
நிர்வாகத்துடனான அனைத்து சிக்கலையும் விராட் கோலி தீர்க்க வேண்டும் என்று கவாஸ்வர் தெரிவித்துள்ளார். அவர் சொல்வது சரிதான். கோலி தனது எல்லா பிரச்சினைகளையும் நிர்வாகத்திடம் தீர்த்துக் கொள்ள வேண்டும். இது பெரிய விஷயமல்ல.
தேர்வுக் குழுவினர் நிலைமையை சரியாக கையாண்டிருக்க வேண்டும். இந்த சர்ச்சைகளை தடுத்து நிறுத்துவது தேர்வாளர்களின் கடமையாகும். தேர்வுக் குழுவினர் முடிவு எடுப்பதற்கு முன்பு கோலியிடம் பேசினார்களா? என்பது எனக்குத் தெரிய வில்லை.
இவ்வாறு மதன்லால் கூறியுள்ளார்.
70 வயதான முன்னாள் ஆல்ரவுண்டரான இவர் 1983-ம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






